E   |   සි   |  

2025-11-13

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட வரைபு அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழுவில் பரிசீலிக்கப்பட்டது

2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில், பாராளுமன்ற நிலையியல் கட்டளை 121(5)(i) இற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட வரைபு அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழுவில் பரிசீலிக்கப்பட்டது.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) அண்மையில் (நவ. 11) பாராளுமன்றத்தில் கூடியபோதே வரைபு அறிக்கை இவ்வாறு பரிசீலிக்கப்பட்டது.

இந்த அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழுவின் தொழில்நுட்பக் குழுவினால் தயாரிக்கப்பட்டு குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டம் (PFM), பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டம் (PDM), மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளுக்குள் 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகள் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை விட 100 பில்லியன் ரூபா மேலதிக வருமானம் ஈட்டப்பட்டதன் காரணமாக 2026 ஆம் ஆண்டிற்கான எதிர்கால நிதிசார் திட்டங்களை தயாரிப்பது இலகுவாகியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், வாகன இறக்குமதி வேகம் குறைவடைவதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டில் வருமான அதிகரிப்பு வேகமும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

அத்துடன், 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இதன்போது அந்தப் பிரதிநிதிகள் வரவுசெலவுத்திட்டத்தின் வெளிப்படைத்தன்மை, பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள விதம் மற்றும் தற்போது அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பாக தமது கருத்துக்களை முன்வைத்தனர். அவர்களுடைய அந்த கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் நிதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித் அகலகட, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, திலின சமரகோன் மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-11-13

நான்கு அமைச்சுகளின் 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பான முன்னேற்றம் குறித்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்

சில நிறுவனங்களின் வினைத்திறனின்மை குறித்து குழு அதிருப்தி – மீண்டும் அழைக்கும்போது தாமதமான தொழில்நுட்ப ரீதியான பதில்களாக அல்லாமல் திகதி மற்றும் காலக்கெடுவுடன் கூடிய ஒரு குறிப்பிட்ட திட்டத்துடன் வருமாறு அறிவுறுத்தல் மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும், வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளை நிறைவேற்றுவதற்காக வினைத்திறனாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தல்   நான்கு அமைச்சுகளின் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பான நிதிசார் மற்றும் பௌதீக முன்னேற்றம் குறித்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அவர்களின் தலைமையில் அந்தக் குழு அண்மையில் (நவ. 11) பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, வலுசக்தி அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஆகிய நான்கு அமைச்சுகளின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதீக முன்னேற்றம் ஆராயப்பட்டது. இந்த அமைச்சுக்களின் செயலாளர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவர்களும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். களனிவௌி புகையிரதப் பாதைக்காக கடந்த ஆண்டு 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், அதன் முன்னேற்றம் குறைவாக உள்ளமை குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை காணப்பட்ட முன்னேற்றம் திருப்தியளிக்கவில்லை என்றும், இது புகையிரத திணைக்களத்தின் வினைத்திறனின்மையைப் பிரதிபலிப்பதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இந்த வருடமும் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் மூலம் களனிவௌி புகையிரதப் பாதைக்காக 840 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், உரிய திட்டத்துடன் வினைத்திறனாகச் செயற்படாவிட்டால் இலக்கு வைக்கப்பட்ட முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது என்றும், இதனால் மக்களின் எதிர்பார்ப்புகள் சரியான நேரத்தில் நிறைவேற்றப்படாமல் போகும் என்றும் குழு சுட்டிக்காட்டியது. தம்புத்தேகம புகையிரத நிலைய அபிவிருத்திக்காக 2025 வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்டதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு வினவப்பட்டதுடன், அதிகாரிகள் சமர்ப்பித்த தொழில்நுட்ப ரீதியான விடயங்கள் குறித்து ஒருபோதும் திருப்தியடைய முடியாது என்று குழுவின் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார். வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் மூலம் நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், திட்டங்கள் தொடர்ச்சியாக தாமதமாவதாலும், அதன் விளைவாக இறுதியில் அந்த நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுவதாலும் அது வருத்தமளிப்பதாகத் தெரிவித்த குழு, அது தொடர்பாக தனது அதிருப்தியை வெளியிட்டது. அதற்கமைய, தாமதமான தொழில்நுட்ப ரீதியான பதில்களாக அல்லாமல், திகதி மற்றும் காலக்கெடுவுடன் சரியான திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு புகையிரதத் திணைக்கள அதிகாரிகளுக்கு குழு அறிவித்தது. வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதன் முன்னேற்றத்தைக் கண்டறிய புகையிரதத் திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை உட்பட தேவையான நிறுவனங்கள் மீண்டும் குழுவிற்கு அழைக்கப்படும் என்றும், அவ்வாறு வரும்போது சரியான அனைத்துத் தகவல்களுடன் வருமாறும் அதிகாரிகளுக்கு இங்கு அறிவுறுத்தப்பட்டது. நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமியப் பாலங்கள் புனரமைப்பு, புதிய பஸ் வண்டிகளை கொள்வனவு செய்தல், நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் தொடர்புடைய கொழும்பு அடுக்குமாடிக் குடியிருப்புகளை புனரமைப்பு செய்தல் உள்ளிட்ட தற்போதைய பிரச்சினைகள், வலுசக்தித் துறையின் எதிர்கால இலக்குகள் உள்ளிட்ட இந்த நான்கு அமைச்சுகளின் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், குழுவால் இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டதன்படி, காலி துறைமுகத்தை இலாபகரமான நிலைக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு தொடர்பான அறிக்கையை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், இதற்கு முன்னர் குழுவில் வெளிப்படுத்தப்பட்டதற்கு அமைய, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் செயற்திறன் குறித்து தனது பாராட்டைத் தெரிவிப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். குழுவின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார ஜயமஹ, மஞ்சுள சுரவீர ஆராச்சி, ரவீந்திர பண்டார, ஜகத் வித்தான, சாந்த பத்ம குமார சுபசிங்க மற்றும் (சட்டத்தரணி) கீதா ஹேரத் ஆகியோர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2025-11-13

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கப்படும் - உப குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப குழுவின் இடைக்கால அறிக்கையைத் தயாரித்து, எதிர்வரும் 13ஆம் திகதி பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கத் தயாராக இருப்பதாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்தார். ஒட்டுமொத்த அரச சேவையினையும் மீளாய்வு செய்து அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பு ஒன்றைத் தயாரிப்பது தொடர்பில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தலைமையில் 2025.11.10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த உப குழுவின் தலைவர், இவ்வாறு அரச சேவைக்கான முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும் தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தி அவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றதாகவும், அதன்போது அவர்களின் சேவைகளில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சம்பள முரண்பாடுகள் குறித்து விரிவான புரிதலைப் பெற்றதாகவும் தெரிவித்தார். அதற்கமைய, ஒட்டுமொத்த அரச சேவையிலும் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக மிகவும் முறையான மற்றும் விஞ்ஞான ரீதியிலான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், அவர்களின் தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்காக சேவைப் பிரமாணக் குறிப்புக்கள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வுகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக தற்போதுள்ள நிலைமைகளை மிகவும் நியாயமான முறையில் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிப்பதாக உப குழுவின் தலைவர் மேலும் கருத்துத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜந்த கம்மெத்தகே, (சட்டத்தரணி) கீதா ஹேரத் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர்.


2025-11-13

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பதினொரு செயலாற்றுகை அறிக்கைகள், வருடாந்த அறிக்கைகள் ஆராயப்பட்டு அனுமதிக்கப்பட்டன

பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான பதினொரு செயலாற்றுகை அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டு அனுமதிக்கப்பட்டன. ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தலைமையில் அண்மையில் (நவ. 11) கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கமைய வளிமண்டலவியல் திணைக்களத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கை, இலங்கை விமானப் படையின் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள், இலங்கை இராணுவத்தின் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள், இலங்கை கடற்படையின் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள், கடலோர பாதுகாப்பு படை திணைக்களத்தின் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள், சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைகள், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, அனர்த்த முகாமைத்துவத் திணைக்களத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், ரணவிரு சேவை அதிகாரசபையின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, ரக்னா ஆரக்சன லங்கா கம்பனியின் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளே ஆராயப்பட்டு அனுமதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் கௌரவ பாராளுனமற் உறுப்பினர்களான (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, சந்தன சூரியாராச்சி, (சட்டத்தரணி) அனுஷ்கா திலகரத்ன, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜீ.டி.சூரியபண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-11-08

பெண் தலைவர்களை வலுப்படுத்துவது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட வேலைத்திட்டம்

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆகியன இணைந்து ஏற்பாடு   இலங்கை முழுவதிலுமுள்ள பெண் தலைமைத்துவங்களுக்கிடையிலான தொடர்புகளை உருவாக்குவதன் முதற்படியாக ‘இணைக்கும் குரல்கள்’ – பெண் தலைவர்களுக்கான பிராந்திய பரிமாற்ற நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. பாராளுமன்றம், உள்ளூராட்சி மன்றங்கள், கல்வி மற்றும் வணிகத் துறைகளிலிருந்தான தேசிய மற்றும் மாவட்ட ரீதியிலுள்ள பெண் தலைவர்களை ஒன்றாக இணைக்கும் நிகழ்வாக இது அமைந்ததுடன், இங்கு அனுபவங்கள், தடைகள் மற்றும் பெண் தலைமைத்துவத்தைப் பலப்படுத்துவதற்கு அடையாளம் காணப்பட்ட நடைமுறைத் தீர்வுகள் குறித்துப் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்களான ஹேமாலி வீரசேகர, ஹசாரா லியனகே, துஷாரி ஜயசிங்க, அனுஷ்கா திலகரத்ன, எம்.ஏ.சி.எஸ்.சதுரி கங்கானி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான பாராளுமன்றம் மற்றும் ஊடகத்துறை நிபுணர் சதுரங்க ஹப்புஆரச்சி ஆகியோர் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவுப்படுத்தும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். நிலையான வழிகாட்டுதல் வலையமைப்பை உருவாக்குவதற்கும், வடக்கில் உள்ள பெண் தலைமைத்துவங்களிடமிருந்து முக்கிய விடயங்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்று அவற்றை உள்ளடக்கிய அறிக்கையை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை இந்தத் தளம் உருவாக்கியது. தலைமைத்துவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கும், இலங்கை முழுவதும் உள்ளடக்கிய நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் ஆதார அடிப்படையிலான கொள்கை முடிவுகளை முன்னெடுப்பதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்திற்கு இந்த அறிக்கை உறுதுணையாக இருக்கும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks