E   |   සි   |  

வேட்பு மனு நிபந்தனைகள் தொடர்பான ஏற்பாடுகள் திருத்தப்பட்டவாறான 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்கப் பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தைக் கலைப்பதாக சனாதிபதி விடுக்கும் பிரகடனமானது, தெரிவத்தாட்சி அதிகாரியினால் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் "வேட்பு மனு காலப்பகுதி"யையும் வாக்கெடுப்பு நடைபெறவேண்டிய திகதியையும் குறித்துரைத்தல் வேண்டுமென இச்சட்டத்தின் 10 ஆம் பிரிவு ஏற்பாடு செய்கிறது. இப்பிரகடனம் விடுக்கப்பட்டதன் பின்னர், தேர்தலொன்றில் போட்டியிட விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சியும் அவ்வாறு போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை ஆணையாளருக்கு ஏழு நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் (11 ஆம் பிரிவைப் பார்க்க) என்பதோடு, ஆணையாளர் அத்தகைய அரசியல் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட சின்னமொன்றை வழங்கவும் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சின்னமொன்று தொடர்பான பிணக்கெதுவும் இறுதியில் தேர்தல்கள் ஆணையாளரினால் தீர்த்து வைக்கப்படும்.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உறுப்புரை 99(3) இற்கமைய, ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி அல்லது ஒரு சுயேட்சை வேட்பாளர் குழு வேட்பாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் ஒரு வேட்பு மனுவைச் சமர்ப்பிக்கலாம். ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை யோடு மூன்றைக் கூட்டுவதால் பெறப்படும் எண்ணிக்கைக்குச் சமனான வேட்பாளர்களை வேட்பு மனு உள்ளடக்கியிருக்க வேண்டும். வேட்பு மனுப் பத்திரமானது, இச்சட்டத்திற்கான முதலாம் பின்னிணைப்பில் உள்ள படிவம் 'அ' வில் காணப்படுவதைப் போல் அமைந்திருத்தல் வேண்டும். ஒவ்வொரு வேட்பாளரும் தான் வேட்பாளராகப் பெயர் நியமனஞ் செய்யப்படுவதற்கான தனது சம்மதத்தை உறுதிப்படுத்த வேண்டுமென்பதோடு, வேட்பு மனுப்பத்திரமானது, அரசியல் கட்சியின் செயலாளரினால் அல்லது சுயேச்சைக் குழுவின் தலைவரினால் கைச்சாத்திடப்பட்டிருக்கவும் வேண்டும். இவர்களின் கையொப்பங்கள் சமாதான நீதவான் ஒருவரினால் அல்லது பிரசித்த நொத்தாரிசு ஒருவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

வேட்பு மனுவானது குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் செயலாளரால் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட முகவரால் தெரிவத்தாட்சி அலுவலரிடம், அவரது அலுவலகத்தில், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வழமையான அலுவலக நேரங்களில் கையளிக்கப்படல் வேண்டும்.

தன்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு வேட்புமனுவினதும் பிரதியொன்றைத் தயார் செய்து அதை விளம்பரப்பலகையிலிடுவதற்குத் தெரிவத்தாட்சி அலுவலர் கடப்பாடுடையவராய் இருக்கின்றார்.

1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்கப் பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரிவு 16 இன்படி, சுயேட்சைக் குழுவொன்றின் குழுத்தலைவர் வேட்பு மனுவைச் சமர்ப்பிக்கையில் ரூபாய் 2000/= ஐக் கட்டுப்பணமாகச் செலுத்த வேண்டியிருப்பதுடன், குறித்த தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எட்டிலொரு பங்கிற்கும் அதிகமான வாக்குகளை அச் சுயேச்சைக்குழு பெற்றுக் கொள்ளத் தவறும் பட்சத்தில், இக்கட்டுப்பணம் மீளச் செலுத்தப்படாது.

பிரிவு 19 இன் ஏற்பாட்டிற்கமைய வேட்பு மனுக்கள் சட்ட ஏற்பாடுகளுக்கமைய கையளிக்கப்படாவிடில், அல்லது தேவைப்படும் எண்ணிக்கையிலான வேட்பாளர்களை அது கொண்டிருக்காவிடில், அல்லது வேட்பாளர்களில் எவரேனும் தனது சம்மதத்தைத் தெரிவித்திருக்காவிடில், அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் அல்லது குழுவின் தலைவரின் கையொப்பத்தை அது கொண்டிராவிடில், அல்லது சட்டத்தால் தேவைப்படுத்தப்பட்டவாறு உறுதிப்படுத்தப்பட்டிராவிடில் நிராகரிக்கப்படலாம். வேட்பு மனுக்கள் மீதான ஆட்சேபனைகள் வேட்பு மனுக்காலத்தின் இறுதி நாளன்று மதியம் 12.00 மணி தொடக்கம் பி.ப.1.30 மணி வரையான காலப்பகுதியினுள் ஏற்றுக்கொள்ளப்படும்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks