07

E   |   සි   |  

காண்க

விதிகளின் முக்கியத்துவம் என்ன?

பாராளுமன்றத்தின் முறையான செயற்பாடுகளுக்கு வகைசெய்யும் முகமாக விதிகளும் நடைமுறைகளும் உருவாக்கப்பட்டுப் பின்பற்றப்படுகின்றன.இவ்விதிகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சபையில் விவாதங்களின் தரத்தை உயர்த்த முடியும். சட்டங்களை நிறைவேற்றுவதிலும்,வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிப்பதிலும் ஏனைய விடயங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற விவாதங்களில் பங்குபற்ற வேண்டியிருக்கின்றது. பாராளுமன்ற முறைமையில், சபையில் எல்லா நோக்குகளும் கருத்துக்களும் எண்ணங்களும் கருத்துப் படிவங்களும் ஓர் ஒழுங்குக் கிரமத்தில் எழுப்பப்படுகின்றன. அதன் பின்னர் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய முடிவுகள் எட்டப்படுகின்றன.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர்களுக்கான விதிகள் எவை?

பேசும் உறுப்பினர் எப்போதும் சபாநாயகரையே விளிக்க வேண்டும். அவர் பேசும்போது எழுந்து நிற்க வேண்டும். உறுப்பினர்கள், தொடர்பற்ற விடயங்களைப் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கூறியது கூறலில் ஈடுபடக்கூடாது என அவர்கள் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள். உறுப்பினர்கள் முறையற்ற நோக்கங்களை மற்ற உறுப்பினர்கள் மீது சாட்டக்கூடாது. நீதிமன்ற விசாரணையில் உள்ள விடயங்களைப் பற்றியும் பேசக்கூடாது. எந்தப் பிரேரணை மீதும் அல்லது சட்டமூலம் மீதும் பிரேரணை பிரேரித்தவரைத் தவிர்ந்த மற்ற உறுப்பினர்கள் ஒரு தடவைக்கு மேல் பேச அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆனால், சபையின் குழுநிலையில் ஓர் உறுப்பினர் ஒரு தடவைக்கு மேல் பேச அனுமதிக்கப்படலாம். அத்துடன் பாதிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் சபையில் அதற்கான பிரேரணை இல்லாதவிடத்தும் தனிப்பட்ட விளக்கத்தைச் செய்ய உரித்துடையவராயிருக்கிறார். ஆனாலும் இந்த விளக்கங்களிலே விவாதங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பாராளுமன்றத்திற்கு ஒவ்வாத வார்த்தைகளைப் பாவியாது இருப்பதற்கு உறுப்பினர்கள் விசேட கவனம் எடுக்க வேண்டும்.டும்.

உரையாற்றாத உறுப்பினர்களுக்கான விதிகள் எவை?

உறுப்பினர்கள் கண்ணியமான முறையில் சபையில் பிரவேசிப்பதுடன், அவசியமில்லாமல் சபையைக் கடக்கவும் கூடாது. சபையின் உள்ளே புதினப் பத்திரிகைகள், புத்தகங்கள், கடிதங்கள் என்பனவற்றை வாசிக்க அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அமைதியாக இருப்பதுடன் சபையில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் வழிவிட்டாலொழிய அவரைக் குழப்பவும் கூடாது. சபையில் புகைத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் தங்கள் வாதங்களை விளக்கிக் காட்டப் பல்வேறு பொருட்களையும் கொண்டு வர முடியாது. கையடக்கத் தொலைபேசிகளும் ஒலிப்பதிவு உபகரணங்களும் சபையினுள் அனுமதிக்கப்படமாட்டா.

விவாதங்கள் தொடர்பான சபாநாயகரின் அதிகாரங்கள் யாவை?

இழிவாான அல்லது வெறுக்கத்தக்க குறிப்புக்களை வாபஸ் பெறுமாறு உறுப்பினரை சபாநாயகர் கேட்கலாம். விரும்பத்தகாத சொற்களை அதிகாரபூர்வப் பதிவுகளிலிருந்து (ஹன்சாட்) நீக்கவும் சபாநாயகரால் முடியும். சபை நடவடிக்கைகளைக் குழப்புவதில் அல்லது தடையேற்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபடும் உறுப்பினரை அவர் எச்சரிக்கலாம். குழப்பும் உறுப்பினரை சபையிலிருந்து அகற்றும்படி படைக்கலச் சேவிதரைக் கேட்டுக் கொள்ளலாம் அல்லது பெயர் குறிப்பிடலாம். ஓர் உறுப்பினர் சில வாரங்களுக்குச் சபையிலிருந்து தடுத்து வைக்கப்படலாம். ஓர் உறுப்பினருடைய நடத்தை முற்றும் ஒழுங்கீனமானதாக இருந்தால் சபாநாயகர் அவரை நாளின் மிகுதியான அமர்வில் பங்குபற்றாது தடை செய்து பாராளுமன்றத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு கட்டளையிடலாம்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks