07

E   |   සි   |  

இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வகிபாகமானது நாட்டின் ஜனநாயகத்துடன் பின்னிப் பிணைந்துள்ளதும் பல்வேறு வித்தியாசமான பணிகளையும் பொறுப்புக்களையும் கொண்டதாக அமைந்துள்ளது. இதில் மிகமுக்கியமான பணியென்பது தமக்கு வாக்களித்த மக்களின் பல்வகைமைமிக்க குரல்களையும் அக்கறைகளையும் பிரதிநிதித்துவம் செய்வதேயாகும். பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் முறைப்பாடுகளையும் தேவைகளையும் சட்டங்கள் இயற்றப்படும் முக்கிய இடத்தில் முன்வைப்பதற்கான வழிமுறையாக செயற்படுகின்றனர்.

மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு அப்பால், சட்டங்களை ஆக்குவதிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றியமையாத வகிபாகத்தை ஆற்றுகின்றனர். இவர்கள் தீவிரமான கலந்துரையாடல்களிலும் கலந்தாராய்வுகளிலும் பங்கேற்று, சட்டங்களை ஆக்கி, அவற்றினை நுண்ணாய்வு செய்து, இறுதியில் அவற்றின் மீது வாக்களிக்கின்றனர். இது நாட்டின் சட்ட முறைமையைக் கட்டமைப்பதற்கு உதவுகின்றது. அனைவருக்கும் முன்னேற்றம், நியாயமானதன்மை மற்றும் நீதி என்பவற்றை மேம்படுத்தும் கொள்கைகளை உருவாக்குவதற்கு இவர்கள் தம் அறிவையும் எண்ணங்களையும் பயன்படுத்துகிறார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சனநாயகக் கோட்பாடுகளைப் பாதுகாப்பதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ளனர். அரசாங்கம் அதன் நடவடிக்கைகளுக்கும் கொள்கைகளுக்கும் வகைப்பொறுப்புடையதாக உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்கான அதிகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது. அரசாங்கத்தைக் கவனமாக அவதானித்து, அது விதிகளைப் பின்பற்றி நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை மேற்கொள்கின்றனர்.

பாராளுமன்றக் குழுக்களில் முனைப்புடன் பங்கேற்பது இவர்களது பணியின் முக்கியமான பகுதியாகும். இந்தக் குழுக்களில், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுகையின் குறித்துரைத்த பகுதிகளை ஆராய்ந்து, முக்கியமான விடயங்களைப் புலனாய்வுசெய்து, நாடு எதிர்நோக்கும் அவசரமான விடயங்களை எவ்வாறு கையாளலாம் என்பது பற்றிய ஆலோசனைகளை முன்வைக்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுக்களில் இணைந்து பணியாற்றுவதன் மூலம், கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற துறைகளில் காணப்படும் கடினமான சவால்களுக்குப் புதிய மற்றும் புத்தாக்க தீர்வுகளைக் காண அவர்களின் இணைந்த அறிவைப் பயன்படுத்துகிறார்கள்.

மக்களினதும் நாட்டினதும் சிறந்த நலன்களுக்குச் சேவையாற்றுவதற்கான வலுவான கடப்பாட்டிணைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுள்ளனர். இது பாராளுமன்றக் கூட்டங்கள் மற்றும் குழுக் கூட்டங்களில் அர்ப்பணிப்புடனும் கலந்துகொள்வதை மாத்திரம் குறிக்காது, மக்களுடன் திறந்தவழித் தொடர்பைப் பேணுவதையும் குறிக்கின்றது. இவர்கள் மக்களின் கரிசனைகளைக் கவனமாகச் செவிமடுத்து அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு அயராது உழைக்கிறார்கள்.

மேலும், நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிக செல்வாக்கினைக் கொண்டுள்ளனர். மக்களின் நலனோம்புகையையும் வெற்றியையும் மேம்படுத்துவதை நோக்காகக் கொண்ட கொள்கைகளையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் இவர்கள் முனைப்பான பங்களிப்பை வழங்குகிறார்கள். பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு உதவுவது, நியாயத்தன்மையினையும் சமத்துவத்தினையும் மேம்படுத்துவது, அல்லது சுற்றாடலைப் பாதுகாப்பது என எதுவாக இருந்தாலும், சிறப்பானதும் நியாயமானதுமான எதிர்காலத்தை நோக்கி நாட்டை வழிநடாத்துவதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றியமையாத பங்களிப்பை செய்கின்றனர்.

சுருங்கக் கூறின், இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது என்பது அரசியல் நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பதைத் தாண்டிச் செல்வதாகும். இது மக்களுக்குச் சேவையாற்றுவதையும் சனநாயக விழுமியங்களையும் கோட்பாடுகளையும் பற்றிப்பிடிப்பதையும் முன்னேற்றத்தையும் வெற்றியையும் நோக்கி நாட்டை வழிநடத்திச் செல்வதற்கான விசேட பொறுப்பினையும் தீவிர கடப்பாட்டினையும் பிரதிபலிக்கின்றது.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks