ஒதுக்கீட்டுச் சட்டமூலம் என பாராளுமன்ற உறுப்பினர்களால் குறிப்பிடப்படுவது, மிகவும் பிரபல்யமாக வரவு செலவுத்திட்டம் என அழைக்கப்படுகின்றது. இலங்கைப் பாராளுமன்றத்தின் வருடாந்தக் கலண்டரில், வருடாந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பித்தலும் அதனைத் தொடர்ந்து வரும் விவாதமும், ஓர் ஆண்டில் பாராளுமன்றம் விவாதிக்கும் சட்டவாக்கம், பிரேரணைகள், தீர்மானங்கள் எல்லாவற்றையும் விட முதன்மை பெறுகிறது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பிற சட்ட மூலங்களைப் போன்று வரவு செலவுத்திட்டமும் முதலாம், இரண்டாம், மூன்றாம் மதிப்பீடுகளைக் கொண்டிருக்கின்றது. அது பாராளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படும் போது மட்டுமே சட்டமாகின்றது.
வரவு செலவுத்திட்டம் பிற சட்டமூலமொன்றின் நடவடிக்கை முறைகளைப் பின்பற்றினாலும் கூட அது ஒரு சராசரியான நிதிச்சட்டமூலம் அல்ல. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை, கடந்த ஆண்டுகளில் அதன் செயலாற்றுகை, மேலும் அது மேற்கொள்ள எண்ணியுள்ள புதிய திருப்பங்கள் என்பவற்றைப் பற்றி நாட்டுக்கும், உண்மையில் முழு உலகுக்கும், அறிவிப்பதற்கு நிதியமைச்சர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவது ஒரு மரபாகும். எனவே அனைத்து வரி செலுத்துவோருக்கும், வர்த்தக முயற்சியாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அரச நலன்புரி உதவிகளில் தங்கியிருக்கும் மக்களுக்கும் அது முக்கியமானதாகும்.
அனைத்து பொது நிதிகள் மீதான பாராளுமன்றத்தின் அடிப்படை அதிகாரங்களும் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு - அத்தியாயம் XVII இல் வகுக்கப்பட்டுள்ளது.
உறுப்புரை 148
ஏதேனும் வரி, வீதவரி அல்லது வேறு அறவீட்டை விதிப்பதற்குக் கருதும் ஏதேனும் ஒரு பொது அதிகாரசபை அல்லது உள்ளூர் அதிகாரசபை பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்ட அதிகாரத்தின் கீழ் மட்டுமே அவ்வாறு அறவிட முடியுமென இவ்வுறுப்புரை கூறுகின்றது. எல்லா பகிரங்க நிதிகளும் பாராளுமன்றத்தின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.
உறுப்புரை 149
குறித்த ஒரு நோக்கத்துக்காக ஏலவே ஒதுக்கப்படாத பொது நிதிகள், திரட்டு நிதியத்தில் வரவு வைக்கப்படும். அரசுக்குச் செலுத்தப்படும் வரிகள், விதிப்பனவுகள், வீத வரிகள், தீர்வைகள் மற்றும் ஏனைய எல்லா வரவுகளும் வருமானங்களும் குறித்த ஏதேனும் செயற்பாட்டுக்காக ஏலவே ஒதுக்கப்பட்டிராவிடின், திரட்டு நிதியத்தில் சேர்க்கப்படும். திரட்டு நிதியத்திலிருந்து எந்நோக்கங்களுக்காக நிதிகள் பெறப்படலாம் என்பது பற்றிப் பாராளுமன்றம் தீர்மானிக்கலாம். இது பொதுவாகப் பகிரங்கக் கடன் மீதான வட்டி, கடனாழ் நிதியக் கொடுப்பனவுகள் மற்றும் திரட்டு நிதியம் தொடர்பான செலவுகள் என்பவற்றை உள்ளடக்கும்.
உறுப்புரை 150
குறிப்பிட்ட ஒரு நிதியாண்டில், குறித்ததொரு பொதுச் சேவைக்காக, குறித்ததொரு தொகைப்பணத்தை வழங்குவதற்கான தீர்மானமொன்றை அல்லது சட்டமொன்றை பாராளுமன்றம் நிறைவேற்றியதும், திரட்டு நிதியத்திலிருந்து அரசாங்கம் நிதிகளைப் பெறலாம். பாராளுமன்றம் அதிகாரமளித்தவுடன், நிதியமைச்சரினால் கையொப்பமிடப்பட்ட ஆணையின் பிரகாரம் மட்டுமே குறித்த தொகை மீளப்பெறப்படலாம்.
150ம் உறுப்புரையின் (3) மற்றும் (4) ம் பந்திகள் இந்தப் பொதுவான நடைமுறைக்கு இரண்டு விதிவிலக்குகளைத் தருகின்றன.
உறுப்புரை 151
அவசர மற்றும் எதிர்பாராத செலவுக்காகப் பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் எதிர்பாரா நிகழ்வுகளுக்கான நிதியமொன்றை ஏற்படுத்தலாம். அவசரத் தேவைகளுக்கு என ஏற்கனவே நிதி ஒதுக்கப்படவில்லையென நிதியமைச்சர் திருப்தியடையும் போது, சனாதிபதியின் சம்மதத்துடன் இந்நிதியத்திலிருந்து முற்பணக் கொடுப்பனவொன்றை அனுமதிக்கலாம். அதன் பின்னர் இயலுமான அளவு விரைவாக, முற்பணமாக வழங்கப்பட்ட நிதியினை பதிலீடு செய்வதற்கு ஒரு குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும்.
ஒதுக்கங்கள்
1944ம் ஆண்டின், 16ம் இலக்க, நிதி ஒதுக்கீடுகள் சட்டத்தின் மூலம், பொது ஒதுக்கீட்டு அல்லது விசேட ஒதுக்கீட்டு நிதியில் ஒதுக்கப்படாத, வேறு நிதிகளைப் பாராளுமன்றம் வைத்திருப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வகை நிதிகள் பின்னர் பாராளுமன்றத் தீர்மானத்தின் பின்னர் திரட்டிய நிதிக்கு மாற்றப்படலாம்.
உறுப்புரை 154ண
அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தம் மூலமாக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டபோது, நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகக், குறிப்பிட்ட மாகாண சபைகளுக்கான நிதியினைப் பாராளுமன்றம் அதன் வருடாந்த வரவு செலவுத்திட்டத்திலிருந்து வழங்கியது. இவ் ஆணைக்குழுவிலே, மத்திய வங்கியின் ஆளுநரும், திறைசேரிச் செயலாளரும் மற்றும் மூன்று பிரதான சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும், நிதி, நிர்வாகம், வியாபாரம் அல்லது கல்வி ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுமான வேறு மூன்று பேரும் அடங்க வேண்டும் என உறுப்புரை 154ண நிபந்தனை விதிக்கிறது.
நிதி ஆணைக்குழுவானது மாகாணங்களின் தேவைகளை மாகாண நிர்வாகத்தினதும் பொதுத் திறைசேரியினதும் பிரதான அதிகாரிகளுடன் கலந்துரையாடும். அது, அதன் பரிந்துரைகளுக்கு அடிப்படையாக அமைகின்ற வழிகாட்டற் கோட்பாடுகளை உருவாக்குகின்றது. இதன்போது, உறுப்புரை 154ண (5) இல் குறிப்பிட்டபடி, ஆணைக்குழு, குறிப்பாக சனத்தொகை, தலா வருமானம், ஏற்றத்தாழ்வுகளை இல்லாதொழித்தல் மற்றும் தலா வருமானத்தில் ஏற்படும் வீழ்ச்சி என்பவற்றைக் கருத்திற் கொள்ள வேண்டும்.
நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சனாதிபதிக்குத் தெரிவிக்கப்படும். பின்னர் சனாதிபதி அவற்றை பாராளுமன்றத்திற்குத் தெரியப்படுத்துவார். அரசாங்கம் இப்பரிந்துரைகளைக் கவனத்திலெடுத்து, ஆணைக்குழுவினுடனான கலந்தாலோசனையுடன், மாகாணங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத் திற்குப் போதுமானதான நிதிகளை வருடாந்த வரவு செலவுத்திட்டத்திலிருந்து ஒதுக்கீடு செய்யும்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம்
வரவு செலவுத் திட்ட தயாரிப்பின் பிரதான படிமுறைகளின் சாராம்சம் பின்வருமாறு;
பொதுவாக, நடப்பாண்டின் ஒக்டோபர் ஆரம்பப் பகுதியில், நிதி அமைச்சர் ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தைச் சமர்ப்பிப்பதே வழமையாகும். பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பின் அது அடுத்துவரும் ஆண்டின் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து செயலாற்றப்படும். பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்படாத நிலையில் அல்லது புதிய அரசாங்கம் உறுதி மொழி எடுத்து, செம்மையான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்க அவர்களுக்கு நேரம் போதாத நிலைமையில், இந்த நடைமுறையில் விலக நேரிடுகிறது.
பாராளுமன்றம் அத்தகையதொரு நிலைமையை எதிர்கொள்ளும் போது, அது கணக்கு வாக்குப் பணத்தை கொண்டு வந்து நிறைவேற்ற முனையும். இந்த நடைமுறையானது அரசியலமைப்பிலோ அல்லது நிலையியற் கட்டளைகளிலோ குறிப்பிடப்படாத பாராளுமன்ற மரபாக உள்ளது. பாராளுமன்றம் புதிய திட்டங்களுக்காக அல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்களுக்கே நிதியை வழங்குகிறது. சமூகத்திற்குத் தேவையான சேவைகளை பேணிக் கொள்ளும் அளவிற்கே திணைக்களங்களுக்கும் , அரச முகவர்களுக்கும் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படும்.
எந்த ஆண்டினதும் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் அறிமுகப் பந்தியில், சட்டமூலத்தின் பிரதான நோக்கம் பின்வரும் முறையில் சொல்லப்படுகின்றது.
“குறிப்பிட்ட நிதி ஆண்டிற்கான சேவைகளை வழங்கவும், இலங்கைக்கு, உள்ளேயும், வெளியேயும் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகாரமளிக்கவும், அச்சேவைகளின் நோக்கத்திற்காகக், குறிப்பிட்ட நிதியாண்டின்போது, அரசாங்கத்தின் சில செயற்பாடுகளுக்கு நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும், கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும், இவற்றை முன்பணமாக திரட்டிய நிதியிலிருந்து அல்லது அரசாங்கத்திடமுள்ள ஏதேனும் நிதியிலிருக்கு பெற்றுக்கொள்ளவும், அல்லது அரசாங்கத்திடம் இருக்கும் நிதியிலிருக்கு பெற்றுக்கொள்ளவும், அத்தகைய பணத்தை திரட்டிய நிதியத்திற்கு மீளச்செலுத்துவதற்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அதனோடு தொடர்புடைய விடயங்களுக்கும் அல்லது அதன் இடைநேர்விளைவான விடயங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்”
வரவு செலவுத் திட்ட உரையின் பின்னர் ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு ஆரம்பிக்கப்படுகின்றது. இவ்விரண்டாம் மதிப்பானது உண்மையில் தொடரும் ஆண்டில் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு வருமானத்தை திரட்டிக் கொள்வதற்கான அரசாங்கத்தின் ஆலோசனைகளின் விபரமான சமர்ப்பணமாகும்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் விஷேட அந்தஸ்தினைக் கொண்டிருக்கின்ற போதிலும், பாராளுமன்றத்தில் சாதாரண சட்டமூலங்களுக்கு பிரயோகிக்கபப்டும் அதே விதமான நடைமுறையை இங்கும் பிரயோகிக்கப்படுகின்றது. அதாவது முதல் மதிப்பீட்டின் பின்பு, அதன் ஏற்பாடுகள் அரசியலமைப்பிற்கு அமைவாக உள்ளது. பிரசையொருவர், உறுப்புரை 121 இன் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
வரவு செலவுத்திட்டத்தின் மொத்த நடைமுறைகளுக்காக ஆகக்கூடியது மொத்தமாக 26 நாட்களைப் பயன்படுத்தலாம் என நிலையியற் கட்டளைகள் விதித்துரைப்பது இங்கு கவனிக்கத்தக்கது, இதில் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்திற்கென 7 நாட்களுக்கு மேற்படாத நாள்களைப் பயன்படுத்தலாம், மற்றும் மூன்றாம் மதிப்பீட்டிற்கென அல்லது குழுநிலை விவாதத்திற்கென 22 ற்கு மேற்படாத நாட்களைப் பயன்படுத்தலாம்.
வரவுசெலவுத்திட்ட நாள் அல்லது ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு என பொதுவாக அழைக்கப்படும் தினத்தன்று சமூகத்தின் சகலப் பிரிவினர்களும் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பான அறிவித்தல்களுக்காகக் காத்திருப்பர். நிதி அமைச்சர் தனது வரவு செலவுத்திட்டப் பெட்டியை சபைக்கு கொண்டுவருவார், இது நாடாவால் கட்டப்பட்டிருக்கும். முன்மொழிவுகளின் இரகசியத்தன்மைக்கான குறியீடாக இது அமைகிறது.
நிதி அமைச்சர் அவர்கள் தனது உரையின் முதற்பகுதியில் நாட்டின் பொருளாதாரம், நிதி நிலைமைகள் தொடர்பான அறிக்கையொன்றினைக் சமர்ப்பிப்பார். அரசாங்கம் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ள வரி அறவிடும் முறைகள், செலவு மட்டங்கள், வட்டி விகிதங்கள், மானியங்கள், சலுகைகள் போன்றவைத் தொடர்பான முன்மொழிவுகளையும் இரண்டாம் பகுதி உள்ளடக்கியுள்ளது. பொதுவாக நிதி, நிதிக்கொள்கைள், வெளிநாட்டு உதவிகள், வெளிநாட்டு முதலீடுகள், வேலைவாய்ப்பு, சமூகநலன்கள் போன்றவைத் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இவர் குறிப்பிடுவார்.
வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகள் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் வடிவத்தின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இவை இரண்டுத் தொகுதிகளை உடையன. முதலாவது தொகுதியானது பல்வேறு அமைச்சுகளினதும், அவற்றின் கீழ் இயங்குகின்ற திணைக்களங்களினதும் மீண்டுவரும் செலவினம் மற்றும் மூலதனச் செலவினம் தொடர்பான அறிக்கையினைக் கொண்டுள்ளது. அவை செலவுத் தலைப்புகளின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் நிகழ்ச்சித்திட்டங்களாகவும், கருத் திட்டங்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது தொகுதியானது அரசாங்கத் திணைக்களங்களின் முற்பணக் கணக்கு செயற்பாடுகளுடன் தொடர்புடையதாகும். அத்துடன் இது ஆகக் குறைவான பெருகைகளையும் ஆகக்கூடிய மட்ட செலவினங்களையும் வரையறை செய்கிறது. நிதி அமைச்சர் இவ்வரையறைகளுக்கான மீளாய்வு செய்யப்பட்ட மதிப்பீடுகளை சமர்ப்பித்ததன் பின்பே, இவ்வரையறைகளில் ஏதாவது மாற்றமிருப்பின் அதனைப் பாராளுமன்றம் மேற் கொள்ள வேண்டும்.
வரவு செலவுத்திட்ட சமர்ப்பணத்தையடுத்து ஆகக் கூடியது ஏழு நாட்கள் விவாதம் இடம்பெறும். பாராளுமன்ற அலுவலுக்கான குழு, கூடும் போது அரசாங்கமும் எதிர்க்கட்சியும் சபையில் பேசுவதற்குரிய நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படுகிறது. அந்தந்தக் கட்சிகளின் முதற்கோலாசான்கள் விவாதத்தில் பங்குபற்ற விரும்பும், தமது தரப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் நேரம் ஒதுக்கிக் கொடுப்பர். ஒதுக்கப்பட்ட ஏழு நாட்களின் முடிவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும். சட்டமூலத்திற்கு ஆதரவாக பாராளுமன்றம் வாக்களித்ததும் அச்சட்டமூலம் முழுச் சபையளாவிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும். இதுவே ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழு நிலையாகும்.
தமது அமைச்சுக்களின் கீழ் செயற்படும் உரிய நிறுவனங்களால் மேற்கொளள்ப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்ற அறிக்கைகளை உறுப்பினர்களிடையே விநியோகம் செய்தலானது அனைத்து அமைச்சுக்களாலும் மேற் கொள்ளப்படும் ஒரு வழமையான செயலாகும்.
வரவு செலவுத்திட்டத்தின்/ ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மீதான குழுநிலை விவாதம் அதிகபட்ச காலமாக 22 நாட்களுக்கு நடாத்தப்படும். நிலையியக் கட்டளை 75 (5) பின்வருமாறு கூறுகிறது “இக்கட்டளையின் (1) ஆம் பந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டவாறு தவிர ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை ஆய்வுக்கென ஒதுக்கப்பட்ட நாள்களுள் இரபத்திரண்டு நாள்களுக்கு மேல் ஒதுக்கப்படலாகாது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நாள்களில் கடைசி நாளன்று பிற்பகல் 6.00 மணிக்கு சட்டமூலம் ஏற்கனவே அறிக்கையிடப்பட்டிருந்தாலன்றி அப்போது விவாதத்திலிருக்கும் எவையேனும் திருத்தங்களின் மீதான பிரேரணைகளையும் அதனைத் தொடர்ந்து அத்தலைப்புக்கான அரசாங்கத் திருத்தங்களின் மீதான பிரேரணைகளையும் அத்தலைப்பை நிறைவேற்றத் தேவையான பிரேரணைகளையும் தவிசாளர் உடனடியாகச் சபைக்கு விடுதல் வேண்டும். அதன்பின்னர் ஒவ்வொரு அமைச்சின் தலைப்புக்கள் தொடர்பாகவும் பிரேரணையை உடனடியாகச் சபைக்கு விடுதல் வேண்டும்.”
ஒவ்வொரு அமைச்சின் கணக்கு வாக்கிற்கும் சபை எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டுமென்பதை எதிர்க்கட்சி, தீர்மானிக்கும். அதையடுத்து, எதிர்க்கட்சி, பேசுவதற்குக் கூடுதல் நேரம் பெறத்தக்க வகையில் அரசாங்கத்திற்கும் எதிர்க் கட்சிக்குமிடையே நேரம் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒவ்வொரு தலைப்பின் மீதுமான ஆய்வின் முடிவில் அவற்றின் வாக்கெடுப்புக்கான வினா சபைக்கு விடப்படும். ஆனால் ஒவ்வொரு தலைப்பின் மீதும் எதிர்க்கட்சி வாக்கெடுப்பைக் கோரலாம். அனைத்துத் தலைப்புக்கள் மீதுமான விவாதம் முடிவுற்ற பின்னரே வாக்கெடுப்பிற்கு விடும் வழக்கமொன்று விருத்தி செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தலைப்பின் மீதுமான ஆய்வின் முடிவில் அவற்றின் வாக்கெடுப்புக்கான வினா சபைக்கு விடப்படும். ஆனால் ஒவ்வொரு தலைப்பின் மீதும் எதிர்க்கட்சி வாக்கெடுப்பைக் கோரலாம். அனைத்துத் தலைப்புக்கள் மீதுமான விவாதம் முடிவுற்ற பின்னரே வாக்கெடுப்பிற்கு விடும் வழக்கமொன்று விருத்தி செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு உறுப்பினரும் தனது கருத்தைத் தெரிவிப்பதிலுள்ள நேரத்தை விடக் கூடுதலான உறுப்பினர்கள் இடையீடு செய்வதற்கு விரும்புகின்றனர். எனவே உரிய கட்சிகளுக்கென நேர ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. விவாதத்தின் இக்கட்டத்தில் ஒர் உறுப்பினர் ஒரு சந்தர்ப்பத்திற்கு மேல் பேச நிலையியற் கட்டளை இடமளிக்கின்றது.
அனைத்து அமைச்சுக்களினதும் கணக்குவாக்குகள் முழுச்சபையின் குழு நிலையில் நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றமானது உடனடியாக ஒரு சபையாக மீண்டும் அமரும். அப்போது கௌரவ சபாநாயகர் அவர்கள், குறித்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலமானது திருத்தங்களுடனோ அல்லது திருத்தங்களின்றியோ நிறைவேற்றப்பட்டதாக அறிவிப்பார்.
நிறைவேற்றப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலமானது அடுத்த கலண்டர் ஆண்டின் தொடக்கமான ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து பொதுச் சேவைகளுக்கென ஒதுக்கப்பட்ட நிதியைச் செலவழிப்பதற்கான அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்குகின்றது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டால் அரசியலமைப்பின் உறுப்புரை 48(2) இன் பிரகாரம் அமைச்சரவை கலைக்கப்பட்டதாகக் கருதப்படும்.