பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-11-29
செய்தி வகைகள் : செய்திகள்
2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தப்பட்டவாறான) சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (கா.ஆ.அ.) உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமை உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அதற்காக பாராளுமன்ற இணையத்தளத்தில் கா.ஆ.அ. விற்கான உறுப்பினர்கள் நியமனம் என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட்டல் வேண்டும்.
அதற்கமைய, பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்களை 2024 டிசம்பர் 09 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர், அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை - அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாகக் ‘காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான உறுப்பினர்கள் நியமனம்’ எனக் குறிப்பிடப்படல் வேண்டும்.
[இணைப்பு]
2024-11-28
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வலவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) ஸாவோ லெஜி (Zhao Leji) அவர்களின் வாழ்த்துக்களை இதன்போது சீனத் தூதுவர் பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கௌரவ கலாநிதி அசோக ரன்வலவிடம் தெரிவித்தார். இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்ட கால ஒத்துழைப்புக்களை நினைவு கூர்ந்த புதிய சபாநாயகர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையிலான புதிய அரசாங்கத்திலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த சீனத் தூதுவர் குறிப்பிடுகையில், இரு நாடுகளின் சட்டவாக்க நிறுவங்களின் உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும், புதிய பாராளுமன்றத்திலும் இலங்கை - சீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். அத்துடன், பொருளாதார அவிபிருத்தி, கலப்பின விதைவகைகளை விருத்தி செய்தல் உள்ளிட்ட விவசாயம் சம்பந்தப்பட்ட விடயங்கள், நீர் முகாமைத்துவம், மசகு எண்ணெய் சுத்திகரிப்பு, வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
2024-11-27
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த விவாதம் டிசம்பர் 3, 4ஆம் திகதிகளில் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் டிசம்பர் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தை டிசம்பர் 03 ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூட்டுவதற்கு சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல தலைமையில் அண்மையில் (நவ. 25) கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இதற்கமைய டிசம்பர் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கௌரவ ஜனாதிபதி அவர்களினால் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரடகனம் குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை விவாதிக்கப்படவுள்ளது. டிசம்பர் 4ஆம் திகதியும் குறித்த பிரேரணை மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றையதினம் பி.ப 5.00 மணிக்கு வாக்கெடுப்பை நடத்துவதற்கும் கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர். டிசம்பர் 05ஆம் திகதி வியாழக்கிழமை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்புக் குறித்த தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய டிசம்பர் 05ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை விவாதம் நடத்தப்படவுள்ளது. இது பற்றிய விவாதத்தை 06ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரையும் முன்னெடுக்கவும் இணக்கம் காணப்பட்டது. மேலும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கான விவாதிக்கும் நேரத்தை ஒதுக்குவது, குழுக்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அமைப்பை நிர்ணயித்தல், தெரிவுக்குழுவை அமைப்பது மற்றும் இதற்கான பெயர்களை முன்மொழிவது, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் ஏனைய குழுக்களை நியமிப்பது, துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் செயற்பாடுகள், பத்தாவது பாராளுமன்றத்திற்கான பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தை நியமிப்பதற்கான கோரிக்கையை ஆராய்தல் போன்ற விடயங்கள் குறித்த இங்கு கலந்துரையாடப்பட்டது. பிரதிச் சபாநாயகர் கௌரவ வைத்தியகலாநிதி மொஹொமட் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர, சபை முதல்வர் அமைச்சர் கௌரவ பிமல் ரத்னாயக, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ வைத்தியகலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, , எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
2024-11-25
ஏற்பட்டுள்ள மாற்றத்தின் ஊடாக பொதுமக்களின் அரசியல் முதிர்ச்சியைப் புரிந்து கொண்டு செயற்படும் பரந்த பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது - பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரியதிறந்த பாராளுமன்றம் என்ற எண்ணக்கருவை வலுப்படுத்தி, பொதுமக்கள் பிரதிநிதிகள் ஊடாகப் பாராளுமன்றத்தை பொது மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாசஇம்முறை பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களில் 162 பேர் புதிய உறுப்பினர்களாக இருப்பது விசேடமானது – பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர பொதுமக்களின் அபிலாஷைகள் மிகவும் தீவிரமடைந்திருக்கும் நேரத்தில் அந்த அபிலாஷைகளை நிறைவேற்ற பாராளுமன்ற முறைமையைப் பிரயோகப்படுத்துவது மிகவும் முக்கியமானது என சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று தெரிவித்தார். பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசைமுகப்படுத்தல் செயலமர்வை இன்று (25) ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே சபாநயாகர் இவ்வாறு குறிப்பிட்டார்.பாராளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் ஊடாக மக்களுக்கு சேவையை செய்வதற்கு பாராளுமன்ற பாரம்பரியம், அரசியலமைப்பு, பாராளுமன்ற நிலையியற் கட்டளை போன்றவை குறித்து நல்ல புரிதலும், அறிவும் அவசியம் என்பதால் இவ்வாறான செயலமர்வை ஏற்பாடு செய்வது மிகவும் அவசியமானது எனக் குறிப்பிட்ட சபாநாயகர், இதனை ஏற்பாடு செய்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட செயலகத்தின் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.இச்செயலமர்வில் கலந்துகொண்ட பிரதமர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிடுகையில், நாட்டு மக்கள் மிகவும் பலமான பாராளுமன்றத்தைத் தெரிவுசெய்திருக்கும் சூழ்நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றுவதே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பிரதான எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும் என்றார். பாராளுமன்றம் தொடர்பில் மக்களின் அபிப்பிராயத்தை மாற்றும் செயற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல், சமூக பரிமாற்றம் பொது மக்கள் மத்தியில் காணப்பட்ட அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுவதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தச் செய்தியைப் புரிந்துகொண்ட நபர்கள் என்ற ரீதியில் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாரிய பொறுப்பு இருப்பதாகக் கூறினார். இதற்கு அமைய அர்ப்பணிப்புடன் பணியாற்ற இந்தச் செயலமர்வு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.இம்முறை பாராளுமன்றம் இந்த நாட்டின் வரலாற்றில் தனித்துவமிக்க பாராளுமன்றம் எனவும், பெண்களின் அதிகூடிய பிரதிநிதித்துவமான 22 பெண் உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றமாக அமைவது சாதகமான முன்னேற்றம் எனவும் அவர் தெரிவித்தார்.திறந்த பாராளுமன்றம் என்ற கருத்தை வலுப்படுத்துவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பை பிரஜைகளுக்கு நெருக்கமாக கொண்டு செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் பாராளுமன்ற முறைமை மற்றும் அதன் மரபுகள் தொடர்பில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 162 பேர் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பது பத்தாவது பாராளுமன்றத்தின் தனிச்சிறப்பு என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். பாராளுமன்ற முறைமைகள் தொடர்பில் சிறந்த அறிவும் அனுபவமும் கொண்ட அதிகாரிகளின் வளப்பங்களிப்பின் ஊடாக நடத்தப்படும் இச்செயலமர்வை அனைத்து உறுப்பினர்களும் சிறப்பாகப் பயன்படுத்துவார்கள் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இங்கு பாராளுமுன்ற முறைமைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை தொடர்பில் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன விளக்கமளித்தார்.இந்தச் செயலமர்வில் பிரதிச் சபாநாயகர் கௌரவ வைத்தியகலாநிதி மொஹொமட் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, சபை முதல்வர் அமைச்சர் கௌரவ பிமல் ரத்னாயக, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ வைத்தியகலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர் நாயகம், பாராளுமன்ற செயலகத்தின் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். செயலமர்வின் முதலாவது நாளான இன்று 168 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். புதிய பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும்போது சம்பிரதாயபூர்வமாக மேற்கொள்ளப்படும் செயற்பாடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் செயலமர்வு நாளை (26) மற்றும் நாளைமறுதினம் (27) ஆகிய தினங்களிலும் தொடரவுள்ளது.
2024-11-22
பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு 2024 நவம்பர் மாதம் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01ல் நடத்தப்படவுள்ளது. புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பத்தில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாக இந்த திசைமுகப்படுத்தல் செயலமர்வு இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப. 9.30 மணிக்கு இடம்பெறும் இந்த செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல, பிரதி சபாநாயகர் கௌரவ வைத்தியகலாநிதி மொஹமட் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர, சபை முதல்வர் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ வைத்தியகலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம் மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த மூன்று நாள் செயலமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம், பாராளுமன்ற சிறப்புரிமைகள், பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயற்பாடுகள், பாராளுமன்ற குழு முறைமை, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள், அரசியலமைப்பின் ஏற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலத்திரனியல் வாக்களிப்பு முறை குறித்த நடைமுறை அமர்வொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன், ஊழலுக்கு எதிரான சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் பாராளுமன்ற விவகாரப் பிரிவின் பங்கு குறித்தும் இங்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது. மேலும், பாராளுமன்றத்தின் திணைக்களங்கள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், அந்தந்தப் பிரிவுகளின் மூலம் பாராளுமன்றச் செயற்பாடுகளில் உறுப்பினர்களின் பங்களிப்புகள் மற்றும் பணிகள் குறித்து உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks