பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-04-23
செய்தி வகைகள் : குழு செய்திகள்
பஸ் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் அமைக்கப்பட்ட “போக்குவரத்துத் துறை தொடர்பான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் போக்குவரத்துத் துறையை நேர்மறையான திசையில் வழிநடத்துதல்" என்ற உபகுழுவில் ஆராயப்பட்டது.
இந்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் 2025.04.09 அன்று கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான கருத்துக்களையும் அவர்கள் குழுவிடம் முன்வைத்தனர்.
பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள பஸ்களுக்குத் தகுதிச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் குழு வலியுறுத்தியது. மோட்டார் வாகனச் சட்டத்தின் 29வது பிரிவின் படி பஸ்கள், லொறிகள் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இந்தத் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுவதாகவும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனுமதி இன்றி மாகாண சபைகளில் பதிவுசெய்யப்பட்ட கராஜ்களினால் இந்தத் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தகுதிச் சான்றிதழ்களை வழங்கும் கராஜ்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையில் சிக்கல்கள் இருப்பதால், இவற்றை ஒழுங்குமுறைப் படுத்தவேண்டியதன் அவசியத்தை உபகுழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 19வது பிரிவின் கீழான நிர்மாணக் கட்டளைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதன்படி, புதிய பஸ்களை இறக்குமதி செய்வதிலும், ஏற்கனவே உள்ள பஸ்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக இருக்கைகளுக்கு இடையில் பொருத்தமான இடைவெளி, தேவையற்ற உபரணங்களை அகற்றுதல் மற்றும் ஆசனப் பட்டிகளை அணிவது போன்ற விடயங்கள் குறித்தும் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.
அதன்படி, தொடர்புடைய தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், பொதுப் போக்குவரத்தில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகளுடன் கூடிய அறிக்கையைத் தயாரித்து, இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சமர்ப்பிக்குமாறும் உபகுழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் தொழில்முறைத் திறனை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. சாரதிகளின் தொழிலை தரப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஒரு மாதத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு உபகுழுவின் தலைவர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
அத்துடன், கடந்த மூன்று மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் குறித்த தரவுகளை உடனடியாக குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குழு கேட்டுக் கொண்டது. தரவுகளின் அடிப்படையில் எதிர்கால பரிந்துரைகளை வகுப்பதன் முக்கியத்துவத்தை உப குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
பஸ் சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்துவதற்குத் தேவையான சட்ட விதிகளை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இது தொடர்பான விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு, தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விதிமுறைகள் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும், சாரதிகளின் உடலில் போதைப்பொருள் இருப்பதைக் கண்டறிதல் உள்ளிட்ட தொழில்நுட்ப வழிமுறைகள் முறையாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த உபகுழு, போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் செயல்படுத்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் ஏற்படும் மாற்றங்களை முதன்மையாக ஆராய்ந்து, பின்னர் தேவையான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையைத் தயாரிக்கும்.
இக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த. சில்வாவும் பங்கேற்றார்.
2025-10-27
"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சர்வதேச அனுபவத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கியின் பிரதிநிதிகள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் கடந்த ஒக். 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே ‘அஸ்வெசும திட்டம்’ குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், உலக வங்கியின் சமூகப் பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட பொருளாதார நிபுணர் பிரான்செஸ்கா லமன்னா (Francesca Lamanna) மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு நிபுணர் ஸ்ரீனிவாஸ் வரதன் ஆகியோரும் கலந்து கொண்டனர். சமூகப் பாதுகாப்புக்கான தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம், உண்மையிலேயே வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய தனிநபர்கள், குடும்பங்களை அடையாளம் காண முடியும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். பிரஜைகளின் தகவல்களை சமூகப் பாதுகாப்பு தரவுத்தளத்தில் உள்ளிடுவது அவர்களை அஸ்வெசும அல்லது பிற தொடர்புடைய சலுகைகளுக்கு தகுதியுடையவர்களாக மாற்றாது என்றும், உள்ளிடப்பட்ட தரவைச் சரிபார்க்க முடியும் என்றும், தொடர்புடைய சலுகைகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் என்றும் இந்தக் குழு வலியுறுத்தியது. இந்தச் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஒரு நாட்டிற்கு ஒரு உற்பத்தி முதலீடாகும், எனவே தரவுத்தளத்தைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். "அஸ்வெசும" சலுகைகளை வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். அதன்படி, கிராம ரீதியாக அமைக்கப்படும் குழுக்களின் மூலம் அஸ்வெசும பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து, சம்பந்தப்பட்ட கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர்களைக் காண்பிப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இங்கு கருத்துத் தெரிவித்த, "அஸ்வெசும" திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களுக்கு இந்தத் திட்டம் குறித்து போதுமான தகவல்கள் இல்லாததால் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் வகிபாகம் குறித்து முறையான தெளிவுபடுத்தல்களை வழங்குவதன் ஊடாக இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தத் தாம் ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்தனர். கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கி ஆலோசகர் ஷாலிகா சுபசிங்க மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
2025-10-24
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் நேற்று (ஒக். 23) கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நிதி அமைச்சின் அதிகாரிகள், 2026ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஒவ்வொரு துறைக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்த விபரங்களை முன்வைத்தனர். இவ்விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
2025-10-23
2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அமைச்சுக்கள் சிலவற்றுக்கான முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் மற்றும் 2025.12.31 வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் குறித்து சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 21) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் மற்றும் 2025.12.31 வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது. இங்கு குழுவில் உரையாற்றிய அதன் தலைவர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகளை அந்தந்த அமைச்சுகள் செலவிடுதல் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பான அனைத்து விடயங்களையும் குழுவால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்கமைய, தனது குழுவின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுகள் தொடர்பான விடயங்களும் இவ்வாறு ஆராயப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அதற்கமைய, அந்தந்த அமைச்சுக்களுக்கு வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அவற்றைச் செலவு செய்ததன் முன்னேற்றம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அத்தியாவசியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் குழுவிற்கு அறிக்கைகளை வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறீநேசன், ரொஷான் அக்மீமன, சதுரி கங்காணி, சுசந்த குமார நவரத்ன, கிட்ணன் செல்வராஜ், (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத், சுதத் பலகல்ல, சித்ரால் பெர்னாண்டோ, ஜே.சி. அளவதுவல, சுஜீவ சேனசிங்க, உபுல் கித்சிறி மற்றும் எம்.எஸ். உதுமாலெப்பெ ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-10-23
வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அவசர கொள்முதல் மற்றும் வருடாந்த எதிர்காலத் திட்டம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதில் குறிப்பாக 2022ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற கேள்விப் பத்திரம் கோரல் நடைமுறை மற்றும் 2022ஆம் ஆண்டின் பின்னர் குறித்த கேள்விப்பத்திர நடைமுறையில் ஒவ்வொரு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து குழு கவனம் செலுத்தியது. உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையில் அண்மையில் (ஒக். 17) கூடியபோதே இவ்விடயம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் வலுசக்தி அமைச்சு, வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனம், இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபை மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு 2022 ஆம் ஆண்டுக்கு முன்பு அவசர கொள்முதல்கள் மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியதுடன், அவசர கொள்முதல்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் கொண்ட முழுமையான அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்திடம் தற்பொழுது காணப்படும் இருப்புக்கள் போதுமான நாட்கள் மற்றும் அதன் பின்னர் எதிர்காலத்தில் கொள்முதல் செய்யவிருக்கும் நிலக்கரியின் அளவு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார, ஜகத் விதான மற்றும் அசித நிரோஷன எகொட விதான ஆகியோர் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks