07

E   |   සි   |  

1. அரசியலமைப்புப் பேரவையைத் தாபித்தல்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பிற்கு 2022 ஒக்டோபர் 31 ஆம் திகதி அன்று அங்கீகாரமளிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பிற்கு இருபத்தோராவது திருத்தத்தினால் அவ் அரசியலமைப்பால் தற்போதைய “அரசியலமைப்புப் பேரவை”அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

41அ எனும் உறுப்புரையின் பிரகாரம் அரசியலமைப்புப் பேரவையின் (இதனகத்துப் பின்னர் “பேரவை”யெனக் குறிப்பிடப்படும்) ஆக்கவமைவானது பின்வருமாறு அமையும்:

  1. பிரதம அமைச்சர் பதவிவழி உறுப்பினர் - பதவிவழி உறுப்பினர்
  2. சபாநாயகர்; - பதவிவழி உறுப்பினர்
  3. பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர்; - பதவிவழி உறுப்பினர்
  4. சனாதிபதியால் நியமிக்கப்படும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்
  5. பின்வருமாறு பெயர்குறித்து நியமிக்கப்படுவதன் பேரில் சனாதிபதியினால் நியமிக்கப்படும் ஐந்து நபர்கள்;
    1. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் இணக்கத்துடன் பெயர்குறித்து நியமிக்கப்படும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்;
    2. எதிர்க்கட்சித் தலைவருடைய அரசியல் கட்சி அல்லது சுயாதீனக் குழுவைச் சேர்ந்த பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் இணக்கத்துடன் பெயர்குறித்து நியமிக்கப்படும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்; மற்றும்
    3. பிரதம அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடனான இணக்கத்துடன் சபாநாயகரினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் மூன்று உறுப்பினர்கள்.
  6. பிரதம அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடனான இணக்கத்துடன் சபாநாயகரினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் மூன்று உறுப்பினர்கள்.

(ஊ) அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்துள்ள அரசியல் கட்சி அல்லது சுயாதீனக் குழுவைப் பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ந்த, பாராளுமன்ற உறுப்பினர்களின் இணக்கத்துடன் பெயர் குறித்து சனாதிபதியால் நியமிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்.

அரசியலமைப்பின் 41அ(2) எனும் உறுப்புரையின் பிரகாரம், சபாநாயகரே இப்பேரவையின் தவிசாளராக இருப்பார். மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு வகைகளின் கீழும் பேரவையின் உறுப்பினர்களை நியமிக்கும்போது பின்பற்ற வேண்டிய செயன்முறைகளை அரசியலமைப்பானது குறித்துரைக்கின்றது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள உப-பந்தி (உ) வில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைவாக ஐந்து நபர்களைப் பெயர்குறித்து நியமிக்கையில், பேரவையின் ஆக்கவமைவானது தொழில்முறையானோர் மற்றும் சமூகப் பல்வகைமை உள்ளடங்கலாக இலங்கைச் சமூகத்தின் பன்மைத்துவத்தினைப் பிரதிபலிக்கின்றது என்பதைப் பிரதம அமைச்சர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர், அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள உப-பந்தி (உ) வின் கீழ் நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத நபர்கள், பொது வாழ்வில் அல்லது தொழில்முறையான வாழ்வில் கீர்த்திமிக்கவர்களாகவும் வாய்மைமிக்கவர்களாகவும் எந்தவொரு அரசியல் கட்சியினதும் உறுப்பினர்கள் அல்லாதவர்களாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறான பெயர்குறித்த நியமனங்கள் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படும்.

பேரவையின் பதவிவழியல்லாத உறுப்பினர்களின் பதவிக் காலம் நியமனத் திகதியில் இருந்து மூன்று வருடங்களாக இருக்கும்.

2. அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள்

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கமைய, அரசியலமைப்புப் பேரவையில் தற்போது அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பின்வருமாறு நியமிக்கப்பட்டுள்ளனர்:-

அரசியலமைப்பின் 41அ(1)(ஈ) எனும் உறுப்புரைக்கமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, . கௌரவ ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார்.

அரசியலமைப்பின் 41அ(1)(உ)(i) எனும் உறுப்புரைக்கமைவாக, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் இணக்கத்துடன் கௌரவ பிரதம அமைச்சரின் பெயர்குறித்த நியமனத்துக்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி சாகர காரியவசம், கௌரவ சனாதிபதியினால் நியமிக்கப்பட்டார்.

அரசியலமைப்பின் 41அ(1)(உ)(ii) எனும் உறுப்புரைக்கமைவாக, எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்துள்ள அரசியல் கட்சி அல்லது சுயாதீனக் குழுவைச் சேர்ந்த பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் இணக்கத்துடன் கௌரவ பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் பெயர்குறித்த நியமனத்துக்கமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹஷீம், கௌரவ சனாதிபதியினால் நியமிக்கப்பட்டார். கலாநிதி பிரதாப் ராமானுஜம், கலாநிதி (திருமதி) தில்குஷி அனுலா விஜேசுந்தர மற்றும் டொக்டர் (திருமதி) வெலிகம விதான ஆரச்சிகே தினேஷா சமரரத்ன ஆகிய மூவருமே பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் அல்லாத உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 41அ(5) எனும் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைவாகவும், அரசியலமைப்பின் 41அ(1)(உ)(iii) எனும் உறுப்புரையின் பிரகாரம் கௌரவ சபாநாயகரின் பெயர்குறித்த நியமனத்தின் பிரகாரமும், மேற்குறிப்பிட்ட பெயர்கள் 2023.01.18 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டு, கௌரவ சனாதிபதி மேற்குறித்த நபர்களைப் பேரவையின் உறுப்பினர்களாக நியமித்துள்ளார்.

இதன் பிரகாரம், அரசியலமைப்புப் பேரவையின் தற்போதைய ஆக்கவமைவு பின்வருமாறு காணப்படுகின்றது:-

  • கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ., சபாநாயகர் மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் தவிசாளர்
  • கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ., பிரதம அமைச்சர்
  • கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ., பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
  • கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.
  • கௌரவ சட்டத்தரணி சாகர காரியவசம், பா.உ.
  • கௌரவ கபீர் ஹஷீம், பா.உ.,
  • கலாநிதி பிரதாப் ராமானுஜம்
  • கலாநிதி (திருமதி) தில்குஷி அனுலா விஜேசுந்தர
  • கலாநிதி (திருமதி) வெலிகம விதான ஆரச்சிகே தினேஷா சமரரரத்ன

41அ(1)(ஊ) எனும் உறுப்புரையின் ஏற்பாடுகளின் கீழான பாராளுமன்ற உறுப்பினரது நியமனம் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.

3. அரசியலமைப்புப் பேரவையின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள்

அரசியலமைப்புப் பேரவைக்கு அரசியலமைப்பின் கீழும் ஏனைய சட்டங்களினாலும் கடமைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

3.1. பேரவையின் செயற்பாடுகள்

1.      அரசியலமைப்பின் 41ஆ எனும் உறுப்புரைக்கான அட்டவணையில் குறித்துரைக்கப்பட்டுள்ள, ஆணைக்குழுவின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் நியமனத்துக்காக ஜனாதிபதிக்கு வழங்கப்படும் பெயர் குறித்த நியமனங்களுக்கான விதப்புரை

41ஆ எனும் உறுப்புரைக்கான அட்டவணையில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள்

  1. தேர்தல் ஆணைக்குழு
  2. அரசாங்க சேவை ஆணைக்குழு
  3. தேசிய பொலிஸ் ஆணைக்குழு
  4. கணக்காய்வுச் சேவை ஆணைக்குழு
  5. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
  6. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
  7. நிதி ஆணைக்குழு
  8. எல்லை வரையறை ஆணைக்குழு
  9. தேசிய பெறுகை ஆணைக்குழு

2.     அரசியலமைப்பின் 41இ எனும் உறுப்புரைக்கான அட்டவணையில் குறித்துரைக்கப்பட்டுள்ள பதவிகளுக்கான நியமனத்திற்காக ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட விதப்புரைகளை அங்கீகரித்தல்/அங்கீகரிக்காதுவிடுதல்.

41இ எனும் உறுப்புரைக்கான அட்டவணையில் குறித்துரைக்கப்பட்டுள்ள பதவிகள்:

  1. (உயர்நீதிமன்ற) பிரதம நீதியரசர் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள்
  2. (மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்) தலைவர் மற்றும் நீதிபதிகள்
  3. தவிசாளர் தவிர்ந்த, நீதி்த்துறைச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்
  4. சட்டத்துறைத் தலைமையதிபதி
  5. இலங்கை மத்திய வங்கி ஆளுநர்
  6. கணக்காய்வாளர் தலைமையதிபதி
  7. பொலிசுப் பரிசோதகர் தலைமையதிபதி
  8. நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஓம்புட்ஸ்மன்)
  9. பாராளுமன்றச் செயலாளர் நாயகம்

அரசியலமைப்பினால் அல்லது வேறேதேனும் எழுத்திலான சட்டத்தால் அதன் மீது சுமத்தப்படக் கூடியவாறான அல்லது அதற்குக் குறித்தொதுக்கப்படக் கூடியவாறான அத்தகைய வேறு கடமைகளைப் புரிவதற்கும் பணிகளை நிறைவேற்றுவதற்கும் அரசிலமைப்பின் 41 எ (2) எனும் உறுப்புரை ஏற்பாடுகளை பேரவை வழங்குகின்றது.

இதில் குறித்துரைக்கப்பட்டவாறு கடமைகளை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்புப் பேரவைக்குத் தேவையான ஏற்பாடுகளைப் பின்வரும் சட்டங்கள் உள்ளடக்குகின்றன:-

  1. 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டம்
  2. 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டம்
  3. 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டம்
  4. 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தல், நிருவகித்தல் மற்றும் பணிகளை நிறைவேற்றுதல்)
  5. 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, தேசிய கணக்காய்வுச் சட்டம்
  6. 2018 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க இழப்பீட்டிற்கான அலுவலகச் சட்டம்
  7. 2023 ஆண்டின் 6 ஆம் இலக்க பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகச் சட்டம்
  8. 2023 ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம்
  9. 2023 ஆண்டின் 16 ஆம் இலக்க மத்திய வங்கிச் சட்டம்

3.2. பேரவையின் கடமைகள் (உறுப்புரை 41எ)

பேரவையானது, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கொரு தடவை, முற்போந்த மூன்று மாத காலப்பகுதியின் போதான அதன் செயற்பாடுகள் பற்றி ஓர் அறிக்கையை சனாதிபதிக்கும் மற்றும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.

பேரவையானது அதன் கடமைகள் மற்றும் பணிகளை நிறைவேற்றுதல் தொடர்பான விதிகளை ஆக்குவதற்கு பேரவை தத்துவமளிக்கப்படுகிறது. அத்தகைய அனைத்து விதிகளும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, அத்தகைய வெளியீடு மூன்று மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

3.3. பேரவையின் கூட்டங்கள் (உறுப்புரை 41உ)

அரசியலமைப்பின் 41உ எனும் உறுப்புரைக்கு அமைவாக, பேரவை குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவையும், காட்டப்படவேண்டியதோடு அவசியப்படும்போது அடிக்கடியும் கூடலாம்.

தவிசாளர், பேரவையின் அனைத்துக் கூட்டங்களுக்கும் தலைமைதாங்குதல் வேண்டுமென்பதுடன், தவிசாளர் வருகை தராதிருப்பின் பிரதம அமைச்சரும், பிரதம அமைச்சர் வருகை தராதிருப்பின் எதிர்க்கட்சித் தலைவரும் பேரவையின் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குதல் வேண்டும்.

பேரவையின் ஏதேனும் கூட்டத்திற்கான கூட்ட நடப்பெண் ஐந்து உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும். பேரவை, அது செய்யத் தேவைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு விதப்புரையையும், அங்கீகாரத்தையும் அல்லது முடிவையும் ஏகமனதாகச் செய்வதற்கு முயற்சித்தல் வேண்டுமென்பதுடன், ஏகமனதான முடிவொன்று இல்லாதவிடத்து, பேரவையினால் செய்யப்பட்ட பரிந்தரைப்பது , அங்கீகாரம் அல்லது முடிவு எதுவும் அத்தகைய கூட்டத்தில் சமுகமளித்திருக்கும் பேரவை உறுப்பினர்களில் ஐந்து உறுப்பினர்களுக்குக் குறையாதோரினால் ஆதரவளிக்கப்பட்டாலொழிய, வலிதுடையதாகாது. தவிசாளர் அல்லது தலைமை தாங்கும் ஏனைய உறுப்பினர் மூலவாக்கொன்றை உடையவராதல் ஆகாது, ஆனால், பேரவையின் ​ஏதேனும் கூட்டத்தில் முடிவிற்கான ஏதேனும் பிரச்சினையின் மீது வாக்குகள் சமமாகவிருக்கும் பட்சத்தில், தவிசாளர் அல்லது அத்தகைய கூட்டத்திற்குத் தலைமை தாங்குகின்ற வேறு உறுப்பினர் அறுதியிடும் வாக்கொன்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.

உறுப்புரை 41ஆ இன் கீழ் அல்லது உறுப்புரை 41இ இன் கீழ் ஏதேனும் நியமனத்திற்குப் பொருத்தமான ஆட்களை பரிந்துரைப்பது அல்லது அங்கீகரிப்பது தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைமுறைகள் உட்பட, பேரவையின் கூட்டங்கள் மற்றும் அத்தகைய கூட்டங்களில் அலுவல்களைக் கொண்டு நடாத்துதல் தொடர்பான நடவடிக்கைமுறை என்பன பேரவையினால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

4. பேரவையின் செயலாளர் நாயகம் மற்றும் பணியாட்டொகுதியினர்

பேரவையின் செயலாளர் நாயகம் மூன்று (03) வருட காலப்பகுதி ஒன்றிற்காக பேரவையினால் நியமிக்கபடுதல் வேண்டும்.

பேரவையினால் தீர்மானிக்கப்படக் கூடியவாறான கட்டளைகள் மற்றும் நிபந்தனைகளின் மீது அதன் பணிகளை நிறைவேற்றுவதற்கு அவசியம் எனக் கருதும்போது அத்தகைய அலுவலர்களைப் பேரவை நியமிக்கலாம்.

அரசியலமைப்புப் பேரவையின் தற்போதைய செயலாளர் நாயகமாக திரு. டபிளியு. பீ டி. தசநாயக்க பணியாற்றுகின்றார்.

உறுப்பினர்கள்

மஹிந்த யாப்பா அபேவர்தன

தலைவர்

தினேஷ் குணவர்தன

உறுப்பினர்

சஜித் பிரேமதாச

உறுப்பினர்

சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா

உறுப்பினர்

சட்டத்தரணி சாகர காரியவசம்

உறுப்பினர்

கபீர் ஹஷீம்

உறுப்பினர்

கலாநிதி பிரதாப் இராமானுஜம்

உறுப்பினர்

வைத்தியகலாநிதி தில்குஷி அனுலா விஜேசுந்தர

உறுப்பினர்

கலாநிதி (திருமதி) வெலிகம விதான ஆராச்சிகே தினேஷா சமரரத்ன

உறுப்பினர்






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks