E   |   සි   |  

2021-10-25

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

நஷ்டத்தில் இயங்கும் அரசாங்க ஊடகங்களை இலாபமீட்டும் நிலைக்குக் கொண்டுவர மேலும் ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் – வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும

நஷ்டத்தில் இயங்கும் அரசாங்க ஊடகங்களை மீண்டும் இலாபமீட்டும் நிலைக்குக் கொண்டுவர ஆக்கபூர்வமான திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரசாங்க ஊடகங்களில் படைப்பாற்றல் குறைந்து வருவதை ஏற்றுக் கொண்ட அமைச்சர், இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் (21) நடைபெற்ற வெகுஜன ஊடகத்துறை அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்க ஊடகமொன்றைப் பராமரிப்பதற்கு ஒரு நிறுவனத்துக்கு மாதமொன்றுக்கு 35 மில்லியன் ரூபா செலவுசெய்ய வேண்டியிருப்பதாகவும், சில நிறுவனங்களுக்கு 45 மில்லியன் ரூபா வரையில் செலவாவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அரசாங்க ஊடகங்கள் வணிக ரீதியாகத் தோல்வியடைவதை அரசாங்கத்தினால் தாங்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இதனைவிடவும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் வன்முறைகள் நிறைந்த மற்றும் சிறுவர்களுக்குப் பொருத்தமற்ற விடயங்களுடன் கூடிய திரைப்படங்கள் விளம்பரப்படுத்தப்படுவதாகவும், அவற்றை விளம்பரப்படுத்தப் பொருத்தமான ஒளிபரப்பு நேரத்தைப் பரிந்துரைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

பாராளுமன்ற அமர்வுகளை அறிக்கையிடும் ஊடகங்களில் முக்கியமான விடயங்கள் தவிர்க்கப்படுவதாகவும், இதனால் பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்ற நாட்டுக்கு முக்கியமான சட்டமூலங்களை சமர்ப்பிப்பது, அவற்றை நிறைவேற்றுவது மற்றும்  அவை தொடர்பான விவாதங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய விசேட நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு அமைச்சர் அரசாங்க ஊடகங்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

வடபகுதியில் உள்ளவர்களில் 85 சதவீதமானவர்கள் இந்தியத் தொலைக்காட்சிகளைப் பார்வையிடுவதற்குப் பழகியிருப்பதால் அப்பகுதிகளில் உள்ள சிறுவர்கள் மத்தியில் இந்நாட்டில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் பொது அறிவு குறைவாகவே உள்ளது என்பதும் இங்கு தெரியவந்தது. நேத்ரா அலைவரிசையின் ஊடாக முற்பகல் 4.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை முதலாம் தரத்திலிருந்து 13வது தரம் வரையில் தமிழ் மொழி மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதாக இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டார்.

அரசாங்க ஊடகங்களின் ஊடாக வழங்கப்படும் தகவல்கள் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் சரியாகக் கடத்தப்படாமையே இதற்குக் காரணம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்க ஊடகங்களின் பணிப்பாளர் சபையில் தமிழ் பிரதிநிதிகளையும் உள்ளடக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் காணப்படும் பொருளாதார நிலைமையின் காரணமாக அடுத்த வருடம் அமைச்சுக்கான எந்தவொரு புதிய கட்டுமானப் பணிகளுக்கும் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கப்படாது என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரங்கொடி, சாந்த பண்டார, கலாநிதி சுரேன் ராகவன், உத்திக பிரேமரத்ன, வீரசுமன வீரசிங்க, மதுர விதானகே, சார்ள்ஸ் நிர்மலநாதன், சம்பத் அத்துகோரல, மேஜர் சுதர்ஷன தெனிப்பிட்டிய, எஸ்.கஜேந்திரன், குணதிலக ராஜபக்ஷ, உப்புல் கலப்பதி, டயானா கமகே, இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், இலங்கை பத்திரிகை சபை, அரசாங்க தகவல் திணைக்களம், இலங்கை மன்றக் கல்லூரி, தபால் திணைக்களம், அலோசியேட் நியூஸ்பேப்பர்ஸ், அரச அச்சக் கூட்டுத்தாபனம், தகவல் அறியும் ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்கள் பலவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

 



தொடர்புடைய செய்திகள்

2025-02-16

உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம்

உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் இன்று (14) பாராளுமன்றத்தில் கூடிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே  இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன், வரையறுக்கப்பட்ட தொலைக் கல்வி நிலையத்தின் 2021 மற்றம் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையும் இங்கு ஆராயப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் ருவன் செனரத் உள்ளிட்ட பிரதியமைச்சர்கள், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-02-13

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கௌரவ பிரதமர் தலைமையில் எதிர்காலத் செயற்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடியது

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் 2025.02.07ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மாகாண மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25%ஆக வரும் வகையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, எதிர்வரும் தேர்தலில் அந்த முன்மொழிவை செயற்படுத்தும் வகையில் தற்பொழுது காணப்படும் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான அவசியம் தொடர்பில் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கோரிக்கை விடுப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களை சந்திப்பதற்கும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் தீர்மானித்தது. பணியிடங்களில் பாலியல் வன்முறையை ஒழித்தல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) இல்லாமல் செய்வது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், மார்ச் 8ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் திட்டங்கள் தொடர்பிலும் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் சமன்மலீ குணசிங்ஹ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சாகரிகா அதாவுத, கலாநிதி கெளஷல்யா ஆரியரத்ன, ஒஷானி உமங்கா, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, தீப்தி வாசலகே, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ, அம்பிகா சாமிவெல் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-02-13

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் - கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர்

சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள துறைமுகங்களை புனரமைத்தல் தொடர்பில் கடற்றொழில் அமைச்சு கவனம் - குழுவின் தலைவர்   இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர்  ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் அண்மையில் (பெப். 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ பிரதி அமைச்சர்   ரத்ன கமகேவும் கலந்துகொண்டார். அதற்கமைய, இந்திய மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழகத்துடனும் இந்திய உயர்ஸ்தானிகருடனும் அவசியமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இந்நாட்டு மீனவர்களைப் பாதித்துள்ள இந்தப் பிரச்சினைக்கு முரண்பாட்டு வழியிலல்லாமல் உடனடியாக தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அத்துடன், சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பித்தல் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு உரையாற்றிய வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க, எதிர்காலத்தில் சதொச வர்த்தக நிலையங்களை  விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கமைய, மீன்களை விற்பனை செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய  முடியும் எனத் தெரிவித்தார். சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக மீன்களை விற்பனை செய்வதற்குத் தேவையா நடவடிக்கையை விரைவாக எடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். அதற்கமைய, நுகர்வோர் எளிதாக சமைக்கும் வகையில், மீன் வகைகளை பொதி செய்து வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் காணப்படும் கடற்றொழில் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கௌரவ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் டைனமைட்டைப் பயன்படுத்தி மீன்பிடித்தல், நன்னீர் மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நாட்டின் துறைமுகங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்தப் பிரச்சினைகள் தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள துறைமுகங்களை புனரமைப்பதில் அமைச்சு  அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குழுவின் தலைவர்  தெரிவித்தார். அத்துடன், 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான கடற்றொழி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கை என்பனவும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


2025-02-07

அரசாங்க சேவையில் தேவையான கொள்கை மாற்றத்தை அடையாளம் காண்பதற்காக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் 08 பேரைக் கொண்ட விசேட உபகுழு

உபகுழுவின் தலைவர் பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத்   அரசாங்க சேவையில் தேவையான கொள்கை மாற்றத்தை அடையாளம் காண்பதற்காகப் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் எட்டுப் பேரைக் கொண்ட விசேட உபகுழுவை அமைக்குமாறு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அறிவுறுத்தல் வழங்கினார். பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (பெப். 05) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த உபகுழு அமைக்கப்பட்டது. கௌரவ பிரதியமைச்சர் பி.ருவன் செனரத் அவர்களின் தலைமையில் இந்த உபகுழு அமைக்கப்பட்டிருப்பதுடன், இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியாராச்சி, அஜந்த கம்மெத்தெகே, தர்மப்பிரிய திசாநாயக்க, தினிந்து சமன், (சட்டத்தரணி) கீதா ஹேரத், மொஹமட் பைசல் மற்றும் லால் பிரேமநாத் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உபகுழுவின் ஊடாக அரசாங்க சேவைக்கான நியமனங்கள், போட்டிப் பரீட்சைகளை நடத்துதல், ஓய்வூ வழங்குதல் மற்றும் வெற்றிடங்கள் உள்ளிட்ட அரசாங்க சேவையிலுள்ள பிரிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கைரீதியான மாற்றங்கள் குறித்துத் தேவையான விசாரணைகளை நடத்தி, அடையாளம் காணப்பட்ட முன்மொழிவுகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன. இவ்வாறான  உபகுழுவொன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி முன்மொழிந்ததுடன், இதற்கு அமையவே குழுவின் தலைவர் இந்த உபகுழுவை நியமித்தார். அத்துடன், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி மன்றங்களில் 8,435 பேரின் சேவைகள் உறுதிப்படுத்தப்பட்டதாக இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தற்பொழுத பணியாளர் மதிப்பாய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அதன்படி, இறுதி அறிக்கை 2025 மார்ச் 31ஆம் திகதி கிடைக்கப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் நியமனங்களுக்குத் தேவையான தரவுகளை முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சில திட்டங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் சேவைகள் உறுதிப்படுத்தப்படாது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கிராம சேவர்களின் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் குழுக் கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks