பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-01-10
செய்தி வகைகள் : குழு செய்திகள்
ஊடகங்கள் அறிக்கையிட்டது போன்று பணியாளர்கள் ஓய்வுபெற்றமை காரணமாக ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்படாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன தெரிவித்தார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் (ஜன. 05) அவருடைய தலைமையில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
புகையிரத திணைக்கள அதிகாரிகள் ஓய்வு பெறுவதால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டாலும் அது ஊடகங்களில் வெளியாகும் அளவுக்கு அதிகமாக இல்லை என வருகை தந்திருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சிறிய ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டாலும் ஊடகங்களால் அது பெரிதுபடுத்திக் காட்டப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் குறிப்பிடுகையில், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருவதால் எரிபொருள் விநியோகத்துக்காக அதிகளவான ரயில்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் ரயில் போக்குவரத்தை குறிப்பிட்டளவு குறைக்க வேண்டி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். அத்துடன், ஊடகங்கள் அறிக்கையிடுவதைப் போன்று ரயில் போக்குவரத்து இரத்துச் செய்யப்படவில்லையென்றும் இது தொடர்பில் விளக்கமளிக்க இருப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பணியாளர்கள் ஓய்வு பெறுவதால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டால் அவற்றை இம்மாத இறுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய சாத்தியக் கூறுகள் குறித்தும் அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதற்குத் தேவையான நியமனங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருப்பதால் இம்மாத இறுதிக்குள் இதனை முடிவுக்குக் கொண்டவர முடியும் என அதிகாரிகள் பதில் வழங்கினர். கடந்த ஆண்டு இறுதியில் 10 ரயில் சாரதிகள் மாத்திரமே ஓய்வு பெற்றிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பெப்ரவரி மாத தொடக்கத்தில் கிடைக்கக்கூடிய திறனுக்கு ஏற்ப புதிய ரயில் நேர அட்டவணை தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இது தவிர, "எல்ல-ஒடிஸி" போன்ற சுற்றுலா அம்சங்களுடன் கூடிய தொலைதூர ரயில் சேவைகளுக்கான டிக்கட்டுக்களை 100 வீதம் ஒன்லைனில் பதிவுசெய்து பெற்றுக் கொள்வது குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.
மேலும், 203ஆம் அத்தியாயமான மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 158ஆம் பிரிவின் (2) ஆம் மற்றும் (3) ஆம் உப பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 237ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2022 ஜூலை 07ஆம் திகதி வெளியிடப்பட்ட 2287/28ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ லசந்த அழகியவண்ண, கௌரவ சிறிபால கம்லத், கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன், கௌரவ அனுராத ஜயரத்ன, கௌரவ சாந்த பண்டார, கௌரவ டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ செல்வம் அடைக்கலநாதன், கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே, கௌரவ சம்பத் அத்துகோரள, கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ முதிதா பிரிஷாந்தி.த சொய்சா, கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்த, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ குணதிலக ராஜபக்ஷ, கௌரவ சுமித் உடுகும்புர மற்றும் கௌரவ மஞ்சுளா திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-11-18
அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 12) பாராளுமன்றத்தில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் முறை தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர். அஸ்வெசும திட்டத்திற்குப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் குறித்து குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அந்த அளவுகோல்களின் அடிப்படையில் பொருத்தமான சலுகைகளை வழங்குவதற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து குழுவின் உறுப்பினர்கள் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இத்திட்டத்தில், 22 அளவுகோல்களின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதால், அந்த அளவுகோல்களை செயல்படுத்தும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது. அஸ்வெசும நன்மைகளைப் பெறுவதற்காக மாத்திரம் பயனாளிகளைப் பதிவுசெய்வதற்குத் தற்பொழுது அனுமதிக்கப்பட்டாலும், நாடு முழுவதிலுமுள்ள மக்கள் தமது தகவல்களைக் கட்டமைப்பொன்றில் (Social Registry) பதிவுசெய்வதே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், பதிவுசெய்த பின்னர் தங்களுக்கு என்ன தேவை என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதன் மூலம், தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று குழு சுட்டிக்காட்டியது. முதியோர் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கு அஸ்வெசும திட்டத்தை அவர்களின் வீடுகளுக்கே சென்று பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் குழு விரிவாகக் கலந்துரையாடியது. தேசிய அடையாள அட்டை இல்லாததால் நலன்புரித் திட்டத்தின் உதவிகளைப் பெற முடியாத தகுதியுள்ள நபர்கள் தற்போது இருந்தாலும், தேசிய அடையாள அட்டை இல்லாததால் அந்தச் சலுகைகளைப் பெற முடியாத சில குழுக்கள் உள்ளன என்றும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அதன்படி, முடிந்தவரை அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதன் மூலம் நலன்புரித்திட்ட உதவிகளை வழங்குவதன் நோக்கத்தை அடைவதன் முக்கியத்துவத்தையும் குழு வலியுறுத்தியது. இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர் (கலாநிதி) அனில் ஜயந்த, கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்ஹ, (பேராசிரியர்) ருவன் ரணசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, கே.சுஜித் சஞ்சய பெரேரா, ரோஹன பண்டார, சத்துர கலபதி, திலின சமரகோன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-17
தேசிய உயர்கல்வி கொள்கைக்கான வரைபு தயாரிப்பின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உயர்கல்விப் பிரிவு தொடர்பான உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 11) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. தயாரிக்கப்பட்டுவரும் உயர்கல்விக் கொள்கை வரைபு மற்றும் அதற்கான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி.த சில்வா அவர்கள் குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்தார். நவம்பர் மாத இறுதிக்குள் இந்த வரைபைத் தயாரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். மேலும், பல்கலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை மதிப்பாய்வு செய்தல், இயலாமையுடைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் வெளிப்புற பட்டப்படிப்பு திட்டங்களின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பாக முந்தைய குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாளக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-15
அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப குழுவின் இடைக்கால அறிக்கை உப குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி அவர்களினால் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கப்பட்டது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 13) பாராளுமன்றத்தில் கூடியபோதே இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டது. பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. அதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், அரச சேவையில் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களாக மாறியவர்களுக்கு, அந்த உறுப்பினர் பதவிக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் சேவையாற்றிய பதவிக்குரிய ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுப்பது குறித்தும் இங்கு முன்மொழியப்பட்டது. அரசாங்க வேலையை விட்டு பாராளுமன்ற உறுப்பினராக வரும் ஒருவருக்கு, உறுப்பினர் ஓய்வூதியமும் கிடைக்காததால், இந்த விடயம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதன்படி தனது கவனத்தைச் செலுத்த எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் இங்கு தெரிவித்தார். சேவைப் பிரமாணக் குறிப்புக்கள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வு நடைமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வினைத்திறன்காண் தடைதாண்டல் (efficiency bar) மதிப்பெண் வரம்புகளை பொதுச் சேவை ஆணைக்குழு மாற்றியமைத்ததன் காரணமாக அரச சேவைக்குள் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதாக இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தச் சிக்கல் குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் குழு கூட்டத்தில் கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், குழுவின் கௌரவ உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-11-15
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் பல அமைச்சுக்களுக்கான முன்மொழிவுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை ஆராய்வதற்காகத் துறைசார் மேற்பார்வைக் குழு இரு நாட்கள் கூடியது பொலிஎதிலின் (சிலிசிலி) பைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்க சுற்றாடல் அமைச்சு தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியது. பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது சிலிசிலி பைகளுக்கு கட்டணம் அறவிடும் தீர்மானம் தொடர்பில் குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் பொலிஎதிலின் பயன்பாடு குறைக்கப்படுமா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது இந்தப் பைகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை முடிவு செய்த அதிகாரிகள் யார் என்பதையும் குழுவின் தலைவர் வினவினார். சிலிசிலி பைகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை என இங்கு ஆஜராகியிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் நவம்பர் 10 மற்றும் 12 ஆகிய தினங்களில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், குறித்த அமைச்சுக்களின் கீழ் உள்ள பல நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இக்கூட்டத்தில், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், ரொஷான் அக்மீமன, சதுரி கங்கானி, சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத், (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, ஜே.சி.அலவத்துவல, (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க மற்றும் உபுல் கித்சிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



