E   |   සි   |  

2022-02-11

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

தேயிலை உற்பத்தியின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது – அமைச்சர் ரமேஷ் பத்திரன

எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் தேயிலைக் கைத்தொழில்துறையின் அபிவிருத்திக்கு ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சு தயாராக இருப்பதாகப் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார். நேற்றையதினம் (10) நடைபெற்ற பெருந்தோட்ட அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் இரசாயன உரத் தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டளவில் மொத்த தேயிலை உற்பத்தி 21 மில்லியனால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார். இரசாயன உரத் தட்டுப்பாட்டினால் மாத்தறை மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள சிறு தேயிலை விவசாயிகள் பலர் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வீரசுமண வீரசிங்ஹ குறிப்பிட்டார். இரசாயன உரங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தேயிலைத் தோட்டங்களுக்கு இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறையை அரசாங்கம் ஒழுங்குமுறைப்படுத்துவது பொருத்தமானது எனச் சுட்டிக்காட்டிய வீரசுமண வீரசிங்க, தேயிலை பயிர்ச்செய்கைக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட இரசாயன உரங்களில் சில ஏனைய பிரதேசங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக் கூறினார். சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து கூட்டுறவு முகாமைத்துவ திட்டத்தின் ஊடாக தேயிலை தோட்டங்களுக்கு நீர் விநியோகம் செய்வதற்கான செலவில் 50 வீதத்தை அரசாங்கம் வழங்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்தும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரன் கேட்டறிந்தார். இது தற்போது நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ள பிரச்சினை என்பதால் கருத்து வெளியிடுவதைத் தவிர்த்துள்ள போதிலும், தம்மைப் பொறுத்தவரை, இந்த நிலைமையைத் தீர்ப்பதற்கு கூட்டொப்பந்தம் வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமாரவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பெருந்தோட்டக் கைத்தொழில்துறையின் அபிவிருத்திக்காக எந்தவொரு முறைகேடுகளையும் தடுப்பதற்கு தமது அமைச்சு முடிந்தளவு முயற்சியை எடுக்கும் என்றும், அத்துமீறி நடந்துகொள்ளும் எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை இல்லையென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இங்கு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, குருநாகல் மாவட்டத்தில் தென்னங்கன்று நாற்றுக்களை உருவாக்கும் திட்டம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல அவர்கள் முன்வைத்த முன்மொழிவின் பேரில் தேங்காய் எண்ணெய் அரைக்கும் இயந்திரங்கள் மற்றும் தேங்காய் துருவல் இயந்திரங்களை விநியோகிக்கும் திட்டம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மாத்தறை நில்வலா பிரதேசத்தில் 30 வருடங்களுக்கும் மேலாக அபிவிருத்தி செய்யப்படாமல் இருக்கும் நெல் வயல்களில் தென்னை உற்பத்தியை துரிதப்படுத்தும் திட்டம் போன்ற யோசனைகளுக்கும் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அங்கீகாரம் வழங்கியது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்  தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஸ்பகுமார, சிவஞானம் சிறிதரன், பழனி திகம்பரன், எம். ராமேஸ்வரன், சம்பத் அத்துகோரல, வீரசுமண வீரசிங்க, அமரகீர்த்தி அத்துகோரள ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

2 3

5

 



தொடர்புடைய செய்திகள்

2025-04-23

இயலாமையுடைய நபர்களின் தேவைகள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுவில் ஆராய்வு

இயலாமையுடைய நபர்களின் தேவைகள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் போக்குவரத்துத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகளைப் பலப்படுத்துவதன் ஊடாக சாதகமான திசையை நோக்கி போக்குவரத்துத் துறையை வழிநடத்துவது தொடர்பான இரண்டாவது உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் அண்மையில் (ஏப். 10) கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த த. சில்வா, பல்வேறு இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுவதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் குறித்து இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இயலாமையுடைய சமூகத்தினருக்கு முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாமை அவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரியதொரு பிரச்சினையாக இருப்பது இங்கு அடையளம் காணப்பட்டது. பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் முறையான அணுகல் வசதிகள் இல்லாமை காரணமாக இயலாமை உடைய நபர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் பயணிக்கும் நிலை காணப்படுவதாகவும், இதற்காகப் பெருந்தொகைப் பணத்தைச் செலவிட வேண்டியிருப்பதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். 2006ஆம் ஆண்டு 01ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் குறித்த ஒழுங்குவிதி பற்றிய வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இயலாமையுடைய சமூகத்தினருக்கு உரிய வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் இந்த உத்தரவுகளைப் பின்பற்றுவதில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அதன்படி, அந்தச் சட்டங்கள் நடைமுறையில் செயல்படுத்தப்படும்போது இயலாமையுடைய சமூகம் பெறும் நிவாரணம் குறித்தும் அவர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். சில பேருந்து நடத்துனர்களின் செயல்களால் இயலாமையுடைய நபர்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிப்பதாக அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவிடம் சுட்டிக்காட்டினர். இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும், இயலாமையுடைய நபர்கள் தொடர்பான அணுகுமுறைகளை மேம்படுத்தவும் சட்டம் இயற்ற வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் ஆசனங்கள், சட்டரீதியாக இயலாமையுடைய நபர்களுக்கான ஆசனங்களை ஒதுக்க வேண்டியதன் அவசியம், பேருந்துகளில் நிபந்தனையின்றி இயலாமையுடைய நபர்களுக்கு இடமளிக்க வேண்டியதன் அவசியம், புகையிரத நிலையங்களில் இயலாமையுடைய நபர்களுக்கான  தகவல் தொடர்பு வசதியை எளிதாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவர்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. செவிப்புலன் அற்ற சமூகத்தினருக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து வினவப்பட்டதுடன், அவர்களுக்கு அவற்றை மீண்டும் வழங்குவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, இயலாமையுடைய நபர்களின் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளை இரண்டு வாரங்களுக்குள் எழுத்துமூலமாக இந்தக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பெறப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளைப் பரிசீலித்த பின்னர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் உபகுழுவின் தலைவர் தெரிவித்தார்.


2025-04-23

பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து உப குழுவில் கலந்துரையாடல்

இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அமைச்சின் முன்மொழிவுகளை வழங்குமாறும் அறிவிப்பு பொதுப் போக்குவரத்து சாதனங்களின் பொருத்தப்பாட்டை ஆராய்வதற்கு சரியான பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் தொழில்முறைத் திறனை அதிகரிக்க ஒரு மாதத்திற்குள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தல்   பஸ் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் அமைக்கப்பட்ட “போக்குவரத்துத் துறை தொடர்பான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் போக்குவரத்துத் துறையை நேர்மறையான திசையில் வழிநடத்துதல்" என்ற உபகுழுவில் ஆராயப்பட்டது. இந்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில்  2025.04.09 அன்று கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான கருத்துக்களையும் அவர்கள் குழுவிடம் முன்வைத்தனர். பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள பஸ்களுக்குத் தகுதிச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் குழு வலியுறுத்தியது. மோட்டார் வாகனச் சட்டத்தின் 29வது பிரிவின் படி பஸ்கள், லொறிகள் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இந்தத் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுவதாகவும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனுமதி இன்றி மாகாண சபைகளில் பதிவுசெய்யப்பட்ட கராஜ்களினால் இந்தத் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தகுதிச் சான்றிதழ்களை வழங்கும் கராஜ்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையில் சிக்கல்கள் இருப்பதால், இவற்றை ஒழுங்குமுறைப் படுத்தவேண்டியதன் அவசியத்தை உபகுழுவின் தலைவர் வலியுறுத்தினார். மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 19வது பிரிவின் கீழான நிர்மாணக் கட்டளைகளை  நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதன்படி, புதிய பஸ்களை இறக்குமதி செய்வதிலும், ஏற்கனவே உள்ள பஸ்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக இருக்கைகளுக்கு இடையில் பொருத்தமான இடைவெளி, தேவையற்ற உபரணங்களை அகற்றுதல் மற்றும் ஆசனப் பட்டிகளை அணிவது போன்ற விடயங்கள் குறித்தும் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. அதன்படி, தொடர்புடைய தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், பொதுப் போக்குவரத்தில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகளுடன் கூடிய அறிக்கையைத் தயாரித்து, இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சமர்ப்பிக்குமாறும் உபகுழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் தொழில்முறைத் திறனை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. சாரதிகளின் தொழிலை தரப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஒரு மாதத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு உபகுழுவின் தலைவர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அறிவித்தார். அத்துடன், கடந்த மூன்று மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் குறித்த தரவுகளை உடனடியாக குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குழு கேட்டுக் கொண்டது. தரவுகளின் அடிப்படையில் எதிர்கால பரிந்துரைகளை வகுப்பதன் முக்கியத்துவத்தை உப குழுவின் தலைவர் வலியுறுத்தினார். பஸ் சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்துவதற்குத் தேவையான சட்ட விதிகளை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இது தொடர்பான விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு, தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விதிமுறைகள் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும், சாரதிகளின் உடலில் போதைப்பொருள் இருப்பதைக் கண்டறிதல் உள்ளிட்ட தொழில்நுட்ப வழிமுறைகள் முறையாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த உபகுழு, போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் செயல்படுத்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் ஏற்படும் மாற்றங்களை முதன்மையாக ஆராய்ந்து, பின்னர் தேவையான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையைத் தயாரிக்கும். இக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த. சில்வாவும் பங்கேற்றார்.


2025-04-10

இயலாமையுடைய சிறுவர்களைக் கையாழ்வது தொடர்பில் கல்வியியல் கல்லூரிகளில் கற்றுவரும் ஆசிரியர்களுக்கு ஆறு மாத பயிற்சியை வழங்குவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் முன்மொழிவு

ஆட்டிசம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு  - இலங்கையில் 9,000ற்கும் அதிகமான சிறுவர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – அதிகாரிகள் குழுவில் தெரிவிப்பு முன்பிள்ளைப் பருவத்திலேயே ஆட்டிசம்  உள்ள சிறுவர்களை அடையாளம் காணும் பொறிமுறையை செயற்படுத்துங்கள் – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்   இயலாமையுடைய சிறுவர்களைக் கையாழ்வது தொடர்பில் கல்வியியல் கல்லூரியில் கற்றுவரும் ஆசிரியர்களுக்கு ஆறு மாத பயிற்சியை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் இயலாமை உடைய சிறுவர்களை சாதாரண சிறுவர்களுக்கு சமமாக நடத்துவதற்கு தேவையான அறிவு மற்றும் மனப்பான்மைகளை ஆசிரியர்களுக்கு வழங்க முடியும் என நம்புவதாகவும் அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்  அவர்களின் தலைமையில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் நாமல் சுதர்ஷனவும் கலந்துகொண்டார். இங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இலங்கையில் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டனர். இது தொடர்பான கணக்கெடுப்பிற்கு அமைய 9,000ற்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். எனவே, சரியான அடையாளம் காணப்படல்கள் இல்லாமையாலேயே சிறுவர்கள் இயலாமையுடைய நபர்களாக மாறவேண்டியிருப்பதாக குழுவின் தலைவர் வலியுறுத்தினார். முன்பிள்ளைப் பருவத்தில் ஆட்டிசம் உடைய சிறுவர்களை அடையாளம் காண வேண்டும் என்றும், அவ்வாறு அடையாளம் கண்டுகொண்டல் மாத்திரமே அவர்களை ஆரோக்கியம் மிக்க சிறுவர்களாக வளர்த்தெடுக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதாவது குழந்தை பிறந்தது முதல் முன்பிள்ளைப் பருவம் வரையான குடும்ப சுகாதார அதிகாரியின் மேற்பார்வைக் காலத்தில் குழந்தைகள் மீது கவனம் செலுத்துவதற்கான பொறிமுறை உரிய மட்டத்தில் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்காக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மூன்று மாதிரி பகல்நேர பராமரிப்பு மையங்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தலைவர் கூறினார். இதற்காகத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஒரு குழுவை நியமிக்கவும் முன்மொழியப்பட்டது. இதன் மூலம், அந்தக் குழந்தைகள் பொருத்தமான வளர்ச்சி நிலைகளுக்கு வழிநடத்தப்படுவார்கள் என்றும் நம்பப்படுகிறது. மேலும், ஆபத்து மற்றும் பொருளாதாரப் பாதிப்புக்கள் நிறைந்த நிலையில் காணப்படும் சிறுவர் இல்லங்கள் மற்றும் சிறுவர் நிலையங்களில் உள்ள சிறுவர்களை உயிரியல் ரீதியான குடும்பங்களிலிருந்து பிரிப்பதற்குப் பதிலாக, குடும்பத்திற்குள் பராமரிப்பை வழங்குவதன் அவசியத்தையும் குழு விரிவாகக் கலந்துரையாடியது. நீதிமன்ற செயற்பாடுகளுக்குப் பின்னர் சிறுவர் நன்னடத்தை நிலையங்களுக்கு சிறுவர்கள் அனுப்பப்படுவதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இவ்வாறு சிறுவர்கள் நிறுவனமயமாக்கப்படுவதை விட குடும்பத்திற்குள் பராமரிக்கப்படுவதன் முக்கியத்துவம் குறித்து நீதிபதிகளைத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பெருந்தோட்டத் துறையில் உள்ள சிறுவர்கள் சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் போக்குக் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சிறுவர்கள், குழந்தைகள் பாபுல் மற்றும் பான் பராக் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை நாடுவது குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. பாவனையாளர் அதிகாரசபையின் தடைசெய்யப்பட்ட இறக்குமதி பொருட்களின் பட்டியலில் பாபுல் மற்றும் பான் பராக் போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளடக்கப்படவில்லையென்பதும் இங்கு தெரியவந்தது. இதற்கு அமைய இந்தப் பொருட்களை தடைசெய்யப்பட்ட இறக்குமதிப் பொருட்களின் பட்டியலில் சேர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாவனையாளர் அதிகார சபைக்கு அனுப்பவும் குழு தீர்மானித்தது. மகப்பேற்றுக்கு விடுமுறைகள் வழங்கப்படும்போது மூன்றாவது குழந்தையைப் பிரசவிப்பதற்காக விடுமுறை வழங்கப்படாத சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். மகப்பேற்றுக்கு விடுமுறை வழங்கும்போது முதல் மற்றும் இரண்டாவது பிரசவங்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே மூன்றாவது மற்றும் நான்காவது பிரசவங்களுக்கும் அதே சலுகைகளை வழங்க சட்டம் திருத்தப்பட்டுள்ளதாகவும், இது முறையாக சமூகமயமாக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழில் பணிபுரியக்கூடிய பெண் அதிகாரிகளை நியமிப்பது குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர, யாழ்ப்பாணத்தில் தற்போது 56 பெண் அதிகாரிகள் பணியாற்றுவதாகக் கூறினார். அந்தப் பெண் அதிகாரிகளில் 21 பேர் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவுகளில் பணிபுரிவதாகவும்,  அவர்களில் 8 பேர் மட்டுமே தமிழில் பணிபுரிய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இங்கு, சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் தொடர்பான விடயம் பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் நிகழ்ச்சிநிரல்களில் உள்ளடக்கப்படாமை தொடர்பில் மாவட்ட செயலாளர்களுக்குத் தெரியப்படுத்தி, குறித்த குழுக் கூட்டங்களில் இவ்விடயத்தை உள்ளடக்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் குழு கேட்டறிந்தது. தற்போது அந்தக் குழுக்களின் நிகழ்ச்சி நிரலில் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம் தொடர்பான விடயஙங்கள் கலந்துரையாடப்படுவதாக அதிகாரிகள் குழுவிற்குப் பதிலளித்தனர். பிரதேச செயலக மட்டத்தில் நடைபெற்ற சிறுவர் உரிமைகள் மேம்பாட்டுக் குழுவில் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், மகளிர்  மற்றும் சிறுவர் விவகாரங்கள் தொடர்பான அனைத்து அதிகாரிகளின் பங்கேற்க  வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2025-04-10

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விஜயம் செய்த அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) நிலைமைகளை ஆராய்ந்தது

வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் தொடர்பான 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து அண்மையில் (2025.04.02) இடம்பெற்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டது. இதற்கு அமைய, விசாரணைகளை முன்னெடுப்பதறற்காக கோப் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் கோப் குழு நேற்றையதினம் (ஏப். 09) பண்டாநரயாக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தித் திட்டத்தின் தொலையியங்கி ஏற்றுமிடம் மற்றும் நடையோடுபாதையின் (Remote Apron and Taxiways) நிர்மாணப் பணியின் ஊடாக விமான நிலையத்தில் நிறுத்தப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், திட்டமிடல் மற்றும் ஆலோசனை சேவையப் பெற்றுகொள்வதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) தனியார் நிறுவனம் சேவையைப் பெற்றுக் கொண்ட ஜப்பானிய கூட்டு நிறுவனமும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) தனியார் நிறுவனமும் எந்தவொரு தொழில்நுட்ப அல்லது செயல்பாட்டு பகுப்பாய்வும் இல்லாமல் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், எதிர்பார்க்கப்பட்ட நோக்கத்தை நடைமுறைப்படுத்துவது சவாலாக இருப்பதும் இங்கு அவதானிக்கப்பட்டது. இத்திட்டம் திட்டமிடல் கட்டத்தின் போதே பல பலவீனங்களையும் நடைமுறைச் சிக்கல்களையும் கொண்டிருந்தாலும், இதையும் மீறி பணியைப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதையும் குழு அவதானித்தது. தற்போதைய சூழ்நிலையில், இந்த திட்டத்தின் எதிர்பார்த்த நோக்கங்களை அடைவதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தினால் ஏற்கனவே முன்மொழியப்பட்ட தீர்வுகளும் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இங்கு கோப் குழுவின் உறுப்பினர்கள் ஜப்பானிய கூட்டு நிறுவனத்தின் இந்நாட்டுக்கான பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் இவ்விடயம் பற்றி நீண்ட நேரம் கலந்துரையாடினர். இந்த கவனக்குறைவான நடவடிக்கையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து அதிருப்தி தெரிவித்த குழு உறுப்பினர்கள், எதிர்காலத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் திட்டமிடுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தாமல், பொது நிதியை மேலும் தவறாகப் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர். அத்துடன், இது தொடர்பாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தனர். இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தை மீண்டும் கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நேரடி விஜயத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம். அஸ்லம், சமன்மலி குணசிங்க, லெப்டினட் கமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, ருவன் மாப்பலகம, சுனில் ராஜபக்ஷ, திலின சமரக்கோன், சந்திம ஹெட்டியாராச்சி ஆகியோரும், சம்பந்தப்பட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks