E   |   සි   |  

பாராளுமன்ற முறைமையின் பரிணாமம்

காலனித்துவக காலத்துக்கு முன்னர் இலங்கை ஒரு முடியாட்சி நாடாகத் திகழ்ந்தது. அதன் பின்னர் போர்த்துக்கேய, ஒல்லாந்த மற்றும் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கீழ், நிர்வாக மற்றும் அரசாங்க மறுசீரமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. முதலில் கரையோர ஒல்லாந்தர் ஆட்புலங்களும் அதனைத் தொடர்ந்து கண்டி இராச்சியமும் 1815ம் ஆண்டில் பிரித்தானிய ஆட்சியின் கீழ்வந்தது. ஹோல்புறூக்- கெமரன் ஆணைக்குழுவின் விதப்புரைகளுக்கிணங்க நிறைவேற்றுப் பேரவையும் சட்டவாக்கப் பேரவையும்- காலனித்துவ இலங்கையின் முதலாவது சட்டவாக்க சபைகள் - 1833 ம் ஆண்டு ஆளுநர் சேர் றொபட் ஹோட்டன் என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

நிறைவேற்றுப் பேரவை, சட்டவாக்கப் பேரவை என்பன காலிமுகத்திடலில் கடலை நோக்கியதாயமைந்துள்ள பழைய பாராளுமன்றக் கட்டிடத்துக்கு மாற்றப்படும் வரை கண்கவர் கோடன் பூங்காவுக்கு எதிரேயுள்ள, தற்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இயங்கும் கட்டிடத்திலே கூட்டப்பட்டன. அப்போதைய மகா தேசாதிபதி சேர் ஹேபட் ஸ்ரான்லி என்பவரால் 1930 ஜனவரி 29 ஆம் திகதி, காலிமுகத்திடலில் கடலை நோக்கியதாயமைந்துள்ள பழைய பாராளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. சட்டமன்றம் 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயிலுள்ள புதிய பாராளுமன்றக் கட்டிடத்தொகுதிக்கு மாற்றப்படும்வரை இக்கட்டிடத்திலேயே நடைபெற்றது.

1944ம் ஆண்டு சோல்பரி ஆணைக்குழுவினரால் வெஸ்ற்மின்ஸ்டர் மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது. பாராளுமன்றம், மகாராணியையும் (மகா தேசாதிபதியினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்) செனற், பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டு சபைகளையும் கொண்டிருந்தது. பிரதிநிதிகள் சபையில் 101 உறுப்பினர்கள் இருந்தனர். செனற் சபையில் 30 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் 15 பேர் பிரதிநிதிகள் சபையினரால் தெரிவுசெய்யப்பட, மற்றும் 15 பேர் மகா தேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.1971 ஒக்டோபர் 2ஆம் திகதி செனற்சபை இல்லாமலாக்கப்பட்டது. அரசியலமைப்புச் சீர்திருத்தம் காரணமாக சட்டமன்றத்தின் பெயர் பலமுறை பின்வருமாறு மாற்றப்பட்டது.

மூன்றாம் விக்கிரமபாகு மன்னனின் பலம் மிக்க பிரதம அமைச்சரான நிஸ்ஸங்க அழகேஸ்வராவின் அரண்மனை அமைந்திருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் புதிய பாராளுமன்றத்தின் நிர்மாணம் 1979 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1982 ஆம் ஆண்டு பூர்த்தியாக்கப்பட்டது. 'எட்வட் றீட்' மற்றும் 'பெக்' ஐச் சேர்ந்த திரு. ஜிஃப்ரி (B)பாவா கட்டிடக் கலைஞராக ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய கட்டிடத்தொகுதியின் நிர்மாணத்துக்காக ஜப்பானிய மிற்சுயி கம்பனிகள் இரண்டின் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks