பார்க்க

E   |   සි   |  

2025-10-17

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மருந்து விலைகளை ஒழுங்குபடுத்தும் ஒழுங்குவிதிகள் உள்ளடங்கிய புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ், இலக்கம் 2446/34 மற்றும் 2025.07.21 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஒழுங்குவிதிகள் எதிர்வரும் ஒக். 21 ஆம் திகதி பாராளுமன்றத்தின் அனுமதிக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக கெளரவ அமைச்சர் (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் அந்தக் குழு அண்மையில் (10) பாராளுமன்றத்தில் கூடியபோதே இது குறித்து பரிசீலனை செய்த பின்னர் அனுமதி வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம அவர்கள், 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின்படி மருந்துகளின் விலையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அந்த அதிகாரசபையிடமே உள்ளது என்று சுட்டிக்காட்டினார். இந்த ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் 2017 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டாலும், 2023 ஆம் ஆண்டில் மருந்து இறக்குமதி நிறுவனங்கள் ஒன்றிணைந்து தாக்கல் செய்த வழக்கு ஒன்றிற்கு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவு காரணமாக 2023 டிசம்பர் 22 ஆம் திகதி முதல் விலை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டி ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த ஒழுங்குபடுத்தும் முறைமை பிரசுரிக்கப்படாததே இந்த எதிர்ப்பிற்குக் காரணம் என்றும், அதற்கமைய, 2024 ஆகஸ்ட் மாதத்தில் இந்த ஒழுங்குபடுத்தும் முறைமையை வெளியிட்டு புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டாலும், அதுவும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியர் விஜேவிக்ரம குறிப்பிட்டார். அதற்கமைய, மீண்டும் 2025 ஜூலை 21 ஆம் திகதி 2446/34 ஆம் இலக்க வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

விலை நிர்ணயக் குழுவொன்றின் மூலம் விலை தீர்மானிக்கப்படுவதாகவும் இந்தக் குழு ஒவ்வொரு துறையைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்டது என்றும் மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இது தாமதமான வர்த்தமானி என்றும், மருந்து இறக்குமதியாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களுக்குப் பின்னரே இந்த ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்டன என்றும் சுட்டிக்காட்டினார்.

நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் பிரதேச வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகள், குறைபாடுகள் மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துறைகளில் உள்ள பல்வேறு விடயங்கள் இங்கு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கெளரவ சுகாதாரப் பிரதி அமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி, கெளரவ வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, குழுவின் உறுப்பினர்கள் உள்ளடங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் (விசேட வைத்தியர்) அனில் ஜாசிங்க உட்பட அந்த அமைச்சுக்குச் சொந்தமான நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-10-22

நுண் நிதிக் கடன்களை மீளச் செலுத்த முடியாதவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

நுவரெலியா, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் நுண் நிதிக் கடன்களை மீளச்செலுத்த முடியாதவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்ஹ அவர்களின் தலைமையில் அண்மையில் (10) கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.  நாடு முழுவதிலும் நுண் நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்டவர்களின் நிலுவைத் தொகை உள்ளிட்ட தகவல்களைத் திரட்டுவதற்கு முன்னோடியாக நுவரெலியா, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் முறையே ஹட்டன், கோரளைப்பற்று தெற்கு, வெலிக்கந்தை மற்றும் வெள்ளவத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் தரவுகளைச் சேகரிக்கத் திட்டமிட்டிருப்பதாக உபகுழுவின் தலைவர் தெரிவித்தார். இதற்கு அமைய தகவல்களைத் திரட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கினார்.  நுண் நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பது அல்லது அவர்களை அந்தப் பிரச்சினையிலிருந்து மீட்டு எடுப்பதற்கான தலையீட்டை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் மேலும் கலந்துரையாட நுண் நிதிக் தொழில்துறையினர் சங்கத்தில் புதிவுசெய்யப்பட்ட 34 நிறுவனங்களையும் அழைத்துக் கலந்துரையாடலை நடத்துவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.  இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சி.எஸ் சத்துரி கங்கானி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) அனுஷ்கா திலகரத்ன, சுனில் ரத்னசிறி ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-10-22

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழற்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி; வரிக் கொள்கை, விவசாய உற்பத்தித்திறன் மற்றும் கடுமையான மதுவரிச் சேகரிப்புக் குறித்தும் அறிவுறுத்தல்

கௌவர பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (ஒக். 21) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில், 2025ஆம் ஆண்டு பெரும் போகத்தில் உள்நாட்டு விவசாயிகள் சிறந்த விலையைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில்  2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2451/10 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளை குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. விசேட பண்ட வரியை இரத்துச் செய்வது தொடர்பான திட்டம் இருந்தாலும் ஊழலுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் இருந்தபோதிலும், உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்து அதைப் பயன்படுத்துகிறது என்பது இங்கு குறிப்பிடப்பட்டது. இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோவிற்கு ரூ. 10 (ரூ. 40 முதல் ரூ. 50 வரை) மற்றும் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் ஒரு கிலோவிற்கு ரூ. 20 (ரூ. 60 முதல் ரூ. 80 வரை) அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஓகஸ்ட் 26, 2025 முதல் அமலுக்கு வருகிறது. இலங்கையின் வரிக்கட்டமைப்பு ஸ்திரமானதாகவும், எளிமையானதாகவும், வெளிப்படைத் தன்மை மிக்கதாகவும், வர்த்தகர்களால் கணிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு வர்த்தக அமைச்சுக்கும், நிதி அமைச்சுக்கும் தற்போதுள்ள சட்டங்களை தேசிய வரிக் கொள்கையுடன் ஒருங்கிணைத்து விரிவாக நடைமுறைப்படுத்துமாறு குழு பரிந்துரைத்தது. 2027 முதல் 2030 வரையிலான கடுமையான நான்கு-வரிசை இறக்குமதி வரி திருத்தம் மற்றும் பாரா கட்டணங்களைப் படிப்படியாக நீக்குதல் உள்ளிட்ட முன்மொழியப்பட்ட வரி மறுசீரமைப்புக்களின் தாக்கங்கள் குறித்த முழுமையான மதிப்பீட்டை நடத்துமாறும் குழு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. 2026 மார்ச் மாத இறுதிக்கு முன்னர் இதன் முன்னேற்றத்தை அறிவிக்குமாறும் குழு வலியுறுத்தியது. பருவகாலத்திற்கான வரிகளில் தங்கியிருக்காது, ஐந்து வருட காலத்திற்குள் ஒட்டுமொத்த பெரிய வெங்காயத்தின் அறுவடையை அதிகரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழு, கமநலத் திணைக்களத்திற்குப் பரிந்துரைத்தது. "பிரபாஷ்வர" போன்ற ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் களஞ்சியங்கள் மூலம் கொள்முதல்  ஒப்பந்தங்கள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கும் விவசாயிகளுக்கு விலைகளை நிலைப்படுத்துவதற்கும் எதிர்கால ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இது இருக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது. மேலும், மதுவரி உற்பத்திக்கான வரிக் கொடுப்பனவுடன் தொடர்புபட்ட மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான (அத்தியாயம் 52) விதிகள் குறித்தும் குழு மதிப்பாய்வு செய்ததுடன் அனுமதி வழங்கியது. இந்தப் புதிய விதிகள் பணம் செலுத்தாதவர்களின் உற்பத்தியை 30 நாட்களின் பின்னரும், விநியோகத்தை 90 நாட்களின் பின்னரும் நிறுத்தும். புதிய விதிகள் 30 நாட்களுக்குப் பிறகு பணம் செலுத்தாதவர்களின் உற்பத்தியை நிறுத்தும் மற்றும் 90 நாட்களுக்குப் பிறகு அனைத்து விநியோகம் மற்றும் விற்பனையையும் நிறுத்தும். தற்பொழுது காணப்படும் முறைக்கு அமைய பணம் செலுத்தாதவர்களிடமிருந்து  3% வட்டி அபராதம் விதிக்கப்படுகின்றமை போதுமானதாக இல்லையென்பதால் குறித்த விதி பண அறவீட்டுக்கான அமுலாக்கத்தை வலுப்படுத்துவதாக அமைகின்றது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, அர்கம்  இலியாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, சித்ரால் பெர்னாந்து, (சட்டத்தரணி) விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரக்கேன், சம்பிக்க ஹெட்டிஆரச்சி மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.எ.விமலேந்திரராஜா, வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்ளைககள் திணைக்களம், மதுவரித் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-10-17

இளைஞர் தொழில்முனைவோரை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதற்கு கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உபகுழுவினால் விசேட குழு நியமனம்

இளைஞர் தொழில்முனைவு குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உப குழு, இளைஞர்களிடையே திறமையான மற்றும் புதுமையான தொழில்முனைவோரை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டத்தை வகுப்பதற்கான விசேட குழுவொன்றை நியமித்தது.  குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (ஒக். 09) பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி கௌரவ பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்கவும் கலந்துகொண்டார். அதற்கமைய, இளைஞர் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கான திட்டத்தைத் தயாரிக்கும் குழுவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, அரச வங்கிகள், நிதியமைச்சு உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர். இந்தக் குழு கூடி நாடளாவிய ரீதியில் இளைஞர் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கும், சிறந்த தொழில்முனைவோரைத் தெரிவுசெய்து அவர்களுக்கு ஒத்துழைப்பதற்கான வேலைத்திட்டத்தையும் தயாரிப்பார்கள் என குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.  தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கு தமது அமைச்சு ஏற்கனவே பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட கௌரவ பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்க, இளைஞர் தொழில்முனைவோருக்கான விசேட திட்டமொன்று தயாரிக்கப்படும் பட்சத்தில் அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க முடியும் என இங்கு தெரிவித்தார். அத்துடன், இளைஞர் தொழில்முனைவோர் தெரிவுசெய்யப்படும்போது அதற்கான அளவுகோல்கள் சரியானதாக இருக்க வேண்டும் என்றும், தொழில்முனைவு தொடர்பில் தெரிவுசெய்யப்படும் நபர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.  மேலும், ஏற்றுமதி சந்தையை நோக்காகக் கொண்டும், படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும் தொழில்முனைவுகள் ஆரம்பிக்கப்படுவதன் அவசியம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) வி.எஸ். ராதாகிருஷ்ணன், கிருஷ்ணன் கலைச்செல்வி, சானக மதுகொட, இஸ்மாயில் முத்து முகமது மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


2025-10-17

முறையான கொள்வனவு நடைமுறைகளுக்கு முரணாக 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக லங்கா சதொசவிற்கு ரூ. 15,157,031,018 நஷ்டம் - கோப் குழுவில் புலப்பட்டது

முறையான கட்டுமானங்களை மேற்கொள்ளாத 18 கட்டட உரிமையாளர்களிடமிருந்து நிறுவனத்திற்குச் சேர வேண்டிய நிதி இன்னும் அறவிடப்படவில்லை - கோப் குழு சுட்டிக்காட்டியது  ஒப்பந்த அடிப்படையில் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதால், அதிகாரிகள் அடிக்கடி மாறுவதனால் நிறுவனத்தின் பொறுப்புக்கூறலில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் - கோப் குழு தெரிவிப்பு  திறைசேரியின் அனுமதியின்றி வழங்கப்பட்ட பல கொடுப்பனவுகள் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிறுவன வளத் திட்டமிடல் முறைமை (ERP system) தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது எதிர்காலத்தில் ஒரு பொறுப்புள்ள நிறுவனமாக சதொச கட்டியெழுப்பப்பட வேண்டும் - கோப் தலைவர்   2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் முறையான கொள்வனவு நடைமுறைகளுக்கு முரணாக அரிசி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக லங்கா சதொசவிற்கு ரூ. 15,157,031,018 நஷ்டம் ஏற்பட்டதாக கோப் குழுவில் தெரியவந்தது. லங்கா சதொச லிமிடெட் நிறுவனத்தின் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்திறனை ஆராய்வதற்காக, பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 10) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயங்கள் புலப்பட்டன.  2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்காக ரூ. 27,011,980,142 செலவிடப்பட்ட போதிலும், அந்த அரிசி கையிருப்பை விற்பனை செய்ததன் மூலம் ரூ. 11,854,949,124 மாத்திரமே வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என இதன்போது கோப் குழு சுட்டிக்காட்டியது. அதற்கமைய, உள்நாட்டு அரிசிச் சந்தை நிலைமை, நெல் அறுவடை மற்றும் அரிசிக்கான களஞ்சிய வசதிகள் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளாமல், முறையான கொள்வனவு நடைமுறைகளுக்கு முரணாக அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் சதொச நிறுவனத்திற்கு சுமார் ரூ. 15,157,031,018 நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் குழு சுட்டிக்காட்டியது. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டதா என்று அதிகாரிகளிடம் குழு வினவியபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சட்டமா அதிபர் திணைக்களத்திடம் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கு வழங்கியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், முறையான கட்டுமானங்களை மேற்கொள்ளாத 18 கட்டட உரிமையாளர்களிடமிருந்து நிறுவனத்திற்குச் சேர வேண்டிய நிதி இன்னும் அறவிடப்படவில்லை என்று கோப் குழு சுட்டிக்காட்டியது. கட்டடங்களை வாடகைக்கு எடுக்கும் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின்படி, எதிர்காலத்தில் கடைகள் ஆரம்பிக்கும் அனுமானத்தின் பேரில், கட்டடங்கள் இல்லாத வெற்று நிலங்களுக்கு முற்பணம் செலுத்தக்கூடாது என்றாலும், 2020 டிசம்பர் 31 ஆம் திகதிவரை 29 ஒப்பந்தங்களின் கீழ், மதிப்பீடு பெறப்படாமல், கட்டட நிர்மாணங்களுக்காக ரூ. 34,234,996 முற்பணமாகச் செலுத்தப்பட்டுள்ளது என்று குழு சுட்டிக்காட்டியது. அதற்கமைய, இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களில் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் கட்டுமானங்களை மேற்கொள்ளாத 18 நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக ரூ. 27,435,000 அறவிடுவதற்காக நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது என்று இதன்போது புலப்பட்டது.  மேலும், அத்தியாவசிய பதவிகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் அதிகாரிகள் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய குழு, இந்தத் தற்காலிக ஆட்சேர்ப்பு காரணமாக அதிகாரிகள் அடிக்கடி மாறுவதால் நிறுவனத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று சுட்டிக்காட்டியது. அதற்கமைய, இந்த நிலைமை தற்போது புரிந்து கொள்ளப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இந்த நியமனங்களின் காலத்தை 5 ஆண்டுகள் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.  அத்துடன், தற்காலிக நியமனங்கள் உள்ளிட்ட வேறு சில நியமனங்களுக்காக திறைசேரியின் அனுமதியின்றி வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் குறித்தும் குழு இங்கு சுட்டிக்காட்டியதுடன், இந்த நிலைமைகளை முறைமைப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தியது. இதற்கு மேலதிகமாக, நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிறுவன வளத் திட்டமிடல் முறைமை (ERP system) தொடர்பான பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் இந்த முறைமையை விரிவுபடுத்துவதற்காக அதிக செலவு செய்யப்பட்ட போதிலும் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது. இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியதன் பின்னர், எதிர்காலத்தில் ஒரு பொறுப்புள்ள நிறுவனமாக சதொச கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று குழுவின் தலைவர் வலியுறுத்தினார். இதற்காக அதிகாரிகளின் அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லெப்டினன் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, சுதத் பலகல்ல, சந்திம ஹெட்டியாராச்சி, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, திலின சமரகோன், எம்.கே.எம். அஸ்லம் மற்றும் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks