07

E   |   සි   |  

பொதுவான தகவல்கள் 

பொது மக்களில் யாரும் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரிக்கு ஒரு குழுவாகவோ அல்லது தனியாகவோ எந்தவொரு அமர்வு அல்லது அமர்வற்ற நாளிலும் வரமுடியும். வருகைகள் அமர்வற்ற நாட்களில் மு.ப. 9.00 மணிக்கும் பி.ப. 3.30 மணிக்கும் இடையில் 30 (முப்பது) நிமிடங்களுக்கும், எந்தவொரு அமர்வு நாளிலும் அமர்வு முடியும் வரையும் ஒழுங்கு செய்யப்படும்.


அமர்வு நேரங்கள்

பாராளுமன்றம் வேறு விதமாகத் தீர்மானித்தாலன்றி, மாதந்தோறும் முதலாவது ஞாயிற்றுக் கிழமையை அடுத்துவரும் வாரத்திலும் ஒன்றுவிட்ட அடுத்த வாரத்திலுமாக இரு வாரங்களில் பாராளுமன்றம் கூட வேண்டும். அத்தகைய முதலாவது, மூன்றாவது வாரங்களில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் பாராளுமன்றம் அமர்தல் வேண்டும். பாராளுமன்றம் வழக்கமாக சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஏனைய விடுமுறை நாட்களிலும் கூடுவதில்லை. அத்துடன் வழக்கமாக பாராளுமன்ற அமர்வுகள், செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் பி.ப. 1.00 மணி முதல் பி.ப. 7.30 மணி வரையிலும், வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 7.30 மணி வரையும் நடைபெறும். சில தினங்களில் பி.ப. 7.30 மணிக்குப் பின்னரும் அமர்வுகள் நீடிக்கப்படலாம். வரவு செலவுத் திட்டக் காலப் பகுதியில், பொதுவாக ஒதுக்கப்பட்ட அமர்வு நேரம் மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 12.30 மணி வரையும் பின்னர் பி.ப. 1.00 மணி முதல் பி.ப. 7.00 மணி வரையுமாக இருப்பதோடு, காலத்திற்கு காலம் நேர மாற்றங்களுக்கு உட்படலாம்.

பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையொன்றின் மூலம் குறிப்பிட்ட நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தப்பட்டதற்கிணங்க நடப்பு பாராளுமன்ற அமர்வு நேரம் மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரையுமாகும்.


கலரிகளுக்கு வருகை தருவதற்கான அனுமதி

பொதுமக்கள் கலரிக்கு வருகை தருவதற்குப் படைக்கலச் சேவிதரிடமிருந்து அனுமதி பெறப்படல் வேண்டும். அவ்வாறான வேண்டுகோள்களை பாராளுமன்றத்துடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது விசாரணைப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்புவதன் மூலமோ மேற்கொள்ளலாம். உங்களுடைய விசாரணையில் பின்வரும் விபரங்களை நீங்கள் குறிப்பிட வேண்டும்.

  1. வருபவர்களின் முழுப்பெயர்களும் விலாசங்களும்
  2. வருபவர்களின் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கங்கள்
  3. வருகை தரும் திகதியும் நேரமும்
  4. வருகையின் நோக்கம்
  5. உங்களுடன் தொடர்பு கொள்வதற்கான விபரங்கள்

உங்களுடைய விபரங்கள் முறைவழிப்படுத்தப்பட்டதும், படைக்கலச் சேவிதர் உங்களுடைய வேண்டுகோளை உறுதிப்படுத்த உங்களுடன் தொடர்பு கொண்டு பாராளுமன்றக் கட்டிடத் தொகுதிக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை உங்களுக்கு விநியோகிப்பார்.


பாராளுமன்றத்தை பார்வையிட வருபவர்களுக்கான அறிவுறுத்தல்கள்

  1. படைக்கலச் சேவிதரால் வழங்கப்பட்டதும் வருகை தருகின்ற தினத்தில் செல்லுபடியாகின்றதுமான பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கான அனுமதிப்பத்திரத்தைக் கொண்டுள்ளவர்களுக்கு மாத்திரம் பார்வையாளர் கூடத்துக்கு பிரவேசிப்பதற்கு இடமளிக்கப்படும். எனவே, தங்களுக்கு படைக்சலச் சேவிதரால் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்காக விநியோகிக்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தைத் தவறாமல் எடுத்துவர வேண்டுமென்பதோடு அதனை பாராளுமன்றக் கட்டடத்தை விட்டு நீங்கிச் செல்லும்வரை பாதுகாப்பாக வைத்திருக்கவும் வேண்டும்.
  2. பாராளுமன்றத்தை பார்வையிட எதிர்பார்க்கும் விருந்தினர்கள் அதற்கான அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கு பின்வரும் வழிகளில் படைக்கலச்சேவிதரிடம் விண்ணப்பிக்கலாம்:-
    1. கௌரவ பாராளுமன்ற உறுப்பினரொருவர் ஊடாக
    2. பாராளுமன்ற பணியாட்டொகுதியினர் அல்லது ஏனைய/ துணைச் சேவை அலுவகமொன்றைச் சேர்ந்த பணியாட்டொகுதியினர் ஊடாக
    3. பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலான "ஜயந்திபுர பாதுகாப்பு நுழைவாயிலில்" தாபிக்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர கருமபீடத்துக்கு சமுகமளித்து சமர்ப்பிக்கப்படுகின்ற வாய்மூல/ எழுத்துமூல கோரிக்கை ஒன்றின் ஊடாக
    4. sa@parliament.lk என்ற மின்னஞ்சல் ஊடாக
    5. 0112777473 இலக்கத்திற்கு தொலைநகல் அனுப்புவதன் ஊடாக
    6. படைக்கலச் சேவிதர், படைக்கலச் சேவிதர் திணைக்களம், பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு சமர்ப்பிக்கப்படுகின்ற எழுத்து மூலமான கோரிக்கையொன்றின் ஊடாக
    7. பாடசாலை சீருடையுடன் சமுகமளிக்கும் பாடசாலை மாணவர்களுடன் கூடிய குழுக்கள் சார்பில் ஏற்புடைய பாடசாலையின் அதிபரினால் பின்வரும் 03 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களுடன், படைக்கலச் சேவிதரிடம் மேற்கொள்ளப்படும் எழுத்துமூலமான கோரிக்கையொன்றின் ஊடாக
  3. விண்ணப்பிக்கும் போது, பாராளுமன்றத்தை பார்வையிட எதிர்பார்க்கும் திகதி, நேரம், சமுகமளிக்கும் ஆட்களின் எண்ணிக்கை, விண்ணப்பதாரியின் முகவரி ஆகிய விபரங்களையும், சமுகமளிப்போரின் பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகிய விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். தொலைபேசி இலக்கங்கள்/ தொலைநகல் இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் வசதிகள் இருப்பின் அம்முகவரி (ஈமெயில்) ஆகிய விபரங்களையும் சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பங்கள் சார்பில் துரிதமாக அனுமதிப்பத்திரங்களை அனுப்புவதற்கு வசதியாக இருக்கும். பாடசாலை மாணவர்களுக்காக விண்ணப்பிக்கையில் ஏற்புடைய தரங்களை குறிப்பிடுதல் வேண்டும்.
  4. வாரத்தின் சகல கடமை நாட்களிலும் மு.ப.9.00 மணி முதல் பி.ப. 3.30 மணி வரையிலும், பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் நாட்களில் பிற்பகல் 3.30 மணியைக் கடந்து பாராளுமன்ற அமர்வுகள் நிறைவுபெறும் வரையிலும் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்காக அனுமதி வழங்கப்படுகின்றது. வார இறுதி நாட்கள் (சனிக்கிழமை /ஞாயிற்றுக்கிழமை) அல்லது போயா விடுமுறை நாட்கள் அல்லது ஏனைய அரசாங்க விடுமுறை நாட்களில் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்காக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படமாட்டாது. மேலும் சிறப்பு விருந்தினர்களுக்காக பொது மக்கள் பார்வையாளர் கூடங்கள் மட்டுப்படுத்தப்படும் தினங்களிலும் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்காக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட மாட்டாது.

    பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம், ஒவ்வொரு மாதத்திலும் முதலாவது ஞாயிற்றுக் கிழமையை அடுத்து வரும் வாரத்தில் ஆரம்பித்து, அவ்வாரத்தின் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, வௌ்ளிக்கிழமை ஆகிய நாட்கள் என்றவாறு, ஒவ்வொரு மாதத்திலும் முதலாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும். எனினும், அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் பிரகாரம், மேற்குறிப்பிட்ட தினங்களில் அமர்வுகளை நடத்தாமல் விடுவதற்கும் அல்லது வேறு தினங்களில் அமர்வுகளை நடத்துவதற்கும் வாய்ப்புள்ளது.

    பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்காக வழங்கப்படும் அனுமதிப் பத்திரங்களை முன்னறிவித்தலின்றி இரத்துச் செய்வதற்கான சந்தர்ப்பங்களும் ஏற்படலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் இயலுமானவரை அது குறித்து உரிய தரப்பினருக்கு அறிவிப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய நாட்களில் பி.ப. 1.00 மணி முதல் பி.ப. 7.30 மணி வரையிலும், வியாழக்கிழமை மற்றும் வௌ்ளிக்கிழமை ஆகிய நாட்களில் மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 7.30 மணி வரையிலும் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும். எனினும், பாராளுமன்றம் வேறுவிதமாகத் தீர்மானிக்கும்பட்சத்தில் அமர்வு இடம்பெறும் நேரங்கள் அவ்வப்போது மாற்றமடையலாம்.
  5. பாராளுமன்றத்தில் தற்போது அமுலில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளின்படி பார்சல்கள், கைப்பைகள், பிரீப்கேஸ், பயணப்பைகள், புத்தகங்கள், ஆவணங்கள், பேனைகள், பென்சில்கள், மழை அங்கிகள், குடைகள், புகைப்படக் கருவிகள், செல்லிடத்தொலைபேசிகள், மின்னியல் அல்லது இலத்திரனியல் சாதனங்களும் துணைக்கருவிகளும், சிகரெட், புகையிலை, வெற்றிலை, புகைக்குழல், உணவு வகைகள் மற்றும் தொப்பிகள் போன்றவற்றையும் மேலும், மேற்குறிப்பிட்ட பொருட்களுக்கு மேலதிகமாக கலரிக்குள் எடுத்துச் செல்லக்கூடாதென தீர்மானிக்கப்படக்கூடிய/ கருதப்படக்கூடிய எதையாவது நீங்கள் வைத்திருந்தால் அவற்றையும் கலரிக்குள் எடுத்துச் செல்ல இடமளிக்கப்பட மாட்டாது. எனவே, அத்தகைய பொருட்களை எடுத்து வருவதைத் தவிர்த்துக் கொள்க. அத்தகைய பொருட்களெதுவும் உங்கள் வசமிருப்பின் அவற்றை நீங்கள் வருகை தந்த வாகனத்தில் வைத்துவிட்டு வரவும்.
  6. முறையான உடைகளை அணிந்து வராதவர்கள் (அதாவது, கட்டைக் காற்சட்டை, கையற்ற ஸ்கினி போன்ற பொருத்தமற்ற ஆடைகள்) பாராளுமன்ற வளவுக்குள்/ கலரிக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே பொது மக்கள், கலரிக்கு வருகை தருபவர்கள் முறையாக உடையணிந்து வருகைதர வேண்டும்.
  7. பாராளுமன்ற அமர்வுகளைப் பார்வையிட வருகின்ற பாடசாலை மாணவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றபோது ஐந்தாம் ஆண்டு (05) மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுமென்பதோடு, அமர்வுகள் இடம்பெறாத நாட்களில் இந்நிபந்தனை அமுல்படுத்தப்பட மாட்டாது. பாராளுமன்ற அமர்வு இடம்பெறுகின்ற காலப்பகுதியில் பாராளுமன்ற கலரிக்கு கைக்குழந்தைகளையும், சிறு குழந்தைகளையும் கொண்டுசெல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாதென்பதால் அத்தகைய பிள்ளைகளை கலரிக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். சிறிய பிள்ளைகளையும், சிறிய பாடசாலைப் பிள்ளைகளையும் கலரியின் முதல் வரிசையில் அமர்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.
  8. மேற்படி 2வது பந்தியின் பிரகாரம் பாராளுமன்றத்தை பார்வையிட வருபவர்களின் வாகனங்களை பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் பாராளுமன்ற வளவிற்குள் அனுமதித்தல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் உங்களின் வாகனத்தை பாராளுமன்ற வளவிற்குள் செலுத்துவதற்கு இடமளிக்கப்படமாட்டாது. பாராளுமன்றத்தைப் பார்வையிட வருபவர்களின் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்காக பாராளுமன்ற வளவின் முன்புறத்தில் விளையாட்டு மைதானத்துக்கு மறுபுறமுள்ள சிற்றுண்டிச்சாலை அமைந்துள்ள நிலப்பகுதியில் தாபிக்கப்பட்டுள்ள வாகனத்தரிப்பிடத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளமையால் உங்களின் வாகனத்தை அங்கு நிறுத்தவும்.
  9. மேற்படி நிலப்பகுதியில் உங்கள் வாகனத்தை நிறுத்திய பின்னர் உங்கள் குழுவினருடன் (பாடசாலைச் சீருடையுடன் வருகை தருகின்ற மாணவர்கள் உள்ளடங்கிய குழுக்கள் தவிர) பிரதான வீதியைக் கடந்து பாராளுமன்றத்தின் பிரதான வாயிலினூடாகப் பிரவேசித்து ஜயந்திபுர பாதுகாப்புச் சோதனைச்சாவடிப் பிரிவிற்குச் செல்லவும்.
  10. ஜயந்திபுர பாதுகாப்பு சோதனைச்சாவடிப் பிரிவில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் உங்கள் கைவசமுள்ள அனுமதிப் பத்திரத்தைக் காட்டிய பின்னர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் கூடத்திற்குச் சென்று உங்களை உள்ளடக்கிய குழுவினர் வந்துள்ளமையை அவர்களிடம் அறிவிக்கவும். அவர்களின் பதிவேடுகளில் உங்களை உள்ளடக்கிய குழுவினர் வருகை தந்தமை தொடர்பான குறிப்புக்கள் பதியப்பட்ட பின்னர் ஜயந்திபுர பாதுகாப்புச் சோதனைப் பிரிவுக்கு அருகிலிருந்து பாராளுமன்றக் கட்டிடம் வரை வருவதற்கான பாராளுமன்ற பஸ் வண்டியை பாதுகாப்பு உத்தியோகத்தர் வரவழைத்துத் தருவார். மேற்படி 2(iii) பந்தியின் பிரகாரம் பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகின்றவர்களுக்கு இப்பிரிவின் மூலம் பாராளுமன்றத் தொகுதியினுள் பிரவேசிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.
  11. பாராளுமன்றத்திற்கு வருகின்றவர்கள் அனைவரும் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். அதற்கிணங்க, ஜயந்திபுர பாதுகாப்பு சோதனைப் பிரிவில் வைத்து உங்களை உள்ளடக்கிய குழுவினர் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் உடற்பரிசோதனைக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமளிக்க வேண்டும்.
  12. மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் உங்களின் வாகனத்தை ஜயந்திபுர சோதனைச்சாவடிப் பிரிவில் அமைந்துள்ள இடம்வரை ஓட்டிவர வாய்ப்பளிக்கப்படுவதுடன், வருகைதந்த குழுவினரை அவ்விடத்தில் இறக்கிவிட்டு வாகனத்தை முன்னர் குறிப்பிட்ட சிற்றுண்டிச்சாலை அமைந்துள்ள நிலப்பரப்பில் நிறுத்திவைக்க வேண்டும்.
  13. உடற்பரிசோதனையின் பின்னர் உங்களுக்காக வந்துள்ள பாராளுமன்ற பஸ்வண்டி மூலமாகப் பாராளுமன்றக் கட்டிடத்தின் பொதுமக்கள் நுழைவாயில் வரை பயணஞ் செய்யவும். நடந்து செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்பதோடு வழங்கப்பட்ட பஸ் வண்டியில் மாத்திரம் பயணஞ்செய்ய வேண்டும்.
  14. பொதுமக்கள் நுழைவாயிலின் அருகில் பஸ் வண்டியில் இருந்து இறங்க வேண்டுமென்பதோடு அவ்விடத்தில் கடமையிலீடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் உங்களைக் கட்டடத்திற்குள் பிரவேசிப்பதற்கான நுழைவாயிலை நோக்கி ஆற்றுப்படுத்துவார்கள்.
  15. மேற்குறிப்பிட்ட நுழைவாயில் அருகில் நீங்கள் மீண்டும் உடற்பரிசோதனைக்குட்படுத்தப்படுவதால் ஆண்கள் வலது பக்கத்திலும் பெண்கள் இடது பக்கத்திலுமாக இரண்டு வரிசையாக அணிவகுத்து நிற்பின் பரிசோதிக்கும் பணிகளுக்கு இலகுவாக இருக்கும். அத்துடன் உங்கள் குழுவின் தலைவர் அவருடைய தேசிய அடையாள அட்டையையும் படைக்கலச் சேவிதரால் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனுமதிப் பத்திரத்தையும் அவ்விடத்தில் கடமையிலீடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  16. பொதுமக்கள் நுழைவாயிலினூடாக உங்களுக்குப் பாராளுமன்றக் கட்டடத்திற்குள் பிரவேசிக்க முடியும். அத்துடன் மேற்குப் பக்கத்து ஏறுபாதை ஊடாக பொதுமக்கள் கலரிவரை செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். பாராளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாராளுமன்றப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அவ்வழியில் உங்களை அனுப்புவார்கள். அதைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்க. கலரிக்கான நுழைவாயிலுக்குப் பக்கத்தில் மீண்டும் நீங்கள் உடற்பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என்பதோடு அதற்கு உங்களது ஒத்துழைப்பை வழங்குதல் வேண்டும்.
  17. ஏறுபாதை ஊடாகச் செல்கின்றபோது குறிப்பாக உங்களுடன் வருகின்ற பாடசாலைப் பிள்ளைகளும் ஏனைய பிள்ளைகளும் அடக்கமாக கவனமாக செல்வதை நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும்.
  18. பொதுமக்கள் கலரியில் இருந்தாலும் கட்டடத்திற்குள் எந்தவொரு இடத்தில் இருந்தாலும் பூரண அமைதியைப் பேண வேண்டும். நிறுவன பணிகளுக்கு இடையூறு ஏற்படாதவகையில் அமைதியாக இருக்கின்றனரென்பதையும் பண்புடன் நடந்து கொள்கின்றனரென்பதையும் பொதுமக்கள் கலரியிலும் நிறுவனத்திலும் உள்ள காது கருவிகளுக்கும் வேறு உபகரணங்களுக்கும் சேதம் ஏற்படாத வகையில் நடந்து கொள்கின்றனரென்பதையும் நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும்.
  19. பொதுமக்கள் கலரியில் இருக்கின்றபோது புகைத்தல், கதைத்தல், கைதட்டுதல், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தல், பல்வேறுவிதமாக ஒலியெழுப்புதல், பகிடி பரிகாசம் செய்தல், அங்குமிங்கும் நடத்தல், நின்று கொண்டிருத்தல், விளையாடுதல், சைகை காட்டுதல், சபையை எட்டிப்பார்த்தல், விரல்களை கைகால்களை அல்லது வேறு பொருட்களை நீட்டுதல், பல்வேறு பொருட்களை சபைக்குள் வீசுதல், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கையசைத்தல், குறிப்பாலுணர்த்துதல், நித்திரை செய்தல், குறிப்புகள் எழுதுதல், புத்தகங்கள் பத்திரிகைகள் வாசித்தல் போன்றவை முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளன.
  20. பொதுமக்கள் கலரியில் இருக்கின்றபோது பாதுகாப்பு வேலிகளுக்கு மேல் பாய்தலும் பத்திரிகையாளர் கலரியில் அமர்தலுமாகாது. அத்துடன் பொதுமக்கள் கலரியில் கடமையில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உத்தியோகத்தர் அல்லது பெலிஸ் உத்தியோகத்தர் குறிப்பிடும் இடங்களில் அமர வேண்டும். சபையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டால் பொதுமக்கள் கலரியில் இருக்கின்றவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு பாராளுமன்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு/ பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆதலால் நீங்கள் அதற்கு உடன்பட வேண்டும்.
  21. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க செயலாற்றாத ஆட்களை அல்லது குழுவினரை பாராளுமன்ற வளவிலிருந்து/கலரியிலிருந்து உடனடியாக அகற்றுவதற்கு பாராளுமன்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்/ பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கையெடுப்பார்கள்.
  22. பொதுமக்கள் நுழைவாயில் அமைந்துள்ள பிரதேசத்தினூடாக அடிக்கடி வாகனங்கள் ஓடுவதால், கலரியிலிருந்து பொதுமக்கள் நுழைவாயிலுக்குத் திரும்பி வந்ததன் பின்னர் உங்களதும் உங்கள் குழுவினரதும் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துதல் அத்தியாவசியமாகும். பொதுமக்கள் நுழைவாயிலிலிருந்து திரும்பி ஜயந்திபுர சோதனைச்சாவடி வரை உங்களையும் உங்கள் குழுவினரையும் கொண்டு செல்வதற்கான பஸ் வண்டி வரும்வரை அமைதியாக இருக்கும்படி உங்கள் குழுவினருக்கு அறிவுறுத்துக. குறிப்பாக உங்கள் குழுவில் பிள்ளைகளை அங்குமிங்கும் செல்லாமல் ஒழுங்காக வைத்திருப்பதில் கவனம் செலுத்துக.
  23. தியவன்னா நதிக்கரையில் கூடி நிற்றல் ஆபத்தானது என்பதால் உங்கள் குழுவில் உள்ள பிள்ளைகளையும் ஏனைய உறுப்பினர்களையும் கரை ஓரத்தில் கூடிநிற்க இடமளிக்க வேண்டாம்.
  24. பாராளுமன்றத்தைப் பார்வையிட்டுவிட்டு வெளிச்செல்கின்ற பொதுமக்களது வசதியை முன்னிட்டு பாராளுமன்றக் கட்டடத்தின் பொதுமக்கள் நுழைவாயிலுக்கு அருகிலும், பாராளுமன்றத்துக்கு முன்னாலுள்ள விளையாட்டு மைதானத்துக்கு அப்பால் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை வளவிலும் நினைவுப்பொருள் விற்பனை கூடங்கள் அமைந்துள்ளன. உங்களுக்குத் தேவையான நினைவுப் பொருட்களை அங்கே கொள்வனவு செய்யலாம்.
  25. பாராளுமன்றத் தொகுதியின் பொதுமக்கள் நுழைவாயிலில் நினைவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நீங்கள் கருதுவீர்களாயின், நாணயத்தாள்களை மாத்திரம் எடுத்துவருமாறும், பாராளுமன்றக் கட்டடத்தினுள் நாணயக்குத்திகளை எடுத்துவருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவிக்க விரும்புகிறேன்.

வாகனங்களின் பிரவேசம், தரித்துவைத்தல் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் பின்பற்ற வேண்டிய விசேட ஏற்பாடுகள்

மேற்படி 2 ஆம் பந்தியின் பிரகாரம் அனுமதி பெற்று அல்லது பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்காகவே வருகைதரும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய விருந்தினர்கள் வருகைதரும் வாகனங்கள் பாராளுமன்ற தொகுதிக்கு முன்னால் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு எதிர்த்திசையிலுள்ள சிற்றுண்டிச்சாலை வளவில் அமைக்கப்பட்டுள்ள வாகனத் தரிப்பிடத்திற்குள் உட்பிரவேசித்தல் வேண்டும். இவ்வாறு உட்பிரவேசிக்க முன்னர், பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்காக பெற்றுக்கொண்ட பூர்வாங்க அனுமதிப் பத்திரமொன்று இருப்பின் அதனை அவ்விடத்தில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணில் கடமையிலிருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இன்றேல் தங்கள் ஆளடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். இந்நடைமுறையை நிறைவேற்றிய பின்னரே தங்களது வாகனத்தை வாகனத் தரிப்பிடத்திற்குள் செலுத்த முடியும்.

பாடசாலை சீருடை அணிந்த மாணவர்களை ஏற்றிவரும் பேருந்துகள் தவிர ஏனைய வாகனங்களில் வருகைதரும் விருந்தினர்கள் மேற்படி 9 ஆம் பந்தியின் பிரகாரம் ஜயந்திபுர பாதுகாப்புச் சோதனை அலகுக்கு செல்ல வேண்டும். அவ்விடத்தில் இவர்கள் உடல் ரீதியான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், இதன் பொருட்டு மேற்படி பாதுகாப்புப் பிரிவிற்கு தங்களது ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

பாடசாலை சீருடை அணிந்த மாணவர்களை ஏற்றிவரும் பேருந்துகளை, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ் வாகனத் தரிப்பிடத்திலிருந்து உடல் ரீதியான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்துவதற்காக குறித்த இடத்திற்கு அனுப்பி வைப்பார்கள். அவ்விடத்தில் பாடசாலை மாணவர்களும் அவர்களை அழைத்துவரும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் உடல் ரீதியான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் வருகைதரும் பேருந்துகளும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும். பின்னர், குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டதன் பின்னர், பாடசாலை மாணவர்களும் அவர்களை அழைத்துவருபவர்களும் மீண்டும் அப்பேருந்திற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்பதுடன் அழைத்துச் செல்வதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் பேருந்து ஜயந்திபுர பாதுகாப்பு நுழைவாயிலின் ஊடாக, குறிப்பிட்ட பாதுகாப்புச் சோதனை மற்றும் பதிவு செய்யப்பட்டதற்கிணங்க, பாராளுமன்ற கட்டடத் தொகுதியின் பொதுமக்கள் நுழைவாயிலிற்கு அனுப்பி வைக்கப்படும். இதன் பொருட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் பாராளுமன்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் தமது உச்சமட்ட ஒத்துழைப்பை வழங்குதல் வேண்டும்.

பாராளுமன்ற கட்டடத்தின் பொதுமக்களின் நுழைவாயிலிற்கு அருகே, மாணவர்கள் மற்றும் ஏனையவர்களை இறக்கிவிட்ட பின்னர் அங்கு வருகை தருகின்ற பொலிஸ் உத்தியோகத்தருடன் பஸ் வண்டி மீண்டும் ஜயந்திபுர பிரதான நுழைவாயில் ஊடாக மேற்படி பஸ் தரிப்பிடத்திற்கு அனுப்பப்படுவதுடன், மீண்டும் அழைக்கப்படும் வரை அங்கு நிறுத்திவைத்திருத்தல் வேண்டும். மேற்படி வாகனத் தரிப்பிடத்தில் வழங்கப்படுகின்ற வாகன ரோகன் அட்டையின் ஒரு பகுதியை சாரதி வசமும், மற்றைய பகுதியை வருகை தருகின்ற குழுவுக்குப் பொறுப்பான அதிபர் அல்லது பொறுப்பான ஆசிரியர் வசமும் வைத்திருத்தல் வேண்டும். எந்தவொரு காரணத்தைக் கொண்டும் இந்த பஸ் வண்டிகளை பாராளுமன்ற வளவில் அல்லது வருகைதரும் வீதியின் இருபுறமும் நிறுத்திவைத்தல் முற்றாகவே தடைசெய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தைப் பார்வையிட்டு பொதுமக்கள் நுழைவாயிலுக்கு மீண்டும் வருகை தந்த பின்னர் மேற்படி ரோகன் அட்டையைப் பயன்படுத்தி, மக்கள் உட்பிரவேசிக்கின்ற இடத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் உங்களின் பஸ் வண்டியை அவ்விடத்திற்கு வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்வார்கள். அவ்வாறு வருகைதரும் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் ஜயந்திபுர பாதுகாப்பு பரிசோதனைப் பிரிவின் ஊடாக உரிய பாதுகாப்பு பரிசோதனைகள் மற்றும் பதிவுகளை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மேற்படி பஸ் வண்டிகள் பொது மக்கள் உட்பிரவேசிக்கின்ற இடத்திற்கு அனுப்பப்படும்.

மேற்படி பஸ் வண்டிகள் பாராளுமன்ற வளவிலிருந்து வெளியே செல்லும் போது அழைத்து வருகின்ற பொலிஸ் உத்தியோகத்தருடன் ஜயந்திபுர பிரதான நுழைவாயில் ஊடாக செல்ல வேண்டும் என்பதுடன், மேற்படி நுழைவாயிலில், அழைத்துவரும் பொலிஸ் உத்தியோகத்தர் பஸ்ஸிலிருந்து இறங்கிய பின்னர் பாராளுமன்ற வளவிற்கு வெளியே செல்லல் வேண்டும்.

விருந்தினர் எவரேனும் பாராளுமன்றத்திற்கு வருகை தரும் போது, ஜயந்திபுர நுழைவாயில் தவிர வேறு எந்தவொரு நுழைவாயிலையும் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் விருந்தினர் ஒருவருடன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அல்லது பணியாட்டொகுதி அங்கத்தவர் ஒருவர் வருகைதருவாராயின் அவர்களும், ஜயந்திபுர நுழைவாயிலை மாத்திரம் பயன்படுத்தல் வேண்டும். தமது ஆள்அடையாளத்தை உறுதிசெய்த பின்னர் மற்றும் உடற்பரிசோதனையின் பின்னர், தாம் வருகை தந்த வாகனம் அல்லது பாராளுமன்ற பஸ் சேவையைப் பயன்படுத்தி பொது மக்கள் நுழைவாயில் வரை செல்ல முடியும். இவர்கள் பாராளுமன்றத்தின் வேறு நுழைவாயில்களுக்குச் செல்வது முற்றாகத் தடையாகும்.

முன்னனுமதி இன்றி பாராளுமன்றத்தைப் பார்வையிட மாத்திரம் வருகைதருகின்ற விருந்தினர்கள் மற்றும் பாடசாலை சீருடையில் வருகைதருகின்ற மாணவர்களைக் கொண்ட குழுக்களும், மேற்படி ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, பாராளுமன்றத்தின் பொதுமக்கள் நுழைவாயில் வரை வருகைதர முடியும் என்பதுடன் அதன் பின்னர், தமது ஆள்அடையாளத்தை உறுதி செய்த பின்னர் மேற்படி இடத்தில் பொதுமக்கள் வரவேற்புக் கருமபீடத்திலிருந்து பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கான மஞ்சள் நிற விசேட அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். முன்னனுமதிபெற்றுக் கொண்டு வருகைதருகின்ற விருந்தினர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு வெள்ளை நிற அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

இந்த அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்ற கலரிக்கு வெளியே எந்தவொரு இடத்திற்கும் செல்வது முற்றாகத் தடையாகும்.

பாராளுமன்றத்திற்கு வருகை தரும் அரச உத்தியோகத்தர்களுக்கான அறிவுறுத்தல்கள்

பல்வேறு கடமைகளுக்காக பாராளுமன்றத்திற்கு வருகைதருகின்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு பாராளுமன்றத் தொகுதிக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி வழங்குதலுடன் தொடர்புடைய ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் பற்றி விழிப்புணர்வூட்டுதல்

  1. அரச உத்தியோகத்தர்கள் வருகின்ற வாகனங்களை பாராளுமன்றத் தொகுதிக்குள் ஓட்டிவருதல்
    1. உத்தியோகபூர்வ அலுவல்களுக்காக பாராளுமன்றத்திற்கு வருகைதருகின்ற அனைத்து அரச உத்தியோகத்தர்களும் பயணிக்கின்ற வாகனங்களை பாதுகாப்பு அவசியப்பாடுகளுக்கு கட்டுப்பட்டதாக, பாராளுமன்ற வளவுக்குள் ஓட்டிவரும் பொருட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    2. அதற்கிணங்க அரச உத்தியோகத்தர்கள் வருகைதருகின்ற வாகனங்களை ஜயந்திபுர பிரதான நுழைவாயில் ஊடாக மாத்திரம் ஓட்டிவர முடியும்.
    3. ஜயந்திபுர பிரதான நுழைவாயிலின் பாதுகாப்புச் சோதனைக் கூறில் அடையாளம்காணப்பட்ட பின்னர் வாகனம் மாத்திரம் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும். இங்கு வாகனத்தை விட்டு இறங்கவேண்டியது அவசியமற்றது.
    4. ஆயினும், வருகை தருகின்ற வாகனத்தில் எடுத்து வரப்படுகின்ற அனைத்துப் பொருட்களும் பாதுகாப்பு சோதனைக்கு உள்ளாக்கப்படும். எனவே பாராளுமன்றத்தின் கடமைத் தேவைகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் தவிர்ந்த ஏனைய அத்தியாவசியமற்ற அல்லது எடுத்துவர பொருத்தமற்ற சாதனங்கள்/உபகரணங்கள்/பண்டங்கள்/பயணப் பைகள் போன்றவற்றை எடுத்துவருவதை இயலுமானவரை தவிர்த்துக்கொள்ளல் பாதுகாப்புச் சோதனைக்கு வசதியளிப்பதாக அமையும்.
    5. மேற்படி பாதுகாப்புச் சோதனை நிறைவடைந்த பின்னர் பொலிசு உத்தியோகத்தர்களால் பாராளுமன்ற கட்டடத்தின் பொதுமக்கள் நுழைவாயிலை நோக்கி வாகனம் ஆற்றுப்படுத்தப்படும்.
    6. பொதுமக்கள் நுழைவாயிலில் வாகனத்தை விட்டிறங்கிய பின்னர்,
      • உத்தியோகத்தரகள் அரச உத்தியோகத்தர்களின் வரவேற்புக் கருமபீடத்திற்கும்,
      • சாரதியொருவருடன் வருகைதந்திருப்பின் வாகனத்தை நிறுத்திவைப்பதற்காக ஜயந்திபுர வாகனத் தரிப்பிடத்துக்கு அல்லது ஏற்புடைய வாகனத் தரிப்பிடத்துக்கு ஆற்றுப்படுத்தப்படும்.

      திரும்பிச் செல்கையில் வாகனத்தை மீள அழைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    7. கடமைகள் முடிவடைந்ததன் பின்னர் பாராளுமன்றத் தொகுதியிலிருந்து வெளியேறுவதற்கு ஜயந்திபுர பிரதான நுழைவாயிலை அல்லது நுக செவன நுழைவாயிலை அல்லது பின்னியர நுழைவாயிலை உபயோகிக்கலாம்.
    8. எவ்வாறாயினும், எவரேனும் ஓர் அரச உத்தியோகத்தர் தாமே வாகனத்தைச் செலுத்தி வந்தாராயின் வாகனத்தை ஜயந்திபுர வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தியதன் பின்னர் ஜயந்திபுர பிரதான நுழைவாயிலில் அமைந்துள்ள அனுமதிப்பத்திர கருமபீடத்துக்கு வரவேண்டும் என்பதுடன், அங்கு அடையாளத்தை உறுதிப்படுத்தும் தேவைப்பாடுகளை நிறைவு செய்த பின்னர், பாராளுமன்ற வளவுக்குள் பிரவேசிப்பதற்காக குறுகிய தூர பாராளுமன்ற பஸ் சேவையைப் பயன்படுத்தலாம்.
  2. தற்காலிக நிற அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களை பாராளுமன்றக் கட்டிடத்துக்கு ஆற்றுப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்
    1. அரச உத்தியோகத்தர்களின் வரவேற்பு கருமபீடத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள வரவேற்பு உத்தியோகத்தரிடம் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, தனது தேசிய அடையாள அட்டையை அல்லது செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரத்தை அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டை அல்லது தனது நிறுவனப் பிரதானியினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ அடையாள அட்டையை சமர்ப்பித்தலும் படைக்கலச் சேவிதரினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரமொன்றிருப்பின் அதை சமர்ப்பித்தலும் அவசியமானதாகும்.
    2. அதன் பின்னர், உரிய தகவல்கள் பதியப்படுவதுடன் அடையாள ஆவணத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர், உரிய இடம் வரை செல்லுபடியான தற்காலிக நிற அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதுடன், வெளியேறும்போது அதனைத் திருப்பி ஒப்படைத்துவிட்டு அடையாள ஆவணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
    3. பாராளுமன்றக் கட்டடத்திற்குள் பிரவேசிக்கையில் அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களும் உடல் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதோடு அவர்கள் எடுத்து வரும் ஆவணங்களும் பயணப்பொதிகளும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பாராளுமன்றக் கட்டடத்திற்குள் பிரவேசிக்கின்ற அனைவரும் உடல் சோதனைக்கு உட்படுத்தப்படுவதால், இதற்கு அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களும் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
    4. பாராளுமன்ற வளவுக்குள் தங்கியிருக்கும் காலகட்டத்தினுள், பாராளுமன்றத்தினுள் நடைமுறைப்படுத்தப்டுகின்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கேற்ப செயற்படுவது அவசியம் என்பதால் பாராளுமன்ற பணியாட்டொகுதியைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும், பாராளுமன்ற பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அவர்களது கடமையை நிறைவேற்ற ஒத்துழைப்பு நல்கும்படி அனைத்து அரசாங்க உத்தியோத்தர்களிடமும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
  3. கையடக்கத் தொலைபேசி / மடிக் கனணி/ டெப்லற் / ஐபேட் மற்றும் வேறு இலத்தரனியல் கருவிகளைபாராளுமன்ற கட்டடத்தினுள் எடுத்து வர அனுமதி வழங்குதல்
    1. அரசாங்க உத்தியோகத்தர்களின் கூடத்தினுள் கையடக்கத் தெலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கபடமாட்டாது. ஆதலால், அக்கூடத்திற்கு செல்கின்ற உத்தியோகத்தர்கள் தமது கையடக்கத் தெலைபேசிகளை அரசாங்க உத்தியோகத்தர் வரவேற்பு கருமபீடத்திற்கு அருகாமையில் கடமையாற்றுகின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் ஒப்படைத்துச் செல்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
    2. அரசாங்க உத்தியோகத்தர்களின் கூடத்திற்குள் பிரவேசிப்பதை தவிர வேறு எதேனும் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக குழு அறைகளுக்கு வருகைதரும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு, தேவைப்படுவதாயின் மாத்திரம் தனது கையடக்கத் தொலைபேசியை பாராளுமன்ற கட்டடத்தினுள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கலாம் என்பதோடு,அதற்காக உரிய முறையில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்பத்திரங்களை படைக்கலச் சேவிதரிடம் சமர்ப்பித்தல் அவசியமாகும்.
    3. தேவைக்கேற்றவாறு விண்ணப்பிக்கப்படும் பட்சத்தில் நடப்பு ஆண்டின் இறுதிவரையிலான காலப்பகுதிக்கு இந்த அனுமதிப்பத்திரத்தை விநியோகித்தல் பற்றி பரிசீலிக்கப்படுவதுடன் பாராளுமன்றத்திற்கு வருகைதரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனுமதிப்பத்திரத்தை எடுத்துவருவதற்கு சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்வதின் ஊடாக அநாவசியமான தாமதங்களை தவிர்த்துக்கொள்ள முடியும்.
    4. பாதுகாப்பு தேவைகளுக்கு இசைந்தொழுகும் வகையில் அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம், மடிக்கனணி/டெப்லற்/ஐபேட் போன்றவற்றை அரச உத்தியோகத்தர்களுக்கான கூட்டங்களுக்கு எடுத்துவருவதற்கு அனுமதி வழங்க இயலுமென்பதுடன் அவ்விடயத்தில் ஏற்புடைய விண்ணப்படிவத்தை உரியவாறு பூர்த்திசெய்து சமர்ப்பித்தல் வேண்டும்.
    5. கடமைத் தேவையினை கருதி மடிக்கனணி/டெப்லெற்/ஐபேட் போன்றவற்றை அல்லது வேறு ஏதேனும் இலத்திரனியல் உபகரணத்தை பாராளுமன்ற குழுக்களுக்கு அல்லது வேறு குழுக்களுக்கு அல்லது கூட்டங்களுக்கு எடுத்து வருதல் தேவையாயின் அதற்கு அனுமதி வழங்க இயலுமென்பதுடன் அதற்காக உரிய விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
    6. மேற்படி அனுமதி கோரல்களுக்கான சம்பந்தப்பட்ட அனுமதிகள் படைக்கலச் சேவிதர்/பிரதி படைக்கலச் சேவிதர்/உதவி படைக்கல சேவிதர் ஆகியோரினால் மாத்திரமே வழங்கப்படும்.
  4. அரச உத்தியோகத்தர்கள் பல்வேறு தேவைகளுக்காக பாராளுமன்றத்திற்கு வருகைதருதல் அல்லது அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளுதல் அல்லது அது சம்பந்தமாக தகவல்களடங்கிய ஆவணங்களை அனுப்புதல்
    1. அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுதல் சம்பந்தமாகவோ அல்லது பாராளுமன்றத்திற்கு வருகை தரும் உத்தியோத்தர்கள் சம்பந்தமாகவோ தகவல்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் போது 2777473 அல்லது 2777322 அல்லது 2777323 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் வாயிலாக அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதின் மூலமாக துரித கவனத்தை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றதென அன்புடன் அறியத்தருகின்றேன்.
    2. எவ்வாறாயினும், பாராளுமன்ற குழுக்கள் அல்லது வேறு குழுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக அல்லது வருகை தரும் உத்தியோகத்தர்கள் பற்றிய ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட குழுவின் செயலாளரின்/சம்பந்தப்பட்ட குழுவிற்கான பணியகத்தின் உதவிப் பணிப்பாளரின் (நிருவாகம்) விதப்புரையுடன் இத்தகவல்கள் அடங்கிய ஆவணங்களை படைக்கலச் சேவிதருக்கு சமர்ப்பித்தல் மிகவும் பொருத்தமானதும் அத்தியாவசியமானதுமான விடயமாகும். எனவே, குறித்த தகவல் பதிவேடுகளை குறிப்பிட்ட உத்தியோகத்தர்களின் ஊடாக படைக்கலச் சேவிதருக்குக் கிடைக்கச் செய்வது மிகவும் பொருத்தமாகும்.
    3. சில அமைச்சுக்கள் / நிறுவனங்கள் மூலம் பாராளுமன்றத்திற்கு வருகை தருகின்ற உத்தியோகத்தர்கள் பற்றிய தகவல்களை அல்லது அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளல் பற்றிய கோரிக்கைகளை அனுப்பும்போது,
      • படைக்கலச் சேவிதர் அல்லது சம்பந்தப்பட்ட குழுவின் செயலாளர் அல்லது குழு அலுவலகம் என்பவற்றுக்கு குறிப்பிட்ட ஆவணங்களை அனுப்பி வைத்தல்,
      • ஒரே ஆவணத்தின் பல பிரதிகளை அல்லது பல ஆவணங்களை இடைக்கிடை அனுப்பி வைத்தல்,
      • சம்பந்தப்பட்ட கூட்டம் அல்லது கலந்துரையாடல் ஆரம்பமாவதற்கு மிகவும் அண்மித்த நேரத்தில் குறித்த ஆவணங்களை அனுப்பி வைத்தல்,
      • தகவல்கள் திருத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படாமல் திருத்தப்பட்ட ஆவணங்களை இடைக்கிடை அனுப்பி வைத்தல்,
      • பெயர், பதவி, தேசிய அடையாள அட்டை இலக்கம், வருகை தரும் வாகன இலக்கம் மற்றும் இதர அத்தியாவசிய தகவல்கள் முழுமைபெறாத ஆவணங்களை அனுப்பி வைத்தல்,
      • போன்ற விடயங்களின் காரணமாக பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அப்பால் குறிப்பிட்ட உத்தியோகத்தர்களை அனுப்புவதற்காக ஆவணங்களைப் பரிசோதனை செய்கின்றபோது வருகைதருகின்ற உத்தியோகத்தர்களும், பாராளுமன்றத்தின் பதவியணியினரும், பொலீஸ் உத்தியோகத்தர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாதல் அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே,

      • மேற்குறிபிடப்பட்டுள்ள தொலைநகல் இலக்கத்திற்கு அல்லது சம்பந்தப்பட்ட குழுவின் பணியகத்திற்கு தகவல்களை அனுப்புவதற்கும்,
      • அனுப்பப்பட்டுள்ள பெயர் இடாப்புக்களை திருத்த வேண்டியேற்படுகின்ற சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்ட ஆவணமென்பதை இலகுவாக இனங்காணக்கூடிய வகையில் முகப்புக் கடிதத்துடன் கூடிய ஆவணமொன்றை அல்லது இயலுமான சகல சந்தரப்பங்களிலும், திருத்தப்பட்டுள்ளமைக்கான குறிப்புகளுடன் திருத்தப்பட்ட மூலப் பிரதியையே அனுப்பி வைப்பதற்கும்,
      • ஒரே ஆவணத்தின் பல பிரதிகளை அனுப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், அனுப்பி வைக்கப்பட்ட ஆவணம் உரியவாறு கிடைத்துள்ளதா என்பதை மேற்குறிப்பிடப்பட்ட தொகைநகல் இலக்கங்கள் மூலம் அல்லது தொலைபேசி இலக்கம் 2777100 மூலம் (உள்ளக நீடிப்பு 5422, 5334 மற்றும் 5302) தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளுமாறும்,
      • தகவல் அடங்கிய ஆவணங்களை அனுப்பும்போது குறிப்பிட்ட சகல தகவல்களையும் உள்ளடக்கியதாக, குறைந்த பட்சம் ஒரு கடமை தினத்துக்கு முன்னர் அனுப்புவதற்கும்;
      • நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

  5. குழுக்கள்/ கலந்துரையாடல்களில் பங்குபற்றும் உத்தியோகத்தர்கள் நேரகாலத்துடன் பாராளுமன்றத்துக்கு வருவதன் அவசியம்
    1. குழுக்கூட்டங்கள்/ கலந்துரையாடல்கள் ஒரே/ மிக அண்மித்த நேரங்களில் நடைபெறும் சந்தர்ப்பங்கள் பெரிதும் காணப்படுவதனால் அந்த சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு தேவைகளைப் பூர்த்தி செய்ததன் பின்னர் குறிப்பிட்ட உத்தியோகத்தர்களை பாராளுமன்ற வளாகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அப்பால் அனுப்பிவைப்பதில் தாமதங்கள் ஏற்ப வாய்ப்புக்கள் உள்ளன.
    2. எனவே, ஏதேனும் உத்தியோகபூர்வ கடமைக்காக உங்கள் உத்தியோகத்தர்கள் பாராளுமன்றத்துக்கு வரும் சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நேரத்தை விட குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கருகில் உள்ள அனுமதிப்பத்திர கருமபீடத்துக்கு வருவதன் மூலம் தேவையற்ற தாமதங்களுக்குள்ளாவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதை தயவுடன் அறியத் தருகின்றேன்.
  6. உத்தியோகபூர்வ கடமைகளுக்காக பாராளுமன்றத்துக்கு அடிக்கடி வரும் அரச உத்தியோகத்தர்களின் வசதி கருதி வருடாந்த/ நாளாந்த அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்.
    1. அமைச்சு செயலாளர்களுக்கு வருடாந்த அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்
    2. பாராளுமன்ற கூட்டங்கள் நடைபெறும் தினத்தில் அரச உத்தியோகத்தர்களின் கூடங்களுக்கு பிரவேசித்தல்/ பாராளுமன்றக் குழுக்கள் அல்லது பாராளுமன்றத்தின் வேறு குழுக்களில் கலந்துகொள்வதற்காக அல்லது வேறு வகையிலான கடமைகளுக்காக பாராளுமன்றத்துக்கு வருகை தரும் அரச உத்தியோகத்தர்களின் பயன்பாட்டிற்கென அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு வருடாந்த அனுமதிப் பத்திரங்கள் கீழ் காட்டப்பட்டுள்ளவாறு வழங்கப்படும். நடப்பு ஆண்டிற்கான அனுமதிப் பத்திரங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.

      • அமைச்சுச் செயலாளரின் வாகனத்திற்கு– 01 அனுமதிப்பத்திரம்
      • அரசாங்க உத்தியோகத்தர்களின் கூடத்திற்கான– 03 அனுமதிப்பத்திரங்கள்
      • அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான– 02 அனுமதிப்பத்திரங்கள்
      • உணவகத்துக்கான– 01 அனுமதிப்பத்திரம்
      • மேற்படி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கென சம்பந்தப்பட்ட அமைச்சுச் செயலாளரின் ஒப்பத்துடனான விண்ணப்பம் ஒன்றை படைக்கலச் சேவிதரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

    3. அமைச்சரவை அந்தஸ்துள்ள கெளரவ அமைச்சர்களின் தனிப்பட்டபணியாட்டொகுதியில் அடங்கும் உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த அனுமதிப் பத்திரங்களை வழங்கல்
    4. மேற்படி பந்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்களுக்கு மேலதிகமாக பாராளுமன்றக் கட்டடத்தில் உத்தியோகபூர்வ அறை ஒன்றுக்கு உரித்துடைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் தனிப்பட்ட பணியாட்டொகுதிக்கும் கீழ் காட்டப்பட்டுள்ளவாறு வருடாந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும். நடப்பு ஆண்டில் உரிய உத்தியோகத்தர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.

      • அந்தரங்கச் செயலாளருக்கான– 01 அனுமதிப்பத்திரம்
      • இணைப்புச் செயலாளருக்கான (பாராளுமன்ற அலுவல்கள்) – 01 அனுமதிப்பத்திரம்
      • இணைப்புச் செயலாளருக்கான (ஊடகம்) – 01 அனுமதிப்பத்திரம்
      • மேற்படி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கென சம்பந்தப்பட்ட அமைச்சரின் அல்லது அமைச்சுச் செயலாளரின் ஒப்பத்துடனான விண்ணப்பம் ஒன்றை படைக்கலச் சேவிதரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

    5. நாளாந்த பிரவேச அனுமதிப் பத்திரங்களை வழங்கல்
      • மேற்குறிப்பிட்ட பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பிரவேச அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக,
        • அரச உத்தியோகத்தர் கூடத்துக்கு,
        • கடமை நிமித்தம் பாராளுமன்ற கலரிக்கு அல்லது அமைச்சரொருவரின் அறைக்கு அல்லது பிறிதொரு இடத்துக்கு அல்லது
        • பாராளுமன்ற குழுக் கூட்டங்கள்/ வேறு குழுக் கூட்டங்கள்/ வேறு கடமைகளுக்கு.
        • கலந்துகொள்ளும் பொருட்டு பாராளுமன்றத்துக்கு வருகைதரும் அரச உத்தியோகத்தர்களுக்கு பிரவேசத்திற்கான அனுமதியை வழங்குவதற்கு, ஏற்புடைய அமைச்சுச் செயலாளரின் சிபார்சுக்குட்பட்டு, படைக்கலச்சேவிதருக்கு கடிதமொன்றை சமர்ப்பிப்பதன் மூலம் உரிய தினத்துக்கு செல்லுப்படியாகும் நாளாந்த பிரவேச அனுமதியை படைக்கலச் சேவிதரிடமிருந்து பெற முடியும்.

      • மேற்குறிப்பிட்ட பிரவேச அனுமதி தொடர்பான தகவல்கள் மற்றும் அதற்கேற்புடைய மேலதிக ஆலோசனைகளை
        • பாராளுமன்ற பொலிசுக்கும்
        • ஏற்புடைய வரவேற்பு கருமப்பீடங்கள் மற்றும்
        • ஏற்புடைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் கருமப்பீடங்களுக்கும்
        • வழங்குவதற்கு படைக்கலச்சேவிதர்/பிரதிப்படைக்கலச்சேவிதர் /உதவிப் படைக்கலச்சேவிதர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

  7. அரச உத்தியோகத்தர்களின் கூடத்தை அல்லது கடமை நிமித்தம் பொதுசன பார்வையாளர் கூடத்தை பயன்படுத்தல்
    1. அரச உத்தியோகத்தர்களின் கூடத்துக்கு ஏற்புடைய தற்காலிக நிற அனுமதிப் பத்திரமானது, படைக்கலச்சேவிதரினால் ஏற்புடைய நாட்களுக்கு வழங்கப்பட்ட அரச உத்தியோகத்தர் கூடத்திற்கான அனுமதிப் பத்திரத்தை கொண்டிருக்கும் உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் அரச உத்தியோகத்தர் வரவேற்புக் கருமபீடத்தில் வழங்கப்படும். மேலும் விஷேட தேவையொன்றுக்கமைய கடமை நிமித்தம் பொதுசன பார்வையாளர் கூடத்துக்கு செல்லும் பொருட்டு அனுமதிப் பத்திரம் வழங்கும் செயற்பாடும் மேற்குறிப்பிட்ட ஏற்பாடுகளுக்கமையவே மேற்கொள்ளப்படும்.
    2. கடமையின் நிமித்தம் அரச உத்தியோகத்தர்களின் கூடம் அல்லது பொதுசன பார்வையாளர் கூடத்துக்கு செல்வதற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறிப்பிட்ட அமைச்சின் செயலாளர் அல்லது மேலதிக செயலாளரினால் மாத்திரம் படைக்கலச் சேவிதருக்கு முன்வைக்கப்படுதல் வேண்டுமென்பதுடன், அத்தகைய கோரிக்கைகளை ஏனைய அலுவலகங்களுக்கு ஆற்றுப்படுத்துவதைத் தவிர்க்குமாறும் கோரப்படுகின்றது. ஏதேனும் விசேட சந்தர்ப்பங்களில், எவரேனும் உத்தியோகத்தர் அரசாங்க உத்தியோகத்தர்களின் கூடத்துக்கு அழைக்கப்படுமிடத்து, சந்தர்ப்பத்தைப் பொருத்து இது தொடர்பிலான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
    3. எவ்வாறாயினும், அரசாங்க உத்தியோகத்தர்களின் கூடம் அல்லது கடமையின் நிமித்தம் பொதுசன பார்வையாளர் கூடத்துக்கு வருகை தரும் உத்தியோகத்தர்களுக்கு தனித்தனியாக வழங்கப்படும் அச்சிடப்பட்ட நாளாந்த அனுமதிப் பத்திரங்களை முன்கூட்டியதாக படைக்கலச் சேவிதர் திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை குறிப்பிட்ட அமைச்சு மேற்கொள்ளுதல் வேண்டும். முக்கியமாக, வரவு - செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெறும் காலப்பகுதியில் இது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்துமாறு வலியுறுத்தப்படுகின்றது.
    4. அரசாங்க உத்தியோகத்தர் கூடத்தில் உள்ள ஆசனங்களின் குறைந்த எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதனால், கடமையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் தயார் செய்யப்பட்ட பட்டியலொன்றின் மூலம் குறிப்பிட்ட கோரிக்கையை முன்வைத்தல் வேண்டும்.
    5. அரசாங்க உத்தியோகத்தர் கூடத்துக்கு வருகை தரும் உத்தியோகத்தர்கள், உரிய உடைகளை அணிந்து வருதலும் அங்கு தங்கியிருக்கும் காலப்பகுதியில் உரிய ஒழுங்குவிதிகளை பின்பற்றுவதும் கட்டாயமானதாகும். இந்த விடயம் தொடர்பில் அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களினதும் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதுடன், குறிப்பிட்ட விடயங்கள் அரசாங்க உத்தியோகத்தர்களின் கூடத்துக்கு வருகை தருவதற்காக வழங்கப்படும் நாளாந்த அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்படுவதுடன், கூடத்தினுள் அவற்றைக் காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    6. அரசாங்க உத்தியோகத்தர்களின் வசதிக்காக கூடத்தினுள் தொலைநகல் வசதிகளும், அக்கூடத்துக்கு வெளியே சந்திப்புக் கூடங்களில் தொலைபேசி வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சந்திப்புக் கூடங்களில் காத்திருக்கையில் கௌரவ உறுப்பினர்களது வருகைக்கு தடை ஏற்படாத வகையில் நடந்து கொள்வது கட்டாயமானதாகும் என்பதுடன், சபைக்கு இருபக்கமாகவும் அமைந்துள்ள சந்திப்புக் கூடங்கள் கௌரவ அமைச்சர்களுக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளமையால், இந்த சந்திப்புக் கூடங்களுக்குள் நுழைவதிலிருந்து முற்றாக விலகி இருத்தல் கட்டாயமானதாகும்.
  8. அமைச்சு உத்தியோகத்தர்கள் அமைச்சர் அறைகளை உபயோகித்தல்
    1. ஏற்புடைய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள கௌரவ அமைச்சருக்கு பாராளுமன்றத்தில் அமைச்சர் அறையொன்று கிடைத்திருப்பின், பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறுகின்ற அல்லது நடைபெறாத தினங்களில் அலுவலக நேரத்தில், ஏற்புடைய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரின் கடமை நிமித்தமாக அவரது விதப்புரைக்கு ஏற்ப உரிய அனுமதியை பெற வேண்டிய தேவைக்கு அமைவாக, அரசாங்க உத்தியோகத்தர்கள் அல்லது ஏற்புடைய அமைச்சரின் பிரத்தியேக பணியாட்டொகுதியைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் ஏற்புடைய அமைச்சர் அறைக்கு ஆற்றுப்படுத்தப்படுவார்கள்.
    2. ஏற்புடைய அமைச்சர் பாராளுமன்றத்திற்கு சமுகமளிக்கவில்லையெனில், பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறாத தினங்களில் அரசாங்க உத்தியோகத்தர்கள் அல்லது அமைச்சரின் பிரத்தியேக பணியாட்டொகுதியைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் எவருக்கும் அமைச்சரின் அறை திறந்து கொடுக்கப்படமாட்டாது.
  9. அமைச்சுகளுக்குரிய அல்லது அமைச்சினால் ஆற்றுப்படுத்தப்படுகின்ற ஊடக குழுக்கள்
    1. கௌரவ அமைச்சர்களின் தேவைக்கேற்ப தமது அமைச்சிற்குரிய அல்லது அமைச்சினால் ஆற்றுப்படுத்தப்படுகின்ற ஊடக குழுக்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டிய தேவை ஏற்படும் போது இதற்குரிய விண்ணப்பப் படிவத்தை அமைச்சின் ஊடாக படைகளச் சேவிதருக்கு அனுப்புதல் வேண்டும். வருகை தருபவர்களின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், கொண்டு வரப்படும் ஊடக உபகரணங்கள்/கருவிகள் ஆகிய தகவல்களையும், இவர்கள் வரும் வாகனத்தின் இலக்கம், கௌரவ அமைச்சரினால் ஊடக சந்திப்பு நடத்தப்படும் இடம் ஆகிய தகவல்களையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
    2. குறித்த ஊடக குழுக்களில் அடங்கும் ஆட்கள், அவர்கள் வருகைதரும் வாகனங்கள், கொண்டுவரும் உபகரணங்கள் போன்றவை பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுமென்பதால் குறித்த நேரத்திற்கு ஆகக்குறைந்தது 45 நிமிடங்களுக்கு முன்பாக பாராளுமன்றத்திற்கு வருகை தருவதன் மூலம் அநாவசியமான அசௌகரியங்களை தவிர்க்க முடியும்.
    3. மேற்படி உபகரணங்களை எடுத்துக் கொண்டு, உரிய பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்பட்டவாறு, பணியாட்டொகுதியினரின் நுழைவாயில் ஊடாக மாத்திரம் பாராளுமன்ற கட்டிடத்தினுள் பிரவேசித்தல் வேண்டும் என்பதுடன், படைக்கலச் சேவிதர் அங்கீகாரம் வழங்கியுள்ள இடங்களுக்கு மாத்திரமே பிரவேசித்தல் வேண்டும். வேறு இடங்களுக்குப் பிரவேசிப்பதிலிருந்து மற்றும் அங்கீகாரம் வழங்கப்படாத இடங்களில் ஊடக நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து முற்றாகத் தவிர்ந்திருத்தல் வேண்டும். மேலும், விசேட அங்கீகாரம் பெற்றுக் கொண்ட இடங்களில் அன்றி பாராளுமன்ற பார்வையாளர் கூடத்தினுள் ஊடக உபகரணங்களை கொண்டு செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
  10. குழு அறைகளை ஒதுக்கிக் கொள்ளல்
    1. பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் அடிப்படையில் தாபிக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு மற்றும் உரிய ஏனைய முன்னுரிமைகளுக்கும், குழு அறையை ஒதுக்கிக் கொடுக்கும் இயலுமைக்கும் உட்பட்டவாறு அமைச்சரவை அந்தஸ்துள்ள கெளரவ அமைச்சர் ஒருவருக்கு குழு அறையொன்றை ஒதுக்கிக் கொள்ளும் இயலுமை உள்ளது.
    2. கெளரவ அமைச்சரின் கையொப்பத்துடன் அல்லது அவரின் ஆலோசனையின் பேரில் அமைச்சின் செயலாளர் அல்லது மேலதிக செயலாளரின் கையொப்பத்துடன் படைக்கலச் சேவிதரிடம் சமர்ப்பிக்கப்படுகின்ற கோரிக்கைகளுக்கு மாத்திரம் மேற்படி ஏற்பாடுகளுக்கு உட்பட்டு குழு அறைகளை ஒதுக்கிக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காண்க

காண்க

காண்க





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks