தெரிவுக்குழுவானது, பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஒவ்வொன்றினதும் தொடக்கத்திலும் காலத்திற்குக் காலம் அவசியம் ஏற்படும்பொழுதும் அமைச்சரவையின் அமைச்சுக்களது எண்ணிக்கைக்குச் சமனான எண்ணிக்கையில் ஆலோசனைக் குழுக்கள் நியமிக்கப்படும்.
குழுவுக்கு பரிசீலனை செய்ய அதிகாரமளிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கும் கருமங்களுக்கும் பொறுப்பான அமைச்சரே ஆலோசனைக் குழுவொன்றின் தவிசாளராக இருத்தல் வேண்டும்.
எனினும் சனாதிபதியின் பொறுப்பிலுள்ள அமைச்சுக்கள் விடயத்தில் அவ்வமைச்சுக்களின் பிரதி அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக்களின் தவிசாளராக இருத்தல் வேண்டும்.
தெரிவுக்குழு காலத்துக்குக் காலம் ஆலோசனைக் குழு உறுப்பினரொருவர் மரணமடையும் அல்லது பதவி துறக்கும் அல்லது உறுப்பாண்மையை வறிதாக்கும் விடயத்தில் ஆலோசனைக் குழுவின் அத்தகைய உறுப்பினரின் இடத்திற்கு இன்னோர் உறுப்பினரை நியமிக்கலாம். எனினும் தெரிவுக்குழுவானது தேவையென கருதுமிடத்து ஏதேனும் ஆலோசனைக் குழுவின் வேறெவரேனும் உறுப்பினரை விடுவித்து அவரது இடத்திற்கு வேறு உறுப்பினரை நியமிக்கும் உரிமையை குழு தன்னகத்தே கொண்டிருக்கும். இக்கட்டளையின் கீழ் செய்யப்படும் ஒவ்வொரு நியமனமும் பாராளுமன்றத்தின் அடுத்துவரும் கூட்டத்தில் அறிவிக்கப்படுதல் வேண்டும்.
தனது கையொப்பமுடனான விண்ணப்பத்தின் மூலம் ஆலோசனைக் குழுவின் முன்கூட்டிய அனுமதியைப் பெறாமல் ஆலோசனைக் குழுவின் அடுத்தடுத்த மூன்று கூட்டங்களுக்குச் சமூகமளிக்கத் தவறும் எவரேனும் உறுப்பினர், அத்தகைய ஆலோசனைக் குழுவிலுள்ள அவரது உறுப்பாண்மையை வறிதாக்கியவராகக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன் தெரிவுக் குழுவினால் இனங்காணப்பட்டாலன்றி, அதே கூட்டத்தொடரின் போது அக்குழுவிற்கு மீண்டும் தெரிவுசெய்யப்படவும் ஆகாது.
எனினும் அவ்வுறுப்பினர் முன்கூட்டியே பெறப்பட்ட பாராளுமன்ற அனுமதியுடன் பாராளுமன்றத்தின் அமர்வுகளுக்குச் சமூகமளிக்காதிருக்கும் காலப்பகுதிக்குள் ஒரு தினத்தில் அத்தகைய குழுவின் ஏதேனும் கூட்டம் நடைபெற்றால் முற்போந்த ஏற்பாடுகள் ஏற்புடையனவாதல் ஆகாது.
ஒவ்வோர் ஆலோசனைக் குழுவும் இயன்றவரை பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளையும் பிரதிபலிக்கும் வகையில் அமைதல் வேண்டும். ஆலோசனைக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் போது தெரிவுக்குழுவானது உறுப்பினர்களின் விருப்பங்களை அறிய வேண்டுமென்பதோடு இயன்றவரையில் அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இடமளிக்கவும் வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் எவரும் தாம் அங்கம் வகிக்காத ஆலோசனைக் குழுவொன்றின் கூட்டத்திற்கு அக்குழுத் தவிசாளரின் வேண்டுகோளின் மீது சமூகமளிக்கலாம் என்பதுடன், குழுத்தவிசாளரின் வேண்டுகோளுக்கமைய வெளியேறவும் வேண்டும்.
ஆலோசனைக் குழுவொன்றின் கடமை, சட்டமூலம், சட்டவாக்கத்துக்கான பிரேரணைகள், குறைநிரப்பல் அல்லது பிறமதிப்பீடுகள், செலவினக் கூற்றுக்கள், பிரேரணைகள், ஆண்டறிக்கைகள் அல்லது பத்திரங்கள் உட்பட தவிசாளரினால் அல்லது பாராளுமன்றத்தினால் ஆற்றுப்படுத்தப்படும் விடயங்கள் பற்றி விசாரணை செய்து அறிக்கையிடுதலாகும்.
ஓர் ஆலோசனைக் குழு அதன் தவிசாளர் மூலம் எந்தவொரு சட்டமூலத்தையோ, பிரேரணையையோ சமர்ப்பிக்க அதிகாரம் கொண்டிருத்தல் வேண்டும்.
ஒவ்வோர் ஆலோசனைக் குழுவும் தவிசாளர் அழைக்கும் போது கூட வேண்டும். குறைந்த பட்சம் மாதம் ஒரு முறையேனும் தவிசாளரினால் குழு கூடப்பட்டு, பயனுள்ள வேலை நிகழ்ச்சித்திட்டமொன்று ஒழுங்கு செய்யப்படுவதை தவிசாளருடனும் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்துடனும் கலந்தாலோசித்து உறுதிப்படுத்துவது ஒவ்வோர் அமைச்சின் செயலாளரதும் கடமையாகும்.
எனினும், அத்தகைய ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூவர் எழுத்து மூலம் வேண்டுமிடத்து, இயன்றளவு விரைவில் கூட்டமொன்று கூட்டப்படுதல் வேண்டும்.
செயலாளர் நாயகமோ அல்லது அவரால் நியமிக்கப்படும் பாராளுமன்றத்தின் எந்தவோர் உத்தியோகத்தரோ அத்தகைய குழு ஒவ்வொன்றினதும் செயலாளராக இருத்தல் வேண்டும். அவரின் கடமைகளையும் கருமங்களையும் கொண்டு நடாத்துவதற்குத் தேவையான ஏனைய பணியாளர்கள், வசதிகள், தேவைகள் ஆகியன அவருக்கு அளிக்கப்படல் வேண்டும்.
ஆலோசனைக் குழுவுக்குப் பாராளுமன்றத்தால் ஆற்றுப்படுத்தப்பட்ட விடயங்கள் மீதான ஆலோசனைக் குழுவின் அறிக்கை, ஆற்றுப்படுத்தப்பட்ட மூன்று மாதங்களுக்குள் அதன் தவிசாளரால் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். அவசியமெனக் கருதுமிடத்து குறிப்பிட்ட ஏதாவது விடயம் மேலும் பரிசீலனை செய்யப்பட வேண்டுமென பாராளுமன்றம் எடுத்தியம்பலாம். குழு உறுப்பினர் எவரதும் தனிப்பட்ட அபிப்பிராயம் அறிக்கையில் சேர்க்கப்படலாம்.
எனினும் ஆலோசனைக் குழுவொன்றுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயங்கள் அவ்விடயங்கள் மீதான ஆலோசனைக் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் வரை பாராளுமன்றத்தால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாதிருத்தல் வேண்டும்.
ஒவ்வோர் ஆலோசனைக் குழுவும் ஆட்களையும் பத்திரங்களையும் பதிவேடுகளையும் வரவழைத்து பரிசீலிப்பதற்கும் இடத்திற்கிடம் மாற்றுவதற்கும் அதற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயங்கள் பற்றி பூரண பரிசீலனைக்கு அவசியமான சகல கருமங்களையும் செய்வதற்கும் பாராளுமன்றத்தின் எந்தவோர் ஒத்திவைப்பினாலும் தடைப்படாமல் கூடுவதற்கும் அதிகாரமுடையதாயிருத்தல் வேண்டும்.
ஆலோசனைக் குழுவொன்றின் கூட்ட நடப்பெண் மூன்று உறுப்பினர்களாக இருத்தல் வேண்டுமென்பதுடன் தேவையான கூட்ட நடப்பெண் இல்லாமல் அத்தகைய ஆலோசனைக் குழு பணியாற்றாது பார்த்துக் கொள்வது அதன் தவிசாளரின் கடமையாதலும் வேண்டும்.
உப குழுக்கள்
ஒவ்வொரு ஆலோசனைக் குழுவும், அது அவசியமெனக் கருதும் போது, எவையேனும் கருமங்கள் பற்றி அத்தகைய ஆலோசனைக் குழுவால் பணிக்கப்படுகின்றவாறு விசாரணை செய்து அத்தகைய ஆலோசனைக் குழு குறித்துரைக்கும் ஒரு காலப் பகுதிக்குள் அறிக்கையிடுவதற்கென அதன் உறுப்பினர்களைக் கொண்ட உப குழுக்களை நியமிக்கலாம். அத்தகைய ஆலோசனைக் குழு அவசியமெனக் கருதும் போது, ஏதேனும் அத்தகைய உப குழு தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கென அதன் முன்னர் எவரேனும் ஆளை ஆணையிட்டழைத்து விசாரணை செய்வதற்கும், ஏதேனும் பத்திரத்தை, பதிவேட்டை அல்லது ஆவணத்தைக் கோருவதற்கும் பரிசோதிப்பதற்கும், அதற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட கருமங்களை முழுமையாகப் பரிசீலிப்பதெற்கென இடத்துக்கிடம் செல்வதற்கும், பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருப்பினும் அவ் உபகுழு கூடுவதற்கும் அதற்கு அதிகாரங்கள் வழங்கலாம்.
ஒவ்வொரு உபகுழுவும், ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்படும் ஒரு தவிசாளரையும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருத்தல் வேண்டும். அத்தகைய உபகுழுவின் கூட்ட நடப்பெண் தவிசாளர் உட்பட இரண்டு உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.
ஓர் உபகுழுவின் தவிசாளராகப் பணியாற்றும் ஓர் உறுப்பினர் ஒரே சமயத்தில் அத்தகைய ஆலோசனைக் குழுவின் வேறோர் உபகுழுவில் தவிசாளராகப் பணிபுரிதலாகாது.
ஆலோசனைக் குழு வேறு விதமாக தீர்மானித்தாலொழிய உபகுழுக்களின் எல்லாக் கூட்டங்களும் பாராளுமன்றத்திலேயே நடாத்தப்பட வேண்டும்.
Name
Mahesh De Silva
Telephone
0094-11-2777557
Fax
0094-11-2777300
mahesh_d@parliment.lk
Seventh Parliament of the D.S.R. of Sri Lanka | First Session
Date: 2015-07-26
(Ninth Parliament of the D.S.R. of Sri Lanka | First Session )
Date: 2024-01-10