E   |   සි   |  

2024-11-14

செய்தி வகைகள் : செய்திகள் 

FCDO இன் இந்து - பசுபிக் பிராந்திய அபிவிருத்தியின் சிரேஷ்ட நிர்வாக ஆலோசகர் கலாநிதி பென் போவிஸ், கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவின் தலைவர் டொம் சோப்பர் ஆகியோர் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவை சந்தித்தனர்

வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் (FCDO) இந்து - பசுபிக் பிராந்திய அபிவிருத்தியின் சிரேஷ்ட நிர்வாக ஆலோசகர் கலாநிதி பென் போவிஸ் (Ben Powis), கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவின் தலைவர் டொம் சோப்பர் (Tom Soper) ஆகியோர் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவை அண்மையில் (நவ. 08) சந்தித்தனர். இச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவும் கலந்துகொண்டார்.

பிரித்தானிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஜனநாயகத்திற்கான வெஸ்மினிஸ்டர் மன்றம் இலங்கைப் பாராளுமன்றத்துடன் நெருக்கமாக ஆற்றிவரும் பங்களிப்பை பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன பாராட்டினார். இவ்வாறு வழங்கப்பட்ட உதவிகள் பாராளுமன்றத்தை ஒரு நிறுவனமாக மேலும் வலுப்படுத்துவதை சாத்தியமாக்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். எதிர்காலத்திலும் இதே ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

9வது பாராளுமன்றத்தின் சட்டவாக்கச் சிறப்புக்கள் மற்றும் 10வது பாராளுமன்றத்தின் நிலைமாறும் சூழல் குறித்த விடயங்களை கலாநிதி பென் போவிஸ் கேட்டறிந்துகொண்டார். பதில் செயலாளர் நாயகம் மற்றும் உதவி செயலாளர் நாயகம் ஆகியோர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிடத்தக்க சட்டங்கள் பற்றி சுருக்கமாக விளக்கமளித்ததுடன், பாராளுமன்றத்தின் குழு முறைமைகள் பற்றி விரிவான விளக்கத்தை வழங்கினர். துறைசார் மேற்பார்வைக் குழு பொறிமுறையில் இளைஞர் பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அவர்கள் மேலும் விளக்கமளித்தனர். பாராளுமன்ற வரவுசெலவுத் திட்ட அலுவலகத்தை அமைப்பது, சட்டம் இயற்றப்பட்ட பின்னர் அவற்றை மதிப்பீடு செய்வதற்காக ஆய்வுக்குழுவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.

மேலும், 10வது பாராளுமன்றத்திற்குத் தேவையான எதிர்கால உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகள் தொடர்பான விவரங்களை இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

இலங்கை பாராளுமன்றத்திற்கு வழங்கக் கிடைத்த ஒத்துழைப்புத் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், பாராளுமன்றத்தின் அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதில் தாம் தொடர்ந்தும் நம்பிக்கை கொள்வதாகவும் கலாநிதி பென் போவிஸ் மற்றும் டொம் சோப்பர் ஆகியோர் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இவர்கள் பாராளுமன்றத்தையும் பார்வையிட்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-06-04

கௌரவ சபாநாயகரின் அறிவிப்புகள் - 2025.06.04

“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மனுக்களின் பிரதிகள் கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பு   அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் மேலும் இரண்டு பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (ஜூன் 04) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.


2025-06-03

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகள் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தரப்புக்கு வழங்கிவைப்பு

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளினால் சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகள் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தரப்புக்கு இன்று (ஜூன் 03) வழங்கிவைக்கப்பட்டன. உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன அவர்களின் தலைமையில் மற்றும் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட விசாரணைக்குழு இன்று (03) பாராளுமன்றத்தில் கூடிய போதே சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகள் இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டன. இங்கு சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசரணைக்குழுவில் பங்குபற்றிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஜனாதிபதி சட்டத்தரணி) திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா ஆகியோர், பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எஸ். வீரவிக்ரமவின் வீட்டுக்குச் சென்று கடந்த வார இறுதியில் சாட்சியங்களின் 12 சத்தியக்கடதாசிகளை வழங்க நடவடிக்கை எடுத்ததாக குழுவில் சுட்டிக்காட்டினர். அத்துடன், இன்றைய தினம், 10 சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகளை குழுவின் முன்னிலையில் பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினருக்கு வழங்கியதுடன், எஞ்சிய சத்தியக்கடதாசிகளை எதிர்வரும் குழுவின் அமர்வில் முன்வைக்க எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்தனர். அதற்கமைய, முன்னர் இணங்கியதன் பிரகாரம் அனைத்து சாட்சியங்களினதும் சத்தியக்கடதாசிகளை இன்றைய தினம் வழங்குமாறு பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். பின்னர் இரு தரப்பினராலும் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டதை அடுத்து, 6 வாக்குமூலங்களின் சத்தியக்கடதாசிகளை பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினருக்கு வழங்குவது பொருத்தமானது என குழுவின் நிலைப்பாடாக இருந்ததுடன், அது தொடர்பில் இரு தரப்பினரதும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், 2 சத்தியக்கடதாசிகளை இரு தரப்பினருக்கும் வசதியான தினமொன்றில் மற்றும் நேரத்தில் தனிப்பட்ட வகையில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து பரிசீலிப்பதற்கு குழு அனுமதி வழங்கியது. மற்றுமொரு சாட்சியமாக வழங்கப்பட்டுள்ள ஊடக சந்திப்பு ஒன்று தொடர்பான காணொலியின் இறுவெட்டை (CD) பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினருக்கு வழங்குவதற்கு குழு தீர்மானித்ததுடன், சட்டமா அதிபர்  திணைக்களத்தின் பிரதிநிதிகள் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இந்த சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகள் தொடர்பான பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பின் நிலைப்பாட்டு 9 ஆம் திகதி பி.ப. 2.00 மணிக்கு விசாரணைக்குழு கூடி முன்வைக்கப்படவுள்ளது.


2025-06-03

கௌரவ சபாநாயகரின் அறிவிப்புகள் - 2025.06.03

“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பு   அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி தனக்குக் கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (மே 03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.


2025-06-02

இந்தியாவில் நடைபெற்ற திறன்விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் இலங்கை பாராளுமன்றக் குழுவினர் பங்கேற்பு






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks