E   |   සි   |  

2025-02-16

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம்

உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் இன்று (14) பாராளுமன்றத்தில் கூடிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே  இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், வரையறுக்கப்பட்ட தொலைக் கல்வி நிலையத்தின் 2021 மற்றம் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையும் இங்கு ஆராயப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் ருவன் செனரத் உள்ளிட்ட பிரதியமைச்சர்கள், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-03-14

சிகரெட்டுக்களுக்கான உற்பத்தி வரியை அதிகரிக்க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சின் அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு விளக்கம்

1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் சிகரெட்டின் உற்பத்தி வரியை அதிகரிப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் 11.03.2025ஆம் திகதி கூடியபோது நிதி அமைச்சின் அதிகாரிகள் இந்த விளக்கத்தை முன்வைத்தனர். சரியான தகவல்கள் இன்றி சிகரெட்டுக்களுக்கான உற்பத்தி வரியைக் கூட்டுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும், அவ்வாறு அதிகரிக்கப்பட வேண்டுமாயின் அதற்கான நியாயப்படுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் அரசாங்க நிதி பற்றிய குழு இதற்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தியிருந்தது. அத்துடன், சிகரெட்டுக்களின் மீதான உற்பத்தி வரி தொடர்பில் நடத்தப்பட்ட மதிப்பாய்வுகளுக்கு அமைய, வரி அதிகரிப்பு முறையின் ஊடாக அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வருமானம் அதிகரிக்காது என்றும், நிறுவனத்திற்குக் கிடைக்கும் வருமானமே அதிகரிக்கும் என்றும் குழு சுட்டிக்காட்டியிருந்தது. எனவே, இந்த வரி மறுசீரமைப்பு அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வருமானத்திற்கு எந்தளவு நன்மை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துவது அவசியம் எனவும்,  இது பற்றி நிதி அமைச்சின் அதிகாரிகளிடமிருந்து நியாயப்படுத்தல்களைப் பெற்று குறித்த வரி அதிகரிப்பை மறுபரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, 1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3வது பிரிவின் கீழான கட்டளை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. அத்துடன், 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் குறித்தும் குழுவில் ஆராயப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைய, 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் வெளியிடப்பட்ட 2417/20 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 63 பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட வியாபாரப் பண்ட அறவீட்டின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சின் அதிகாரிகள் வழங்கிய பரிந்துரைகளைப் பெற்று, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 63 பொருட்களுக்கு அதே விகிதத்தில் இந்த வரி விதிக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் வெளியிடப்பட்ட 2421/03 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளைக்கு அமைய றமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிக்கப்படும் பேரீச்சம் பழங்களுக்கு வரிச் சலுகை கோரப்பட்டுள்ளது. அத்துடன், வருமான வரிகளில் இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும் நிதி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் 28(6) பிரிவைத் திருத்துவதற்கான நெறிமுறை பற்றியும் அரசாங்க நிதி பற்றிய குழு கவனம் செலுத்தியது. இதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர் (கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெரும, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, விஜேசிறி பஸ்நாயக்க, அர்கம் இலியாஸ், நிமல் பலிஹென மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-03-14

வேலைவாய்ப்புக்காக தனியார் முகவர்களின் ஊடாக வெளிநாடு செல்லும்போது 1989 இலக்கத்தின் ஊடாக குறித்த முகவர் தொடர்பில் அறிந்துகொள்ளவும் - வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை கௌரவ அமைச்சர் விஜித ஹேரத்

வேலைவாய்ப்புக்காக தனியார் முகவர்களின் ஊடாக வெளிநாடு செல்லும்போது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி குறித்த முகவர் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புகின்றோம் எனக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அண்மையில் (மார்ச் 12) நடைபெற்ற வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பங்குபற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும்போதே கௌரவ அமைச்சர் விஜத ஹேரத் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பணியகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ள முடியும் என்றும்,  எந்தவொரு தரப்பினரும் அங்கீகரிக்கப்பட்ட தொகையை விட அதிகமாகப் பெற்றுக் கொண்டால் அல்லது அனுமதிப் பத்திரம் இன்றி ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் பணியகத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். ரஷ்யாவில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்கள் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த குழுவின் தலைவர், இந்த நிலைமையை தான் அறிந்திருப்பதாகவும், இது மிகவும் சிக்கலான சூழ்நிலை என்றும் வலியுறுத்தினார். சுற்றுலா வலயங்களில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் இரவு விருந்துகளுக்கான ஒலிபெருக்கிகளின் பயன்பாடு இரவு 10 மணியுடன் மட்டுப்படுத்தப்படுவது சுற்றுலாத்துறையின் விருத்திக்குப் பொருத்தமானதாக இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்குச் சுட்டிக்காட்டினர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு கௌரவ பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2025-03-14

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பதிவு விலக்குச் சான்றிதழ் (WOR) உரிய குழுவின் அனுமதி இன்றி விரைவான பொறிமுறையொன்றின் ஊடாக ஒரு சிறப்பு நடைமுறை மூலம் வழங்கப்பட்டமை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் தெரியவந்தது

சிறப்பு நடைமுறையின் (Special pathway) ஊடாக பிரதம நிறைவேற்று அதிகாரியின் தனிப்பட்ட விருப்பத்திற்கு அமைய செயற்பட வாய்ப்பளித்துள்ளமையும் தெரியவருகின்றது – கோப் குழு மருந்துகளுக்கான விலைச் சூத்திரத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் – கோப் குழு வாசனைத் திரவியங்கள் மற்றும் கிறீம் வகைகளை ஒழுங்குபடுத்த எந்த நிறுவனத்திற்கும் சட்டபூர்வ அதிகாரம் இல்லை - கோப் குழு வெளிப்படுத்தியது அதிகாரசபையின் நிதி இருப்பைப் பயன்படுத்தி அல்லது மருந்து இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் அவற்றைப் பரிசோதைனை செய்ய ஆய்வுகூடமொன்றை அமைக்கவும் – கோப் குழு ஆலோசனை சட்டத்தில் உள்ள பலவீனங்களை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவும் - கோப் குழு அறிவுறுத்தல் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் சபையை கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்குத் தீர்மானம் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை பற்றி ஆராய்வதற்கு கோப் உப குழு   தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பதிவு விலக்குச் சான்றிதழ் (WOR) உரிய குழுவின் அனுமதி இன்றி விரைவான பொறிமுறையொன்றின் ஊடாக ஒரு சிறப்பு நடைமுறை மூலம் வழங்கப்பட்டமை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் தெரியவந்தது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் 2022, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (மார்ச் 12) கூடியபோதே இந்த விடயம் தெரியவந்தது. அவசர மருந்துக் கொள்வனவு தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலையீடு தொடர்பில் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய பதிவு விலக்குச் சான்றிதழ் (WOR) உரிய குழுவின் அனுமதியின் கீழ் இன்றி, விரைவான பொறிமுறையின் மூலம் (Fast Track) விசேட நடைமுறையின் ஊடாக வழங்கப்பட்டிருப்பதாகவும், இதன் விளைவாக, பிரதம நிறைவேற்று அதிகாரியின் சொந்த விருப்பப்படி பதிவு விலக்குச் சான்றிதழ் கடிதங்களை வழங்கும் முறையொன்று ஏற்பட்டுள்ளது என்றும் கோப் குழு சுட்டிக்காட்டியது.  குறிப்பாக, 2022ஆம் ஆண்டிலிருந்த பிரதம நிறைவேற்று அதிகாரி இந்த முறையை ஏற்படுத்த தலையிட்டமை இங்கு தெரியவந்ததுடன், இந்தக் காலப் பகுதியில் கொழும்பில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இராப்போசன நிகழ்வில் பெருந்தொகையான மருந்துப் பொருட்களுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்தது. எனினும், இதற்கு பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், இதனால் இவ்விடயம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருப்பதாகவும் புலப்பட்டது. இதுபற்றிக் கோப் குழு நீண்டநேரம் கலந்துரையாடியதுடன், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களைக் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் தீர்மானித்தது. வாசனை திரவியங்கள் மற்றும் கிறீம் வகைகளைப் பயன்படுத்துவதால் நோய்கள் ஏற்படும் நிலைமைகள் இருப்பதாகவும், இதனால் வாசனைத் திரவியங்கள் மற்றும் கிறீம் வகைகளை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் கோப் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். எனினும், எந்தவொரு நிறுவனத்திற்கும் இவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லையென்றும் குழுவில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இதனை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டரீதியான ஏற்பாடுகளை உருவாக்கி அதற்கான அதிகாரத்தைத் தமக்கு வழங்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். எனவே, இதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோப் குழு, சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியது. அத்துடன், மருந்துக்களின் விலைகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. விலைகளை ஒழுங்குபடுத்தும் பிரிவு 2022ஆம் ஆண்டு வரையில் இல்லையென்றும், 2022ஆம் ஆண்டு குறித்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் பிராந்திய ரீதியில் மருந்துகளின் விலைகள் ஒப்பிட்டுப் பார்க்கப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மருந்துகளுக்கான விலைச் சூத்திரம் தொடர்பில் காணப்படும் தடைகள் நீக்கப்பட்டு விரைவில் இதனை நடைமுறைப்படுத்துமாறும் குழு வலியுறுத்தியது. இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் இறக்குமதியின் பின்னர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்தும் குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இவ்வாறான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஆய்வுகூட வசதிகளில் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் பதிலளித்தனர். அதிகாரசபையிடம் காணப்படும் நிதி இருப்புத் தொடர்பில் கோப் குழு கேள்வியெழுப்பியதுடன், 7 பில்லியன் ரூபா நிதியிருப்புக் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, அதிகாரசபையின் நிதி இருப்பைப் பயன்படுத்தி அல்லது மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் அவற்றைப் பரிசோதிப்பதற்கு ஆய்வுகூடத்தை அமைக்குமாறும் கோப் குழு ஆலோசனை வழங்கியது. மேலும், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தொடர்பில் விசாரணை செய்வதற்கு கோப் உப குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த உபகுழுவின் உறுப்பினர்களின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார். இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம்.அஸ்லம், சமன்மலி குணசிங்க, கோசல நுவன் ஜெயவீர, ருவன் மாபலகம, சுனில் ராஜபக்ஷ, தர்மப்பிரிய விஜேசிங்க, அசித நிரோசன எகொட விதான, திலின சமரக்கோன் மற்றும் சந்திம ஹெட்டியாராச்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-03-12

இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா தெரிவு

பத்தாவது பாாராளுமன்றத்திற்கான இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா தெரிவுசெய்யப்பட்டார். அவரது பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி முன்மொழிந்ததுடன், எதிர்க்கட்சி முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க அதனை வழிமொழிந்தார். கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் நேற்று (மார்ச் 11) பாராளுமன்றத்தின் இடம்பெற்ற போதே அவர் தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன், ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவராக  எதிர்க்கட்சி முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க தெரிவுசெய்யப்பட்டார். அவரது பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த குமார முன்மொழிந்ததுடன், சட்டத்தரணி சுசந்த தொடாவத்த வழிமொழிந்தார். அத்துடன், மற்றுமொரு பிரதி இணைத் தலைவராக (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியர்) செல்லத்தம்பி திலகநாதன் முன்மொழிந்ததுடன், அஜித் பி.பெரேரா வழிமொழிந்தார். இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இந்த ஒன்றியம் ஸ்தாபிப்பது சமத்துவம், நீதி மற்றும் உள்ளடக்கிய தன்மை என்பன தொடர்பில் நாம் அனைவரும் இணைந்து எடுக்கும் ஒரு முக்கியமான படியாகும் என்று சுட்டிக்காட்டினார். இயலாமையுடைய நபர்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் திருப்தி அடைந்து சமமாக நடத்தப்படும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே தூரநோக்காக இருக்க வேண்டும் என்றும், அதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஏனைய சேவைகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்யும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் புதிய தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா, தன்னை ஒன்றியத்தின் தலைவராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி தெரிவித்தார். பாராளுமன்றம் என்ற ரீதியில் இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் முழு நாடும் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை உணர்திறன் மிக்கதாகவும், நேர்மையானதாகவும்  மாற்றுவதே ஒன்றியத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். இயலாமைய உடைய நபர்களுக்காகத் தற்பொழுது நடைமுறையில் உள்ள 28 வருடங்கள் பழமையான சட்டத்தை மறுசீரமைத்து தற்காாலத்திற்குப் பொருத்தமான சட்டமாக மாற்றுவது, தற்பொழுது காணப்படும் தேசிய  கொள்கையை எதிர்காலத்திற்குப் பொருத்தமானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஒன்றியம் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார். பொது நிறுவனங்களுக்கான அணுகல் வசதிகள் இயலாமையுடைய நபர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 14 வருடங்கள் கடந்துள்ளபோதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் தீர்ப்பை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்த ஒன்றியத்தின் ஊடாகத் தேவையான தலையீடு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks