2025-09-17
செய்தி வகைகள் : குழு செய்திகள்
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அரசுரிமையை சரியான முறையில் அறவிடாமையால் அரசாங்கத்திற்கு பெருந்தொகையான நிதி இழப்பு ஏற்பட்டிருப்பது அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) அண்மையில் தெரியவந்தது.
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (செப். 12) கூடியபோதே இந்த விபரம் வெளியாகியது.
சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்குத்தொடுவாவ தோட்டத்தில் மணல் அகழ்வுக்காக தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கி 2023ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2024 செப்டெம்பர் வரையில் பணியகத்தினால் அகழ்வுக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவும், ஒப்பந்த காரரினால் 36531 முதல் 45561 கியூப் வரையிலான மணலை அகற்றியுள்ளபோதும், 1564 கியூப் மணலுக்கு மாத்திரமே அரசுரிமையாக ரூ.686,464 ரூபா செலுத்தப்பட்டிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். ஜீ.எஸ்.எம்.பி டெக்னிகல் சேர்வயர் (தனியார்) நிறுவனத்தினால் 2024 டிசம்பர் 19ஆம் திகதி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட மணலின் அளவு மதிப்பீட்டு அறிக்கையின்படி இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அமைய ரூ 12 மில்லியனுக்கும் அதிகமான அரசுரிமை இழக்கப்பட்டிருப்பதாக குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், கருங்கல்லை உடைக்கும்போது கல் குவாரிக்கு வழங்கப்பட்டுள்ள வெடிபொருட்களின் அளவை அடிப்படையாகக் கொண்டு குறித்த கல்குவாரிக்கான அரசுரிமை அறவிடப்படுகின்றமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுவதால், அகற்றப்படும் கருங்கல்லின் உண்மையான அளவைக் கணக்கிட முடியாது என்றும், இதன் மூலம் அரசுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படுகிறது என்றும் குழு சுட்டிக்காட்டியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கருங்கல் குவாரிகள் மூலம் கருங்கல் பெரிய அளவில் உடைக்கப்பட்டாலும் அரசுக்கு சிறிய அளவு வருமானம் மட்டுமே கிடைக்கிறது என்பதை குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கு அமைய அகழ்வுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவது மாத்திரமன்றி, அதனை கண்காணிப்பதற்கு வலுவான பொறிமுறையொன்றை தயாரிக்க வேண்டும் என்றும், சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோப் குழு, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மற்றும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளை வலியுறுத்தியது.
கனிம வளங்களை பிரித்தெடுப்பதற்கு முன்னர் ஆய்வு அனுமதிகளை வழங்குவதற்கான பொறிமுறையில் உள்ள கடுமையான குறைபாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய அமைப்பின் கீழ் ஆய்வு அனுமதிகளைப் பெறும் பல நிறுவனங்கள் அந்த அனுமதிகளை மற்ற நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், உண்மையில் ஆய்வு மற்றும் பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்றும் தெரியவந்தது. ஆய்வுக்குப் பின்னர் தரவு பணியகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டாலும், அதன் துல்லியத்தில் கடுமையான சிக்கல் உள்ளது என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 1993 முதல் பணியகம் 450 க்கும் மேற்பட்ட ஆய்வுகளுக்கு அனுமதிகளை வழங்கியுள்ளது என்றும், அவற்றில் 43 தற்போது செயற்பாட்டில் உள்ளன என்றும் தெரியவந்தது.
இதற்கு அமைய தற்பொழுது காணப்படும் நடைமுறையின் ஊடாக சரியான முறையில் விஞ்ஞான ரீதியான அகழ்வுப் பணிகள் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படுவதில்லையென்றும், இந்நாட்டின் கனிம வளங்கள் குறித்த ஆய்வுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட பின்னர் அதன் செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கு முறைமை இல்லையென்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அதன்படி, மேலோட்டமான தீர்வுகளுக்குப் பதிலாக, நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமான ஒரு புதிய வழிமுறை மற்றும் மூலோபாயத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மன்னார் தீவில் கனிம மணல் அகழ்வு தொடர்பில் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட 5 நிறுவனங்களுக்கு 9 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், 10 – 13 வருடங்களுக்கு மேலாக இந்த நிறுவனங்கள் கனிம மணல் உள்ள பகுதிகளைக் கண்டறியாமல் உள்ளமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட இந்த 5 நிறுவனங்களும் அவுஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் என்பது தெரியவந்தது. ஆய்வுக்கான அனுமதிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் நீண்ட காலமாக எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் குறித்த பகுதியை ஒதுக்கி வைத்திருப்பதாகவும், இதனால் கனிமங்களை ஆய்வுசெய்ய விரும்பும் பிற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்படுவதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இதன் காரணமாக 195 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தடைப்பட்டுள்ளதாகவும், அது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
சுரங்கங்கள், கனிப்பொருட்கள் சட்டத்திற்கு அமைய கனிம மணல் ஆய்வுகளின் பின்னர் கனிமம் மேற்கொள்ளப்பட்ட பகுதிகள் மறுசீரமைக்கப்பட வேண்டியிருக்கின்றபோதும் 2025 ஓகஸ்ட் 11ஆம் திகதியாகும் போது 3150 அனுமதிப்பத்திரங்களுக்கான மறுசீரமைப்புத் தொடர்பில் பணியகம் நடவடிக்கை எடுக்கவில்லையென்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. கனிம அகழ்வுக்கு அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும்போது புனரமைப்புக்குப் பாதுகாப்புக் கட்டணம் அறவிடப்படுகின்றபோதும், புனரமைப்புக்குப் பதிலாக அந்தப் பணத்தை விட்டுக்கொடுப்பது லாபகரமானது என்று சுரங்கத் தொழிலாளர்கள் கருதுவதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இருப்பினும், புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாத சுரங்க அனுமதி வைத்திருப்பவர்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், திரிவானா ஏற்றுமதி குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. திரிவாண மற்றும் பளிங்கு (Clear Quartz) சட்டவிரோத கடத்தல் மேற்கொள்ளப்படுவதாகவும், பணியகத்திற்குள் உள்ள சிலர் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பளிங்குகளின் ஏற்றுமதியை தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் கீழ் வைத்திருப்பதன் மூலம் மற்ற திரிவானாக்களை சட்டப்பூர்வமாக ஏற்றுமதி செய்வதற்கான ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டியது.
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் கடந்த கால வரலாற்றில் சட்ட விதிகளின்படி சரியான திட்டத்தின்படி செயற்படாத ஒரு நிறுவனம் என்பதை விசாரணைகள் தெளிவாகக் காட்டுகின்றன என்றும் குழு சுட்டிக்காட்டியது. தற்போதுள்ளதை விட அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு பெரிய தேசிய பணியைச் செய்யக்கூடிய ஒரு நிறுவனமாக, சரியான தொலைநோக்குடன் கூடிய முறையான திட்டத்தின்படி இந்நிறுவகம் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. அதன்படி, கொடுக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதில் ஏற்படும் முன்னேற்றத்தை கோப் குழு தொடர்ந்து கண்காணிக்கும் என்று குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரஹுமான், சமிந்த விஜேசிறி, திலித் ஜயவீர, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, ஜகத் மனுவர்ண, ருவன் மாபலகம, தர்மப்பிரிய விஜேசிங்க, அசித நிரோஷன எகொட விதான மற்றும் சமிந்த ஹெட்டிஆரச்சி ஆகியோரும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ரோஹித்த உடுவலவ, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜயசிங்க உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-10-30
LTL நிறுவனத்தின் மின்சார சபைக்குச் சொந்தமான பங்குகள் 70% இலிருந்து 35% ஆக குறைந்துள்ளன அரசாங்கத்தின் கணக்காய்வுக்குத் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கும் கணக்காய்வாளர் நாயகத்துக்கும் அறிவிப்பு 2015 ஆம் ஆண்டு முதல் அரசாங்கக் கணக்காய்வை மேற்கொள்ள முயற்சிகள் இடம்பெற்ற போதிலும், அந்த அனைத்து சந்தர்ப்பங்களையும் தவிர்ப்பதற்கு நிறுவனம் செயற்பட்டுள்ளது என குழு சுட்டிக்காட்டுகிறது குறிப்பிட்ட பதில்களை வழங்கத் தவறியமை குறித்தும் குழு அதிருப்தி இலங்கை மின்சார சபை தொடர்பான விசாரணையின் தொடர்ச்சியாக, இலங்கை மின்சார சபையின் பங்குகளை வைத்திருக்கும் ஒரு நிறுவனமான LTL ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் அண்மையில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவிற்கு அழைக்கப்பட்டன. அந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் 2025.10.24 ஆம் திகதி கூடிய போதே இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தன. இந்நாட்டில் மின்சாரத் துறையை விஸ்தரிப்பதற்குத் தேவையான மின்மாற்றிகளை (Transformers) உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்கும், 1980 ஆம் ஆண்டில் லங்கா ட்ரான்ஸ்போமர்ஸ் நிறுவனம் என்ற பெயரில் மின்சார சபையின் 70% பங்கு மற்றும் ஸ்கொட்லாந்து நிறுவனமொன்றின் 30% பங்கு மூலதனத்துடன் ஒரு அரச-தனியார் கூட்டு நிறுவனமாக இது நிறுவப்பட்டதாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் 1986 ஆம் ஆண்டில் 30% பங்குகள் ஸ்கொட்லாந்து நிறுவனத்தால் நோர்வே நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. பல சந்தர்ப்பங்களில், LTL கல்வனைசிங், LTL ஸ்டீல் பெப்ரிகேஷன் போன்ற பெயர்களில் மேலும் பல நிர்வாக நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் கீழுள்ள நிறுவனங்களாக நிறுவப்பட்டுள்ளதுடன், தனியார் துறையில் மின்சாரம் வழங்கும் லக்தனவி நிறுவனம் 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ளது. அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டில், பிரதான நிறுவனத்தின் பெயர் LTL ஹோல்டிங்ஸ் நிறுவனமாக மாற்றப்பட்டதுடன், ஏனைய நிர்வாக நிறுவனங்கள் தனி நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன. மின்சார சபையில் பொறியியலாளராகப் பணியாற்றிய LTL ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி, அவர் மின்சார சபையிலிருந்து விலகிய வருடத்தையும், LTL நிறுவனத்துடன் இணைந்த வருடத்தையும் உறுதியாகக் கூறத் தவறியதனால் அது தொடர்பில் குழுவின் கடுமையான அதிருப்தி இதன்போது வெளிப்படுத்தப்பட்டது. அதன்படி, அந்தக் குறிப்பிட்ட தகவல்களை உடனடியாகத் தெரிவிக்குமாறு குழு அறிவித்தது. LTL நிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய இருவரும் மின்சார சபையின் முன்னாள் அதிகாரிகளாக இருந்ததன் மூலம் அக்கறை முரண்பாடு (Conflict of interest) ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்றும், மின்சாரம் கொள்வனவு செய்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்களுக்கு அதனால் பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. 2001 ஆம் ஆண்டில், மின்சார சபை உள்ளிட்ட ஊழியர்களுக்காக 10% பங்குகள் கொண்ட ஒரு நம்பிக்கை நிதியத்துக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும், அதற்கமைய, மின்சார சபையின் பங்குகள் 63% ஆகக் குறைந்துள்ளது என்றும் இங்கு தெரியவந்தது. அத்துடன், இந்த நம்பிக்கை நிதியம் 2017 ஆம் ஆண்டில் டெக்ப்ரோ இன்வெஸ்ட்மன்ட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு தனி நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது என்றும், சில பங்குதாரர்களுக்கு சுமார் ஒன்பது மில்லியன் ரூபாய் அளவு பங்குலாபம் வழங்கப்பட்டிருந்தாலும், ஊழியர்களுக்கான பங்குலாபம் உரிய முறையில் செலுத்தப்படவில்லை என்ற அறிக்கைகள் குறித்தும் குழு வினவியது. அது அவ்வாறு இல்லை என்றும், சட்ட நிலைமைக்கு அமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறினர். எவ்வாறாயினும், அது தொடர்பான முழுமையான தகவல்களுடன் கூடிய அறிக்கையை கோப் குழுவுக்கு வழங்குமாறு LTL நிறுவனத்திற்கு குழு அறிவித்தது. அத்துடன், 2005 ஆம் ஆண்டில் நோர்வே நிறுவனத்தின் பங்குகள் அந்த நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றும், இலங்கை மின்சார சபை அவற்றை கொள்வனவு செய்ய மறுத்து இருப்பதாகவும், அதற்கமைய, அந்தப் பங்குகளை கொள்வனவு செய்ய LTL ESOT என்ற பெயரில் மற்றுமொரு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு LTL நிறுவனத்திடமிருந்து கடனும் பெறப்பட்டுள்ளமை தெரியவந்தது. 2018 ஆம் ஆண்டில், அந்த நிறுவனம் மீண்டும் பெரதிவ் என்ற பெயரில் ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2006 ஆம் ஆண்டில், யுகதனவி மின் நிலையத்தை ஆரம்பிப்பதற்கு LTL மூலம் வெஸ்ட் கோஸ்ட் என்ற பெயரில் மற்றுமொரு நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரம் கொள்வனவு செய்ததற்காக மின்சார சபை அந்த நிறுவனத்திற்கு 79.4 பில்லியன் ரூபாய் கடன்பட்டிருப்பதும் தெரியவந்தது. அதில் 26 பில்லியன் ரூபாய் மதிப்பீட்டை ஈடுசெய்வதற்காக, LTL நிறுவனத்தில் அப்போதைய இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான 63% பங்குகளிலிருந்து 28% பங்குகளை வெஸ்ட் கோஸ்ட் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதியின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், அதன்படி LTL நிறுவனத்தில் இலங்கை மின்சார சபையின் பங்கின் அளவு 35% ஆகக் குறைந்தது என்றும் இங்கு தெரியவந்தது. அதற்கமைய, LTL நிறுவனத்தின் பங்குப் பிரிவுகள்; 35% மின்சார சபை, 28% வெஸ்ட் கோஸ்ட், 27% பெரதிவ் மற்றும் 10% டெக்ப்ரோ என உள்ளதாக இங்கு தெரியவந்தது. இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான 70% உரிமை 35% ஆகக் குறைந்தமை மிகவும் சிக்கலான செயன்முறையின் மூலம் நடந்துள்ளது என்று இங்கு குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், கணக்காய்வுக்கு இடமளிக்காதது குறித்தும் குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அரசாங்கக் கணக்காய்வை மேற்கொள்வதற்கு 2015 ஆம் ஆண்டு முதல் கணக்காய்வாளர் திணைக்களம் பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சித்த போதிலும், இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக அந்தச் சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவிர்ப்பதற்குச் செயற்பட்டுள்ளது என்றும் குழு இங்கு சுட்டிக்காட்டியது. பொது நிதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் அரசாங்கத்தின் கணக்காய்விலிருந்து விலக முடியாது என்றும், அதற்கமைய அரசாங்கக் கணக்காய்வுக்குத் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கும் கணக்காய்வாளர் நாயகத்துக்கும் குழு அறிவித்தது. குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, நளின் பண்டார ஜயமஹ, எஸ்.எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான், சமிந்த விஜேசிறி, டி.வி. சானக, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (வைத்தியர்) எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா, அசித நிரோஷன எகொட விதான, (வைத்தியர்) பத்மநாதன் சத்யலிங்கம், திலின சமரக்கோன், சந்திம ஹெட்டியாராச்சி மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அத்துடன், வலுசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் மின்சார சபையின் தலைவர் (பேராசிரியர்) உதயங்க ஹேமபால உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2025-10-29
ஆறு மாடிக் கட்டடத்தின் நிர்மாணத்தில் மாகாணசபை அதிக சுமையை ஏற்கும் வகையில் ஒப்பந்தக்காரரினால் தயாரிக்கப்பட்ட நிர்மாணக் கொள்முதல் நடைமுறையைத் தெரிவுசெய்து – சாத்தியக்கூற்று அறிக்கையும் பெற்றுக்கொள்ளப்படவில்லை – கோபா குழு கேள்வி வடமேல் மாகாணசபை மற்றும் குருநாகல் மாநகரசபை ஆகியன இணைந்து ஆறுமாடிக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக கேள்விப் பத்திரங்களைக் கோரி ஒப்பந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்ததுடன், இது தொடர்பில் காணப்படும் மேற்பார்வை நடவடிக்கைகள் காரணமாக இந்தக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டிருப்பது அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) தெரியவந்தது. இதுபோன்ற கட்டடங்களை அமைப்பதற்கு முன்னர் சாத்தியக்கூற்று ஆய்வு அறிக்கை பெறவேண்டியிருக்கின்றபோதும் அவ்வாறான அறிக்கை பெற்றுக் கொள்ளப்படவில்லையென்பதும் இங்கு தெரியவந்தது. அத்துடன், விசேடமான வடிவமைப்பைக் கொண்ட கட்டுமானம் இன்றி, சாதாரண வகையிலான அலுவலகக் கட்டடத்தை அமைப்பதற்கு மேல்மாகாண சபை அதிக சுமையை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒப்பந்தகாரரினால் நிர்மாண கொள்முதல் நடைமுறை தெரிவுசெய்யப்பட்டிருப்பது பிரச்சினைக்குரியது என்பதும் கோபா குழுவினால் வலியுறுத்தப்பட்டது. வடமேல் மாகாணசபை தொடர்பான 2023, 2024ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 23) கூடியபோதே இந்த விடயங்கள் தெரியவந்தன. இதற்கமைய குறித்த கட்டுமானம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு மீண்டும் ஒருமுறை அதிகாரிகளை அழைப்பதற்கும், ஒரு மாத காலத்திற்குள் குறித்த கட்டடம் தொடர்பான பரிந்துரைகள், கொள்முதல் மற்றும் தொழில்நுட்பக் குழுக்களின் அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்கள் சகலவற்றையும் கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. மேலும், உணவு ஆணையாளர் திணைக்களத்தினால் வடமேல் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக அரசி உற்பத்தியாளர்களின் கூட்டுறவுச் சங்கத்திற்குப் பெற்றுக் கொடுக்கப்பட்ட கடன் மற்றும் தாமதக் கட்டணத்தை வசூலிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு கேட்கப்பட்டதுடன், இது தொடர்பான அறிக்கையொன்றை திகதிகள் குறிப்பிட்டு இரண்டு மாதங்களுக்குள் கோபா குழுவுக்கு அனுப்பிவைக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு அரச காணிகள் குறித்து முறையான பதிவேட்டைப் பேணுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள போதும், குறித்த பதிவேடு அரசாங்க காணிகள் யாவற்றையும் அடையாளம் காண்பது, நீண்டகால குத்தகைக்குக் கொடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்ட மற்றும் அனுமதியளிக்கப்படாத காணிகள், நிலுவையில் உள்ள குத்தகைத் தவணைகள் போன்ற விடயங்களை இலகுவில் கண்டறியக் கூடிய வகையில் இல்லாமை குறித்தும் குழு கேள்வியெழுப்பியது. அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய பணத்தை வசூலிக்க அதிகாரிகள் தயக்கம் காட்டக்கூடாது என்றும், கோபா குழு இதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது. இதற்கு அமைய, இந்த ஆண்டு இறுதிக்குள் வசூலிக்கப்பட வேண்டிய மொத்த தொகை குறித்து அறிக்கை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக, சுமார் 85 மில்லியன் ரூபாய் வசூலிக்கப்படாத வரித் தொகை இருப்பதாகவும், இது தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கோபா குழு அறிவுறுத்தியது. இக்கூட்டத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான அரவிந்த செனரத், மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருன ஜயசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, டி.கே. ஜயசுந்தர, ருவன்திலக ஜயக்கொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுத, சுனில் ரத்னசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-10-29
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் சீனாவின் யுனான் பிராந்தியத்தின் மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் உப தலைவரான யான் யாலின் அவர்களின் தலைமையிலான சீன பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையில் விவசாய அபிவிருத்தி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் (ஒக். 24) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் கௌரவ பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தேயிலை, கோப்பி மற்றும் புகையிலை பயிர்ச்செய்கை துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த கௌரவ பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஏற்கனவே நடத்தப்பட்டதாகவும், இந்தச் சந்திப்பானது சீனத் தூதுக்குழுவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்டது என்றும் தெரிவித்தார். அத்துடன், இலங்கையின் அபிவிருத்திச் செயன்முறையில் பல்வேறு கட்டங்களில் சீனாவால் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவை பாராட்டிய கௌரவ பிரதி அமைச்சர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவு தொடர்பிலும் விசேடமாகச் சுட்டிக்காட்டினார். இவ்வாறான உறவுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயமாக்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் பங்களிக்கும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். தேயிலை, கோப்பி மற்றும் புகையிலைத் தொழில்களின் அபிவிருத்தி குறித்து இரு தரப்பினரும் தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், நவீன தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறைந்து வரும் தொழிற்படை காரணமாக எழும் சவால்களைக் வெற்றிகொள்வதற்கும், தேயிலைப் பயிர்ச்செய்கையின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், மண்ணின் வளத்தை மேம்படுத்தவும், பயிர் விளைச்சலை அதிகரிக்கவும் நான்காம் தலைமுறை உரங்களைப் (fourth-generation fertilizers) பயன்படுத்துவது பொருத்தமானது என்று சீன தூதுக்குழுவினர் பரிந்துரைத்தனர். கோப்பி பயிர்ச்செய்கை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கடந்த தசாப்தத்தில் இலங்கையின் கோப்பித் தொழில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளது என்று இங்கு தெரிவிக்கப்பட்டதுடன், கோப்பி பயிர்ச்செய்கைக்காக நில ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தற்போது 5,000 ஹெக்டெயாருக்கும் அதிகமான பரப்பளவில் கோப்பி பயிரிடப்படுவதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அதனை 10,000 ஹெக்டெயாராக விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாககவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், இலங்கையின் புகையிலைத் தொழில் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், புகையிலை மூலப்பொருட்களுக்குப் பதிலாக பதப்படுத்தப்பட்ட, பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புக்களை சந்தைப்படுத்துவதன் மூலம் சர்வதேச சந்தைக்கு நுழைய முடியும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு தெரிவித்தனர். இலங்கையின் புகையிலைத் தொழில் இன்னும் சிறிய அளவிலான தொழிலாகவே காணப்படுவதாகவும், தொழிற்சாலைகளை மையமாகக் கொண்ட பாரிய அளவிலான தொழில்துறையாக அதனை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் சீனப் பிரதிநிதிகள் குழுவினர் சுட்டிக்காட்டினர். இந்தக் கூட்டத்தில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளடங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், சீனப் பிரதிநிதிகள் குழுவினர், பாராளுமன்றத்தின் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-10-27
"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சர்வதேச அனுபவத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கியின் பிரதிநிதிகள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் கடந்த ஒக். 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே ‘அஸ்வெசும திட்டம்’ குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், உலக வங்கியின் சமூகப் பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட பொருளாதார நிபுணர் பிரான்செஸ்கா லமன்னா (Francesca Lamanna) மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு நிபுணர் ஸ்ரீனிவாஸ் வரதன் ஆகியோரும் கலந்து கொண்டனர். சமூகப் பாதுகாப்புக்கான தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம், உண்மையிலேயே வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய தனிநபர்கள், குடும்பங்களை அடையாளம் காண முடியும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். பிரஜைகளின் தகவல்களை சமூகப் பாதுகாப்பு தரவுத்தளத்தில் உள்ளிடுவது அவர்களை அஸ்வெசும அல்லது பிற தொடர்புடைய சலுகைகளுக்கு தகுதியுடையவர்களாக மாற்றாது என்றும், உள்ளிடப்பட்ட தரவைச் சரிபார்க்க முடியும் என்றும், தொடர்புடைய சலுகைகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் என்றும் இந்தக் குழு வலியுறுத்தியது. இந்தச் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஒரு நாட்டிற்கு ஒரு உற்பத்தி முதலீடாகும், எனவே தரவுத்தளத்தைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். "அஸ்வெசும" சலுகைகளை வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். அதன்படி, கிராம ரீதியாக அமைக்கப்படும் குழுக்களின் மூலம் அஸ்வெசும பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து, சம்பந்தப்பட்ட கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர்களைக் காண்பிப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இங்கு கருத்துத் தெரிவித்த, "அஸ்வெசும" திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களுக்கு இந்தத் திட்டம் குறித்து போதுமான தகவல்கள் இல்லாததால் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் வகிபாகம் குறித்து முறையான தெளிவுபடுத்தல்களை வழங்குவதன் ஊடாக இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தத் தாம் ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்தனர். கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கி ஆலோசகர் ஷாலிகா சுபசிங்க மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.