பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-04-03
செய்தி வகைகள் : குழு செய்திகள்
வெகுஜன அமைச்சின் கீழ் காணப்படும் செலசினே, தொலைக்காட்சி நிறுவனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் உள்ளிட்ட நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபமீட்டும் நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் வெகுஜன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
வெகுஜன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழு, அதன் தலைவர் கௌரவ பந்துல குணவர்தன தலைமையில் அண்மையில் (மார்ச் 21) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
இதில் விசேடமாக செலசினே நிறுவனம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், வெளித் தரப்பினருக்கு சில விளம்பரங்களை வழங்குவது மற்றும் வாடகை அடிப்படையில் கமரா உபகரணங்களைப் பெறுவது குறித்து அமைச்சின் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்துகொண்டார். உள்ளக நிபுணர்களின் படைப்பாற்றலில் சிக்கல் இருப்பதாகவும், தகுதியற்றவர்கள் பணியில் அமர்த்தப்படுவதே காரணம் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதனால் வெளிநபர்களிடம் வழங்கி தயாரிப்புக்களை மேற்கொள்வது மலிவானது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்த அனைத்து நிறுவனங்களில் இருந்தும் தேவையற்ற ஊழியர்களை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் தற்போது இலாபகரமான நிலையில் இல்லை எனவும், அதனை இலாபகரமான ஒன்றாக மாற்றுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அந்த நிறுவனத்தில் உள்ள அதிகப்படியான ஊழியர்களை நீக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், வரையறுக்கப்பட்ட சுயாதீனத் தொலைக்காட்சி நிறுவனத்தின் தற்போதைய செயலாற்றுகை மற்றும் இந்நிறுவனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவது குறித்தும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
வரையறுக்கப்பட்ட அசோசியேட் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிடட், இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனம், இலங்கை அச்சகக் கூட்டுத்தாபனம், இலங்கை பத்திரிகை சபை போன்ற நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகளும் இங்கு அங்கீகரிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில், அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ சாந்த பண்டார, கௌரவ டி. பி. ஹேரத், கௌரவ சிசிர ஜயக்கொடி, கௌரவ ஜனக வக்கும்புர, கௌரவ அசோக பிரியந்த பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ எஸ்.எம். எம். முஷாரப், கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கெளரவ சமன்பிரிய ஹேரத், கௌரவ ராஜிகா விக்கிரமசிங்ஹ, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ பைசல் காசிம், கௌரவ எம். எஸ். தௌபீக், கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ ஹேஷா விதானகே, கௌரவ ஜகத் குமார சுமித்ராராச்சி, கௌரவ முதித பிரிஷாந்தி. த சொய்சா, கௌரவ. இராதாகிருஷ்ணன், கௌரவ வீரசுமண வீரசிங்ஹ, கௌரவ குணதிலக ராஜபக்ஷ, கௌரவ மஞ்சுளா திஸாநாயக்க, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ மற்றும் கௌரவ. எல். எம். அதாஉல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-04-23
இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அமைச்சின் முன்மொழிவுகளை வழங்குமாறும் அறிவிப்பு பொதுப் போக்குவரத்து சாதனங்களின் பொருத்தப்பாட்டை ஆராய்வதற்கு சரியான பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் தொழில்முறைத் திறனை அதிகரிக்க ஒரு மாதத்திற்குள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தல் பஸ் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் அமைக்கப்பட்ட “போக்குவரத்துத் துறை தொடர்பான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் போக்குவரத்துத் துறையை நேர்மறையான திசையில் வழிநடத்துதல்" என்ற உபகுழுவில் ஆராயப்பட்டது. இந்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் 2025.04.09 அன்று கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான கருத்துக்களையும் அவர்கள் குழுவிடம் முன்வைத்தனர். பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள பஸ்களுக்குத் தகுதிச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் குழு வலியுறுத்தியது. மோட்டார் வாகனச் சட்டத்தின் 29வது பிரிவின் படி பஸ்கள், லொறிகள் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இந்தத் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுவதாகவும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனுமதி இன்றி மாகாண சபைகளில் பதிவுசெய்யப்பட்ட கராஜ்களினால் இந்தத் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தகுதிச் சான்றிதழ்களை வழங்கும் கராஜ்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையில் சிக்கல்கள் இருப்பதால், இவற்றை ஒழுங்குமுறைப் படுத்தவேண்டியதன் அவசியத்தை உபகுழுவின் தலைவர் வலியுறுத்தினார். மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 19வது பிரிவின் கீழான நிர்மாணக் கட்டளைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதன்படி, புதிய பஸ்களை இறக்குமதி செய்வதிலும், ஏற்கனவே உள்ள பஸ்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக இருக்கைகளுக்கு இடையில் பொருத்தமான இடைவெளி, தேவையற்ற உபரணங்களை அகற்றுதல் மற்றும் ஆசனப் பட்டிகளை அணிவது போன்ற விடயங்கள் குறித்தும் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. அதன்படி, தொடர்புடைய தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், பொதுப் போக்குவரத்தில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகளுடன் கூடிய அறிக்கையைத் தயாரித்து, இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சமர்ப்பிக்குமாறும் உபகுழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் தொழில்முறைத் திறனை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. சாரதிகளின் தொழிலை தரப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஒரு மாதத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு உபகுழுவின் தலைவர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அறிவித்தார். அத்துடன், கடந்த மூன்று மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் குறித்த தரவுகளை உடனடியாக குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குழு கேட்டுக் கொண்டது. தரவுகளின் அடிப்படையில் எதிர்கால பரிந்துரைகளை வகுப்பதன் முக்கியத்துவத்தை உப குழுவின் தலைவர் வலியுறுத்தினார். பஸ் சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்துவதற்குத் தேவையான சட்ட விதிகளை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இது தொடர்பான விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு, தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விதிமுறைகள் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும், சாரதிகளின் உடலில் போதைப்பொருள் இருப்பதைக் கண்டறிதல் உள்ளிட்ட தொழில்நுட்ப வழிமுறைகள் முறையாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த உபகுழு, போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் செயல்படுத்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் ஏற்படும் மாற்றங்களை முதன்மையாக ஆராய்ந்து, பின்னர் தேவையான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையைத் தயாரிக்கும். இக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த. சில்வாவும் பங்கேற்றார்.
2025-04-23
இயலாமையுடைய நபர்களின் தேவைகள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் போக்குவரத்துத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகளைப் பலப்படுத்துவதன் ஊடாக சாதகமான திசையை நோக்கி போக்குவரத்துத் துறையை வழிநடத்துவது தொடர்பான இரண்டாவது உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் அண்மையில் (ஏப். 10) கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த த. சில்வா, பல்வேறு இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுவதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் குறித்து இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இயலாமையுடைய சமூகத்தினருக்கு முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாமை அவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரியதொரு பிரச்சினையாக இருப்பது இங்கு அடையளம் காணப்பட்டது. பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் முறையான அணுகல் வசதிகள் இல்லாமை காரணமாக இயலாமை உடைய நபர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் பயணிக்கும் நிலை காணப்படுவதாகவும், இதற்காகப் பெருந்தொகைப் பணத்தைச் செலவிட வேண்டியிருப்பதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். 2006ஆம் ஆண்டு 01ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் குறித்த ஒழுங்குவிதி பற்றிய வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இயலாமையுடைய சமூகத்தினருக்கு உரிய வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் இந்த உத்தரவுகளைப் பின்பற்றுவதில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அதன்படி, அந்தச் சட்டங்கள் நடைமுறையில் செயல்படுத்தப்படும்போது இயலாமையுடைய சமூகம் பெறும் நிவாரணம் குறித்தும் அவர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். சில பேருந்து நடத்துனர்களின் செயல்களால் இயலாமையுடைய நபர்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிப்பதாக அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவிடம் சுட்டிக்காட்டினர். இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும், இயலாமையுடைய நபர்கள் தொடர்பான அணுகுமுறைகளை மேம்படுத்தவும் சட்டம் இயற்ற வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் ஆசனங்கள், சட்டரீதியாக இயலாமையுடைய நபர்களுக்கான ஆசனங்களை ஒதுக்க வேண்டியதன் அவசியம், பேருந்துகளில் நிபந்தனையின்றி இயலாமையுடைய நபர்களுக்கு இடமளிக்க வேண்டியதன் அவசியம், புகையிரத நிலையங்களில் இயலாமையுடைய நபர்களுக்கான தகவல் தொடர்பு வசதியை எளிதாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவர்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. செவிப்புலன் அற்ற சமூகத்தினருக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து வினவப்பட்டதுடன், அவர்களுக்கு அவற்றை மீண்டும் வழங்குவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, இயலாமையுடைய நபர்களின் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளை இரண்டு வாரங்களுக்குள் எழுத்துமூலமாக இந்தக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பெறப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளைப் பரிசீலித்த பின்னர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் உபகுழுவின் தலைவர் தெரிவித்தார்.
2025-04-10
பொது மனுக்கள் பற்றிய குழுவினால் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட 80க்கும் அதிகமான விதப்புரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை பாராளுமன்றக் குழுக்களினால் வழங்கப்பட்டு இது வரை நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு மாதகால அவகாசம் வழங்குவதற்கு, பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகள், சம்பந்தப்பட்ட பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களினால் அவை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது. இந்தக் குழு அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாயணக்கார தலைமையில் நேற்று (ஏப். 09) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்கமைய, குழுவினால் முன்னுரிமை வழங்கப்பட்டு மதிப்பாய்வு செய்யப்படவேண்டிய, நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இதன்போது பொது மனுக்கள் பற்றிய குழுவினால் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட 80க்கும் அதிகமான விதப்புரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டவில்லை என்பது புலப்பட்டது. அத்துடன், அரசாங்கப் பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு (COPE), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (COPA), அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) ஆகிய குழுக்களினால் வழங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குவதற்கு குழுவினால் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு கடிதங்களை அனுப்புவதற்கும், ஒரு மாத காலத்துக்குள் நடைமுறைப்படுத்த முடியாது எனின் அதற்கான காரணங்களைக் குழுவுக்கு எழுத்துமூலமாகப் பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் ஒஷானி உமங்கா ஆகியோரும் பாராளுமன்ற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-04-10
வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் தொடர்பான 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து அண்மையில் (2025.04.02) இடம்பெற்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டது. இதற்கு அமைய, விசாரணைகளை முன்னெடுப்பதறற்காக கோப் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் கோப் குழு நேற்றையதினம் (ஏப். 09) பண்டாநரயாக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தித் திட்டத்தின் தொலையியங்கி ஏற்றுமிடம் மற்றும் நடையோடுபாதையின் (Remote Apron and Taxiways) நிர்மாணப் பணியின் ஊடாக விமான நிலையத்தில் நிறுத்தப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், திட்டமிடல் மற்றும் ஆலோசனை சேவையப் பெற்றுகொள்வதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) தனியார் நிறுவனம் சேவையைப் பெற்றுக் கொண்ட ஜப்பானிய கூட்டு நிறுவனமும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) தனியார் நிறுவனமும் எந்தவொரு தொழில்நுட்ப அல்லது செயல்பாட்டு பகுப்பாய்வும் இல்லாமல் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், எதிர்பார்க்கப்பட்ட நோக்கத்தை நடைமுறைப்படுத்துவது சவாலாக இருப்பதும் இங்கு அவதானிக்கப்பட்டது. இத்திட்டம் திட்டமிடல் கட்டத்தின் போதே பல பலவீனங்களையும் நடைமுறைச் சிக்கல்களையும் கொண்டிருந்தாலும், இதையும் மீறி பணியைப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதையும் குழு அவதானித்தது. தற்போதைய சூழ்நிலையில், இந்த திட்டத்தின் எதிர்பார்த்த நோக்கங்களை அடைவதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தினால் ஏற்கனவே முன்மொழியப்பட்ட தீர்வுகளும் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இங்கு கோப் குழுவின் உறுப்பினர்கள் ஜப்பானிய கூட்டு நிறுவனத்தின் இந்நாட்டுக்கான பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் இவ்விடயம் பற்றி நீண்ட நேரம் கலந்துரையாடினர். இந்த கவனக்குறைவான நடவடிக்கையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து அதிருப்தி தெரிவித்த குழு உறுப்பினர்கள், எதிர்காலத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் திட்டமிடுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தாமல், பொது நிதியை மேலும் தவறாகப் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர். அத்துடன், இது தொடர்பாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தனர். இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தை மீண்டும் கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நேரடி விஜயத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம். அஸ்லம், சமன்மலி குணசிங்க, லெப்டினட் கமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, ருவன் மாப்பலகம, சுனில் ராஜபக்ஷ, திலின சமரக்கோன், சந்திம ஹெட்டியாராச்சி ஆகியோரும், சம்பந்தப்பட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks