பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-10-16
செய்தி வகைகள் : குழு செய்திகள்
அமைச்சுக்களின் செயலாளர்கள் மூவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அண்மையில் (08) அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கமைய, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளராக டீ.டபிள்யூ.ஆர்.பீ. செனவிரத்ன, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக எஸ். ஆலோகபண்டார மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளராக பி.கே.கே.கே. ஜினதாச ஆகியோரின் நியமனங்களுக்கு இவ்வாறு உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்தக் குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
2025-10-17
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ், இலக்கம் 2446/34 மற்றும் 2025.07.21 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஒழுங்குவிதிகள் எதிர்வரும் ஒக். 21 ஆம் திகதி பாராளுமன்றத்தின் அனுமதிக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக கெளரவ அமைச்சர் (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் அந்தக் குழு அண்மையில் (10) பாராளுமன்றத்தில் கூடியபோதே இது குறித்து பரிசீலனை செய்த பின்னர் அனுமதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம அவர்கள், 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின்படி மருந்துகளின் விலையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அந்த அதிகாரசபையிடமே உள்ளது என்று சுட்டிக்காட்டினார். இந்த ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் 2017 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டாலும், 2023 ஆம் ஆண்டில் மருந்து இறக்குமதி நிறுவனங்கள் ஒன்றிணைந்து தாக்கல் செய்த வழக்கு ஒன்றிற்கு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவு காரணமாக 2023 டிசம்பர் 22 ஆம் திகதி முதல் விலை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டி ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த ஒழுங்குபடுத்தும் முறைமை பிரசுரிக்கப்படாததே இந்த எதிர்ப்பிற்குக் காரணம் என்றும், அதற்கமைய, 2024 ஆகஸ்ட் மாதத்தில் இந்த ஒழுங்குபடுத்தும் முறைமையை வெளியிட்டு புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டாலும், அதுவும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியர் விஜேவிக்ரம குறிப்பிட்டார். அதற்கமைய, மீண்டும் 2025 ஜூலை 21 ஆம் திகதி 2446/34 ஆம் இலக்க வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். விலை நிர்ணயக் குழுவொன்றின் மூலம் விலை தீர்மானிக்கப்படுவதாகவும் இந்தக் குழு ஒவ்வொரு துறையைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்டது என்றும் மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் தலைவர் மேலும் தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இது தாமதமான வர்த்தமானி என்றும், மருந்து இறக்குமதியாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களுக்குப் பின்னரே இந்த ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்டன என்றும் சுட்டிக்காட்டினார். நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் பிரதேச வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகள், குறைபாடுகள் மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துறைகளில் உள்ள பல்வேறு விடயங்கள் இங்கு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கெளரவ சுகாதாரப் பிரதி அமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி, கெளரவ வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, குழுவின் உறுப்பினர்கள் உள்ளடங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் (விசேட வைத்தியர்) அனில் ஜாசிங்க உட்பட அந்த அமைச்சுக்குச் சொந்தமான நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2025-10-17
முறையான கட்டுமானங்களை மேற்கொள்ளாத 18 கட்டட உரிமையாளர்களிடமிருந்து நிறுவனத்திற்குச் சேர வேண்டிய நிதி இன்னும் அறவிடப்படவில்லை - கோப் குழு சுட்டிக்காட்டியது ஒப்பந்த அடிப்படையில் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதால், அதிகாரிகள் அடிக்கடி மாறுவதனால் நிறுவனத்தின் பொறுப்புக்கூறலில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் - கோப் குழு தெரிவிப்பு திறைசேரியின் அனுமதியின்றி வழங்கப்பட்ட பல கொடுப்பனவுகள் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிறுவன வளத் திட்டமிடல் முறைமை (ERP system) தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது எதிர்காலத்தில் ஒரு பொறுப்புள்ள நிறுவனமாக சதொச கட்டியெழுப்பப்பட வேண்டும் - கோப் தலைவர் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் முறையான கொள்வனவு நடைமுறைகளுக்கு முரணாக அரிசி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக லங்கா சதொசவிற்கு ரூ. 15,157,031,018 நஷ்டம் ஏற்பட்டதாக கோப் குழுவில் தெரியவந்தது. லங்கா சதொச லிமிடெட் நிறுவனத்தின் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்திறனை ஆராய்வதற்காக, பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 10) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயங்கள் புலப்பட்டன. 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்காக ரூ. 27,011,980,142 செலவிடப்பட்ட போதிலும், அந்த அரிசி கையிருப்பை விற்பனை செய்ததன் மூலம் ரூ. 11,854,949,124 மாத்திரமே வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என இதன்போது கோப் குழு சுட்டிக்காட்டியது. அதற்கமைய, உள்நாட்டு அரிசிச் சந்தை நிலைமை, நெல் அறுவடை மற்றும் அரிசிக்கான களஞ்சிய வசதிகள் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளாமல், முறையான கொள்வனவு நடைமுறைகளுக்கு முரணாக அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் சதொச நிறுவனத்திற்கு சுமார் ரூ. 15,157,031,018 நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் குழு சுட்டிக்காட்டியது. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டதா என்று அதிகாரிகளிடம் குழு வினவியபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சட்டமா அதிபர் திணைக்களத்திடம் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கு வழங்கியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், முறையான கட்டுமானங்களை மேற்கொள்ளாத 18 கட்டட உரிமையாளர்களிடமிருந்து நிறுவனத்திற்குச் சேர வேண்டிய நிதி இன்னும் அறவிடப்படவில்லை என்று கோப் குழு சுட்டிக்காட்டியது. கட்டடங்களை வாடகைக்கு எடுக்கும் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின்படி, எதிர்காலத்தில் கடைகள் ஆரம்பிக்கும் அனுமானத்தின் பேரில், கட்டடங்கள் இல்லாத வெற்று நிலங்களுக்கு முற்பணம் செலுத்தக்கூடாது என்றாலும், 2020 டிசம்பர் 31 ஆம் திகதிவரை 29 ஒப்பந்தங்களின் கீழ், மதிப்பீடு பெறப்படாமல், கட்டட நிர்மாணங்களுக்காக ரூ. 34,234,996 முற்பணமாகச் செலுத்தப்பட்டுள்ளது என்று குழு சுட்டிக்காட்டியது. அதற்கமைய, இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களில் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் கட்டுமானங்களை மேற்கொள்ளாத 18 நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக ரூ. 27,435,000 அறவிடுவதற்காக நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது என்று இதன்போது புலப்பட்டது. மேலும், அத்தியாவசிய பதவிகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் அதிகாரிகள் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய குழு, இந்தத் தற்காலிக ஆட்சேர்ப்பு காரணமாக அதிகாரிகள் அடிக்கடி மாறுவதால் நிறுவனத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று சுட்டிக்காட்டியது. அதற்கமைய, இந்த நிலைமை தற்போது புரிந்து கொள்ளப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இந்த நியமனங்களின் காலத்தை 5 ஆண்டுகள் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், தற்காலிக நியமனங்கள் உள்ளிட்ட வேறு சில நியமனங்களுக்காக திறைசேரியின் அனுமதியின்றி வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் குறித்தும் குழு இங்கு சுட்டிக்காட்டியதுடன், இந்த நிலைமைகளை முறைமைப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தியது. இதற்கு மேலதிகமாக, நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிறுவன வளத் திட்டமிடல் முறைமை (ERP system) தொடர்பான பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் இந்த முறைமையை விரிவுபடுத்துவதற்காக அதிக செலவு செய்யப்பட்ட போதிலும் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது. இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியதன் பின்னர், எதிர்காலத்தில் ஒரு பொறுப்புள்ள நிறுவனமாக சதொச கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று குழுவின் தலைவர் வலியுறுத்தினார். இதற்காக அதிகாரிகளின் அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லெப்டினன் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, சுதத் பலகல்ல, சந்திம ஹெட்டியாராச்சி, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, திலின சமரகோன், எம்.கே.எம். அஸ்லம் மற்றும் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-10-17
இளைஞர் தொழில்முனைவு குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உப குழு, இளைஞர்களிடையே திறமையான மற்றும் புதுமையான தொழில்முனைவோரை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டத்தை வகுப்பதற்கான விசேட குழுவொன்றை நியமித்தது. குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (ஒக். 09) பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி கௌரவ பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்கவும் கலந்துகொண்டார். அதற்கமைய, இளைஞர் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கான திட்டத்தைத் தயாரிக்கும் குழுவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, அரச வங்கிகள், நிதியமைச்சு உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர். இந்தக் குழு கூடி நாடளாவிய ரீதியில் இளைஞர் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கும், சிறந்த தொழில்முனைவோரைத் தெரிவுசெய்து அவர்களுக்கு ஒத்துழைப்பதற்கான வேலைத்திட்டத்தையும் தயாரிப்பார்கள் என குழுவின் தலைவர் குறிப்பிட்டார். தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கு தமது அமைச்சு ஏற்கனவே பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட கௌரவ பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்க, இளைஞர் தொழில்முனைவோருக்கான விசேட திட்டமொன்று தயாரிக்கப்படும் பட்சத்தில் அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க முடியும் என இங்கு தெரிவித்தார். அத்துடன், இளைஞர் தொழில்முனைவோர் தெரிவுசெய்யப்படும்போது அதற்கான அளவுகோல்கள் சரியானதாக இருக்க வேண்டும் என்றும், தொழில்முனைவு தொடர்பில் தெரிவுசெய்யப்படும் நபர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், ஏற்றுமதி சந்தையை நோக்காகக் கொண்டும், படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும் தொழில்முனைவுகள் ஆரம்பிக்கப்படுவதன் அவசியம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) வி.எஸ். ராதாகிருஷ்ணன், கிருஷ்ணன் கலைச்செல்வி, சானக மதுகொட, இஸ்மாயில் முத்து முகமது மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
2025-10-16
இந்த வழக்கில் ஆஜராவதற்காக ஒரு சட்டத்தரணிக்கு ஒரு அமர்வுக்கு ஒரு நாளைக்கு 6 இலட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நிதிப் பணிப்பாளரை அனைத்து நிலுவைச் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளுடன் மீண்டும் சேவையில் அமர்த்த நீதிமன்றம் உத்தரவு தனிப்பட்ட தேவைகளின் நிமித்தம் இந்தக் காலப்பகுதியில் அதிகாரிகளை அசௌகரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெளிவாகிறது - கோப் குழு 2021 ஆம் ஆண்டில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட நிதிப் பணிப்பாளர் ஒருவர் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக தாக்கல் செய்த வழக்குகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரசபையினால் 15.01 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கோப் குழுவில் புலப்பட்டது. இங்கு ஆஜரான அதிகாரிகளிடம் வினவியபோது, இந்த வழக்குகள் சம்பந்தமாக ஒரு சட்டத்தரணிக்கு ஒரு அமர்வுக்கு ஆஜராவதற்கு 6 இலட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரியவந்தது. ஆனால், இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, சம்பந்தப்பட்ட நிதிப் பணிப்பாளரை அனைத்து நிலுவைச் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளுடன் மீண்டும் சேவையில் அமர்த்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. எனினும், அதிகாரசபை மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாகவும், அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் இங்கு தெரியவந்தது. இது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இந்தக் காலப்பகுதியில் தனிப்பட்ட தேவைகளுக்காக அதிகாரிகளை அசௌகரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது என்று குழு சுட்டிக்காட்டியது. இதனால் பொது நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் குழு சுட்டிக்காட்டியது. நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்திறனைப் பரிசீலனை செய்வதற்கு பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (ஒக். 08) பாராளுமன்றத்தில் கூடியபோது இது தெரியவந்தது. அத்துடன், அதிகாரசபையின் பிரதான கட்டடத்தின் கூரையை திருத்துவதற்காக 5.59 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொறியியல் மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருந்த போதிலும், சம்பந்தப்பட்ட ஒரு பொறியியலாளரால் அது அங்கீகரிக்கப்படவில்லை என்று கோப் குழு சுட்டிக்காட்டியது. இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோது அதிகாரசபையிடம் போதுமான நிதி இருக்கவில்லை என்றும், இதனால் ஒப்பந்ததாரர் ஒருவரைக் தேடுவது கடினமாக இருந்தது என்றும் இங்கு ஆஜரான அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதனால் இந்தத் தொகைக்கு ஒரு ஒப்பந்ததாரரை மிக சிரமத்துடன் இணைத்துக்கொள்ள முடிந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனினும், குறைந்த தொகைக்கு ஒப்பந்ததாரரைத் தேடுவதற்கு நேர்ந்தாலும், அது அத்தியாவசியமான விடயம் என்று குழு சுட்டிக்காட்டியது. எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குழு அறிவுறுத்தியது. புதிய பணியாளர்கள் கட்டமைப்பை அங்கீகரிப்பது தொடர்பாகவும், தற்போதுள்ள அத்தியாவசிய பதவிகளுக்கான வெற்றிடங்கள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இதுவரை இருந்த தலைவர்கள் தனிப்பட்ட அபிலாஷைகளுடன் செயற்பட்டுள்ளனர் என்பதும், இதனால் நிறுவனம் செல்ல வேண்டிய சரியான திசையில் செல்லவில்லை என்பதும் தெளிவாகிறது என்று குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். எனவே, எதிர்காலத்தில் அந்தக் குறைபாடுகளைத் தவிர்த்து நிறுவனத்தின் அபிவிருத்திக்காக செயற்படுமாறு குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார். மேலும், நிறுவனத்தில் உள்ள நபர்கள் தொடர்பான உள்ளக விசாரணைகளை விரைவாக நிறைவு செய்யுமாறு அவர் பரிந்துரைத்தார். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, சுஜீவ சேனசிங்க, சமன்மலீ குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சுதத் பலகல்ல, சந்திம ஹெட்டியாராச்சி, திலின சமரகோன், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, தினேஷ் ஹேமந்த மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks