07

E   |   සි   |  

1978 ம் ஆண்டு அரசியலமைப்பானது அதற்கு முன்பிருந்த தேர்தல் தொகுதி முறைமைக்கும் தேர்தல் மாவட்டங்களுக்கும் அடிப்படை மாற்றமொன்றை அறிமுகம் செய்தது. முந்திய முறைமையானது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட, தனிப்பட்ட வேட்பாளர்களுடன் அல்லது சுயேச்சை வேட்பாளர்களுடன் தேர்தல் தொகுதிகளையும் கொண்டமைந்திருந்தது. குறிப்பிட்ட தேர்தல் தொகுதியில் அதிகூடிய எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டவராக அறிவிக்கப்பட்டார். First-past-the-post (FPP) என விபரிக்கப்படும் இம் முறையானது குறிப்பிட்ட 22 தேர்தல் மாவட்டங்களிலுமான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையாக மாற்றப்பட்டது.

அரசியலமைப்பின் 98(8) உறுப்புரைக்கமைய ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் அனுப்பப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையின் நிர்ணயம் தேர்தல் ஆணையாளரால் மேற்கொள்ளப்படுகிறது. மொத்தமாகக் குறித்த தேர்தல் மாவட்டங்களின் வாக்களிப்பின் அடிப்படையில் 196 உறுப்பினர்கள் அனுப்பப்படுகின்றனர். அரசியலமைப்பின் 15 ஆவது திருத்தம் அறிமுகம் செய்த, 99 (அ) உறுப்புரை, குறிப்பிட்ட அரசியல் கட்சிகளால் அல்லது சுயேச்சை வேட்பாளர்களால் தேசிய மட்டத்தில் (தேசியப்பட்டியல்) பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட ஏற்பாடு செய்கிறது. இவ்வாறு ஒரே தேர்தலிலேயே நாம் மாவட்ட மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் ஒரு விகிதாசார முறைமையைக் கொண்டிருக்கிறோம்.

மாவட்ட மட்ட விகிதாசார முறைமை

அரசியலமைப்பின் 99(6) (அ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய, ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 1/20 க்கு (5%) குறைவான வாக்குகளைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழு தகுதியற்றதாக்கப்படும். எஞ்சிய செல்லுபடியான வாக்குகள், விகிதாசாரக் கணிப்பீட்டு அடிப்படையில் ஆசனங்களை ஒதுக்குவதற்காக, கணக்கில் எடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகூடிய எண்ணிக்கையான வாக்குகளைப் பெறும் அரசியற் கட்சி அல்லது சுயேட்சைக்குழு மேலதிகமாக ஓர் உறுப்பினரைத் தெரிவு செய்யப்பட்டவராக அறிவிப்பதற்கான உரித்தையும் கொண்டுள்ளது (மேலதிக ஆசனம்). எஞ்சிய எண்ணிக்கையான ஆசனங்களுக்கு, அரசியற்கட்சியால் அல்லது சுயேச்சைக் குழுவால் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஒவ்வொரு அரசியற் கட்சியிலிருந்தும் அல்லது சுயேச்சைக் குழுவிலிருந்தும் உறுப்பினர்களை ஒதுக்கீடு செய்தல்

அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தம் அறிமுகம் செய்த விருப்பு வாக்குமுறைமையானது, ஒவ்வொரு அரசியல் கட்சியிலிருந்தும் அல்லது சுயேச்சைக் குழுவிலிருந்தும் அனுப்பப்பட வேண்டிய வேட்பாளர்களின் அடிப்படையைத் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு வாக்காளரும் அவரின் விருப்பத்தை அரசியல் கட்சியின் அல்லது குழுவின் வேட்பாளர் பட்டியலில் உள்ள வேட்பாளர்களுக்கு அளிக்க உரித்துடையவராவார். அத்தகைய மூன்று விருப்புகள் குறிப்பிடப்படலாம். தெரிவத்தாட்சி அலுவலரால் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், குறித்த வேட்பாளருக்காக ஒதுக்கப்பட்ட இலக்கத்தின் அடிப்படையில் இந்த மூன்று விருப்புக்களும் கூட்டிக் காட்டப்படலாம். ஒவ்வொரு அரசியல் கட்சியிலிருந்தும் அல்லது சுயேச்சைக் குழுவிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டவராக அறிவிக்கப்படும் குறித்த வேட்பாளரைத் தீர்மானிப்பதற்காக, வாக்குகளை எண்ணும் செயன்முறையின் இரண்டாம் கட்டமாக விருப்பு வாக்குகளை எண்ணுதல் இடம்பெறும்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks