பார்க்க

E   |   සි   |  

தனிப்பட்ட ஒருவருக்கு, சங்கத்துக்கு அல்லது கூட்டு நிறுவனத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற அல்லது நலன் விளைவிக்கின்ற நோக்குடன் சட்டமூலமொன்றை அறிமுகம் செய்ய விரும்பும் எவ்வித அமைச்சுப்பதவியையும் வகிக்காத எவரேனும் ஒரு தனியார் உறுப்பினர் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வர்த்தமானியிலும் இலங்கைக் குடியரசில் விற்பனையில் உள்ள குறைந்தது ஒரு சிங்கள, ஒரு தமிழ் மற்றும் ஓர் ஆங்கிலச் செய்தித் தாளிலாவது அச்சட்டமூலத்தின் பொது இயல்புகளையும் நோக்கங்களையும் எடுத்துரைக்கும் அறிக்கையொன்றை விளம்பரப்படுத்துவதன் வாயிலாக முன்னறிவித்தல் கொடுத்தல் வேண்டும்; அத்தகைய விளம்பரம், சட்டமூலத்தைச் சமர்ப்பிப்பதற்கு அனுமதி கோரும் விண்ணப்பம் செய்யப்படுவதற்குக் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்னர் பிரசுரிக்கப்படல் வேண்டும். (நிலையியற் கட்டளை 53(1)).

“தனியார் உறுப்பினர்” என்பது 24(3) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது:

24 (3) “தனியார் உறுப்பினர்” என்பது சபாநாயகர், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பிரதம அமைச்சர், அமைச்சரவையின் அமைச்சர்கள், அமைச்சரவையின் உறுப்பினர்கள் அல்லாத அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்றச் சபை முதல்வர், பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர், அரசாங்க கட்சியின் முதற்கோலாசான், மற்றும் எதிர்கட்சியின் முதற்கோலாசான் ஆகிய பதவிகளை வகிக்கின்ற உறுப்பினரொருவரை உள்ளடக்காது.

குறிப்பு:

சட்டமூலமானது பொதுவிடயங்கள் அல்லது பொதுமக்கள் நலன் தொடர்பாக காணப்படுமாயின் வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பத்திரிகை விளம்பரம் என்பன அத்தியாவசியமற்றதாகும்.

தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

52 மற்றும் 53 ஆம் நிலையியற் கட்டளைகளில் தனியார் உறுப்பினர்களின் சட்டமூலங்களின் நடவடிக்கைமுறைகள் இடப்பட்டுள்ளன.

  1. 1. 52 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ், ஒரு தனியார் உறுப்பினரின் சட்டமூலம் பாராளுமன்றத்திலே பெறப்படும்போது 52(3) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அச்சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாணதா மற்றும் பதின்மூன்றாம் திருத்தத்தின் ஏற்பாடுகளிற்குட்படுகின்றதாவென்பது தொடர்பாகச் சட்டத்துறை தலைமையதிபதியின் கருத்தை அறிந்துகொள்வதற்காக அச்சட்டமூலத்தினை சட்டத்துறை தலைமையதிபதிக்கு ஆற்றுப்படுத்தப்படுகின்றது. 52(3) ஆ நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டத்துறை தலைமையதிபதி தனது அவதானிப்புக்களை ஆறு வாரங்களிற்குள் பாராளுமன்றத்திற்கு தெரியப்ப்படுத்த வேண்டும்.

    அச்சட்ட மூலத்திற்கான சட்டத்துறை தலைமையதிபதியின் அவதானிப்பினை பெற்றுக்கொண்டதன் பின்னர் 52(4) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் மூன்று மொழிகளிலும் வர்த்தமானி-குறைநிரப்பி ஒன்றாக அச்சிடப்படுகின்றது.
  2. வர்த்தமானி வெளியிடப்பட்ட திகதி இருந்து 07 நாட்கள் கழிந்ததன் பின், சட்டமூலமானது, முதலாம் மதிப்பீட்டிற்காக 52(5) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஒழுங்குப் பத்திரத்திலே சேர்க்கப்படுகின்றது. பாராளுமன்றமானது தனியார் உறுப்பினர் சட்டமூலத்தின் முதலாம் மதிப்பீட்டினை அங்கீகரிக்க வேண்டும்.
  3. 3. பிரேரணை ஒன்று சபைக்கு விடப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதும் அல்லது சபையால் அனுமதி வழங்கப்படாதபோது இருபதிற்கும் குறையாத உறுப்பினர்கள் அவ்வுறுப்பினரின் பிரேரணையை ஆதரித்துத் தத்தம் இடங்களில் எழுந்து நின்றால், 52(6) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அச்சட்டமூலம் முதலாம் மதிப்பீடு செய்யப்பட்டு அச்சிடுவதற்கு கட்டளையிடுவதாகக் கருதப்படும்.
  4. முதலாம் மதிப்பீட்டின் பின்பு குறிப்பிட்ட சட்டமூலத்தை அச்சிடுவதற்கான கட்டளை வழங்கப்படும் பட்சத்தில், அதனை அச்சிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் 52(6) நிலையியற் கட்டளையின் பிரகாரம் அறிக்கையிடும் பொருட்டுப் பொருத்தமான அமைச்சருக்கும் அனுப்பி வைக்கும்.
  5. அமைச்சரின் அறிக்கையானது, அரசியலமைப்பின் உறுப்புரை 77 இற்கு அமைய, சட்ட மாஅதிபரின் குறிப்புரைகளுடனும் அமைச்சரவை அங்கீகாரத்துடனும் பாராளுமன்றத்திற்குக் கிடைக்கப் பெற்றதன் பின்பு,சட்டமூலமானது ஓர் அறிக்கை வடிவிலே அச்சிடப்பட்டுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அஅமைச்சர் சட்டமூலத்தின் சட்டவாக்கத்தினை அங்கீகரிக்காதவிடத்து சட்டத்துறை தலைமையதிபதியின் சான்றிதழ் மற்றும் அமைச்சரவை அங்கீகாரம் என்பன அவசியமற்றதாகும்.
  6. அமைச்சரின் அறிக்கை ஆறு மாதத்திற்குள் கிடைக்காதவிடத்து, சட்டமூல அலுவலகமானது, 52(7) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம், அதற்குப் பொறுப்பான உறுப்பினர் விரும்பும் தினத்தில் இரண்டாம் மதிப்பீடு செய்யப்படுவதற்காக அச்சட்டமூலம் ஒழுங்குப்பத்திரத்தில் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
  7. அமைச்சரின் அறிக்கையானது பாராளுமன்றச் சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமூலத்தின் மீது இரண்டாம் மதிப்பீடு நடத்தப்பட்டதன் பின் சட்டமூலமானது சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படுகின்றது.
  8. சட்டவாக்க நிலையியற் குழுவின் நடவடிக்கைகள் 113 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் நடத்தப்படுகின்றன. சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையானது பாராளுமன்றத்திற்கு 68 மற்றும் 70 ஆகிய நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் சமர்ப்பிக்கப்படுகின்றது.
  9. சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையானது 72(1) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பரிசீலிக்கப்பட்டுப் பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்படுகின்றது.
  10. சட்டமூலமானது பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டதன் பின்பு 72 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டமூலத்தின் மீது மூன்றாம் மதிப்பீடு நடத்தப்பட்டு நிறைவேற்றப்படுகின்றது.
  11. மூன்றாம் மதிப்பீட்டின் பின், 73 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் செய்யப்படுகின்ற முன்னறிவித்தலுக்கிணங்க, வார்த்தைகள் அல்லது வரைவு தொடர்பான திருத்தங்களை அதில் செய்யலாமென்பதோடு 74 ஆம் இலக்க நிலையியற் கட்டளையினதும் அரசியலமைப்பின் 79 மற்றும் 80 ஆம் உறுப்புரைகளினதும் கீழ் சபாநாயகரின் சான்றுரைக்காக சமர்ப்பிக்கப்படும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks