07

E   |   සි   |  

பாராளுமன்றத்தின் தற்காலிக இடை ஓய்வொன்றாகக் காணப்படும் கூட்டொத்தொடர் ஒத்திவைப்பு இரண்டு மாதங்களை விட அதிகமான காலத்துக்கு நீடிக்கப்படுதலாகாது. இருந்தும், பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அத்தகைய தேதி இன்னுமொரு ஜனாதிபதி பிரகடனத்தின் மூலம் முற்படுத்தப்படலாம். ஆயினும், அத்தகைய புதிய பிரகடனத் தேதியிலிருந்து மூன்று நாட்களுக்குக் குறையாத தேதியொன்றுக்கு அது கூட்டப்படுதல் வேண்டும். பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படும்போது, அரசியலமைப்பின் உறுப்புரை 70 இன் பந்தி (3) இன் கீழ் பாராளுமன்றத்தின் புதிய தொடரின் ஆரம்ப திகதியை பிரகடனம் தெரியப்படுத்துதல் வேண்டும்.

கூட்டத்தொடரை ஒத்திவைப்பதன் வரலாற்றுப் பின்னணி

(அ)     மக்கள் சபையின் பாரம்பரியம்

புகழ்பெற்ற பிரித்தானிய அரசியலமைப்பு தத்துவவாதி எர்ஸ்கின் மே தனது "பாராளுமன்ற நடைமுறை" இல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: பாராளுமன்றத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைப்பது என்பது முடிக்குரிய தனித்துவமான செயலாகும். மகாராணியால் குறித்தொதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பாராளுமன்றம் அதன் கலந்தாராய்வுகளை தொடங்க முடியும் என்பதால் அவருடைய விருப்பத்தை விட நீண்ட காலம் அதைத் தொடர முடியாது. ஆனால் ஒவ்வொரு சபையும் அரசர் மற்றும் ஏனைய சபைகளிலிருந்து விலகி சுதந்திரமாக ஒத்திவைப்பதற்கான தனியான உரிமையைக் கொண்டுள்ளது. மக்கள் சபையில், ஒவ்வொரு நாளும் இடம்பெறும் ஒத்திவைப்புக்குப் புறம்பாக, ஒத்திவைப்பின் கால அளவு தீர்மானமொன்றால் உறுதிசெய்யப்படுகிறது.”

எர்கின்ஸ் மே தனது 24 ஆம் பதிப்பில் மேலும் குறிப்பிடுவதாவது: பாராளுன்றம் மீண்டும் அழைக்கப்படும் வரை குழு நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து அலுவல்களையும் உடனடியாக இடைநிறுத்துவதற்கும் பாராளுமன்றத்தின் அமர்வுகளை முடிவுறுத்துவதற்குமாக கூட்டத்தொடர் ஒத்திவைப்பின் அமுலாக்கம் காணப்படுகிறது. சமீப காலம் வரை, ஒரு அமர்விலிருந்து இன்னுமொரு அமர்வுக்கு இடைநிறுத்தப்படக்கூடிய மக்கள் சபையால் மேற்கொள்ளப்பட்ட குற்றப்பிரேரணைகள், பிரபுக்கள் சபை முன்னாலுள்ள நீதிமுறை நடவடிக்கைகள், மற்றும் தனியார் சட்டமூலங்கள் மற்றும் கலப்பு சட்டமூலங்கள் தவிர்ந்த கூட்டத்தொடர் ஒத்திவைப்பின்போது காணப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இல்லாமலாக்கப்பட்டன. மக்கள் சபையின் நவீனமயமாதல் மீதான தெரி குழுவால் மேற்கொள்ளப்பட்ட விதப்புரைகள் காரணமாக, சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஒரு கூட்டத்தொடரிலிருந்து மற்றுமொரு கூட்டத்தொடருக்கு கட்டளையால் கொண்டுசெல்வதற்கான பொதுச் சட்டமூலங்களை அனுமதிப்பதற்கான நிலையியற் கட்டளையொன்றை மக்கள் சபை நிறைவேற்றியது. சில சந்தர்ப்பங்களில் பொதுச் சட்டமூலங்களை முன்கொண்டுசெல்வதையும் பிரபுக்கள் ஆதரித்திருந்தனர்”.

பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஆணைக்குழுவொன்றால் (பிரகடனத்தால் முன்கொண்டு செல்லப்பட்ட) அல்லது பிரகடனத்தால் மாத்திரம் ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டத்தொடரொன்றின் முடிவில், வழமையான நடைமுறைகளின் பிரகாரம், அரச ஆணைக்குழுவின் ஆணையாளர் ஒருவரால் பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுதல் வேண்டும் என்னும் இரு சபைகளுக்குமான அறிவித்தலொன்றின் மூலம் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு அமுல்படுத்தப்படுகிறது.

அவசர ஒழுங்குவிதிகள் இயற்றப்படுவதுடன் ஐந்து நாட்களுக்கு அதிகமான நாட்கள் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்ற போது, அக்காலப்பகுதிக்குள் குறித்த தினத்தில் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான பிரகடனத்தை மகாராணி வெளியிடவேண்டும் என 2004 ஆம் ஆண்டின் குடியியல் எதிர்பாராநிகழ்வுகள் சட்டம் வேண்டுகிறது.

(ஆ)    இந்தியப் பாராளுமன்றத்தின் பாரம்பரியம்

"பாராளுமன்ற வழக்கம் மற்றும் நடைமுறை" (Practice and Procedure of Parliament) என்னும் நூலில் எம். என். கெளல் மற்றும் எஸ். எல். சக்தெர் ஆகியோர் (P.D.T. அச்சரி இனால் திருத்தப்பட்டது) குறிப்பிடுவதாவது: இந்தியாவின் அரசியலமைப்பின் உறுப்புரை 85 (2) இன் கீழ் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படும் கட்டளையொன்றால் மேற்கொள்ளப்படும் சபைக் கூட்டத்தொடரொன்றின் முடிவுறுத்தல் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு என அழைக்கப்படுகிறது. ஜனாதிபதி சபையின் கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்கான தத்துவங்களை பிரயோகிக்கின்றபோது பிரதம அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் செயற்படுகின்றார். அந்த ஆலோசனை ஜனாதிபதிக்கு வழங்கப்படுவதற்கு முன் பிரதம அமைச்சர் அமைச்சரவையுடன் கலந்தாலோசிக்கலாம். சபைக் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு எந்நேரத்திலும், அதாவது சபை அமர்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போதும் இடம்பெறலாம். இருப்பினும், வழமையாக தேதி குறிப்பிடாது சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டதன் பின்னரே கூட்டத்தொடர் இடைநிறுத்தப்படும்.

இந்தியாவில் திகதி குறிப்பிடாது லோக்சபா ஒத்திவைக்கப்பட்ட பின்னர், பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சரோ அல்லது சபை முதல்வரோ பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான பிரதம அமைச்சரின் அல்லது அமைச்சரவையின் எண்ணத்தை செயலாளர் நாயகத்திற்குத் தெரிவிக்கும் ஒரு செய்தியை அனுப்புகிறார்.

பிரதம அமைச்சரின் முன்மொழிவு சபாநாயகரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் செயலாளர் நாயகத்தினால் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. ஜனாதிபதி கட்டளையை வழங்கிய பின்னர், செயலகத்தினால் கட்டளை பெற்றுக்கொள்ளப்பட்ட தினத்தில் ஒரு விசேட வர்த்தமானி மூலம் இது அறிவிக்கப்படுகிறது. அதேவேளையில் லோக்சபாவின் கூட்டத்தொடரின் ஒத்திவைப்பை உறுப்பினர்களுக்கு அறிவிக்கும் ஒரு செய்தி மடலில் ஒரு பந்தி வெளியிடப்படுகிறது. அத்துடன் ஒரு பத்திரிகைக் குறிப்பும் வெளிவிடப்படுகிறது. அனைத்து இந்திய வானொலி மற்றும் தூர தர்ஷன் / L.S. TV அலைவரிசைகள் இந்தச் செய்தியை ஒலி ஒளி பரப்பும்படி கேட்கப்படுகின்றன.

இந்தியாவிலே கூட்டத்தொடரை ஒத்திவைத்தல் அமர்வுகளை முடிவுக்கு கொண்டு வருவதுடன் லோக்சபாவின் ஆயுட்கால தொடர்ச்சியில் ஒரு தடங்கலை ஏற்படுத்தமாட்டாது. அதன் கலைப்பு மாத்திரமே அவ்வாறான ஒரு தடங்கலை கொண்டுவரக்,கூடியது.

உறுப்புரை 107 (3), இன் கீழ் இந்தியாவில் இரண்டு சபைகளிலும் நிலுவையில் இருக்கும் சட்ட மூலங்கள், அவற்றின் கூட்டத்தொடரின் ஒத்திவைப்பினால் அவை இல்லாமல் போவதிலிருந்து வெளிப்படையாக காக்கப்படுகிறது. தெரிகுழு அல்லது இணைந்த குழுக்கள் என்பவற்றுக்கு முன்பாக உள்ள சட்டமூலங்களும் பாதுகாக்கப்படுகின்றன. நடவடிக்கைமுறை விதிகளின் கீழ் ஏற்கனவே பிரேரிக்கப்பட்டவையும், சபையில் நிலுவையில் உள்ளவையுமான பிரேரணைகள், தீர்மானங்கள், திருத்தங்கள் ஆகியன கூட்டத்தொடரின் ஒத்திவைப்பை முன்னிட்டு இல்லாது போக மாட்டாது என்பதுடன், அடுத்த அமர்வுக்கு முன்கொண்டு செல்லப்படுகிறது. ஒரு குழுவின் முன்னிலையில் நிலுவையாக இருக்கும் எந்த அலுவலும் சபையின் கூட்டத்தொடரின் ஒத்திவைப்பினால் மாத்திரம் இல்லாது போகாது என்பதை விதிகளும் நடவடிக்கைமுறைகளும் விசேடமாக வழங்குவதுடன், அவ்வாறான பாராளுமன்ற ஒத்திவைப்பைப் பொருட்படுத்தாது குழுவானது தொடர்ந்தும் தொழிற்படும்.

எமது பாராளுமன்றத்தில் கூட்டத்தொடர் ஒத்திவைப்பின் தாக்கம்

அரசியலமைப்பு ஏற்பாடுகள்

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பின்போது, சபாநாயகர் தொடர்ந்தும் தொழிற்படுவதுடன் உறுப்பினர்கள் பாராளுமன்ற கூட்டங்களுக்கு சமுகமளிக்காவிடினும், தொடர்ந்தும் உறுப்புரிமையைக் கொண்டிருப்பர். பாராளுமன்ற கூட்டத்தொடரின் ஒத்திவைப்பின் தாக்கம் சபை முன்னே உள்ள எல்லா தற்போதைய அலுவல்களையும் தடுத்து வைப்பதுடன், நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் தவிர்ந்த, அந்த நேரத்தில் நிலுவையில் உள்ள எல்லா செயன்முறைகளும் இல்லாதாக்கப்படும். ஒரு சட்ட மூலம், பிரேரணை அல்லது ஒத்த விடயத்தைக் கொண்ட கேள்வி என்பன அதே அமர்வின்போழுது இரண்டாம் தடவையாக அறிமுகம் செய்யப்பட முடியாது. எவ்வாறாயினும் பாராளுமன்ற கூட்டத்தொடரின் ஒத்திவைப்பின் பின்னர் ஒரு பின்வரும் அமர்வுக்கு அவைகளை முன்கொண்டு செல்ல முடியும்.

பாராளுமன்றத்தின் நிலுவையில் இருக்கும் அலுவல்கள்

“பாராளுமன்றத்தில் முன்பு கொண்டு வரப்பட்ட எல்லா விடயங்களுமான பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு நேரத்தில் கைவிடப்படாதிருந்தவைகளும், அடுத்த அமர்வின்பொழுது தொடர்ந்து கொண்டு செல்லப்பட முடியுமென அரசியலமைப்பின் உறுப்புரை 70 இன் பந்தி (4) கூறுகிறது.

இந்த அரசியலமைப்பு ஏற்பாட்டை கவனத்தில் கொள்ளும்போது, ஒரு கூட்டத்தொடர் ஒத்திவைப்பு நிலுவையிலுள்ள அலுவல்களை முடிவுறுத்துவதாக அமையாது. இவ்வாறு, புதிய கூட்டத்தொடர் ஆரம்பமானதன் பின்னர், ஒரு நிலுவையிலுள்ள விடயம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தொடரப்படலாம். அலுவல்களின் அனைத்து விடயங்களுடன் தொடர்வதற்கு விரும்பும் பட்சத்தில், பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் காணப்பட்ட அனைத்து குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்களை ஒரு புதிய கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் மீள் பட்டியல்படுத்தப்படவேண்டிய தேவை காணப்படுகிறது.

பாராளுமன்றத்தின் குழுக்கள்

பாராளுமன்ற 114 ஆம் இலக்க நிலையியற் கட்டளைகளின் பிரகாரம், தெரிவுக் குழு நியமிக்கப்பட வேண்டியிருப்பதுடன் அதன் காரணமாக, பாராளுமன்றத்தின் இடைநிறுத்தம் அல்லது கூட்டத்தொடர் ஒத்திவைப்பு காலப்பகுதியின் போது விசேட நோக்கங்களுக்கான பின்வரும் அனைத்துக் குழுக்களும் செயற்படுவது நிறுத்தப்படுவதுடன் முறையே 124(5),111(2) மற்றும் 109 ஆகிய இலக்கங்களைக் கொண்ட பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளுக்கு ஏற்ப உயர்பதவிகள் பற்றிய குழு, துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் மற்றும் தெரி குழுக்கள் தவிர்ந்த அனைத்துக் குழுக்களும் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடர் ஆரம்பத்திலும் மீளமைக்கப்பட வேண்டியிருக்கிறது.

  1. பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு;
  2. நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு;
  3. சபைக் குழு;
  4. ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு;
  5. சட்டவாக்க நிலையியற் குழு;
  6. அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்;
  7. அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு;
  8. அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு;
  9. அரசாங்க நிதி பற்றிய குழு;
  10. பொது மனுக் குழு; மற்றும்
  11. பின்வரிசைக் குழு.

தவிசாளர் குழாம்

பாராளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் பிரதிச் சபாநாயகர் அல்லது பிரதி சபாநாயகர் சமுகமளித்திராத சந்தர்ப்பத்தில், குழுக்களின் பிரதிச் தவிசாளர் வேண்டிக்கொள்ளும்போது குழுக்களின் தற்காலிக தலைமையாக செயற்படுவதற்காக நான்கு உறுப்பினர்களுக்கு குறையாத தவிசாளர் குழாம் ஒன்றை சபாநாயகர் பெயர்குறித்து நியமிக்கவேண்டியுள்ளது.

புதிய கூட்டத் தொடரின் ஆரம்பம்

ஒரு கூட்டத்தொடர் ஒத்திவைப்பின் முடிவில் ஒரு புதிய கூட்டத்தொடர் ஆரம்பிப்பதுடன் அது ஜனாதிபதியினால் வைபவரீதியாக திறந்துவைக்கப்படுகிறது. பாராளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடர் ஆரம்பத்திலும் அரசாங்கக் கொள்கைப் பிரகடனமொன்றை வெளியிடுவதற்கும் அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையின் பந்தி (2) இல் குறித்துரைக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்றத்தின் வைபவரீதியான அமர்வுகளுக்கு தலைமைவகிப்பதற்கும் அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு தத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பாராளுமன்றத்தின் ஆரம்ப கூட்டத்தொடர்கள்

1947 ஆம் ஆண்டில் இருந்து இற்றை வரை சுமார் 60 இற்கு மேற்பட்ட தடவைகளும் 1978 ஆம் ஆண்டில் இருந்து பின்வருமாறு 30 இற்கு மேற்பட்ட தடவைகளும் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்ததாக பாராளுமன்ற பதிவுகள் குறிப்பிடுகின்றன:

  • 1978.09.07 ஆந் திகதி ஆரம்பமான முதலாவது பாராளுமன்றம் 1988.12.20 ஆந் திகதி அது கலைக்கப்படும் வரையில் ஏழு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது;
  • 1989.03.09 ஆந் திகதி ஆரம்பமான இரண்டாவது பாராளுமன்றம் 1994.06.24 ஆந் திகதி அது கலைக்கப்படும் வரையில் ஐந்து கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது;
  • 1994.08.25 ஆந் திகதி ஆரம்பமான மூன்றாவது பாராளுமன்றம் 2000.08.18 ஆந் திகதி அது கலைக்கப்படும் வரையில் மூன்று கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது;
  • 2000.10.18 ஆந் திகதி ஆரம்பமான நான்காவது பாராளுமன்றம் 2001.10.10 ஆந் திகதி அது கலைக்கப்படும் வரையில் மூன்று கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது;
  • 2001.12.19 ஆந் திகதி ஆரம்பமான ஐந்தாவது பாராளுமன்றம் 2004.02.09 ஆந் திகதி அது கலைக்கப்படும் வரையில் இரண்டு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது;
  • 2004.04.22 ஆந் திகதி ஆரம்பமான ஆறாவது பாராளுமன்றம் 2010.02.09 ஆந் திகதி அது கலைக்கப்படும் வரையில் நான்கு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது;
    (அவசரகால ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்காக கலைக்கப்பட்ட பாராளுமன்றம் 2010.03.09 மற்றும் 2010.04.06 ஆந் திகதிகளில் மீளக் கூட்டப்பட்டது)
  • 2010.04.22 ஆந் திகதி ஆரம்பமான ஏழாவது பாராளுமன்றம் 2015.06.26 ஆந் திகதி அது கலைக்கப்படும் வரையில் ஒரு கூட்டத்தொடரை மாத்திரம் கொண்டிருந்தது;
  • 2015.09.01 ஆந் திகதி ஆரம்பமான எட்டாவது பாராளுமன்றம் 2020.03.02 ஆந் திகதி அது கலைக்கப்படும் வரையில் நான்கு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது;
  • 2020.08.20 ஆந் திகதி ஆரம்பமான ஒன்பதாவது பாராளுமன்றம் இற்றை வரை 04 கூட்டத்தொடர்களை கொண்டுள்ளது;

இன வன்முறைகள் ஏற்பட்ட போது அவசரகால நிலைமை பிரகடனத்தை தெரிவிப்பதற்காக பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்த போது மகா தேசாதிபதி சேர் ஒலிவர் குணதிலக 1958 மே 27 ஆந் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டினார். அதற்கமைய,1958 ஜூன் 04 ஆந் திகதி பாராளுமன்றம் கூடியது. அது ஒரு தனித்துவமான நிலைமையாகும்.

அரச கொள்கைக் கூற்று

ஒவ்வொரு புதிய பாராளுமன்ற கூட்டதொடரின் தொடக்கத்தில் அரச கொள்கைக் கூற்றை வெளியிடுவதற்கு சனாதிபதிக்கு தத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் அது மகா தேசாதிபதியால் வழங்கப்படும் அக்கிராசன உரை என்று அறியப்பட்டது.

1960 ஏப்ரல் 22 ஆந் திகதி திரு. டட்லி சேனாநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தோல்வி அடைந்தது. 1960 ஏப்ரல் 06 ஆந் திகதி அக்கிராசன உரையை மகா தேசாதிபதி சேர் ஒலிவர் குணதிலக வாசித்தார். திருத்தப்பட்டவாறாக எதிர்க்கட்சியின் நன்றியுரைக்கு சார்பாக 86 வாக்குகளும் எதிராக 61 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்ட புதிய கொள்கைக் கூற்று மீதான இரண்டாம் நிலை வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சிக்கு சார்பாக 93 வாக்குகளும் அரசுக்கு சார்பாக 61 வாக்குகளும் கிடைத்ததுடன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது காணப்பட, அரச கொள்கைக் கூற்றின் மூலப்பிரேரணை திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

1978 ஆம் ஆண்டு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தின் பரிணாம வளர்ச்சியுடன், சனாதிபதி முன்வைக்கும் கூற்று விவாதிக்கப்படவோ வாக்கெடுப்புக்கு விடப்படவோ இல்லை.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks