E   |   සි   |  

2024-03-20

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

கௌரவ ரோஹித்த அபேகுணவர்தன தலைமையில் முதலாவது அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் கூட்டம் கூடியது

  • கோப் குழுவின் வரலாற்றில் முதல் தடவையாக புதிய குழு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், குழுவின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தலைவரினால் விளக்கம்
  • முதலாவது கூட்டத்துக்கு இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம் அழைப்பு - 27 வருடங்களில் 4 வருடங்கள் மாத்திரமே கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டியுள்ளது - கோப் குழுவில் புலப்பட்டது
  • பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனதின் எதிர்கால வேலைத்திட்டத்தை உள்ளடக்கி 02 மாதங்களுக்குள் கூட்டுத் திட்டத்தைத் (corporate plan) தயாரிக்கவும் - கோப் குழுவினால் அறிவுறுத்தல்
  • கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்து கனிகளையும் நில அளவை செய்து, அனைத்து விவரங்களும்  அடங்கிய அறிக்கையை வழங்கவும் - கோப் குழுவினால் அறிவுறுத்தல்
  • பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனதின் ஊழியர்களுக்கான செலவு 75% - குழுவில் புலப்பட்டது

 

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில்  363 நிறுவனங்களை அழைக்க முடியும் என்றாலும், 102 நிறுவனங்கள் குழுவின் முன் இதுவரை அழைக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அவரது தலைமையில் நேற்று (மார்ச் 19) பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். குழுக் கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், கோப் குழுவின் நோக்கங்கள் மற்றும் குழுவின் இதுவரையான செயற்பாடுகள் குறித்து தலைவர் முழுமையான விளக்கமளித்தார். கோப் குழுவின் வரலாற்றில் புதிய தலைவர் ஒருவர் இவ்வாறு தெளிவுபடுத்துவது இதுவே முதல்முறை ஆகும்.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம் இன்று கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்படி 27 வருடங்களில் இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம் 4 வருடங்களில் மாத்திரம் இலாபம் ஈட்டியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து நட்டமடைந்து வரும் பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 10 தேயிலை தொழிற்சாலைகளில் 7 தொழிற்சாலைகள் செயல்படாமல் இருப்பதும் தெரியவந்தது. ஆனால், செயலிழந்த தேயிலை தொழிற்சாலைகளில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கோ அல்லது குத்தகைக்கு விடுவதற்கோ கூட்டுத்தாபனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கணக்காய்வில் சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் தொடர்ச்சியான நட்டங்களுக்கு மூலதனப் பற்றாக்குறையே முதன்மைக் காரணம் என அதன் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அத்துடன், மூலதனம் இல்லாததால் உரம் மற்றும் அது சார்ந்த களைக்கொல்லிகளை சரியான நேரத்தில் பயன்படுத்தாததும் நட்டத்திற்கு காரணம் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். எவ்வாறாயினும், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் நட்டத்திற்கு பிரதான காரணம் மூலதனப் பற்றாக்குறை மாத்திரமல்ல என குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியது. அதற்கமைய, பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் மிக அதிக ஊழியர் செலவு குறித்த தரவுகளை குழு சமர்ப்பித்ததுடன், இலங்கை பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் ஊழியர் செலவு சுமார் 75% எனத் தெரியவந்தது.

மேலும், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்கிய பின்னர் ஏனைய தரப்பினர் கையகப்படுத்தியமை தொடர்பில் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீட்பதற்கு தேவையான சட்ட நடைமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன், இலங்கை பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணிகளை உடனடியாக மீள் அளவீடு செய்யுமாறும், கூட்டுத்தாபனத்தினால் குத்தகை அடிப்படையில் இந்தக் காணி வழங்கப்பட்டுள்ளது, காணிகளை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் யார், ஒப்பந்தம் செய்யப்பட்ட நிதி, வரி அடிப்படையில் வழங்கப்பட்ட நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் என்பன உள்ளிட்ட விரிவான அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அத்துடன், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளாக 1.5 பில்லியன் செலுத்த வேண்டியுள்ளதாக இதன்போது தெரியவந்தது. அதற்கமைய, உடனடியாக தலையிட்டு உரிய கொடுப்பனவுகளை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வழங்கி முடிப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் 2024-2028 காலப்பகுதிக்கான கூட்டுத் திட்டமொன்றும் குழுவில் முன்வைக்கப்பட்டது. எவ்வாறாயினும், நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகள் சம்பந்தப்பட்ட கூட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படாதது குறித்து குழு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியது. அதனடிப்படையில் தமது நிறுவனத்தின் தேவையை அறியாமல் ஏனைய தரப்பினர் ஊடாக கூட்டுத் திட்டத்தை தயாரித்துள்ளமை குறித்த வருத்தம் தெரிவித்த குழுவின் தலைவர், உடனடியாக அமுல்படுத்தும் வகையில் நிறுவனத்தின் எதிர்கால வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய கூட்டுத் திட்டத்தை  02 மாதங்களுக்குள் தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

மேலும், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள் தொடர்பில் முறையான தரவுக் கட்டமைப்பு இல்லாமை பற்றி அதிருப்தியை குழு வெளியிட்டதுடன், அது தொடர்பான விரிவான அறிக்கையை உடனடியாக குழுவிற்கு வழங்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ இந்திக்க அனுருத்த, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஹேஷா விதானகே, கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ ஜகத் குமார சுமித்ராறச்சி, கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம், கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ ஆகியோரும் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

2 3



தொடர்புடைய செய்திகள்

2025-10-27

அஸ்வெசும சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க புதுப்பிக்கப்பட்ட தரவுக் கட்டமைப்பு அவசியம் – உலக வங்கி பிரதிநிதிகள் தெரிவிப்பு

"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சர்வதேச அனுபவத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கியின் பிரதிநிதிகள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் கடந்த ஒக். 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே ‘அஸ்வெசும திட்டம்’ குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், உலக வங்கியின் சமூகப் பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட பொருளாதார நிபுணர் பிரான்செஸ்கா லமன்னா (Francesca Lamanna)  மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு நிபுணர் ஸ்ரீனிவாஸ் வரதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  சமூகப் பாதுகாப்புக்கான தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம், உண்மையிலேயே வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய தனிநபர்கள், குடும்பங்களை அடையாளம் காண முடியும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். பிரஜைகளின் தகவல்களை சமூகப் பாதுகாப்பு தரவுத்தளத்தில் உள்ளிடுவது அவர்களை அஸ்வெசும அல்லது பிற தொடர்புடைய சலுகைகளுக்கு தகுதியுடையவர்களாக மாற்றாது என்றும், உள்ளிடப்பட்ட தரவைச் சரிபார்க்க முடியும் என்றும், தொடர்புடைய சலுகைகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் என்றும் இந்தக் குழு வலியுறுத்தியது. இந்தச் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஒரு நாட்டிற்கு ஒரு உற்பத்தி முதலீடாகும், எனவே தரவுத்தளத்தைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். "அஸ்வெசும" சலுகைகளை வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். அதன்படி, கிராம ரீதியாக அமைக்கப்படும் குழுக்களின் மூலம் அஸ்வெசும பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து, சம்பந்தப்பட்ட கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர்களைக் காண்பிப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இங்கு கருத்துத் தெரிவித்த, "அஸ்வெசும" திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களுக்கு இந்தத் திட்டம் குறித்து போதுமான தகவல்கள் இல்லாததால் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் வகிபாகம் குறித்து முறையான தெளிவுபடுத்தல்களை வழங்குவதன் ஊடாக இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தத் தாம் ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்தனர். கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கி ஆலோசகர் ஷாலிகா சுபசிங்க மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.


2025-10-24

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் நேற்று (ஒக். 23) கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நிதி அமைச்சின் அதிகாரிகள், 2026ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஒவ்வொரு துறைக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்த விபரங்களை முன்வைத்தனர். இவ்விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.


2025-10-23

2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அமைச்சுக்கள் சிலவற்றுக்கான முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அமைச்சுக்கள் சிலவற்றுக்கான முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் மற்றும் 2025.12.31 வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் குறித்து சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.  இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 21) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.  அதற்கமைய, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் மற்றும் 2025.12.31 வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது.  இங்கு குழுவில் உரையாற்றிய அதன் தலைவர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகளை அந்தந்த அமைச்சுகள் செலவிடுதல் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பான அனைத்து விடயங்களையும் குழுவால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்கமைய, தனது குழுவின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுகள் தொடர்பான விடயங்களும் இவ்வாறு ஆராயப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அதற்கமைய, அந்தந்த அமைச்சுக்களுக்கு வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அவற்றைச் செலவு செய்ததன் முன்னேற்றம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அத்தியாவசியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் குழுவிற்கு அறிக்கைகளை வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறீநேசன், ரொஷான் அக்மீமன, சதுரி கங்காணி, சுசந்த குமார நவரத்ன, கிட்ணன் செல்வராஜ், (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத், சுதத் பலகல்ல, சித்ரால் பெர்னாண்டோ, ஜே.சி. அளவதுவல, சுஜீவ சேனசிங்க, உபுல் கித்சிறி மற்றும் எம்.எஸ். உதுமாலெப்பெ ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-10-23

வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அவசர கொள்முதல் மற்றும் வருடாந்த எதிர்காலத் திட்டம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியது

வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அவசர கொள்முதல் மற்றும் வருடாந்த எதிர்காலத் திட்டம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதில் குறிப்பாக 2022ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற கேள்விப் பத்திரம் கோரல் நடைமுறை மற்றும் 2022ஆம் ஆண்டின் பின்னர் குறித்த கேள்விப்பத்திர நடைமுறையில் ஒவ்வொரு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து குழு கவனம் செலுத்தியது. உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையில் அண்மையில் (ஒக். 17) கூடியபோதே இவ்விடயம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் வலுசக்தி அமைச்சு, வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனம், இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபை மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு 2022 ஆம் ஆண்டுக்கு முன்பு அவசர கொள்முதல்கள் மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியதுடன், அவசர கொள்முதல்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் கொண்ட முழுமையான அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்திடம் தற்பொழுது காணப்படும் இருப்புக்கள் போதுமான நாட்கள் மற்றும் அதன் பின்னர் எதிர்காலத்தில் கொள்முதல் செய்யவிருக்கும் நிலக்கரியின் அளவு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார, ஜகத் விதான மற்றும் அசித நிரோஷன எகொட விதான ஆகியோர் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks