பார்க்க

E   |   සි   |  

பாராளுமன்ற அமர்வின் போது, அத்தினத்திற்கான பிரதான அலுவல்கள் முடிவுறுகையில் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையொன்றை பாராளுமன்றத்தின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினரொருவரால் சமர்ப்பிக்க முடியும்.

அத்தகைய சபை ஒத்திவைப்பின் போதான பிரேரணைக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்படுவதுடன், அது அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகவிருத்தலும் வேண்டும்.

சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையின் மீது கேள்விகளைக் கேட்பதற்கும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளில் ஏற்பாடுகள் உள்ளன.

அத்தகைய பிரேரணையொன்று அல்லது கேள்விகள் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமையாவிடின் அதற்கு சபாநாயகர் இடமளிக்காதிருக்க முடியும்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பற்றிய விவாத காலத்தில் சபை ஒத்திவைப்பின் போதான பிரேரணையொன்று அல்லது சபை ஒத்திவைப்பின் போதான கேள்விகளுக்கு 30 நிமிடங்கள் மாத்திரம் ஒதுக்கப்படும்.

சபை ஒத்திவைப்பின் போதான பிரேரணையொன்றை சமர்ப்பிக்க எதிர்பார்க்கும் பாராளுமன்ற உறுப்பினரால் அரசாங்கக் கட்சியின் பிரதான முதற்கோலாசான் அல்லது எதிர்க்கட்சியின் பிரதான முதற்கோலாசான் ஊடாக அதற்கு முந்திய தினம் ந.ப. 12.00 மணிக்கு முன்னர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலமாகச் சமர்ப்பித்தல் வேண்டும்.

பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தினால் அதன் பிரதியொன்றை ஏற்புடைய அமைச்சுக்கு ஆற்றுப்படுத்துவதற்காக பாராளுமன்றச் சபை முதல்வருக்கு ஆற்றுப்படுத்தப்படும்.

எனினும், அத்தகைய பிரேரணையில் அடங்கியுள்ள விடயங்கள் நீதிமன்றமொன்றின் தீர்ப்புக்குள்ளாகவுள்ள அல்லது பாராளுமன்றத்தில் ஒரே கூட்டத்தொடரில் அதேபோன்ற பிரேரணையொன்று விவாதிக்கப்பட்டிருப்பின் அதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

எவரேனும் பாராளுமன்ற உறுப்பினரொருவர் சபை ஒத்திவைப்பின் போதான பிரேரணையொன்றைச் சமர்பிக்கும் போது வேறொரு பாராளுமன்ற உறுப்பினரால் வழிமொழியப்படுதல் வேண்டுமென்பதுடன், விவாத இறுதியில் ஏற்புடைய விடயத்திற்கு் பொறுப்பான அமைச்சரால் அதற்கு விடையளிக்கப்படுவதுடன், விவாதத்தின் போது அரசாங்கக் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்பவற்றின் பொருட்டு 30 நிமிடங்கள் வீதம் ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும்.

சபை ஒத்திவைப்பின் போதான விவாதம் பற்றிய வாக்கெடுப்புக்கான சந்தர்ப்பம் இல்லை.

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் இணக்கப்பாட்டுக்கமைய விவாதத்திற்கெடுத்துக் கொள்ளப்படும் ஒத்திவைப்புப் பிரேரணை

அரசியற் கட்சித் தலைவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளால் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் தீர்மானத்தின் பொருட்டு, தினம் மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டுக் கொண்ட பின்னர், ஒரு மணித்தியாலத்திற்கு மேற்பட்ட காலத்திற்கு அல்லது முழு நாள் விவாதம் ஒன்றை ஒதுக்கி ஒத்திவைப்பு விவாதமொன்றை நடத்த முடியும்.

ஒத்திவைப்பு பிரேரணைகளின் உபயோகம்

பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினரொருவருக்கு அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பிட்டதொரு விடயம் தொடர்பாக குறுகிய அறிவித்தலுடன் பாராளுமன்றத்தினதும் ஏற்புடைய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினதும் கவனத்தை ஈர்க்கும் வழிமுறையொன்றாகும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks