பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-01-12
செய்தி வகைகள் : குழு செய்திகள்
சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்கும்போது வெளிப்படைத் தன்மையுடன் அதன் பயனாளிகளை அடையாளம் காண்பதற்கான பட்டியலைத் தயாரிப்பதற்கான தகவல்களை சேகரிப்பதற்கான பணியை சமுர்த்தி அதிகாரிகள் நிராகரித்திருப்பதன் ஊடாக சிக்கல் நிலைமை ஏற்பட்டிருப்பதாக அண்மையில் (ஜன. 10) நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவில் புலப்பட்டது.
2002ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் 2302/23ஆம் இலக்க வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளை அனுமதிப்பதற்காக அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் கூடியபோதே இந்த விடயம் புலப்பட்டது.
சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி கொடுப்பனவுகளைச் செலுத்தும்போது ஊழல் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவு என்றும், இதற்கான பொறுப்பு நலன்புரி நன்மைகள் சபைக்கு உள்ளதாகவும் இங்கு மேலும் தெரியவந்தது. இதற்கமைய இந்தத் தகவல்களைச் சேகரிக்கும் பணிக்கான ஏற்பாடுகளை வழங்குவதற்காக இந்த வர்த்தமானி அறிவித்தலில் ஒழுங்குவிதி வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி.விஜேரத்ன குறிப்பிடுகையில், பதிவுசெய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய விண்ணப்பதாரிகளால் வழங்கப்பட்ட விபரங்களுக்கான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும்போது சட்டத்தின் 21 மற்றும் 22வது பிரிவுகளுக்கு அமைய தனது வேலையை இழக்கவேண்டிய நிலை இருப்பதாகவும், இந்தப் பிரிவைத் திருத்தும் வரையில் இது தொடர்பான களப்பணிகளிலிருந்து விலகுவதாக சமுர்த்தி, கிராமசேவகர், பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகளின் தொழிற்சங்கங்கள் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.
இந்த 21ஆம் 22ஆம் பிரிவுகளின் ஊடாக பிழையான தகவல்கள் உள்ளீடு செய்யும் அதிகாரிகள் தண்டனைக்கு உட்படுவார்கள் என்றும், இந்தப் பிரிவு திருத்தப்படும்வரை இந்தத் தகவல்களை சேகரிப்பதை நிராகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி வழங்கிய குழு, நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் நாயகம் இது தொடர்பில் அவசரமாக கலந்துரையாடி ஒரு தீர்வை எட்டுமாறும் குழு அறிவுறுத்தியது. இந்த தரவு சேகரிப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வது தொடர்பான முடிவுகளை மாற்று நடவடிக்கையை பின்பற்றி எடுக்குமாறும் குழு பரிந்துரைத்துள்ளது.
அரசாங்க நலன்களைப் பெறுவதற்கான பயனாளிகள்/அதற்குத் தகுதியான குடும்பங்களை ஆரம்ப விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது அண்மையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அத்துடன், நலத்திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்குச் சென்று இரண்டாம் நிலைத் தகவல்களை சேகரிக்க கையடக்கத்தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் தெரிவித்தார்.
சமுர்த்தி பயனாளிகளில் 40% தகுதி அற்றவர்கள் என உலக வங்கியின் கணக்கெடுப்பில் வெளிப்பட்டிருப்பதாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய தகுதியில்லாதவர்களுக்கு உதவித்தொகை வழங்கி, அதில் ஒரு சதவீதத்தைத் தமக்காகப் பெற்றுக்கொள்ளும் ஊழல் அதிகாரிகள் இருப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இந்த நலன்புரித் திட்டத்தை உரிய வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்வதற்கு சரியான தரவுகளைக் கொண்ட ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதன் அவசியம் குறித்து குழுவில் வலியுறுத்தப்பட்டது.
நலன்புரிக் கொடுப்பனவுகளை வழங்கும்போது தேசிய அடையாள அட்டையைக் கட்டாயப்படுத்துவது அவசியம் என்றும் குழு பரிந்துரைத்தது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திருக்கும் பின்னணியில் தேசிய அடையாள அட்டையை சகல குடிமக்களுக்கும் பெற்றுக் கொடுக்க முடியாது எனக் கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லையென்றும், மோசடிகளைத் தடுப்பதற்கு இது முக்கியமான முடிவாக இருக்கும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.
எனவே, இந்த ஆவணத்தை தயாரிப்பதில் தாமதம் ஏற்படுவதால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம் என்பதால், ஊழல் மற்றும் மோசடி இல்லாத கலாசாரத்தை உருவாக்க இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.
இதன்படி, இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி வழங்கிய குழு, நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நலன்புரி நன்மைகள் சபையின் ஆகியோர் இது தொடர்பில் அவசரமாக கலந்துரையாடி தீர்வொன்றை எட்டுமாறும் குழு அறிவுறுத்தியது.
மேலும், இவ்விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இரண்டு வாரங்களுக்குள் குழுவுக்கு அறிவிக்குமாறும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்தார்.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ சஹான் பிரதீப் விதான மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2025-07-28
உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் கடந்த ஜூலை 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர். உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு நீண்ட விளக்கத்தை வழங்கியதுடன், கடந்த காலங்களில் இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் விபரித்தனர். கல்வித் துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் செயற்பட்ட சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் எனப் பலரையும் இணைத்துக் கொண்டு உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை விரிவான முறையில் ஆராய எதிர்பார்த்திருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பைக் குழு முழுமையாக வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கல்வித் துறையின் மறுசீரமைப்பின் போது உரிய முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதன்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் குறித்தும் இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகள் குறித்து குழு கேட்டறிந்துகொண்டதுடன், குறித்த சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு முன்வைக்கவும் குழு அனுமதி வழங்கியது.இந்தக் கலந்துரையாடல்களில் குழுவின் கௌரவ உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, சானக மாதுகொட, துரைராசா ரவிகரன், சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-07-28
மிகவும் அத்தியாவசிய மருத்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை - சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மருந்து பற்றாக்குறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வினவப்பட்டது. இக்குழு பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்ஹ தலைமையில் அண்மையில் (ஜூலை 23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன. கடந்த வருடங்களில் கொள்முதல் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போதைய மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எனினும், 2026 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் எந்தப் பற்றாக்குறையும் இருக்காது என்றும் அவர்கள் குழுவில் உறுதியளித்தனர். அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் 80% முதல் 90% வீதமான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். அத்துடன், மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் இருப்பு குறித்து குழு வினவியத்துடன், தற்போது மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இலங்கை அரசமருந்தாங்கற் கூட்டுத்தாபனம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் மற்றும் விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளையும் குழு பரிசீலித்து அங்கீகரித்தது. இந்த அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யும் போது, இந்த நிறுவனங்கள் தொடர்பான பதிலளிக்கப்படாத கணக்காய்வு கேள்விகள் குறித்து குழு வினவியது. கணக்காய்வு அவதானிப்புகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான பதில்களை உறுதி செய்வதற்காக அமைச்சுக்குள் ஒரு உள்ளக மீளாய்வு பொறிமுறையை நிறுவ வேண்டும் என குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். பிரதி அமைச்சர் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜகத் மனுவர்ண ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் (வைத்தியர்) அனில் ஜாசிங்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-07-28
பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டது. இந்நாட்டின் கலை மற்றும் கலாசாரத் துறையின் முன்னேற்றத்திற்காக ஒன்றியத்தினால் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ள திட்டங்களை மேற்பார்வை செய்வது, அதற்குத் தேவையான துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதே இந்தச் செயற்குழுவின் நோக்கமாகும். இக்குழுவின் உறுப்பினர்களாகக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த நியமனம் இடம்பெற்றது. இந்நாட்டின் கலாசாரம், இலக்கியம் மற்றும் கலைத் துறையை வளர்ப்பது, இத்துறையில் உள்ள கலைஞர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களின் முன்னேற்றம், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் கலையை இரசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் தொடர்பில் குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-07-21
பாராளுமன்றக் குழுக்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை ஆராய முடியும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அதனைக் குறிப்பிட்டார். கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தின் முக்கிய கண்காணிப்பு குழுக்களான கோப் மற்றும் கோபா ஆகியவற்றின் கட்டமைப்பு, அதிகாரங்கள், வகிபாகம், பொறுப்புகள் தொடர்பாக அவர் விரிவான விளக்கத்தை வழங்கியதுடன், வெளிப்படையானதும், விளைவுத்திறனான அரசாங்க நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கே இக்குழுக்கள் பங்களிக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்தினார். கோப் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர மற்றும் கோபா குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் குறித்த குழுக்களின் நோக்கெல்லையின் கீழ்வரும் அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இதில் பங்கேற்றனர். பாராளுமன்றத்தின் பொறுப்புக் கூறல் மற்றும் மேற்பார்வை என்ற பரந்துபட்ட சூழலில் இக்குழுக்களின் பங்களிப்புப் பற்றிய ஆழ்ந்த புரிதலை வழங்குவது இதன் பிரதான நோக்கமாக அமைந்தது. பிரதமரின் செயலாளர் ஜீ.பிரதீப் சபுதந்திரி, பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டி.தர்மபால, பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்கச் சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர். அரசாங்க அதிகாரிகள் பாராளுமன்றக் குழுக்களுக்கு முன்னிலையாகும்போது முன்வைக்கும் தகவல்கள் துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருப்பதுடன், விரிவான விடயங்களை உள்ளடக்கியதாக, இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என மாயாதுன்னே அவர்கள் சுட்டிக்காட்டினார். அத்துடன், குழுவில் கருத்துக்களை முன்வைக்கும்போது கண்ணியமான முறையில், தர்க்கபூர்வமாக மரியாதையுடன் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிறைவேற்று அதிகாரத்திடமிருந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கே பாராளுமன்றத்தின் மேற்பார்வைகள் உதவுகின்றன எனவும் தெரிவித்தார். எனவே, அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும், மேலும் சட்டமன்றத்தால் அழைக்கப்படும்போது பொறுப்புக்கூறத் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். திறமையான மேற்பார்வை மூலம் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதில் நிறுவன தயார்நிலை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் கலந்துரையாடலுடன் அவரது அமர்வு நிறைவடைந்தது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks