E   |   සි   |  

பாராளுமன்ற பெண் பிரதிநிதித்துவத்தின் வரலாறு

1931 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை பாராளுமன்றத்தில் பெண்கள் சேவையாற்றி வருவதுடன் அடுத்தடுத்து வந்த அனைத்துப் பாராளுமன்றங்களிலும் அவர்கள் இன்றுவரை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர். அரசுப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் பிரதிநிதி கௌரவ (திருமதி) அடெலீன் மொலமுரே ஆவார் என்பதுடன் இவர் அரசுப் பேரவையின் இரு உறுப்பினர்களான, கௌரவ ஜே. எச். மீதெனிய அவர்களது மகளும் கௌரவ அல்பிரட் பிரான்சிஸ் மொலமுரே அவர்களின் மனைவியுமாவார்.

பாராளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைவானதாக இருந்தபோதிலும், அவர்கள் பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். இரண்டு பெண்கள் பிரதம அமைச்சர்களாக இருந்துள்ளதுடன் அதில் ஒருவர் இலங்கை ஜனாதிபதியாகுமளவிற்கு உயர்ந்திருக்கிறார். முன்னாள் இலங்கைப் பிரதம அமைச்சரான காலஞ்சென்ற மறைந்த கௌரவ எஸ்.டபிளியு.ஆர்.டீ. பண்டாரநாயக்காவின் பாரியாரான கௌரவ (திருமதி) சிறிமாவோ பண்டாரநாயக்க 1960 ஜுலை 21 அன்று உலகின் முதலாவது பெண் அரச தலைவியாகினார். கௌரவ (திருமதி) சிறிமாவோ பண்டாரநாயக்கவின் மகளான கௌரவ (திருமதி) சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இலங்கையின் முதலாவது பெண் அரச தலைவியாகவும் ஜனாதிபதியாகவும் பதவி வகித்த கௌரவத்தினைப் பெற்றுள்ளார்.

ஒரு பெண் பிரதம அமைச்சரைத் தொடர்ந்து நேரடியாக மற்றொரு பெண் பிரதம அமைச்சர் பதவிக்கு வந்ததும் பெண் பிரதம அமைச்சர் ஒருவரையும் பெண் ஜனாதிபதி ஒருவரையும் ஒரு நாடு சமகாலத்தில் கொண்டிருந்தமையும் இதுவே முதல் தடவையாகும் என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.

பாராளுமன்றத்தின் முதல் முஸ்லிம் தேசிய பெண் உறுப்பினர் (திருமதி) பேரியல் அஷ்ரப் ஆவார். இவர், 2000.10.10 அன்று பாரளுமன்றத்திற்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பின்னர் அவர் இலங்கையின் முதலாவது முஸ்லிம் தேசிய பெண் அமைச்சரானார்.

இலங்கையின் 15 ஆவது பிரதம அமைச்சரான கௌரவ தினேஷ் சந்திர ரூபசிங்க குணவர்தன அவர்கள், முன்னாள் பெண் பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ (திருமதி) குசுமாசிறி குணவர்தன அவர்களின் புதல்வராவார்.

இலங்கையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவங்கள் பற்றிய விபரங்களைக் கீழுள்ள அட்டவணை காட்டுகின்றது.

இலங்கையின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் (WPC) என்பது பல்வேறு அரசியல் கட்சிகள், புவியியல் அமைவிடங்கள், இன மற்றும் மத குழுக்களைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரே குறிக்கோளின் கீழ் – பெண்களை வலுவூட்டுவதுடன் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை ஒழித்தல் - எனும் ஒன்றுசேர்க்கும் ஒரு தனித்துவமான பாராளுமன்றப் பொறிமுறையாகும் என்பதுடன் இலங்கையில் பாலினச் சமத்துவத்தை அடைவதற்கான சட்டம் மற்றும் கொள்கை சார்ந்த விடயங்களுக்காகப் பரிந்துரைக்கும். அதேவேளை, பாலினம் தொடர்பாக மிக உயர்ந்த தீர்மானம் எடுக்கும் நிறுவனம் ஒன்றாக செயற்படுவதோடு பாராளுமன்றத்தினுள் அமையப் பெற்றிருக்கும் விசேட குழுவாகும்.

அரசியலில் பெண்களின் பங்குபற்றுதலை அதிகரிப்பது, பெண்களின் உரிமைகள் மற்றும் பாலினச் சமத்துவத்தைப் பாதுகாப்பது, பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான உரிமை மீறல்கள் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளடங்கலாக பெண் தொழிலாளர்களின் நலனோம்புகை மீது கவனம்செலுத்துதல், சலுகை கிட்டாத பெண்கள் மற்றும் விதவைகள் மத்தியில் வறுமை ஒழிப்பு மற்றும் அவர்களுக்கு வாழ்க்கைத்தொழில் பயிற்சி மற்றும் வசதியளிப்பு ஆகியவற்றைப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உபாயமார்க்கங்கள் உள்ளடக்குகின்றன.

பெண்கள் மத்தியில் கல்வியை மேம்படுத்துதல், பெண்களின் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை ஆராய்தல், அவர்களுக்குச் சட்ட உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குதல், பெண்களின் முன்னேற்றத்திற்கான சட்டங்களை இயற்றிப் பொதுவாக நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களித்தல் ஆகியவையும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உபாயமார்க்கங்களாகும்.

பாராளுமன்றத்தில் பரிந்து பேசுதல், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றப் பெண் உறுப்பினர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள், கருத்தரங்குகள், பயிற்சிகள், மாநாடுகள் மற்றும் மாவட்ட மட்டங்களில் வெளிக்கள நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அதன் நடவடிக்கைகளை மேறகொள்கிறது.

கடந்த 18 வருடங்களாக ஒன்றியம் அரசியல் வேறுபாடுகள் எதுவுமின்றி மிகவும் வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவதுடன் நாட்டில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தவும் ஒன்றியத்தினால் இயலுமாகியுள்ளது. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றப் பெண் உறுப்பினர்களுடனும் அரசாங்க அமைச்சுக்களுடனும் திணைக்களங்களுடனும் நிறுவனங்களுடனும் ஐக்கிய நாடுகள் முகவராண்மைகள், உள்ளூர் மற்றும் சர்வதேச சிவில் சமூக அமைப்புக்களுடனும் தனிப்பட்ட தொழில் வல்லுநர்களுடனும் ஒன்றியம் ஒரு வலையமைப்பையும் உருவாக்கியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களாகவுள்ள 12 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றியத்தின் உறுப்பினர்களாவர். கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே அவர்கள் ஒன்றியத்தின் தவிசாளராக இருக்கும் அதேவேளை திறன் விருத்தி, வாழ்க்கைத் தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் கௌரவ (டாக்டர்) (திருமதி) சீதா அரம்பேபொல மற்றும் கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன பா.உ. ஆகியோர் ஒன்றியத்தின் பிரதித் தவிசாளர்களாகக் கடைமையாற்றுகின்றனர்.

தொலைநோக்கு

எதிர்காலத்திற்கான எமது தொலைநோக்கு

இலங்கையில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் பெண்களுக்குள்ள சம அந்தஸ்து மற்றும் வாய்ப்புகளை ஏற்று, மதித்து அவற்றை வழங்கும் ஒரு சமூகத்தை உருவாக்குதல்.

பணிநோக்கு

வெற்றிக்கான எமது பணி

கட்சி அரசியல் தொடர்பு மற்றும் இன, மத வேறுபாடுகள் ஆகியவற்றைத் தாண்டி ஒன்றாகச் செயற்பட்டு இலங்கையில் பால்நிலைசார் பொறுப்புச் சட்டங்கள் மற்றும் வரவு செலவுத் திட்டங்களை பரிந்துரைத்து, இயற்றி பின்னர் அவற்றைக் கண்காணிப்பதன் மூலம் அனைவருக்கும், குறிப்பாக பெண்களுக்குச் சமத்துவத்தை உறுதி செய்தல்.

இலக்குகள்

  • ஒன்றியத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விழுமியங்களை அதிக பயனுறுதித்தன்மையுடன் பரிந்துரைப்பதற்காக ஒன்றியத்தினதும் அதன் ஒவ்வோர் உறுப்பினரினதும் இயலளவை மேம்படுத்துதல்
  • பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தொலைநோக்கு மற்றும் பணிநோக்கின் பிரகாரம் தற்போதைய மற்றும் முன்மொழியப்பட்டுள்ள நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்களுக்குப் பங்களித்து பெண்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டும் சட்டங்களைத் திருத்துவதற்கு/நீக்குவதற்கு பரிந்துரைப்பதுடன் உரிய அனைத்து சட்டங்களின் நடைமுறைப்படுத்தலையும் கண்காணித்தல்
  • உள்ளூர், மாகாண மற்றும் பாராளுமன்ற மட்டத்தில் பெண்களின் முனைப்பான பங்கேற்பு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல்
  • அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் யுத்தத்தின் பின்னர் இயல்புநிலைக்கு மீளுகின்ற பெண்கள் மீது விசேட கவனம் செலுத்தி, தேசிய மனித உரிமைகள் செயற்திட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தால் ஒப்புறுதிப்படுத்தப்பட்ட பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் உரிய அனைத்து ஐக்கிய நாடுகள் சமவாயங்களையும் பரிசீலித்தல்.

எமது குறிக்கோள்கள்

  • அரசியலில் பெண்களின் பங்கேற்பினை அதிகரித்தல்
  • பெண்களின் உரிமைகள் மற்றும் பால்நிலை ரீதியான சமத்துவத்தைப் பாதுகாத்தல்
  • பெண்களுக்கு எதிரான அனைத்து வடிவிலுமான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுத்தல்
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளடங்கலாகப் பெண் தொழிலாளர்களின் நலநோம்புகையை மேம்படுத்துதல்
  • சலுகைகள் குறைந்த பெண்கள் மற்றும் விதவைகள் மத்தியிலுள்ள வறுமையை நீக்கி அவர்களுக்கு வாழ்க்கைத்தொழில் பயிற்சி மற்றும் வளங்களை வழங்குதல்
  • பெண்களுக்குக் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை அதிகரித்தல்
  • பெண்களின் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்தல்.
  • பெண்களுக்குச் சட்ட உதவி மற்றும் ஆலோசனை ஏற்பாடுகளை உறுதி செய்தல்.
  • பெண்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தச் சட்டவாக்கங்களை இயற்றுதல்.
  • பொதுவாக நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்தல்.

எமது செயற்பாடுகள்

  • பாராளுமன்றத்தின் மூலம் ஆதரித்துவாதாடல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல்.
  • பெண் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை ஒழுங்கமைத்தல்.
  • அரசாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்.
  • விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பயிற்சிப் பட்டறைகள், பயிற்சிகள் மற்றும் மாநாடுகளை நடாத்துதல்.
  • மாவட்ட மட்டங்களில் வெளிக்கள நடவடிக்கைகளை ஒழுங்கமைத்தல்.
  • ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல்.
  • உள்ளூர்ப் பெண்கள் அமைப்புகள் மற்றும் தொழில்வாண்மையாளர்களுடன் பங்காண்மையினை உருவாக்குதல்.
  • பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏனைய அமைப்புகள் மற்றும் சர்வதேச பெண்கள் அமைப்புகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.

எமது முக்கிய அடைவுகள்

  • உள்ளூராட்சி மட்டத்தில் பெண்களின் அதிக பிரதிநிதித்துவத்திற்காகத் தொடர்ச்சியாக ஆதரித்துவாதாடியமையினால் 2017 ஆம் ஆண்டில் உள்ளூர் அதிகாரசபைகள் சட்டத்தில் பெண்களுக்கு 25% இடஒதுக்கீட்டிற்கு உத்தரவாதம் அளிக்கும் திருத்தம் கொண்டுவரப்பட்டமை.
  • 2008 ஏப்ரல் மாதத்தில், அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் சமாதானப் பேச்சுவார்த்தை மேசையில் பெண்களுக்கு இடம் வழங்குவதை உறுதி செய்வதற்காக பெண் அரசியல்வாதிகளின் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி (CPCWP) உருவாக்கப்பட்டமை.
  • மிகவும் பிரச்சினைக்குரிய கரிசணைகள் பற்றி விவாதிக்கவும், பெண்களின் உரிமைகள் மீதான நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் சீர்திருத்தத்திற்கான மூலோபாயங்களை உருவாக்கவும் சிவில் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் WPC உறுப்பினர்களுக்கு ஒரு தளமாகச் செயற்படும் முன்னெடுப்பாக 'கொழும்புக் கலந்துரையாடல்கள்' தொடங்கப்பட்டமை.
  • முரண்பாட்டுத் தீர்வு, அரசியலமைப்புவாதக் கோட்பாடுகள், ஐ.நா. தீர்மானம் 1325 மற்றும் சட்டவாக்க வரைவு ஆகியவற்றில் WPC உறுப்பினர்கள் மற்றும் ஏனைய செயற்பாட்டாளர்களுக்கு பயிற்சி மற்றும் இயலளவு விருத்தி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டமை.
  • ஹவார்ட் சட்டக் கல்லூரியின் ஐந்து நாள் தீவிர பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஒன்றியத்தின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சமூகமளித்தனர்.
  • சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூர்வதற்காக 2014 ஆம் ஆண்டு முதல், வருடாந்தம் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளரின் அலுவலகம், ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம், UN Women மற்றும் Search for Common Ground (SFCG) ஆகிய அமைப்புக்களுடன் இணைந்து நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்படுகின்றன.
  • பெண்களுக்கான 25% ஒதுக்கீடு மற்றும் அவர்கள் முகம்கொடுக்கும் சவால்களை கருத்திற்கொள்ளல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஒன்பது மாகாணங்களிலும் உள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் பெண் அரசியல் தலைவர்களுடன் பிராந்திய ரீதியான கலந்தாலோசிப்புக்கள் நடத்தப்பட்டன.
  • ஒன்பது பிராந்தியக் கலந்தாலோசிப்புக்களில் இருந்தும் கண்டறிந்தவற்றினைப் பற்றிக் கலந்துரையாடுவதற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் இணைந்து தேசிய கருத்தரங்கு ஒன்று கூட்டப்பட்டது.
  • உள்ளூர் மட்டப் பெண் அரசியல் தலைவர்கள் மேல் மாகாண சபை உறுப்பினர்களையும் ஆண் செயற்படுனர்களையும் சந்தித்துக் கேள்விகளைக் கேட்பதற்கும் திருத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சிச் சட்டம் தொடர்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்தவும் தேசிய மட்ட அரசாங்கத்தில் பெண்கள் வகிக்கும் வகிபாகம் மற்றும் அரசியல் செயன்முறை தொடர்பான அவர்களின் புரிதலை அதிகரிப்பதற்குமான தளமொன்றை வழங்குதல்.
  • SFCG உடனான பங்காண்மையுடன் பொதுப் போக்குவரத்து முறைமையில் பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஆதரித்துவாதாடும பிரச்சாரம் அமுல்படுத்தப்பட்டது.
  • பால்நிலை மற்றும் பெண்களின் உரிமை ஆகியவற்றின் உள்ளடக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக புதிய அரசியலமைப்புப் பற்றிய வழிகாட்டல் குழுவிற்கு எழுத்திலான மற்றும் வாய்மொழி மூலமான சமர்ப்பணம் மேற்கொள்ளப்பட்டது.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks