பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-12-19
செய்தி வகைகள் : குழு செய்திகள்
100 கிலோகிராம் போதைப்பொருட்களை குறித்த தினங்களில் அழிப்பதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதாகவும், அதற்கமைய அதற்கான தினம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் நீதி அமைச்சு தெரிவித்தது.
குறித்த பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் தலைமையில் அண்மையில் (டிச. 12) கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், நாட்டில் அதிகரித்துவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடந்த டிசம்பர் 15 வரை அரசாங்க நிறுவனங்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் விசேட குழுவில் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், அதன் பிரதிகள் அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும், பங்குபற்றியவர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டன.
இதற்கமைய, மேற்படி குழுவுக்குப் பெறப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் மேலும் ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட வேண்டும் எனப் பாராளுமன்றத் தெரிவுக்குழு வலியுறுத்தியது.
போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம், அது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளின் போதான கைதுகளில் நிலவும் இடைவெளிகள் மற்றும் சிரமங்கள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் விளக்கமளித்தது.
போதைப்பொருள் தொடர்பான கைதுகளின் பின்னர் நீதித்துறை செயற்பாட்டில் உள்ள பலவீனங்கள் காரணமாகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கூட சட்டத்திலிருந்து தப்பித்து வருகின்றனர் என்பதால் முறையான கொள்கை மற்றும் சட்டரீதியான ஏற்பாடுகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பதி, கௌரவ புத்திக பத்திரன, கௌரவ மஞ்சுளா திசாநாயக, கௌவர முதிதா பிரசாந்தி ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-11-08
ருஹுணு பல்கலைக்கழக இணை சுகாதாரப் பீடத்தின் 17வது குழுவின் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை, தற்காலிக அடிப்படையிலாவது தேவையான மனித வளத்தைப் பெற்றுக்கொண்டு ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ருஹுணு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் உள்ளிட்ட கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அறிவுறுத்தியது. 2023 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள், ருஹுணு இணை சுகாதாரப் பீடத்திற்குத் தெரிவாகி ஒரு வருடத்திற்கும் அதிக காலம் கடந்தும், இணை சுகாதாரப் பீடத்தில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையின் காரணமாக, இதுவரை அந்த மாணவர் குழுவினருக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியவில்லை என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 30.10.2025 அன்று பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் கலந்துகொண்டார். இதன்போது கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக அதிகாரிகள், ருஹுணு இணை சுகாதாரப் பீடத்தில் நிலவும் மனித வளப் பற்றாக்குறை குறித்து குழுவிடம் தகவல்களைச் சமர்ப்பித்தனர். எவ்வாறாயினும், தங்களுக்குத் தேவையான மனித வளத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக 250 மாணவர்கள் கொண்ட குழுவினர் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும், அந்தப் பிரச்சினையைத் தீர்க்க தற்காலிக அடிப்படையிலாவது தேவையான மனித வளத்தைப் பெற்றுக்கொண்டு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதன்படி, கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தி, இணை சுகாதாரப் பீடத்தின் 17வது குழுவின் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், 2025 ஆம் ஆண்டிற்கான கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு, இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு என்பவற்றின் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் மற்றும் 31.12.2025 வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் ஆகியவையும் அன்றைய தினம் குழுவில் பரிசீலனை செய்யப்பட்டன. இதன்போது, சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை பொதுவாகப் பாதிக்கும் பல சிக்கலான சூழ்நிலைகள் காரணமாக, எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தை அடைய முடியவில்லை என்று அமைச்சுக்களின் செயலாளர்கள் சுட்டிக்காட்டினர். கொள்வனவு செயன்முறை மற்றும் கட்டட நிர்மாணத்தில் உள்ள சிக்கல்கள் காரணமாக குறிப்பிட்ட முன்னேற்றத்தை அடைய முடியவில்லை என்றும், இந்த ஆண்டில் இன்னும் குறுகிய காலமே உள்ளதால், சம்பந்தப்பட்ட முன்னேற்றத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுகத் வசந்த டி சில்வா, சுனில் ராஜபக்ஷ, சானக மாதுகொட ஆகியோரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு, இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், ருஹுணு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர், இணை சுகாதாரப் பீடத்தின் பீடாதிபதி மற்றும் விரிவுரையாளர் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர்.
2025-11-08
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆகியன இணைந்து ஏற்பாடு இலங்கை முழுவதிலுமுள்ள பெண் தலைமைத்துவங்களுக்கிடையிலான தொடர்புகளை உருவாக்குவதன் முதற்படியாக ‘இணைக்கும் குரல்கள்’ – பெண் தலைவர்களுக்கான பிராந்திய பரிமாற்ற நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. பாராளுமன்றம், உள்ளூராட்சி மன்றங்கள், கல்வி மற்றும் வணிகத் துறைகளிலிருந்தான தேசிய மற்றும் மாவட்ட ரீதியிலுள்ள பெண் தலைவர்களை ஒன்றாக இணைக்கும் நிகழ்வாக இது அமைந்ததுடன், இங்கு அனுபவங்கள், தடைகள் மற்றும் பெண் தலைமைத்துவத்தைப் பலப்படுத்துவதற்கு அடையாளம் காணப்பட்ட நடைமுறைத் தீர்வுகள் குறித்துப் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்களான ஹேமாலி வீரசேகர, ஹசாரா லியனகே, துஷாரி ஜயசிங்க, அனுஷ்கா திலகரத்ன, எம்.ஏ.சி.எஸ்.சதுரி கங்கானி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான பாராளுமன்றம் மற்றும் ஊடகத்துறை நிபுணர் சதுரங்க ஹப்புஆரச்சி ஆகியோர் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவுப்படுத்தும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். நிலையான வழிகாட்டுதல் வலையமைப்பை உருவாக்குவதற்கும், வடக்கில் உள்ள பெண் தலைமைத்துவங்களிடமிருந்து முக்கிய விடயங்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்று அவற்றை உள்ளடக்கிய அறிக்கையை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை இந்தத் தளம் உருவாக்கியது. தலைமைத்துவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கும், இலங்கை முழுவதும் உள்ளடக்கிய நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் ஆதார அடிப்படையிலான கொள்கை முடிவுகளை முன்னெடுப்பதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்திற்கு இந்த அறிக்கை உறுதுணையாக இருக்கும்.
2025-11-08
இயலாமையுள்ளவர்களுக்கு நீங்கள் வழங்கும் சேவையால் அவர்கள் திருப்தியடைந்தால், அந்த சேவையை வழங்கும் உங்களுக்கும் திருப்தியடையலாம் - கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா இயலாமையுள்ள நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட மட்டத்தில் ஆலோசனைகளைப் பெறுவதற்கான ஒரு விசேட நிகழ்ச்சித் திட்டம் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் முன்முயற்சியின் கீழ் அண்மையில் (நவ. 04) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி நிலையத்தில் நடைபெற்றது. பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் “இயலாமை பற்றிய உணர்திறன் கொண்ட பாராளுமன்றம்” என்ற இலக்குக்கு அமைய, நாடு முழுவதும் இயலாமையுள்ள நபர்களிடமிருந்து நேரடியாகக் கருத்துக்களைப் பெறும் தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் முதல் கட்டம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை மையமாகக் கொண்டு இவ்வாறு நடத்தப்பட்டது. இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்ச்சியில், ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களும் கலந்துகொண்டார். அத்துடன், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் எஸ். முரளிதரன், முல்லைத்தீவு மேலதிக மாவட்டச் செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவி ஆகியோரும், உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிரதேச செயலாளர்கள் உட்பட உள்ளூர் அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், சுகாதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இயலாமையுள்ள நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இயலாமையுள்ள நபர்கள் உட்பட சுமார் 100 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்களுடன் இணைந்து, தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அனுசரணையின் கீழ் இந்த நிகழ்ச்சித் திட்டம் நடைபெற்றதுடன், அந்த மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி அனோஜிதா சிவாஸ்கரன் அவர்களும் இதில் கலந்துகொண்டார். இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா அவர்கள், சேவைகளைப் பெறுவதற்காக தம்மிடம் வரும் இயலாமையுள்ள நபர்களை மனிதாபிமானத்துடன் கருதி, அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குமாறு அனைத்து அரச அதிகாரிகளிடமும் கேட்டுக்கொண்டார். இயலாமையுள்ள நபர்களின் தேவைகளைக் கண்டறிய, அவர்களின் நிலையில் இருந்து பார்ப்பதன் மூலம் அவர்களுக்கு உண்மையில் என்ன தேவைகள் உள்ளன என்பதைச் சரியாக அடையாளம் காண முடியும் என்றும், சேவைகளைப் பெற வரும் இயலாமையுள்ள நபர்களின் புன்னகையில் உங்கள் தொழிலில் திருப்தியைக் காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், தற்போது நடைமுறையில் உள்ள இயலாமையுள்ள நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் அதில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார். மேலும், இந்த சட்டமூலத்தில், இயலாமையுள்ள நபர்களின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் (UNCRPD) உள்ள 25 இற்கும் மேற்பட்ட உரிமைகளைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அதற்கு இணையாக, இயலாமையுள்ள நபர்கள் குறித்த தேசிய கொள்கை மற்றும் தேசிய செயற்திட்டம் என்பனவும் வரைபு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள், இயலாமையுள்ள நபர்களின் தேவைகள் அதிகமாக உள்ள வட மாகாணத்தில் இவ்வாறான ஒரு நிகழ்ச்சியை நடத்துவது மிகவும் முக்கியமானது என்றும், பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இயலாமையுள்ள சமூகத்திற்கு அவசியமான சட்ட மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுக்காகப் பாடுபடுகிறது என்றும் குறிப்பிட்டார். இயலாமையுள்ள நபர்கள் குறித்த சர்வதேச தினத்திற்கு இணையாக தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை இம்முறை யாழ்ப்பாண மாவட்டத்தில் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும், வீதி ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிப்பதற்கும், வீதி ஒழுங்குவிதிகளை அமுல்படுத்துவதிலும் பொலிஸாரின் ஒத்துழைப்பு மேலும் தேவைப்படுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் எஸ். முரளிதரன் மற்றும் முல்லைத்தீவு மேலதிக மாவட்டச் செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவி ஆகியோரும் இங்கு கருத்துத் தெரிவித்தனர். இயலாமையுள்ள நபர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவுகள் அவர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் அந்தக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இயலாமையுள்ள நபர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிராந்திய மட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களால் வழங்கப்படக்கூடிய சேவைகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், சமூக சேவை அதிகாரிகளின் பற்றாக்குறை, இயலாமையுள்ள நபர்களுக்காக தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையின் தேவை, வேலைவாய்ப்புகளைப் பாதுகாத்தல், இயலாமையுள்ள நபர்கள் சுகாதார மற்றும் போக்குவரத்து சேவைகளைப் பெறுவதில் உள்ள சவால்கள், சுயதொழில் செய்யக்கூடிய இயலாமையுள்ள நபர்களுக்கு காணி தேவைகளைப் பூர்த்தி செய்தல், சைகை மொழிபெயர்ப்பு தேவைகள், இயலாமையுள்ள நபர்களுக்கு வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் வழங்குவதில் உள்ள பிரச்சினைகள், இயலாமையுள்ள மாணவர்களுக்குப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் தேவை மற்றும் சிறந்த வசதிகளுடன் கூடிய பாடசாலைகள் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவும் கொள்கை ரீதியான மற்றும் நடைமுறை சவால்கள் குறித்தும் இங்கு விரிவாக கவனம் செலுத்தப்பட்டது. இங்கு முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஒன்றியத்தின் பரிந்துரைகளும் தீர்வுகளும் வழங்கப்பட்டன. இந்தக் கருத்துக்களைப் பெற்றதன் பின்னனர், தேவையான கொள்கை மாற்றங்களுக்காக இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் பாராளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றும் என்று ஒன்றியத்தின் கௌரவ தலைவர் தெரிவித்தார். மாவட்ட மட்டத்தில் சேவைகள் வழங்குவதில் அவை சரியாகச் செயற்படுத்தப்படுவதை உறுதி செய்வது போன்ற விடயங்களில் மாவட்டச் செயலகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
2025-11-06
சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசியக் குழுவின் உறுப்பினரும், பொருளாதார விவகார குழுவின் பணிப்பாளருமான கௌரவ வாங் குவோஷெங் அவர்கள் தலைமையிலான உயர்மட்ட சீனத் தூதுக் குழுவினர் இலங்கை பாராளுமன்றக் குழுக்களின் உறுப்பினர்களுடன் இன்று (நவ. 06) கலந்துரையாடலொன்றை நடத்தினர். இலங்கை பாராளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழு மற்றும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்துடன், இத்தூதுக் குழுவினர் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களைச் சந்தித்திருந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தக் கலந்துரையாடல்களில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் சீனாவின் உறுதிப்பாட்டை தூதுக் குழுவினர் மீண்டும் வலியுறுத்தியதுடன், இலங்கையில் பல துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சீன நிறுவனங்களைத் தாம் ஊக்கப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர். வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, ருவன் மாப்பலகம, சுஜித் சஞ்சய பெரேரா, சதுர கலப்பதி ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் குழுவும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டனர். இங்கு கருத்துத் தெரிவித்த வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவு இந்தக் குழுவின் விஜயத்தின் மூலம் வலுப்படுவதாகக் குறிப்பிட்டார். சீனா இலங்கைக்குப் பல துறைகளில் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகின்றமையை நினைவுகூர்ந்த அவர், கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின் போது இரு தரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த சீன தூதுக் குழுவின் தலைவர் கௌரவ வாங் குவோஷெங், சீனாவுக்கு மிகவும் நெருக்கமான நட்பைக் கொண்ட நாடாக இலங்கை விளங்குவதாகவும், சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதில் சீனா உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இலங்கையில் மேலும் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சீன நிறுவனங்களை ஊக்குவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை தூதுக் குழுவினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீனாவுக்கு அழைத்தமைக்கு நன்றி தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, இலங்கையில் புதிய உற்பத்தித் தொழிற்சாலைகளைத் திறப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் (சட்டத்தரணி) சஜீவ சேனசிங்க ஆகியோர் இரு நாட்டுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை விரிவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். உயர்மட்ட சீனத் தூதுக் குழுவின் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசியக் குழுவின் உறுப்பினரும், பொருளாதார விவகார குழுவின் பிரதிப் பணிப்பாளருமான கௌரவ ஃபு ஜிபாங், சீனத் தூதுக் குழுவின் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் உறுப்பினர் கௌரவ மாவோ டிக்ஸி, சீனத் தூதுக் குழுவின் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் பொருளாதார விவகார குழு அலுவலகத்தின் பணிப்பாளர் லியூ வாசிங், சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் பொருளாதார விவகார குழு அலுவலகத்தின் நிதி மற்றும் பொருளாதாரப் பிரிவின் பணிப்பாளர் ஜாங் ஜின்ஜி, இலங்கைக்கான சீனத் தூதுவர் கௌரவ கீ சென்ஹொங் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைகளை ஊக்குவிப்பதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதன் மூலம் சந்திப்பு நிறைவடைந்தது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

