E   |   සි   |  

2024-08-06

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

கட்டடத் திணைக்களம் மற்றும் ஆயுர்வேத திணைக்களம் ஆகியன கோபா குழுவிற்கு அழைப்பு

  • கோபா குழுவினால் பேணப்பட்டுவரும் தகவல் கட்டமைப்பிற்கு அமைய குறைந்த செயற்திறனைக் கொண்ட இரு நிறுவனங்கள் என்பதும் தெரியவந்தது
  • இரு நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து கோபா குழு அதிருப்தி

 

கட்டடத் திணைக்களம் மற்றும் ஆயுர்வேத திணைக்களம் ஆகியவற்றின் செயல்திறன் தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) அதிருப்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் (ஜூலை 23) கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

அரசாங்க நிறுவனங்களின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு தகவல் கட்டமைப்பொன்றைப் பேணி வருவதாகவும், இந்தத் தரவுகளின் அடிப்படையில் கட்டடத் திணைக்களம் மற்றும் ஆயுர்வேதத் திணைக்களம் என்பன குறைந்த செயல்திறன்களைக் கொண்ட நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான பின்னணியிலேயே இவ்விரு நிறுவனங்களையும் குழுவின் முன்னிலையில் ஒரேநாளில் அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இதற்கமைய, கட்டடத் திணைக்களத்தின் 2020ஆம் ஆண்டு, 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைகள், ஆயுர்வேதத் திணைக்களத்தின் 2018, 2019, 2020, 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.

கட்டுமானத்திற்கான கட்டட கட்டண அட்டவணை (BSR) தயாரிப்பதில், கட்டடத் துறைக்கு பெரும் பங்கு உள்ளதாகவும், அது முறையாக நடக்கிறதா என்பதில் சிக்கல் இருப்பதாகவும், அதிகாரிகளிடம் குழு சுட்டிக்காட்டியது. இதனால், கட்டடத் திணைக்களத்தின் ஊடாக எந்தவொரு அரச நிறுவனமும் இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அதற்கமைவாக சேவை கோரும் தரப்பினருக்கு சேவை வழங்கப்படும் எனவும் கட்டடத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஆனால் இந்தச் சேவையை கட்டாயம் வழங்க வேண்டும் என்ற எந்த வழிகாட்டுதலையும் தங்கள் நிறுவனம்  பெறவில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். இதனால், இது குறித்து நிதியமைச்சுடன் கலந்துரையாடி ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க கோபா குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

அத்துடன், ஆயுர்வேத திணைக்களம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இவ்விரு நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்தும் குழு அதிருப்தி வெளியிட்டது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சிவஞானம் சிறிதரன், கௌரவ ஜே.சி.அலவத்துவல, கௌரவ மதுர விதானகே, கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

4 2

 



தொடர்புடைய செய்திகள்

2025-06-02

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளது - கோப் குழுவில் புலப்பட்டது

Glocal Fair வேலைத்திட்டம் அமைச்சரவை அனுமதிக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது, வேலைத்திட்டத்தின் இடைநடுவில் அமைச்சரவை அனுமதிக்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது 2013 ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகாரசபையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ரடவிரு வீட்டுக் கடன் திட்டத்திற்காக கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாததால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைக்கவேண்டிய 100 மில்லியன் ரூபா இன்னும் கிடைக்கவில்லை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒழுங்குறுத்தும் பணியிலிருந்து விலகியுள்ளது - கோப் குழு   2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமான நிதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) புலப்பட்டது.  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் 2024 ஆம் ஆண்டில் குடியகல்வு சங்கங்களின் 5,000 அங்கத்தவர்கள் கலந்துகொண்ட மாகாண மட்டத்திலான 3 கூட்டங்களுக்கான 'விகமனிக ஹரசர' நிகழ்ச்சித்தட்டத்துக்கு 63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களினாலும் வழங்கப்படும் சேவைகளை, அந்த சேவைகளைப் பெறுவோர் தமது வசிக்கும் பகுதிகளையே பெறும் வகையில் நாடு பூராகவும் நடத்தப்பட்ட Glocal Fair வேலைத்திட்டத்துக்கு 1,259 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக கோப் குழுவில் புலப்பட்டன.     இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 2022 மற்றும் 2023 ஆம் நிதி ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகையை பரிசீலிப்பதற்கு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (மே 23) கூடிய போதே இந்த விடயங்கள் புலப்பட்டன. Glocal Fair வேலைத்திட்டம் அமைச்சரவை அனுமதிக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை வேலைத்திட்டத்தின் இடைநடுவில் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்துடன், இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த வருடாந்த வரவுசெலவுத்திட்டத்தில் 2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், 1,259 மில்லியன் ரூபாய் போன்ற பாரிய நிதி செலவு செய்யப்பட்டுள்ளதுடன், அவ்வாறான நிதியை செலவிடுவதன் நோக்கங்களை அடைய முடிந்துள்ளதா என இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். அத்துடன்,  Glocal Fair வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், வர்த்தகக் கூடம் ஒன்றை ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தாலும், பின்னர் 5 இலட்சம் ரூபாவுக்கு வர்த்தகக் கூடம் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் குழுவில் வினவப்பட்டது. எனினும் வினைத்திறனான வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்த இருந்த நிதி நோக்கம் அற்ற முறையாகத் திட்டமிடப்படாத வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதால் பாரிய நிதி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், 2013 ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகாரசபையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ரடவிரு வீட்டுக் கடன் திட்டத்தை 5 வருடங்களுக்கு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைய செயற்படுத்தியில்லை என்றும், அதனால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கவேண்டிய 100 மில்லியன் ரூபா இன்னும் கிடைக்கவில்லை என்றும் குழுவில் வெளிப்பட்டது. என்னினும், இலங்கை சமுர்த்தி அதிகாரசபை தற்போது அந்தத் தொகையை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இந்த வீட்டுக் கடன் திட்டத்தின் மூலம் எத்தனை பேருக்கு சம்பந்தப்பட்ட கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது என்று குழு அதிகாரிகளிடம் வினவியதுடன்,   அத்தகைய தரவு இல்லை என்று அவர்கள் குழுவில் தெரிவித்தனர். அதற்கமைய, இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மீள் பரிசீலனை இடம்பெற்றில்லை எனத் தெரிவித்த குழுவின் தலைவர் ரடவிரு வீட்டுக் கடன் திட்டம் தொடர்பில் ஆரம்பம் முதல் தற்பொழுது வரையான தகவல்கள் அடங்கிய முழுமையான அறிக்கையொன்றை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். எவ்வாறாயினும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒழுங்குறுத்தும் பணியிலிருந்து விலகி செயற்பட்டுள்ளதாக குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதுவரை 18 பில்லியனாக உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நிலையான வைப்பை மிகவும் வினைத்திறனாக பயன்படுத்துவதற்கு திட்டமொன்று தயாரிக்கப்படுவதன் தேவை குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், செயற்பாட்டில் இல்லாத 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 5.1 பில்லியன் நிலுவை காணப்படும் குவைட் இழப்பீடு நிதியம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பிலும் அதிகாரிகளிடம் குழு வினவியது. அதற்கமைய, அந்த நிதியத்தை பயன்படுத்தி வீட்டுப் பணிகளுக்காக வெளிநாட்டு செல்லும் பணியாளர்களுக்கான பயிற்சியை வழங்குவதற்கும், பணியாளர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அத்துடன், வேலைவாய்ப்பு முகவர்கள் வேலைவாய்ப்பு தேடும் தொழிலாளர்கள் ஊடாக செய்த நிதி மோசடி குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வேலைவாய்ப்புக்காக முகவர்கள் மூலம் அல்லாமல் வெளிநாடு செல்லும் ஒவ்வொரு பணியாளர்களும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அதற்கான பதிவுக்கட்டணத்தை பணியகத்துக்கு செலுத்த வேண்டும் எனவும் குழுவில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், முகவர்கள் மூலம் வெளிநாடு செல்லும் போதும் அவர்களுக்கான பதிவுக்கட்டணம் பணியகத்துக்கு செலுத்தப்பட வேண்டும் எனவும் அதில் 70% மீண்டும் சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனத்துக்கு செலுத்தப்படுவதாக குழுவில் புலப்பட்டது. எனினும், சுயமாக செல்லும் பணியாளர்களை, முகவர்கள் மூலமாக செல்லும் பணியாளர்களாகக் காண்பித்து மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பில் கண்டறிய உப குழுவொன்றை நியமிப்பதற்கு குழுவின் தலைவர் தீர்மானித்தார். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அனுராத ஜயரத்ன, முஜிபுர் ரஹுமான், எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், (வைத்தியர்) எஸ். பவானந்தராஜா, சுஜீவ திசாநாயக்க, ஜகத் மனுவர்ண, ருவன் மாபலகம, சுனில் ராஜபக்ஷ, தர்மபிரிய விஜேசிங்க, அசித நிரோஷன எகொட விதான, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், திலின சமரகோன், சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமன்த மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-05-28

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவு

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் நேற்று (மே 27) இடம்பெற்ற பத்தாவது பாராளுமன்றத்திற்கான குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் முதலாவது அமர்விலேயே இத்தெரிவு இடம்பெற்றது. இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வழங்க ஏற்கனவே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணங்கியிருந்தன. இதற்கமைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு கௌரவ அஜித் பி பெரேராவின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்மொழிந்ததுடன், அதனை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான அவர்கள் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து ஜூன் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் நீண்டகாலமாகக் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கான தீர்வுகளை உள்ளடக்கியதாக இந்தத் திருத்ததச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டதுடன் இதற்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்படவேண்டியுள்ள பிரதான மாற்றங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்களான மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, தனுஷ்க ரங்கனாத், அசித நிரோஷண எகொட வித்தான, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2025-05-27

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன அவர்கள் தெரிவு

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகத் தேசிய மக்கள் சக்தியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (மே 27) பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது. பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்படும் 7 துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் நான்கு குழுக்களின் தலைமைப் பதவி ஆளும் கட்சிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன அவர்களின் பெயரை, கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க முன்மொழிந்ததுடன், இதனைக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹசாரா லியனகே வழிமொழிந்தார். அத்துடன், இத்துறைசார் குழுக் கூட்டத்தில் 03.06.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ள தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் குறித்துக் கலந்துரையாடப்பட்டு அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைய, ஜூன் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ளது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான கௌரவ கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லசித் பாசன கமகே, சட்டத்தரணி ஹசாரா லியனகே மற்றும் சந்திம ஹெட்டியாராச்சி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2025-05-26

பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் விலையில் திருத்தம்

பாராளுமன்ற நிறைவேற்றுத் தரம் மற்றும் நிறைவேற்றுத்தரம் அல்லாத பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் கட்டணத்தை திருத்துவதற்கு 2025 மே மாதம் 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற சபைக் குழுவில் எடுத்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு அக்குழுவின் கூட்டமொன்று கடந்த 2025.05.23 ஆம் திகதி குழுவின் தலைவர் சபாநாயகர் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்கான கட்டணத்தை 2025.06.01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் பின்வருமாறு திருத்தம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, நிறைவேற்றுத் தர அதிகாரியொருவருக்கு மாதாந்தம் 4,000 ரூபாவும், நிறைவேற்றுத்தரம் அல்லாத அதிகாரியொருவருக்கு மாதாந்தம் 2,500 ரூபாவும் அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாராளுமன்ற பொதுமக்கள் உணவகத்தில் உணவைப் பெற்றுக்கொள்ளும் கௌரவ உறுப்பினர்களின் சாரதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி/பிரதமர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களிடமிருந்து தற்பொழுது அறவிடப்படும் கட்டணத்தை தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கும் குழு தீர்மானித்தது. இந்த கட்டணங்களைத் திருத்தம் செய்தல், பாராளுமன்ற பணியாளர்களுக்கு வழங்கும் செலவுகள் தொடர்பில் திறைசேரியினால் வழங்கப்பட்ட பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் தீர்மானமாகும். இந்த சபைக் குழு பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks