பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-10-24
செய்தி வகைகள் : குழு செய்திகள்
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் நேற்று (ஒக். 23) கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நிதி அமைச்சின் அதிகாரிகள், 2026ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஒவ்வொரு துறைக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்த விபரங்களை முன்வைத்தனர். இவ்விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
2025-10-23
வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அவசர கொள்முதல் மற்றும் வருடாந்த எதிர்காலத் திட்டம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதில் குறிப்பாக 2022ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற கேள்விப் பத்திரம் கோரல் நடைமுறை மற்றும் 2022ஆம் ஆண்டின் பின்னர் குறித்த கேள்விப்பத்திர நடைமுறையில் ஒவ்வொரு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து குழு கவனம் செலுத்தியது. உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையில் அண்மையில் (ஒக். 17) கூடியபோதே இவ்விடயம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் வலுசக்தி அமைச்சு, வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனம், இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபை மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு 2022 ஆம் ஆண்டுக்கு முன்பு அவசர கொள்முதல்கள் மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியதுடன், அவசர கொள்முதல்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் கொண்ட முழுமையான அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்திடம் தற்பொழுது காணப்படும் இருப்புக்கள் போதுமான நாட்கள் மற்றும் அதன் பின்னர் எதிர்காலத்தில் கொள்முதல் செய்யவிருக்கும் நிலக்கரியின் அளவு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார, ஜகத் விதான மற்றும் அசித நிரோஷன எகொட விதான ஆகியோர் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2025-10-23
2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அமைச்சுக்கள் சிலவற்றுக்கான முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் மற்றும் 2025.12.31 வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் குறித்து சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 21) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் மற்றும் 2025.12.31 வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது. இங்கு குழுவில் உரையாற்றிய அதன் தலைவர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகளை அந்தந்த அமைச்சுகள் செலவிடுதல் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பான அனைத்து விடயங்களையும் குழுவால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்கமைய, தனது குழுவின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுகள் தொடர்பான விடயங்களும் இவ்வாறு ஆராயப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அதற்கமைய, அந்தந்த அமைச்சுக்களுக்கு வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அவற்றைச் செலவு செய்ததன் முன்னேற்றம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அத்தியாவசியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் குழுவிற்கு அறிக்கைகளை வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறீநேசன், ரொஷான் அக்மீமன, சதுரி கங்காணி, சுசந்த குமார நவரத்ன, கிட்ணன் செல்வராஜ், (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத், சுதத் பலகல்ல, சித்ரால் பெர்னாண்டோ, ஜே.சி. அளவதுவல, சுஜீவ சேனசிங்க, உபுல் கித்சிறி மற்றும் எம்.எஸ். உதுமாலெப்பெ ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-10-22
நுவரெலியா, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் நுண் நிதிக் கடன்களை மீளச்செலுத்த முடியாதவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்ஹ அவர்களின் தலைமையில் அண்மையில் (10) கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. நாடு முழுவதிலும் நுண் நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்டவர்களின் நிலுவைத் தொகை உள்ளிட்ட தகவல்களைத் திரட்டுவதற்கு முன்னோடியாக நுவரெலியா, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் முறையே ஹட்டன், கோரளைப்பற்று தெற்கு, வெலிக்கந்தை மற்றும் வெள்ளவத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் தரவுகளைச் சேகரிக்கத் திட்டமிட்டிருப்பதாக உபகுழுவின் தலைவர் தெரிவித்தார். இதற்கு அமைய தகவல்களைத் திரட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கினார். நுண் நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பது அல்லது அவர்களை அந்தப் பிரச்சினையிலிருந்து மீட்டு எடுப்பதற்கான தலையீட்டை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் மேலும் கலந்துரையாட நுண் நிதிக் தொழில்துறையினர் சங்கத்தில் புதிவுசெய்யப்பட்ட 34 நிறுவனங்களையும் அழைத்துக் கலந்துரையாடலை நடத்துவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சி.எஸ் சத்துரி கங்கானி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) அனுஷ்கா திலகரத்ன, சுனில் ரத்னசிறி ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-10-22
கௌவர பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (ஒக். 21) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில், 2025ஆம் ஆண்டு பெரும் போகத்தில் உள்நாட்டு விவசாயிகள் சிறந்த விலையைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2451/10 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளை குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. விசேட பண்ட வரியை இரத்துச் செய்வது தொடர்பான திட்டம் இருந்தாலும் ஊழலுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் இருந்தபோதிலும், உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்து அதைப் பயன்படுத்துகிறது என்பது இங்கு குறிப்பிடப்பட்டது. இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோவிற்கு ரூ. 10 (ரூ. 40 முதல் ரூ. 50 வரை) மற்றும் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் ஒரு கிலோவிற்கு ரூ. 20 (ரூ. 60 முதல் ரூ. 80 வரை) அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஓகஸ்ட் 26, 2025 முதல் அமலுக்கு வருகிறது. இலங்கையின் வரிக்கட்டமைப்பு ஸ்திரமானதாகவும், எளிமையானதாகவும், வெளிப்படைத் தன்மை மிக்கதாகவும், வர்த்தகர்களால் கணிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு வர்த்தக அமைச்சுக்கும், நிதி அமைச்சுக்கும் தற்போதுள்ள சட்டங்களை தேசிய வரிக் கொள்கையுடன் ஒருங்கிணைத்து விரிவாக நடைமுறைப்படுத்துமாறு குழு பரிந்துரைத்தது. 2027 முதல் 2030 வரையிலான கடுமையான நான்கு-வரிசை இறக்குமதி வரி திருத்தம் மற்றும் பாரா கட்டணங்களைப் படிப்படியாக நீக்குதல் உள்ளிட்ட முன்மொழியப்பட்ட வரி மறுசீரமைப்புக்களின் தாக்கங்கள் குறித்த முழுமையான மதிப்பீட்டை நடத்துமாறும் குழு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. 2026 மார்ச் மாத இறுதிக்கு முன்னர் இதன் முன்னேற்றத்தை அறிவிக்குமாறும் குழு வலியுறுத்தியது. பருவகாலத்திற்கான வரிகளில் தங்கியிருக்காது, ஐந்து வருட காலத்திற்குள் ஒட்டுமொத்த பெரிய வெங்காயத்தின் அறுவடையை அதிகரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழு, கமநலத் திணைக்களத்திற்குப் பரிந்துரைத்தது. "பிரபாஷ்வர" போன்ற ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் களஞ்சியங்கள் மூலம் கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கும் விவசாயிகளுக்கு விலைகளை நிலைப்படுத்துவதற்கும் எதிர்கால ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இது இருக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது. மேலும், மதுவரி உற்பத்திக்கான வரிக் கொடுப்பனவுடன் தொடர்புபட்ட மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான (அத்தியாயம் 52) விதிகள் குறித்தும் குழு மதிப்பாய்வு செய்ததுடன் அனுமதி வழங்கியது. இந்தப் புதிய விதிகள் பணம் செலுத்தாதவர்களின் உற்பத்தியை 30 நாட்களின் பின்னரும், விநியோகத்தை 90 நாட்களின் பின்னரும் நிறுத்தும். புதிய விதிகள் 30 நாட்களுக்குப் பிறகு பணம் செலுத்தாதவர்களின் உற்பத்தியை நிறுத்தும் மற்றும் 90 நாட்களுக்குப் பிறகு அனைத்து விநியோகம் மற்றும் விற்பனையையும் நிறுத்தும். தற்பொழுது காணப்படும் முறைக்கு அமைய பணம் செலுத்தாதவர்களிடமிருந்து 3% வட்டி அபராதம் விதிக்கப்படுகின்றமை போதுமானதாக இல்லையென்பதால் குறித்த விதி பண அறவீட்டுக்கான அமுலாக்கத்தை வலுப்படுத்துவதாக அமைகின்றது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, அர்கம் இலியாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, சித்ரால் பெர்னாந்து, (சட்டத்தரணி) விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரக்கேன், சம்பிக்க ஹெட்டிஆரச்சி மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.எ.விமலேந்திரராஜா, வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்ளைககள் திணைக்களம், மதுவரித் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks