E   |   සි   |  

2025-03-24

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

201 முதல் 450 வரையான இயந்திர வலுப் பிரிவின் கீழ் 296 மோட்டார் சைக்கிள்கள் உரிய தொகை அறிவிடப்படாமல் பதிவு செய்யப்பட்டமையால் அரசாங்கத்திற்கு 78.15 மில்லியன் இழப்பு – கோபா குழுவில் தெரியவந்தது

  • முன்னைய கோபா குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் பற்றிய 25 கணக்காய்வு அவதானிப்புக்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஏற்க முடியாதவை. சுயாதீனக் குழுவொன்றை அமைத்து மீண்டும் உரிய விசாரணைகளை நடத்தவும் – கோபா குழு அறிவுறுத்தல்
  • பயன்படுத்தப்படாத வெற்று இலக்கங்களை உபயோகித்து வாகனப் பதிவுச் சான்றிதழ்களை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மோசடியான முறையில் வழங்கியமையால் அரசாங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபா இழப்பு – கோபா குழுவில் புலப்பட்டது
  • இரத்துச் செய்யப்பட்ட இராஜதந்திர வாகன இலக்கங்களில் வேறு வாகனங்களைப் பதிவு செய்தமையால் 122 மில்லியன் ரூபா நஷ்டம் – கணக்காய்வாளர் நாயகம்

 

201 முதல் 450 வரையான இயந்திர வலுப் பிரிவின் கீழ் அறவிடப்பட வேண்டிய உரிய தொகையை அறவிடாது 296 மோட்டார் சைக்கிள்களைப் பதிவுசெய்தமையின் காரணமாக அரசாங்கத்திற்கு 78.15 இழப்பு ஏற்பட்டிருப்பதுடன், அமைச்சரவை அனுமதி இன்றியும், பதிவு செய்வதற்குத் தேவையான சட்டரீதியான ஆவணங்கள் இன்றியும் 3088 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தெரியவந்தது.

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் 2020, 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் அண்மையில் (மார்ச் 21) கூடிய போதே இந்த விபரம் தெரியவந்தது. இது பற்றி விசாரிப்பதற்காக கடந்த 10ஆம் திகதி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கோபா குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தபோதும், அதிகாரிகள் உரிய தயார்ப்படுத்தலில் வராமையினால் அவர்கள் திருப்பியனுப்பப்பட்டிருந்தனர்.

அத்துடன், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கோபா உபகுழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. சுங்கத்தின் கணினிக் கட்டமைப்பில் இணைவதற்கு முன்னர், இடம்பெறும் ஏனைய அனைத்து வாகனப் பதிவுகள் குறித்தும் கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்பட்ட 25 விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் அந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் எடுத்துள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் உள்ளிட்ட தற்போதைய செயலாற்றுகை குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக திணைக்களம் எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையையும் எடுக்காமை தொடர்பில் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்திய குழு, திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் திருப்தியடைய முடியாது என்றும் வலியுறுத்தியது. இதற்கு அமைய குறித்த விடயம் தொடர்பில் காலதாமதம் இன்றி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்கான விசாரணைகளை சுயாதீனமான அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோபா குழுவின் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.

முன்னர் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் இலக்கங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அடிச்சட்ட இலக்கங்கள் மற்றும் இயந்திர இலக்கங்களை பதிவுக் கட்டமைப்பிலிருந்து மாற்றி மோசடியான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு அவற்றை வழங்கி, சட்டவிரோதமான முறையில் மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழ்  வெளியிட்டமை குறித்தும் கோபா குழு கவனம் செலுத்தியது. இதனால் அரசாங்கத்திற்கு 1.2 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது.

மேலும், பயன்பாட்டிற்கு எடுக்கப்படாத வெற்று இலக்கங்களை மோசடியாகப் பயன்படுத்தி மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டமையால் அரசாங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், வெளிநாட்டு இராஜதந்திர வாகன இலக்கங்கள் வேறு வாகனங்களின் பதிவுகளுக்காகப் பயன்படுத்தியமையால் அரசாங்கத்திற்கு 122 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இது விடயத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கணக்காய்வாளர் நாயகம்  வலியுறுத்தினார்.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி அவற்றுடன் தொடர்புபட்ட சகல அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதில் ஏற்படும் முன்னேற்றம் தொடர்பில் விசாரிக்க திணைக்களத்தை மாதம் தோறும் குழு முன்நிலையில் அழைப்பதற்கும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும், இங்கு இடம்பெற்றுள்ள மோசடியான செயற்பாடுகள் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

இந்தக் கூட்டத்தில் குழு உறுப்பினர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜெயசேகர, சுகத் திலகரத்ன, சுந்தரலிங்கம் பிரதீப், நலின் ஹேவகே கௌரவ பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களான ஜே.சி. அலவதுவல, ரோஹித அபேகுணவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, கவீந்திரன் கோடிஸ்வரன, மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, (சட்டத்தரணி) சாகரிகா அதாவுத, ஒஷானி உமங்கா, ருவன்திலக்க ஜயகொடி, சுசந்த குமார நவரத்ன, சந்தன சூரியஆரச்சி, (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, சானக மாதுகொட, ரீ.கே. ஜயசுந்தர, தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் லால் பிரேமநாத் ஆகியோருடன் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-09-15

தனியார் வங்கியிலிருந்து மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனம் பெற்றுக்கொண்ட கடனை மீள் செலுத்தாமை தொடர்பில் கோப் குழுவின் கவனத்திற்கு

மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தினால் தனியார் வங்கியிலிருந்து பெறப்பட்ட கடனை மீள் செலுத்தாதது தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்பட்டன.  இலங்கை துறைமுக அதிகாரசபையின் 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறனை ஆராய்வதற்காக, பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் கடந்த செப். 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன.  மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனம் 2013 ஜூலை 05 ஆம் திகதி நிறுவப்பட்டது என்றும், அந்த நிறுவனம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்ற அனுமதிப்பத்திரம் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் விநியோகஸ்தராக செயற்பாடுகளை ஆரம்பித்து 2014 ஆம் ஆண்டில் தனியார் வங்கியொன்றிலிருந்து துறைமுக அதிகாரசபையின் நிறுவன உத்தரவாதத்தின் (Corporate Guarantee) மூலம் 24 மில்லியன் டொலர் கடன் பெற்றிருந்தமை இங்கு தெரியவந்தது. எனினும், இந்தத் தொகையில் 18.82 மில்லியன் டொலர்கள் (6836 மில்லியன் ரூபாய்) 2023 டிசம்பர் வரை செலுத்தப்படாமல் இருந்ததாகவும், இந்தக் கடன் தொகையை மீளப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட வங்கி 2019 ஆம் ஆண்டில் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் அதிகாரசபைக்கு எதிராக இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், இது தொடர்பாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். அத்துடன், 2022 ஜூன் மாதம் முதல் கலைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தை மூடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அதற்கமைய, இது தொடர்பாக குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இவ்விடயத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபை தனது பொறுப்பை நிறைவேற்றுவதில் திருப்தியடைய முடியாது என குழு இதன்போது சுட்டிக்காட்டியது. அத்துடன், நிறுவனத்தை மூடுவதன் மூலம் மாத்திரம் திருப்தியடைய முடியாது என சுட்டிக்காட்டிய குழு, கடன் செலுத்தும் செயன்முறையை துரிதப்படுத்துமாறு பரிந்துரைத்தது. அத்துடன், இது தொடர்பாக ஒரு உள்ளக விசாரணை நடத்தி அதற்குரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும், உள்ளகக் கணக்காய்வுப் பிரிவை சரியாக மேற்பார்வையிடுவதற்கான ஒரு பொறிமுறையை தயாரிக்குமாறும்  குழு பரிந்துரைத்தது. அதற்கமைய, இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் குழுவிற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, அதிகாரசபையின் கூட்டுத் திட்டம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.  இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, டி.வி. சானக்க, எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, திலித் ஜயவீர, லெப்டினன்ட் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, திலின சமரக்கோன், சமன்மலி குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-09-12

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டிற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டிற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களின் தலைமையில் நேற்று (செப். 11) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது.  இலங்கை மத்திய வங்கிக்கு நிதிச் சுதந்திரம் இருப்பதாகவும், அந்த நிறுவனங்களைப் போலவே இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கும், கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்திற்கும் மிகவும் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான நிதிச் சுதந்திரம் வழங்குவது முக்கியம் என்று இங்கு குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் தற்போதுள்ள அரசியல் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் அந்த நிறுவனங்களால் மிகவும் சுயாதீனமாகச் செயற்பட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதனால், நிதி அமைச்சரான கௌரவ ஜனாதிபதிக்கும் இது தொடர்பாகத் தெரியப்படுத்துவதற்கு குழு இதன்போது தீர்மானித்தது.  அத்துடன், ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் குழு உறுப்பினர்களின் சம்பளம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் சம்பளத்திற்கு சமமாக அமைக்கப்பட வேண்டும் என்று இந்தக் குழு சுட்டிக்காட்டுவதாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் சம்பளம் திருத்தப்படும் விதத்தில் இந்த அதிகாரிகளின் சம்பளமும் திருத்தப்பட வேண்டும் என்று குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியதுடன், அதற்குத் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, நிமல் பலிஹேன, திலின சமரகோன் மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-09-12

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவுசெய்யப்பட்டார். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்கள் 2025.08.06ஆம் திகதி அப்பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் இன்றையதினம் (செப். 12) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றது. தலைவர் பதவிக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல அவர்கள் முன்மொழிந்ததுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன அவர்கள் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புதிய தலைவர், அரசியல் கருத்துவேறுபாடுகள் இன்றி நடுநிலையாகச் செற்பட்ட, சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தனது பதவியை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், முன்னாள் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களின் பணிகளைப் பாராட்டியதுடன், அவர் மேற்கொண்ட பணியை தொடர்ச்சியாக எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகப் புதிய தலைவர் குறிப்பிட்டார். புதிய திட்டங்களை வகுப்பதன் மூலம் கோபா குழுவின் பங்கை மேலும் நெறிப்படுத்தவும் பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக புதிய தலைவர் மேலும் தெரிவித்தார். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் சுதத் திலகரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜே.சி.அலவத்துவல, ரோஹித்த அபேகுணவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, சாமர சம்பத் தசநாயக்க, (வைத்தியர்) காவிந்த ஹேஷான் ஜயவர்தன, ஒஷானி உமங்கா, ருவன்திலக ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, எம். ஏ. எம். தாஹிர், லால் பிரேமநாத், சானக மாதுகொட ஆகியோரும், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2025-09-11

2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம், செலவு மற்றும் கடன் நிலவரம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டது

2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம், செலவு மற்றும் கடன் நிலவரம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயம் ஆராயப்பட்டது. அதற்கமைய, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த வருமானத்துடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கை அரசாங்கம் வலுவான நிதி செயற்திறனைப் பதிவு செய்து, அரையாண்டு இலக்கைத் தாண்டியுள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரை ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட வருமானம் 2,241 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், மொத்தமாக சேகரிக்கப்பட்ட வருமானம் 2,318 பில்லியன் ரூபாய் எனவும், இது அரை ஆண்டு மதிப்பீட்டை விட 3% அதிகமாகும் என தரவுகளை முன்வைத்து நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் மொத்த செலவு 3,467 பில்லியன் ரூபாய் என்பதுடன், இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த செலவுடன் ஒப்பிடுகையில் 367 பில்லியன் ரூபா அதிகமாகும். இந்த அதிகரிப்பிற்கான முக்கிய காரணியாக கடன் சேவைகள் அமைந்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இது 1,984 பில்லியன் ரூபாவாகும். அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியங்கள், அஸ்வெசும மற்றும் சமுர்த்தி போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உட்பட அத்தியாவசிய அரச சேவைகளுக்கான மீண்டெழும் செலவுகளும் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இலங்கை சுங்கத் திணைக்களம் 2024 ஆம் ஆண்டுடன் (ஜனவரி - ஜூன்) ஒப்பிடுகையில் 47% வளர்ச்சியைப் பதிவு செய்து, 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 996 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. மோட்டார் வாகன இறக்குமதியிலிருந்து கிடைத்த வருமானம் இந்த வளர்ச்சிக்குக் கணிசமாகப் பங்களித்துள்ளதுடன், இதன் மூலம் 429 பில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 220,026 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் 154,537 வாகனங்களுக்கான சுங்க விடுவிப்பு நடவடிக்கைகளை இலங்கை சுங்கம் நிறைவுசெய்துள்ளதாகவும் நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், கொள்கலன்கள் விடுவிப்பு நடவடிக்கைகளுக்காக சுங்கத்தில் 9 - 10 நாட்கள் செல்வதால் இறக்குமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் குழு உறுப்பினர்கள் இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் வினவினர். அதன்படி, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 2 - 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பொருட்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கி வருவதாகத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.  உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் (IRD) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மதிப்பிடப்பட்ட வருமானம் 1,022,691 மில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், 1,040,388 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 1.3 மில்லியன் இலங்கையர்களுக்கு TIN (Tax Identification Number) இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய முடியுமா என்று குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார். எனினும், இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி சுமார் 3.1% ஆக இருக்கும் என்று அனுமானிக்க முடியும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சிகரெட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் வரிக் கொள்கை தொடர்பான நிதி அமைச்சின் கொள்கை என்ன என்பது குறித்து குழுவுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறித்து இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பவற்றின் முன்னறிவிப்புகளுக்கு இடையிலான முரண்பாடு குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.  இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, அஜித் அகலகட, எம்.கே.எம். அஸ்லம், (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்திரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, சம்பிக்க ஹெட்டியாராச்சி, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks