பார்க்க

E   |   සි   |  

2025-03-03

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பாடசாலை மாணவர்கள் மற்றும் போக்குவரத்து சபை பருவச்சீட்டை வைத்துள்ள பிரஜைகளைப் புறக்கணித்துச் செல்லும் பேருந்து சாரதிகள் தொடர்பில் 1958 இலக்கத்துக்கு அறிவிக்கவும் - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க

பாடசாலை மாணவர்கள் மற்றும் போக்குவரத்து சபை பருவச்சீட்டை வைத்துள்ள பிரஜைகளைப் புறக்கணித்துச் செல்லும் பேருந்து சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

எந்தவொரு பிரஜைக்கும் இது தொடர்பில் 1958 இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார். இது தொடர்பில் தான் அறிந்துள்ளதாகவும், இவ்வாறான தவறான செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க பின்வாங்குவதில்லை எனவும், இது தொடர்பில் இ.போ.ச சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் 2025.02.28 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இக்கூட்டத்தில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மற்றும் அந்த அமைச்சுடன் தொடர்புபட்ட அரசாங்க நிறுவங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், தொழில்நுட்பம் இருந்த போதிலும், காட்டு யானைகளுக்கு ஏற்படும் சேதங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதில் புகையிரதத் திணைக்கள அதிகாரிகளின் ஆர்வம் இன்மை குறித்து வருந்துவதாகத் தெரிவித்தார். மீனகயா புகையிரத விபத்தில் ஆறு காட்டு யானைகள் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமான சம்பவம் என்றும், அது நடந்தும், புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் தம் வசம் உள்ள GPS தரவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற சம்பவங்களைக் குறைக்க ஆர்வம் காட்டவில்லை என்று தலைவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்த சூழ்நிலைகளைத் தடுக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு புகையிரதத் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆலோசனை வழங்கினார். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும், தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். புகையிரதத் திணைக்களத்தில் ஒரு வினைத்திறனான முகாமைத்துவக் கட்டமைப்பை தயாரிப்பதற்காக, பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவும் இதன்போது ஸ்தாபிக்கப்பட்டது.

அத்துடன், துறைமுகத்திலிருந்து விடுவிப்பு செய்யப்படாத கொள்கலன்கள் தொடர்பான சிக்கல் தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி உறுப்பினர்களுக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

அதற்கமைய, துறைமுகத்தில் கொள்கலன்கள் சிக்கியுள்ளதால் ஏற்பட்ட தாமதத்தை இல்லாமல் செய்ய  அதிகாரிகள் அவசரமாக இணைத்துக்கொள்ளப்பட்டதாகவும், துறைமுகத்தில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் துறைமுகத்திற்குள் நுழையும் வாகனங்களை நிறுத்துவதற்காக புளூமெண்டலில் இரண்டரை ஏக்கர் நிலம் சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்தார். அத்துடன், Port Community System டிஜிட்டல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தை நிலைபேறான தீர்வாகக் கொண்டு நீண்டகாலத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், 2023 ஆம் ஆண்டிற்கான இலங்கை துறைமுக அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான ஜய கண்டெய்னர் டெர்மினல்ஸ் லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை என்பன அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அந்த அறிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டன.

மேலும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் துறையில் காணப்படும் சிக்கல்களுக்கு சட்டரீதியான மற்றும் நிர்வாகரீதியான தீர்வுகளைப் பெறுவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள மூன்று உப குழுக்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் அந்தக் குழுக்களின் தலைவர்களினால் முன்னேற்ற மீளாய்வும் சமர்ப்பிக்கப்பட்டன.



தொடர்புடைய செய்திகள்

2025-11-17

தேசிய உயர்கல்வி கொள்கை வரைபு தயாரிப்பின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி அலுவல்ககள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுவில் ஆராய்ப்பட்டது

தேசிய உயர்கல்வி கொள்கைக்கான வரைபு தயாரிப்பின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உயர்கல்விப் பிரிவு தொடர்பான உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 11) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. தயாரிக்கப்பட்டுவரும் உயர்கல்விக் கொள்கை வரைபு மற்றும் அதற்கான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி.த சில்வா அவர்கள் குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்தார். நவம்பர் மாத இறுதிக்குள் இந்த வரைபைத் தயாரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். மேலும், பல்கலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை மதிப்பாய்வு செய்தல், இயலாமையுடைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் வெளிப்புற பட்டப்படிப்பு திட்டங்களின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பாக முந்தைய குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாளக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-15

பொலிஎதிலின் (சிலிசிலி) பைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்க சுற்றாடல் அமைச்சு தலைமைத்துவம் வகிக்கவும் – துறைசார் மேற்பார்வைக் குழு சுற்றாடல் அமைச்சுக்கு ஆலோசனை

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் பல அமைச்சுக்களுக்கான முன்மொழிவுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை ஆராய்வதற்காகத் துறைசார் மேற்பார்வைக் குழு இரு நாட்கள் கூடியது பொலிஎதிலின் (சிலிசிலி) பைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்க சுற்றாடல் அமைச்சு தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியது. பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது சிலிசிலி பைகளுக்கு கட்டணம் அறவிடும் தீர்மானம் தொடர்பில் குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் பொலிஎதிலின் பயன்பாடு குறைக்கப்படுமா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது இந்தப் பைகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை முடிவு செய்த அதிகாரிகள் யார் என்பதையும் குழுவின் தலைவர் வினவினார். சிலிசிலி பைகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை என இங்கு ஆஜராகியிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் நவம்பர் 10 மற்றும் 12 ஆகிய தினங்களில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், குறித்த அமைச்சுக்களின் கீழ் உள்ள பல நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இக்கூட்டத்தில், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், ரொஷான் அக்மீமன, சதுரி கங்கானி, சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத், (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, ஜே.சி.அலவத்துவல, (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க மற்றும் உபுல் கித்சிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-11-15

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் வருடாந்த அறிக்கைகள் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையும், 2023 ஆம் ஆண்டிற்கான சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் வருடாந்த அறிக்கையும் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை செய்யப்பட்டன. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்க அவர்களின் தலைமையில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு 2025.11.13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது இடம்பெற்றது. சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை முதலாவதாக குழுவில் பரிசீலிக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த அந்த ஊடக வலையமைப்பின் பிரதானிகள், தற்போதைய நிதி நிலைமை மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்துக் குழுவில் தெரிவித்தனர். 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைக்கு அமைய, அந்த ஆண்டில் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு 164 மில்லியன் ரூபாவைத் தாண்டிய நட்டத்தைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த நட்ட நிலையை படிப்படியாகக் குறைத்து, சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில வருடங்களாக அறவிடப்படவுள்ள, நிறுவனத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகைகளை அறவிடுவது சிறந்த மட்டத்தில் இருப்பதாக அவர்கள் குழுல் தெரிவித்தனர். சுயாதீன தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்ட இந்தியத் தொலைக்காட்சித் தொடர்களை அதிக விலைக்கு வாங்கியமை மற்றும் அந்தத் தொடர்களுக்கு மேலும் செலுத்த வேண்டிய பணம் குறித்துக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒளிபரப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பில் உள்ள பிரச்சினைகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு, அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து 3 மாதங்களுக்குள் குழுவுக்கு அறிவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், 2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் குழுவில் பரிசீலிக்கப்பட்டது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தற்போதைய நிதி நிலைமை உட்பட அதன் செயற்பாடுகள் குறித்துக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். தற்போது அவர்கள் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளில் 48% அபராதத்துடன் செலுத்த வேண்டிய வரிகள் என்று அந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் தற்போதுள்ள தொழில்நுட்ப உபகரணங்கள் மிகவும் பழமையான நிலையில் உள்ளதாகவும், சில மின் உபகரணங்களை ஊழியர்கள் உயிர் ஆபத்துடன் இயக்குவதாகவும் அந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அமைந்துள்ள காணிக்கான உரிமை இன்னும் கூட்டுத்தாபனத்திடம் இல்லை என்றும், எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கு காணியின் உரிமை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திடம் இருப்பது முக்கியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்த இரு நிறுவனங்களையும் மேம்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், முன்வைக்கப்பட்ட இந்த விடயங்களை சம்பந்தப்பட்ட துறையினருக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். இந்தக் குழு கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் முனீர் முலாபர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, ஜகத் மனுவர்ண, ருவன் மாபலகம ஆகியோரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-11-15

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப குழுவின் இடைக்கால அறிக்கை உப குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி அவர்களினால் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கப்பட்டது.  பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 13) பாராளுமன்றத்தில் கூடியபோதே இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டது. பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. அதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், அரச சேவையில் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களாக மாறியவர்களுக்கு, அந்த உறுப்பினர் பதவிக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் சேவையாற்றிய பதவிக்குரிய ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுப்பது குறித்தும் இங்கு முன்மொழியப்பட்டது. அரசாங்க வேலையை விட்டு பாராளுமன்ற உறுப்பினராக வரும் ஒருவருக்கு, உறுப்பினர் ஓய்வூதியமும் கிடைக்காததால், இந்த விடயம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதன்படி தனது கவனத்தைச் செலுத்த எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் இங்கு தெரிவித்தார். சேவைப் பிரமாணக் குறிப்புக்கள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வு நடைமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வினைத்திறன்காண் தடைதாண்டல் (efficiency bar) மதிப்பெண் வரம்புகளை பொதுச் சேவை ஆணைக்குழு மாற்றியமைத்ததன் காரணமாக அரச சேவைக்குள் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதாக இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தச் சிக்கல் குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் குழு கூட்டத்தில் கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், குழுவின் கௌரவ உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks