E   |   සි   |  

2025-05-26

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

கோபா குழுவின் உறுப்பினர்கள் இரத்மலானை புகையிரத பராமரிப்பு வேலைத்தளத்திற்கு கள விஜயம்

  • அகற்றப்பட வேண்டிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களால் வேலைத்தளத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன – குழுவின் உறுப்பினர்கள் தெரிவிப்பு

 

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இரத்மலானையில் உள்ள புகையிரத பராமரிப்பு வேலைத்தளத்திற்கு நேரடி கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.

கோபா குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய அண்மையில் (மே 22) இந்த விஜயம் இடம்பெற்றது. இதில் கௌரவ பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன, குழுவின் கௌரவ உறுப்பினர்களான சந்தன சூரியாராச்சி, ஒஷானி உமங்கா, ருவன்திலக ஜயகொடி, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, டி.கே.ஜயசுந்தர, சுசந்த குமார நவரத்ன மற்றும் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த 09ஆம் திகதி இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் 2023 ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தபோது, புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான 63 இன்ஜின்களும், 40 பவர்செட்களும் ஒன்று முதல் 8 வருடங்களாக இரத்மலான பிரதான இயந்திரப் பொறியியலாளர் அலுவலக வளாகம் மற்றும் புகையிரத தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதும் தெரியவந்தது. இவற்றை நேரடியாகக் கண்டறிவதற்காகவே கள விஜயத்தை மேற்கொள்ளக் குழு தீர்மானித்திருந்தது.

இந்த விஜயத்தின் போது இரத்மலானை புகையிரத பராமரிப்பு வேலைத்தளத்தின் பிரதான இயந்திரப் பொறியியலாளர் நிஷாந்த பெரேரா மற்றும் பிரதி இயந்திரப் பொறியியலாளர் நிலூபா ஏகநாயக்க ஆகியோர் வேலைத்தளத்தின் செயற்பாடுகள் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தனர். வேலைத்தில் இடம்பெறும் நடைமுறைச் செயற்பாடுகளையும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரடியாகக் காண்பித்திருந்தனர்.

அகற்றப்பட வேண்டிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வேலைத்தளத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது என உறுப்பினர்கள் கள விஜயத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்தனர். அத்துடன், சில இயந்திரங்கள் தேவையான சூழலில் நிறுவப்படவில்லையென்பது புலனாவதாகவும், சில உபகரணங்கள் தேவைக்கு அதிகமாகக் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், இந்த நேரடிக் களவிஜயத்தின் போது கண்டறிந்த விடயங்களை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு மற்றும் போக்குவரத்து அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் முன்வைக்க எதிர்பார்ப்பததாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்த நேரடிக் களவிஜயத்தில் பாராளுமன்ற அதிகாரிகள் சிலரும் இணைந்துகொண்டிருந்தனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-07-28

மருந்து பற்றாக்குறை தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

மிகவும் அத்தியாவசிய மருத்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை - சுகாதார அமைச்சின் அதிகாரிகள்   மருந்து பற்றாக்குறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வினவப்பட்டது. இக்குழு பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்ஹ தலைமையில் அண்மையில் (ஜூலை 23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.  கடந்த வருடங்களில் கொள்முதல் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போதைய மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எனினும், 2026 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் எந்தப் பற்றாக்குறையும் இருக்காது என்றும் அவர்கள் குழுவில் உறுதியளித்தனர். அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் 80% முதல் 90% வீதமான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். அத்துடன், மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் இருப்பு குறித்து குழு வினவியத்துடன், தற்போது மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இலங்கை அரசமருந்தாங்கற் கூட்டுத்தாபனம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் மற்றும் விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளையும் குழு பரிசீலித்து அங்கீகரித்தது. இந்த அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யும் போது, இந்த நிறுவனங்கள் தொடர்பான பதிலளிக்கப்படாத கணக்காய்வு கேள்விகள் குறித்து குழு வினவியது. கணக்காய்வு அவதானிப்புகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான பதில்களை உறுதி செய்வதற்காக அமைச்சுக்குள் ஒரு உள்ளக மீளாய்வு பொறிமுறையை நிறுவ வேண்டும் என குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். பிரதி அமைச்சர் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜகத் மனுவர்ண ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் (வைத்தியர்) அனில் ஜாசிங்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-07-28

உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில்  கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் கடந்த ஜூலை 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர். உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு நீண்ட விளக்கத்தை வழங்கியதுடன், கடந்த காலங்களில் இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் விபரித்தனர். கல்வித் துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் செயற்பட்ட சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் எனப் பலரையும் இணைத்துக் கொண்டு உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை விரிவான முறையில் ஆராய எதிர்பார்த்திருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பைக் குழு முழுமையாக வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கல்வித் துறையின் மறுசீரமைப்பின் போது உரிய முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதன்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் குறித்தும் இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகள் குறித்து குழு கேட்டறிந்துகொண்டதுடன், குறித்த சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு முன்வைக்கவும் குழு அனுமதி வழங்கியது.இந்தக் கலந்துரையாடல்களில் குழுவின் கௌரவ உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, சானக மாதுகொட, துரைராசா ரவிகரன், சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-07-28

கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக செயற்குழு நியமிக்கப்பட்டது

பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டது. இந்நாட்டின் கலை மற்றும் கலாசாரத் துறையின் முன்னேற்றத்திற்காக ஒன்றியத்தினால் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ள திட்டங்களை மேற்பார்வை செய்வது, அதற்குத் தேவையான துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதே இந்தச் செயற்குழுவின் நோக்கமாகும். இக்குழுவின் உறுப்பினர்களாகக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த நியமனம் இடம்பெற்றது. இந்நாட்டின் கலாசாரம், இலக்கியம் மற்றும் கலைத் துறையை வளர்ப்பது, இத்துறையில் உள்ள கலைஞர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களின் முன்னேற்றம், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் கலையை இரசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் தொடர்பில் குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-07-21

“அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை பாராளுமன்ற குழுக்கள் அவற்றுக்கான கடமையின் அடிப்படையில் ஆராய முடியும்” – முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், கோப், கோபா குழுக்களின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே

பாராளுமன்றக் குழுக்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை ஆராய முடியும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அதனைக் குறிப்பிட்டார். கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தின் முக்கிய கண்காணிப்பு குழுக்களான கோப் மற்றும் கோபா ஆகியவற்றின் கட்டமைப்பு, அதிகாரங்கள், வகிபாகம், பொறுப்புகள் தொடர்பாக அவர் விரிவான விளக்கத்தை வழங்கியதுடன், வெளிப்படையானதும், விளைவுத்திறனான அரசாங்க நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கே இக்குழுக்கள் பங்களிக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்தினார். கோப் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர மற்றும் கோபா குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் குறித்த குழுக்களின் நோக்கெல்லையின் கீழ்வரும் அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.  பாராளுமன்றத்தின் பொறுப்புக் கூறல் மற்றும் மேற்பார்வை என்ற பரந்துபட்ட சூழலில் இக்குழுக்களின் பங்களிப்புப் பற்றிய ஆழ்ந்த புரிதலை வழங்குவது இதன் பிரதான நோக்கமாக அமைந்தது. பிரதமரின் செயலாளர் ஜீ.பிரதீப் சபுதந்திரி, பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டி.தர்மபால, பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்கச் சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர். அரசாங்க அதிகாரிகள் பாராளுமன்றக் குழுக்களுக்கு முன்னிலையாகும்போது முன்வைக்கும் தகவல்கள் துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருப்பதுடன், விரிவான விடயங்களை உள்ளடக்கியதாக, இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும்  இருக்க வேண்டும் என மாயாதுன்னே அவர்கள் சுட்டிக்காட்டினார்.  அத்துடன், குழுவில் கருத்துக்களை முன்வைக்கும்போது கண்ணியமான முறையில், தர்க்கபூர்வமாக மரியாதையுடன் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிறைவேற்று அதிகாரத்திடமிருந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கே பாராளுமன்றத்தின் மேற்பார்வைகள் உதவுகின்றன எனவும் தெரிவித்தார். எனவே, அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும், மேலும் சட்டமன்றத்தால் அழைக்கப்படும்போது பொறுப்புக்கூறத் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். திறமையான மேற்பார்வை மூலம் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதில் நிறுவன தயார்நிலை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் கலந்துரையாடலுடன் அவரது அமர்வு நிறைவடைந்தது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks