பார்க்க

E   |   සි   |  

பின்வரும் பல நோக்கங்களுக்காகப் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு பிரயோகிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தால் சனாதிபதியைத் தெரிவு செய்தல்

சனாதிபதிப் பதவியானது அதன் பதவிக்காலம் முடிவுறுவதற்கு முன்னரே காலியாகுமிடத்து, அரசியலமைப்பின் 40ஆம் உறுப்புரையில் விதித்துரைக்கப்பட்டவாறு ஒரு விசேட நடைமுறை பின்பற்றப்படுதல் வேண்டும். இக்கட்டத்தில் பாராளுமன்றம் அதன் உறுப்பினர்களுள் ஒருவரைக் காலியான இப்பதவிக்குத் தெரிவு செய்தல் வேண்டும். பதவி காலியான தினத்திலிருந்து ஒரு மாதத்திற்கு மேல் பிந்தாமல் அத்தகைய தேர்தல் நடத்தப்பட வேண்டும். அத்தகையதொரு சந்தர்ப்பத்தில் இரகசிய வாக்கெடுப்பொன்று நடத்தப்படுவதோடு, அளிக்கப்பட்ட வாக்குகளில் அறுதிப் பெரும்பான்மையோடு அவர் தெரிவு செய்யப்படுதலும் வேண்டும். வாக்கெடுப்பு ஆரம்பிக்கும்போது செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அதிகாரியாகச் செயற்பட்டு சபாநாயகர் உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்பினரது பெயரையும் அழைத்து அவர்கள் வாக்களிப்பதற்கு வாக்குச் சீட்டுக்களை வழங்குவார். தான் யாருக்கு வாக்களிக்கின்றாரோ அந்த வேட்பாளரின் பெயருக்கு எதிரே இருக்கும் சதுரக் கூட்டில் 1 என்னும் இலக்கத்தை உறுப்பினர் குறிக்கலாம். தமது விருப்பத் தெரிவுகளை அவர் தாம் விரும்பியவாறு 2, 3 என்னும் இலக்கங்களை இடுவதன் மூலம் குறித்துக் காட்டலாம்.


சபாநாயகர், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோருக்கான தேர்தல்

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தின் முதல் பணி மூன்று தலைமைதாங்கும் உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்தலாகும். அத்தகைய தேர்தலுக்கு நிலையியற் கட்டளை 4இன் கீழ் விசேட நடைமுறையொன்று விதித்துரைக்கப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்றமொன்றின் முதலாவது கூட்டத்தில் அல்லது சபாநாயகர் பதவியில் வெற்றிடம் ஒன்று ஏற்படுகின்றபோது சபாநாயகர் தெரிவு செய்யப்பட வேண்டும்.

சபாநாயகர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான நடைமுறை நிலையியற் கட்டளை 4இன் கீழ் விதித்துரைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் பதவிக்கு ஒருவரின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டிருப்பின் அந்தப் பெயர் தெரிவு செய்யப்பட்டதாகச் செயலாளர் நாயகத்தினால் வினாவின்றிப் பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென நிலையியற் கட்டளை 4(இ) கூறுகிறது. எனினும் சபாநாயகராக ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டிருப்பின் தேர்தலொன்று நடத்தப்படுதல் வேண்டும். வாக்கெடுப்பிற்கான மணி அடிக்கப்பட்டதும், செயலாளர் நாயகத்தினால் ஒவ்வோர் உறுப்பினருக்கும் ஒவ்வொரு வாக்குச்சீட்டு வழங்கப்பட வேண்டுமென்பதோடு, உறுப்பினர்கள் தாம் யாருக்கு வாக்களிக்கின்றார்களோ அவரின் பெயரை வாக்குச் சீட்டில் எழுதுதலும் வேண்டும். வாக்குச் சீட்டில் எழுதப்பட்ட பெயர் தெரியாதவாறு அது மடிக்கப்பட்டு வாக்களிக்கும் உறுப்பினரால் கையொப்பமிடப்படுதல் வேண்டும்.

அதன் பின்னர் வாக்குச் சீட்டுக்கள் சேகரிக்கப்பட்டு செயலாளர் நாயகத்தால் பாராளுமன்றச் சபாபீடத்தில் எண்ணப்படும். முடிவு செயலாளர் நாயகத்தால் அறிவிக்கப்படுதல் வேண்டும். பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோரைத் தெரிவு செய்வதற்கும் இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்படுதல் வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் சபாநாயகர் தலைமை தாங்குவதே இவ்விரு தேர்தல்களுக்குமிடையில் உள்ள ஒரே வேறுபாடாகும்


விசேட பெரும்பான்மை

அரசியலமைப்புத் திருத்தங்கள், அரசியலமைப்புக்கு முரணான சட்டமூலங்கள், முதலீட்டு உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு ஒரு விசேட நடைமுறை பின்பற்றப்படுதல் வேண்டும். இந்தக் கட்டத்தில் விசேட பெரும்பான்மையொன்று (2/3) தேவையென்பதோடு, எதிர்காலத்தில் பார்வையிடுவதற்காக வாக்குகள் விசேடமாகப் பதியப்படுவதை உறுதிப்படுத்துமுகமாகப் பெயர் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டாம் மதிப்பீட்டின்போது மட்டுமல்லாது, மூன்றாம் மதிப்பீட்டின்போதும் இவ்விசேட பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். குழு நிலைத் திருத்தம் ஒவ்வொன்றும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெறுதல் வேண்டும்.


பிரயோக வாக்கு

வாக்குச் சமநிலை நிலவும்போது சபாநாயகர் அல்லது தலைமைதாங்கும் உத்தியோகத்தர் பிரயோக வாக்கொன்றிற்கு உரிமையுடையவராவார். எனினும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவைப்படும்போது சபாநாயகர் பிரயோக வாக்கைப் பயன்படுத்த முடியாது.


இருபது பேர் பெரும்பான்மையாக வாக்களித்தல்

ஒரு சில பிரேரணைகளை நிறைவேற்றுவதற்குச் சபையின் கூட்ட நடப்பெண் (20) தேவையாகும். யாதேனும் விசேட அலுவலைப் பரிசீலிக்கும் அல்லது முடிவுறுத்தும் நோக்கத்திற்காக மட்டும் அறிவித்தலின் பின்னர் பெரும்பான்மையான உறுப்பினர்களினால் ஏதேனும் கூட்டத்தின்போது முன்வைக்கப்படும் பிரேரணையொன்றையடுத்து, யாதேனும் ஒரு நிலையியற் கட்டளை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிலையியற் கட்டளைகள் இடை நிறுத்தப்படலாமென நிலையியற் கட்டளை 138 ஏற்பாடு செய்கின்றது. எனினும் இவ்வொழுங்கிலான பிரேரணையொன்று அமைச்சரவை அமைச்சர் ஒருவரினால் பிரேரிக்கப்படாதவிடத்து, வாக்கெடுப்பொன்றின் மூலமே தீர்மானிக்கப்பட வேண்டுமென்பதோடு, அத்தீர்மானத்திற்குச் சார்பாக இருபதுக்குக் குறைவான உறுப்பினர்களே வாக்களித்ததாகக் காணப்படின் அது தோற்றதாக அறிவிக்கப்படுதலும் வேண்டும்.







பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks