E   |   සි   |  

2024-11-19

செய்தி வகைகள் : செய்திகள் 

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்திற்கு மு.ப 9.00 மணிக்கு வருகைதருமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தில் பங்குபற்றவிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மு.ப 9.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்திற்கு வருகைதருமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்திற்கு வரும்போது உறுப்பினர்களின் வாகனங்கள் பொலிசாரால் அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிறுத்தலிடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்களின் கூடங்களில் நுழைவதுடன் வாக்கழைப்பு மணியோசை அடிக்கும்வரை அங்கு தங்கியிருத்தல் வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துணைவி அல்லது துணைவரோடு வருகின்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் நுழைவாயில் அருகில் இறங்க வேண்டும், மற்ற எல்லா உறுப்பினர்களும் உறுப்பினர்களின் நுழைவாயிலின் அருகில் இறங்க வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



தொடர்புடைய செய்திகள்

2024-11-21

பாராளுமன்றத்தின் சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் முதல்கோலாசான் ஆகியோர் கடமைகளைப் பொறுப்பேற்றனர்


2024-11-21

பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கலாநிதி அசோக ரன்வல அவர்கள் தெரிவு

•    பிரதிச் சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வைத்தியகலாநிதி ரிஸ்வி சாலி தெரிவு •    குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹேமாலி வீரசேகர தெரிவு பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். பிரதமர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களினால் அசோக ரன்வலவின் பெயர் முன்மொழியப்பட்டதுடன், அமைச்சர் கௌரவ விஜத ஹேரத் அதனை வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் பெயரை முன்மொழிந்த பிரதமர் மற்றும் வழிமொழிந்த அமைச்சர் ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக புதிய சபாநாயகரை அக்கிராசனத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் பதவிச்சத்தியமும், பின்னர் சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியமும் இடம்பெற்றது. புதிய சபாநாயகர் தெரிவுசெய்யப்பட்டமை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் ஆகியோர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். சபாநாயகர் பதவிக்குத் தன்னைத் தெரிவுசெய்தமை குறித்து நன்றி தெரிவித்த அவர் குறிப்பிடுகையில், நாட்டின் அதியுயர் ஸ்தாபனம் என்ற ரீதியில் பாராளுமன்றம் தனது சுதந்திரத்தையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்குத் தேவையான கருமங்களை ஆற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தின் மரபுகள் மற்றும் நடைமுறைகளின்படி, முன்னுதாரணமான பாராளுமன்றத்தை உருவாக்குதற்குத் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும், இதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல் கலாசாரத்துடன் கூடிய பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை மிகவும் திறம்பட அமுல்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றக் குழுப் பொறிமுறையை மேலும் முறைப்படுத்துவதற்கு அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த சபாநாயகர், பாராளுமன்ற விவகாரங்களில் முன்மாதிரியாகவும் ஒழுக்கமாகவும் பங்களிக்குமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்ட அசோக ரன்வல அவர்கள், கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை கம்பஹா மாவட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.  இவர் பியகம யதிஹேன ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், கம்பஹா ஹேனேகம மத்திய கல்லூரியில் உயர் கல்வியையும் பெற்றுக்கொண்டார். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியல் பட்டதாரியான சபாநாயகர், ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் உயிரியல் இரசாயன கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். பியகம பிரதேச சபை மற்றும் மேல் மாகாண சபையின் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டு மக்கள் பணியை ஆரம்பித்திருந்தார். அத்துடன், பாராளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகர் பதவிக்கு கௌரவ வைத்தியகலாநிதி மொஹொமட் ரிஸ்வ சாலி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவருடைய பெயரை ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ வைத்தியகலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ முன்மொழிந்ததுடன் அமைச்சர் கௌரவ சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார். வைத்தியகலாநிதி ரிஸ்வி சாலி அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராகும். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வைத்தியத்துறையில் சேவையாற்றிவரும் இவர், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவிக்கு கௌரவ ஹேமாலி வீரசேகர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். அவரது பெயரை அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமன்மலி குணசிங்க அதனை வழிமொழிந்தார். கௌரவ ஹேமாலி வீரசேகர தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி கம்பஹா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார்.   இவர் கொழும்பு யசோதரா மகளிர் கல்லூரி மற்றும் தேவிபாளிகா கல்லூரி ஆகியவற்றில் பாடசாலைக் கல்வியைப் பெற்றதுடன், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப அதிகாரியாக தொழில் ரீதியாக பணியாற்றியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத்தின் மகளிர் நிறைவேற்று உறுப்பினராகவும் கடமையாற்றி இவர், முன்னாள மஹர பிரதேச சபையின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.


2024-11-20

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசியமான வசதிகளை வழங்குவதற்காக நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற தகவல் கருமபீடம் வெற்றிகரமாகப் பூர்த்தி

ஒன்லைன் முறைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்கள் பெறப்பட்டன   பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதல் அமர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எளிதாக்குவதற்காக 2024 நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, “பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தகவல் கருமபீடம்” வெற்றிகரமாகப் பூர்த்திசெய்யப்பட்டது. இதில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட 200ற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இங்கு உறுப்பினர்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் அடையாள அட்டைக்கான புகைப்படங்களை எடுத்தல் மற்றும் இலத்திரனியல் வாக்களிப்பு நோக்கத்திற்காக கைரேகைகளை பெறுதல் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதேவேளை, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது கூட்டத்தை நடத்துவதற்காக, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களையும் பெறுவதற்கு பாராளுமன்ற இணையதளம் வழியாக உரிய தகவல்களை உள்ளிடும் வசதி (Online) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


2024-11-20

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி

•    பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு மு.ப 10.00 மணிக்கு•    ஜனாதிபதி அவர்களினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மு.ப 11.30 மணிக்கு முன்வைக்கப்படும் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை (21) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஒத்திகை இன்று (20.11.2024) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. நாளை மு.ப 9.55 மணிக்கு வாக்கழைப்பு மணி ஒலிக்கப்பட்டு மு.ப 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்படவிருப்பதுடன், செங்கோல் சபா மண்டபத்தில் வைக்கப்பட்டதும், பாராளுமன்றத்தைக் கூட்டும் கௌரவ ஜனாதிபதியின் பிரகடனத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் வாசிப்பார். முதலாவதாக சபாநாயகரின் தெரிவு இடம்பெறவிருப்பதுடன், அரசியலமைப்பின் 64 (1) பிரிவு மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 4,5 மற்றும் 6 இன் ஏற்பாடுகளுக்கு அமைய சபாநாயகர் வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்தல், சபாநாயகரின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை, பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை, பிரதிச் சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் வாக்களிப்பினால் தெரிவுசெய்தல் என்பன இடம்பெறும். முதலாவது நாளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது என்பதால் தமக்கு விரும்பிய ஆசனங்களில் அமர முடியும் என்பது விசேடமானதாகும். இந்தச் செயற்பாடுகள் முடிவடைந்ததும் பாராளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33 சரத்துக்களுக்கு அமைய அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய மு.ப 11.30 மணிக்கு கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அக்கிராசனத்தில் அமர்ந்து அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை பாராளுமன்றத்திற்கு முன்வைக்கவுள்ளார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வை எளிமையான முறையில் நடத்துமாறு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய ஜயமங்கள கீதம், முப்படையினரின் அணிவகுப்பு, மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனப் பவனி என்பன இடம்பெறாது என படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்தார். இதற்கு அமைய மு.ப 11.00 மணிக்கு சகல விருந்தினர்களும் தமது இருக்கைகளில் அமரவைக்கப்படவுள்ளனர். மு.ப 11.10 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் கௌரவ சபாநாயகர் வரவேற்கப்படவுள்ளார். அதனைத் தொடர்ந்து மு.ப 11.15 மணிக்கு கௌரவ பிரதமர் வரவேற்கப்படவிருப்பதுடன், இதன் பின்னர் கௌரவ ஜனாதிபதியின் வருகை இடம்பெறும். அதன்படி மு.ப 11.20 மணியளவில் கௌரவ சபாநாயகர், பாராளுமன்றச் செயலாளர்நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்டோர் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களைப்  பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான படிக்கட்டுகளுக்கு அருகில் வரவேற்கவுள்ளனர். இதனைத் தொடர்ந்து படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல கௌரவ சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி பாராளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார். இதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள ஜனாதிபதி அவர்கள் மு.ப 11.25 மணிவரை அங்கிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து பாராம்பரியத்துக்கு அமையப் பிரதிப் படைக்கல சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கல சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர் குழு மற்றும் உதவிப் படைக்கல சேவிதர் என்ற வரிசைப்படி அணிவகுத்து சபா மண்டபத்துக்குள் செல்வர். சபைக்குள் நுழையும்போது உதவி படைக்கல சேவிதர் ‘கௌரவ ஜனாதிபதி’ எனத் தெரிவித்ததும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நிற்பது பாரம்பரியமாக இடம்பெறும். சபா மண்டபத்துக்கு அழைத்துவரப்படும் ஜனாதிபதி அங்கிராசனத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமை தாங்குவார். இதன்போது சபாநாயகர், பாராளுமன்ற குழுநிலையின்போது அமரும் கீழ் பகுதியிலுள்ள ஆசனத்தில் செயலாளர் குழுவுடன் அமர்ந்திருப்பார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்பட்டு, சபை ஒத்திவைக்கப்படும். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நாள் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் குஷான் பெர்னாந்து தெரிவித்தார். விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் இலத்திரனியல் முறையில் (E-Invitations) அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks