பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-03-07
செய்தி வகைகள் : குழு செய்திகள்
• தலைவர் பதவிக்கு உறுப்பினர் கௌரவ காமினி வலேபொடவின் பெயரும் முன்மொழிவு
• எந்தவித அரசியல், கட்சி பேதங்களும் இன்றி ஒரே குழுவின் உறுப்பினர்களாக அனைவருடனும் பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக தலைவர் தெரிவிப்பு
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹித அபேகுணவர்தன மேலதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் கோப் குழு முதல்தடவையாக இன்றையதினம் (மார்ச் 07) கூடியபோதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.
இதன்போது தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரோஹித அபேகுணவர்தனவின் பெயரும் காமினி வலேபொடவின் பெயரும் முன்மொழியப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹித அபேகுணவர்தனவின் பெயரை, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன அதனை வழிமொழிந்தார்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபொடவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹேஷா விதானகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டிலான் பெரேரா இதனை வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கௌரவ ரோஹித அபேகுணவர்தன மேலதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார்.
குழுவின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகப் புதிய தலைவர் குழுவில் தெரிவித்தார். அத்துடன், எந்தவித அரசியல், கட்சி பேதங்களும் இன்றி ஒரே குழுவின் உறுப்பினர்களாக அனைவருடனும் பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்னர் கோப் குழுவின் உறுப்பினராக செயற்பட்ட போது பெற்றுக்கொண்ட அனுபவங்கள் ஊடாக அந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோப் குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பான முன்னேற்றம் பற்றி கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும், பரிந்துரைகளை செயற்படுத்தாத நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் நிலையியற் கட்டளைகளை திருத்துவதன் தேவையையும் குழுவின் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜானக வக்கும்புற, கௌரவ லொஹான் ரத்வத்த, கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அனுர திசாநாயக்க, கௌரவ ரவுப் ஹக்கீம், கௌரவ டிலான் பெரேரா, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ நளின் பண்டார ஜயமஹ, கௌரவ ஹேஷா விதானகே, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஜகத் குமார சுமித்ராறச்சி, கௌரவ மேஜர் சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ எம். ராமேஸ்வரன், கௌரவ காமினி வாலேபொட, கௌரவ ராஜிகா விக்ரமசிங்க, கௌரவ மதுர விதானகே, கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் மற்றும் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-11-17
தேசிய உயர்கல்வி கொள்கைக்கான வரைபு தயாரிப்பின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உயர்கல்விப் பிரிவு தொடர்பான உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 11) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. தயாரிக்கப்பட்டுவரும் உயர்கல்விக் கொள்கை வரைபு மற்றும் அதற்கான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி.த சில்வா அவர்கள் குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்தார். நவம்பர் மாத இறுதிக்குள் இந்த வரைபைத் தயாரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். மேலும், பல்கலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை மதிப்பாய்வு செய்தல், இயலாமையுடைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் வெளிப்புற பட்டப்படிப்பு திட்டங்களின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பாக முந்தைய குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாளக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-15
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் பல அமைச்சுக்களுக்கான முன்மொழிவுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை ஆராய்வதற்காகத் துறைசார் மேற்பார்வைக் குழு இரு நாட்கள் கூடியது பொலிஎதிலின் (சிலிசிலி) பைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்க சுற்றாடல் அமைச்சு தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியது. பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது சிலிசிலி பைகளுக்கு கட்டணம் அறவிடும் தீர்மானம் தொடர்பில் குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் பொலிஎதிலின் பயன்பாடு குறைக்கப்படுமா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது இந்தப் பைகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை முடிவு செய்த அதிகாரிகள் யார் என்பதையும் குழுவின் தலைவர் வினவினார். சிலிசிலி பைகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை என இங்கு ஆஜராகியிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் நவம்பர் 10 மற்றும் 12 ஆகிய தினங்களில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், குறித்த அமைச்சுக்களின் கீழ் உள்ள பல நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இக்கூட்டத்தில், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், ரொஷான் அக்மீமன, சதுரி கங்கானி, சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத், (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, ஜே.சி.அலவத்துவல, (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க மற்றும் உபுல் கித்சிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2025-11-15
முழுத் திட்டமும் 548 நாட்கள் தாமதமானதால் ஒப்பந்தக்காரர் ரூ.4227 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளமை தெரியவந்தது துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் ஏற்றுக்கொள்வது மற்றும் அகற்றுவது தொடர்பில் குழு கவனம் செலுத்தியது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அதனால் ஒட்டுமொத்த திட்டத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கை துறைமுக அதிகாரசபை தொடர்பான 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் கடந்த நவ. 13ஆம் திகதி கூடியபோதே மேற்கண்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இலங்கை துறைமுக அதிகாரசபை கடந்த செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டு 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டிருந்தது. அன்றையதினம் கலந்துரையாட முடியாத விடயங்கள் குறித்து மீண்டும் கோப் குழுவில் கலந்துரையாடப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 2021 நவம்பர் மாதம் நிறுவனமொன்றுக்கு ரூ.40,273 மில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொடுக்க ஆமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 2021 டிசம்பர் மாதம் இது தொடர்பில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதுடன், 2025 ஜனவரி 03ஆம் திகதி இத்திட்டம் பூர்த்திசெய்யப்படவேண்டியிருந்தது. எனினும், சில காரணங்களுக்காக கட்டுமானப் பணிகள் தாமதமடைந்தமையால் காலம் நீடிக்கப்பட்டு 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதனைப் பூர்த்திசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்பதும் இங்கு தெரியவந்தது. இதனால் குறித்த அபிவிருத்தித் திட்டம் 548 நாட்கள் காலதாமதம் அடைந்திருப்பதால் ஒப்பந்தக்காரர் ரூ.4227 மில்லியன் இழப்பீடு கோரியதாகவும், இது தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை கோப் குழுவில் சமர்ப்பிக்குமாறும் அதன் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை நிறைவடையும் என்றும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதிகாரசபை ஊழியர்களின் உணவுச் செலவுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியதுடன், 2023 ஆம் ஆண்டு கோப் குழுவால் இது தொடர்பாக வழங்கப்பட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை என்பதையும் குழு சுட்டிக்காட்டியது. அதன்படி, செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விலைகளைக் குறைக்க போட்டிமுறையிலான கேள்விப்பத்திரங்கள் கோரும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் கையகப்படுத்தி அப்புறப்படுத்துவது குறித்து கவனம் செலுத்திய குழுவின் தலைவர், நீதிமன்றத்தால் அப்புறப்படுத்துவதற்கும் கையகப்படுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்ட காணிகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். அதன்படி, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சீதுவை ரந்தொலுவ விளையாட்டுக் கழகத்தின் பெயர் இலங்கை துறைமுக அதிகாரசபை விளையாட்டுக் கழகம் எனப் பெயர்மாற்றம் செய்வது, குறித்த கழகத்தில் இணைந்த வீர வீராங்கனைகளை இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊழியர்களாக ஆட்சேர்ப்பு செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, எஸ்.எம்.மரிக்கார், (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, எம்.கே.எம்.அஸ்லம், (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, திலின சமரகோன், சமன்மலி குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-11-15
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையும், 2023 ஆம் ஆண்டிற்கான சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் வருடாந்த அறிக்கையும் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை செய்யப்பட்டன. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்க அவர்களின் தலைமையில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு 2025.11.13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது இடம்பெற்றது. சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை முதலாவதாக குழுவில் பரிசீலிக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த அந்த ஊடக வலையமைப்பின் பிரதானிகள், தற்போதைய நிதி நிலைமை மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்துக் குழுவில் தெரிவித்தனர். 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைக்கு அமைய, அந்த ஆண்டில் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு 164 மில்லியன் ரூபாவைத் தாண்டிய நட்டத்தைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த நட்ட நிலையை படிப்படியாகக் குறைத்து, சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில வருடங்களாக அறவிடப்படவுள்ள, நிறுவனத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகைகளை அறவிடுவது சிறந்த மட்டத்தில் இருப்பதாக அவர்கள் குழுல் தெரிவித்தனர். சுயாதீன தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்ட இந்தியத் தொலைக்காட்சித் தொடர்களை அதிக விலைக்கு வாங்கியமை மற்றும் அந்தத் தொடர்களுக்கு மேலும் செலுத்த வேண்டிய பணம் குறித்துக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒளிபரப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பில் உள்ள பிரச்சினைகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு, அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து 3 மாதங்களுக்குள் குழுவுக்கு அறிவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், 2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் குழுவில் பரிசீலிக்கப்பட்டது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தற்போதைய நிதி நிலைமை உட்பட அதன் செயற்பாடுகள் குறித்துக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். தற்போது அவர்கள் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளில் 48% அபராதத்துடன் செலுத்த வேண்டிய வரிகள் என்று அந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் தற்போதுள்ள தொழில்நுட்ப உபகரணங்கள் மிகவும் பழமையான நிலையில் உள்ளதாகவும், சில மின் உபகரணங்களை ஊழியர்கள் உயிர் ஆபத்துடன் இயக்குவதாகவும் அந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அமைந்துள்ள காணிக்கான உரிமை இன்னும் கூட்டுத்தாபனத்திடம் இல்லை என்றும், எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கு காணியின் உரிமை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திடம் இருப்பது முக்கியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்த இரு நிறுவனங்களையும் மேம்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், முன்வைக்கப்பட்ட இந்த விடயங்களை சம்பந்தப்பட்ட துறையினருக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். இந்தக் குழு கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் முனீர் முலாபர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, ஜகத் மனுவர்ண, ருவன் மாபலகம ஆகியோரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

