பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-08-02
செய்தி வகைகள் : குழு செய்திகள்
மக்கள் தொகை செறிவை கிலோமீற்றருக்கு 300 ஆகவும், வனப் பரப்பை 30% ஆகவும் பேணும் உலக நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமைய இலங்கையைவிட தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னிலையில் காணப்படுவதாக வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவன்ன தலைமையில் அண்மையில் (ஜூலை 25) கூடியபோதே இவ்விடயங்கள் தெரியவந்தன. 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக வனப் பாதுகாப்புத் திணைக்களம் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. உலக நாடுகளில் வனப்பரப்பளவு 31% ஆகக் காணப்படுவதுடன், இலங்கையின் வனாந்தரப் பகுதி 30% அளவில் இருப்பது மிகவும் நல்லதொரு நிலைமையென குறித்த திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இலங்கையில் உள்ள முழு வனாந்தரப் பகுதியையும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடாமை குறித்து அதிகாரிகளிடம் குழு கேள்வியெழுப்பியது. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 1.4 மில்லியன் ஹெக்டெயர் வனப்பகுதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன என்றும், சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ஹெக்டெயர் வனப்பகுதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவில்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, வர்த்தமானியில் வெளியிடப்படாத வனாந்தரப் பகுதிகளை விரைவில் வர்த்தமானியின் ஊடாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது பற்றிய அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் குழுவுக்கு அனுப்பிவைக்குமாறும் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.
உலக பாரம்பரியமாக விளங்கும் சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிட இந்த ஆண்டு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கடந்த சில மாதங்களில் மொத்தம் 35000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிட வந்துள்ளனர். வனப்பகுதியை சேதப்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை அதிகரிக்க அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் அறிவுரை வழங்கினார்.
அத்துடன், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் தகவல்களை வழங்குவதற்கான மையப்படுத்தப்பட்ட தரவுக் கட்டமைப்பொன்றைப் பராமரிக்காமை குறித்தும் குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்ததோடு, இது தொடர்பான அறிக்கையை குழுவிற்கு அனுப்புமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் நிலுவைத் தொகையை வசூலிப்பதற்குப் பயனுள்ள உள்ளக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாமை குறித்தும் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது. கருங்கல் குவாரிகள், சிறிய அளவிலான நீர் மின் உற்பத்தி நிலையங்கள், மின்சாரக் கோபுரங்கள் போன்றவற்றிலிருந்து வருமானங்கள் வசூலிக்கப்பட வேண்டியிருப்பதாக கணக்காய்வு அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி, கருங்கல் குவாரிகளுக்கு வனப் பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய அனுமதியைவிட அதிகளவான கருங்கல் உடைக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கருங்கல் குவாரிக்கு உரிமம் வழங்கும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, அதற்குத் தேவையான வெடிப்பொருட்களை தேவையான அளவு மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யுமாறு குழுவின் தலைவர் அறிவுறுத்தினார். அத்துடன், ஒலிபரப்புக் கோபுரங்களை வழங்குவதன் ஊடாக தொலைபேசித் தொடர்பாடல் நிறுவனங்களிடம் இருந்து பாரியளவிலான பணம் பெறப்பட உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய இந்த அனைத்து நிலுவைகளையும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.
அத்துடன், வல்லப்பட்டா எனப்படும் தாவரம் இலங்கைக்கு அதிக அந்நிய செலாவணியை கொண்டுவரும் ஒன்றாக அடையாளம் காணப்பட்டிருப்பதால் அது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் குழு அறிவுறுத்தியது. குறித்த தாவரத்தைப் பயிரிடுவதைத் தடுப்பதற்கு சட்டம் இல்லை என அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எவ்வாறாயினும், இந்தத் தாவரங்கள் காடுகளில் இருந்து வெட்டி அனுமதியின்றி கொண்டு செல்வது சட்டவிரோதமானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. வல்லப்பட்டா தாவரத்தின் குணாதிசயங்களைக் கொண்ட அக்விலேரியா எனப்படும் இறக்குமதி செய்யப்பட்ட தாவரம் தற்போது இலங்கையில் பயிரிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வல்லப்பட்டா மற்றும் அக்விலேரியா தாவரங்களை வேறுபடுத்துவது எளிதல்ல என அதிகாரிகள் தெரிவித்தனர். அடையாளம் காண்பதில் உள்ள சிரமம் காரணமாக, காடுகளில் இருந்து வெட்டப்படும் வல்லப்பட்டா செடிகளை, தனியார் தோட்டங்களில் இருந்து பெறப்படும் செடிகள் என, விளம்பரப்படுத்த, கடத்தல்காரர்கள் முயற்சித்து வருவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மதுர விதானகே, கௌரவ உபுல் கலப்பதி, கௌரவ இசுறு தொடங்கொட ஆகியோரும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-02-16
உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் இன்று (14) பாராளுமன்றத்தில் கூடிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன், வரையறுக்கப்பட்ட தொலைக் கல்வி நிலையத்தின் 2021 மற்றம் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையும் இங்கு ஆராயப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் ருவன் செனரத் உள்ளிட்ட பிரதியமைச்சர்கள், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-02-13
சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள துறைமுகங்களை புனரமைத்தல் தொடர்பில் கடற்றொழில் அமைச்சு கவனம் - குழுவின் தலைவர் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் அண்மையில் (பெப். 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ பிரதி அமைச்சர் ரத்ன கமகேவும் கலந்துகொண்டார். அதற்கமைய, இந்திய மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழகத்துடனும் இந்திய உயர்ஸ்தானிகருடனும் அவசியமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இந்நாட்டு மீனவர்களைப் பாதித்துள்ள இந்தப் பிரச்சினைக்கு முரண்பாட்டு வழியிலல்லாமல் உடனடியாக தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அத்துடன், சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பித்தல் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு உரையாற்றிய வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க, எதிர்காலத்தில் சதொச வர்த்தக நிலையங்களை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கமைய, மீன்களை விற்பனை செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் எனத் தெரிவித்தார். சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக மீன்களை விற்பனை செய்வதற்குத் தேவையா நடவடிக்கையை விரைவாக எடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். அதற்கமைய, நுகர்வோர் எளிதாக சமைக்கும் வகையில், மீன் வகைகளை பொதி செய்து வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் காணப்படும் கடற்றொழில் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கௌரவ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் டைனமைட்டைப் பயன்படுத்தி மீன்பிடித்தல், நன்னீர் மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நாட்டின் துறைமுகங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்தப் பிரச்சினைகள் தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள துறைமுகங்களை புனரமைப்பதில் அமைச்சு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான கடற்றொழி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கை என்பனவும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
2025-02-13
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் 2025.02.07ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மாகாண மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25%ஆக வரும் வகையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, எதிர்வரும் தேர்தலில் அந்த முன்மொழிவை செயற்படுத்தும் வகையில் தற்பொழுது காணப்படும் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான அவசியம் தொடர்பில் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கோரிக்கை விடுப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களை சந்திப்பதற்கும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் தீர்மானித்தது. பணியிடங்களில் பாலியல் வன்முறையை ஒழித்தல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) இல்லாமல் செய்வது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், மார்ச் 8ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் திட்டங்கள் தொடர்பிலும் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் சமன்மலீ குணசிங்ஹ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சாகரிகா அதாவுத, கலாநிதி கெளஷல்யா ஆரியரத்ன, ஒஷானி உமங்கா, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, தீப்தி வாசலகே, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ, அம்பிகா சாமிவெல் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-02-07
உபகுழுவின் தலைவர் பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத் அரசாங்க சேவையில் தேவையான கொள்கை மாற்றத்தை அடையாளம் காண்பதற்காகப் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் எட்டுப் பேரைக் கொண்ட விசேட உபகுழுவை அமைக்குமாறு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அறிவுறுத்தல் வழங்கினார். பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (பெப். 05) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த உபகுழு அமைக்கப்பட்டது. கௌரவ பிரதியமைச்சர் பி.ருவன் செனரத் அவர்களின் தலைமையில் இந்த உபகுழு அமைக்கப்பட்டிருப்பதுடன், இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியாராச்சி, அஜந்த கம்மெத்தெகே, தர்மப்பிரிய திசாநாயக்க, தினிந்து சமன், (சட்டத்தரணி) கீதா ஹேரத், மொஹமட் பைசல் மற்றும் லால் பிரேமநாத் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உபகுழுவின் ஊடாக அரசாங்க சேவைக்கான நியமனங்கள், போட்டிப் பரீட்சைகளை நடத்துதல், ஓய்வூ வழங்குதல் மற்றும் வெற்றிடங்கள் உள்ளிட்ட அரசாங்க சேவையிலுள்ள பிரிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கைரீதியான மாற்றங்கள் குறித்துத் தேவையான விசாரணைகளை நடத்தி, அடையாளம் காணப்பட்ட முன்மொழிவுகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன. இவ்வாறான உபகுழுவொன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி முன்மொழிந்ததுடன், இதற்கு அமையவே குழுவின் தலைவர் இந்த உபகுழுவை நியமித்தார். அத்துடன், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி மன்றங்களில் 8,435 பேரின் சேவைகள் உறுதிப்படுத்தப்பட்டதாக இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தற்பொழுத பணியாளர் மதிப்பாய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அதன்படி, இறுதி அறிக்கை 2025 மார்ச் 31ஆம் திகதி கிடைக்கப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் நியமனங்களுக்குத் தேவையான தரவுகளை முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சில திட்டங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் சேவைகள் உறுதிப்படுத்தப்படாது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கிராம சேவர்களின் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் குழுக் கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks