பார்க்க

E   |   සි   |  

சபையின் தீர்ப்பு குறித்த பிரேரணையொன்றிற்கு தேவைப்படுமிடத்து அப்பிரேரணை உறுப்பினர்களின் அங்கீகாரத்திற்காக அல்லது நிராகரிப்பிற்காகச் சபைக்கு விடப்படும். ஒவ்வொரு உறுப்பினரினது தீர்ப்பும் வாக்கெடுப்பொன்றின் மூலமாக பெற்றுக் கொள்ளப்படும். வாக்கெடுப்பானது சபை அமர்வில் உள்ளபோது மட்டுமே நடத்தப்படலாம். ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு வாக்கிற்கு உரிமையுடையவரென்பதோடு, அவர் அதனைத் தனிப்பட்ட வகையில் பிரயோகிக்கவும் வேண்டும். வாக்களிக்கும்போது, உறுப்பினர் தனக்கென ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்திருத்தல் வேண்டும். எந்தவொரு உறுப்பினருக்கும் வாக்களிப்பதற்கான உரிமை இருப்பதோடு, விரும்பினால் வாக்களிக்காமலும் விடலாம். பாராளுமன்றத்தில், வாக்கெடுப்பு நான்கு வெவ்வேறு வழிகளில் நடத்தப்படலாம். அவையாவன:

அ. குரல் மூல வாக்கெடுப்பு

குரல் மூல வாக்கெடுப்பே மிகவும் பொதுவான வாக்கெடுப்பு முறையாகும். நிலையியற் கட்டளை 47(1) இன்படி, சபாநாயகர் ஒரு விடயத்தைச் சபைக்கு விடும்போது, ஒரு தீர்மானத்திற்குச் சார்பானவர்கள் "ஆம்" என்பர், எதிரானவர்கள் "இல்லை" என்பர். சபையின் கருத்துப் போதுமான அளவிலும், தெளிவாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதெனச் சபாநாயகர் உணருமிடத்து, அவர் அதனைச் சபைக்கு அறிவிக்கலாம். சபாநாயகரின் தீர்ப்பில் ஓர் உறுப்பினர் திருப்தி கொள்ளாதவிடத்து, அவர் வாக்கெடுப்பொன்றைக் கோரலாம்.

ஆ. எழுந்து நின்று வாக்களித்தல்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 47(2) (அ) இல் குறிப்பிடப்பட்டவாறு வாக்கெடுப்பு நடத்தப்படலாம். உறுப்பினர்கள் தமது ஆசனங்களுக்குரிய வரிசைகளிலிருந்து எழுந்து நின்று சபை முன்னே வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்கை பயன்படுத்தமுடியும் என்பதோடு பாராளுமன்ற செயலாளர் நாயகம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்பதுடன் சபாநாயகரினால் அம்முடிவு சபைக்கு அறிவிக்கப்படும்.

இ. இலத்திரனியல் வாக்குப்பதிவு முறைமையூடாக வாக்களித்தல்

உறுப்பினர்கள் சபாநாயகர் அனுமதிக்கும் நேரத்திற்குள் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 47(2) (ஆ) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்ற இலத்திரனியல் வாக்குப்பதிவு முறைமையூடாக வாக்களிக்கும் செயற்பாட்டின் மூலம் தமது வாக்கை பிரகடனப்படுத்தலாம்.

ஈ. பெயர் மூல வாக்கெடுப்பு

பெயர் மூல வாக்கெடுப்பிற்கான கோரிக்கையொன்று விடுக்கப்பட்டவிடத்து, நிலையியற் கட்டளை 47 (2) (இ) இல் குறிக்கப்பட்டுள்ளவாறு சபாநாயகர் நடவடிக்கை மேற்கொள்வார். இதன்போது, வாக்கெடுப்பிற்கான மணி ஐந்து நிமிடங்களுக்கு ஒலிக்கப்பட வேண்டுமென்பதோடு, வாக்கெடுப்பு, பெயர் மூலம் நடாத்தப்படுதலும் வேண்டும். செயலாளர் நாயகம், ஒவ்வொரு உறுப்பினரும் எவ்வாறு வாக்களிக்க விரும்புகிறார் என்பதை அவர்களிடம் தனித்தனியே கேட்பதன் மூலமும் அதன்படி வாக்குகளைப் பதிவதன் மூலமும் வாக்கெடுப்பை நடத்துவார். செயலாளர் நாயகம் முதலாவதாகப் பிரதம அமைச்சரையும் அதன் பின்னர் அமைச்சரவை அமைச்சர்கள், அமைச்சரவை அங்கத்தவர் அல்லாத அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஆகியோரிடமும் அதன் பின்னர் ஏனைய உறுப்பினர்களிடமும் அவரவர் பெயர்களின் அகர வரிசை ஒழுங்கிலும் வாக்களிப்பை நடத்துவார். ஓர் உறுப்பினர் தான் வாக்களிக்க மறுப்பதாகக் கூறினால் அது செயலாளர் நாயகத்தினால் அவ்வாறான சந்தர்ப்பத்தில், அத்தகைய உறுப்பினரின் பெயர் வாக்களிக்க மறுத்தவராகப் பதிவு செய்யப்படுதல் வேண்டும். வாக்குகள் எண்ணப்பட்டதன் பின்னர், பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் முடிவு சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்பதுடன் சபாநாயகரினால் அவ்வாகெடுப்பில் சார்பாகவும் எதிராகவும் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை சபைக்கு அறிவிக்கப்படும். வாக்களிப்பு எண்ணிக்கை சமமானதாக இருப்பின் சபாநாயகர் தீர்மான வாக்கொன்றை அளித்ததன் பின்னர், முடிவை அறிவிக்கலாம்.

மேலும், சபாநாயகர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட நேரம் முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கும் முன்னர், பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 49 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உறுப்பினர் ஒருவர் வாக்களிப்பின்போது ஏற்பட்ட பிழையை திருத்துமாறு கோரலாம்.

அதேபோல், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 48 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வாக்கெடுப்பில் குழப்பகரமான நிலைமை அல்லது பிழையொன்று ஏற்படுமிடத்து, மீள்வாக்கெடுப்பிற்காக சபாநாயகர் பாராளுமன்றத்தை நெறிப்படுத்தலாம்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks