E   |   සි   |  

2025-11-07

செய்தி வகைகள் : செய்திகள் 

கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் நிதி அமைச்சர் என்ற ரீதியில் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீ்ட்டை (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இன்று (நவ. 07) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

இன்று பி.ப 1.30 மணிக்கு வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டுடன் கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து சம்பிரதாய பூர்வமாக படைக்கல சேவிதர் அழைத்துவர சபா மண்டபத்திற்கு வருகை தந்ததுடன் பி.ப 5.50 மணிவரை வரவுசெலவுத்திட்ட உரையை முன்வைத்தார்.

புதிய அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத்திட்டமான இது சுதந்திர இலங்கையின் 80வது வரவுசெலவுத்திட்டமாக வரலாற்றில் பதிவாகிறது. வெளிநாட்டுத் தூதுவர்கள், ஆளுநர்கள், உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள், நீதிபதிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 6 நாட்கள் இடம்பெறும். அதன்பின்னர் நவம்பர் 14 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.  

இதனைத் தொடர்ந்து, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலையின் போதன விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 3 சனிக்கிழமை தினங்கள் உள்ளடங்கலாக 17 நாட்கள் நடைபெறவுள்ளது. அதனையடுத்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறும்.



தொடர்புடைய செய்திகள்

2025-11-07

தலைவர் என்பவர் அதிகாரத்தை அனுபவிப்பவர் அல்ல, மாறாகத் தனது சமூகத்திற்காக சேவை செய்பவர் மாத்திரமே – கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர

தலைவர்கள் என்பவர்கள் அதிகாரத்தை அனுபவிப்பவர்கள் அல்ல, மாறாகத் தமது நாட்டுக்கும் தமது சமூகத்திற்கும் சேவையாற்றுபவர் மாத்திரமேயாகும். அதிகாரம் என்பது அலங்காரத்திற்கானது அல்ல, மக்கள் கூட்டமொன்றின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் கருவியாகும் என்பதை எந்தவொரு தலைவரும் மனதில் கொள்ள வேண்டும் என கிரில்லவெல வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தெரிவித்தார். ஜனநாயக ரீதியாகவும் சட்டத்தை மதிக்கும் வகையிலும் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும், மற்றவர்களுக்குச் செவிசாய்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் கடந்த ஒக். 31ஆம் திகதி நடைபெற்ற கிரில்லவெல மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன், சர்வதேச மட்டத்தில் மாணவர் பாராளுமன்றங்கள் செயற்படும் விதம் தொடர்பில் விளக்கமளித்த குழுக்களின் பிரதித் தவிசாளர், இந்த நாட்டில் மாணவர் பாராளுமன்றங்கள் மூலம் தங்கள் பாடசாலைகளுக்கு மாத்திரமல்ல, முழு சமூகத்திற்கும் பயனளிக்கும் மாற்றங்களைச் செய்வதற்கான திட்டங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டினார். மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வையடுத்து சபாநாயகர் மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் பாடசாலையில் செயல்படுத்த விரும்பும் திட்டங்கள் உள்ளிட்ட முன்மொழிவுகளை முன்வைத்தனர். இங்கு உரையாற்றிய பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா, மாணவர் பாராளுமன்றங்கள் மாணவர்களின் ஆளுமைகள் மற்றும் திறமைகளை வளர்ப்பதில் பெரும் உதவியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், பாராளுமன்ற சட்டவாக்க நடைமுறைகள் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்தும் அவர் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் ஏனைய விருந்தினர்களால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்  சுபாஷ் ரோஷன் கமகே, ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, கிரில்லவல மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.டபிள்யூ.எம்.ஏ. பண்டார வீரசிங்க மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-06

2026 வரவுசெலவுத்திட்டம் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் நாளை (நவ. 07) பி.ப. 1.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படும்

வரவுசெலவுத்திட்ட விவாதம் நவம்பர் 8 முதல் டிசமபர் 5 வரை 23 நாட்கள் இடம்பெறும்  இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 8 முதல் 14 வரை - இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு  குழுநிலையின் போதன விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை - மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு   2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டை (வரவுசெலவுத்திட்ட உரை/ வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்) நாளை (நவ. 07) பி.ப. 1.30 மணிக்கு நிதி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் கௌரவ ஜனாதிப அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.  அதனையடுத்து ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான முழுமையான விவாதம் (வரவுசெலவுத்திட்ட விவாதம்) 2025 நவம்பர் 8 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.  2025 செப்டம்பர் 26 ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 6 நாட்கள் இடம்பெறும். அதன்பின்னர் நவம்பர் 14 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.  2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலையின் போதன விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 3 சனிக்கிழமை தினங்கள் உள்ளடங்கலாக 17 நாட்கள் நடைபெறவுள்ளது. அதனையடுத்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறும்.  இக்காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத்திட்ட விவாதம் இடம்பெறும். அத்துடன், குழுநிலை விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் திங்கட்கிழமைகளில் மு.ப 9.30 மணிக்கும், ஏனைய நாட்களில் மு.ப 9.00 மணிக்கும் பாராளுமன்றம் கூடவுள்ளது. அதற்கமைய, இக்காலப் பகுதியில் ஒவ்வொரு நாளும் நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு மேலதிகமாக வாய்மூல விடைக்கான ஐந்து கேள்விகள் மற்றும் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்வி ஒன்றுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இக்காலப் பகுதியில் பி.ப 6.00 மணிவரையும் வரவுசெலவுத்திட்ட விவாதத்தை நடத்துவதற்கும், வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்கள் தவிர்ந்த ஏனைய தினங்களில் பி.ப 6.00 மணி முதல் 6.30 மணிவரையான காலப்பகுதி ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு 50:50 என்ற அடிப்படையில் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைகள் தொடர்பான விவாதத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


2025-11-03

ஊவா மாகாணத்தில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஜனாதிபதி நிதியத்தால் கெளரவிப்பு

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும்   ஊவா மாகாண நிகழ்ச்சித் திட்டம்  கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (02) பதுளை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் 1-10 இடங்களைப் பெற்ற 240 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வீதம் ஊக்குவிப்புக் கொடுப்பனவு  மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியத்தால் 24 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே வரவேற்புரை நிகழ்த்தியதோடு நோக்கத்தையும்  தெளிவுபடுத்தினார். நிகழ்வில் உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, தற்போதைய அரசாங்கம் கல்வியில் மிகப்பெரிய முதலீட்டைச் செய்து வருவதாகவும், ஒரு நாட்டில் கல்வியில் முதலீடு செய்வது போன்ற முக்கியமான மற்றும் மதிப்புமிக்க முதலீடு எதுவும் இல்லை என்றும் கூறினார். குழந்தைகள் பெறும் கல்வி மூலம் நாட்டிற்கு சேவை செய்தால், அந்த முதலீட்டின் பலனை நாடு அடைய  முடியும் என்று சபாநாயகர் தெரிவித்தார் . அவர் மேலும் குறிப்பிடுகையில், கல்வி மூலம் கல்வி ஞானமுள்ளவர்களாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.ஒரு புத்திசாலி ஒருபோதும் அணுகுண்டை உருவாக்க மாட்டார்.கல்வி கற்றவனாகி இருந்து ஏமாற்றினால், அந்தக் கல்வியில் எந்த மதிப்பும் இல்லை.அந்த இடத்தில் ஞானம் இல்லை,கல்வி மட்டுமே உள்ளது. எனவே, உங்கள் கல்வி நாட்டிற்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்பட்டால், உங்கள் பெற்றோர் உங்களை வளர்க்க வழங்கிய போசாக்கான சாப்பாட்டிற்கு நியாயம் கிடைக்கும் என்றார். நிகழ்வில் உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ அமைச்சர் சமந்த வித்யாரத்ன, புதிய அரசாங்க எண்ணக்கருவின் படி பிள்ளைகளின் வாழ்க்கையை வலுப்படுத்த இதுபோன்ற பங்களிப்பைச் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறினார். இந்த வாய்ப்பை வழங்கிய ஜனாதிபதி நிதியத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், இந்த நாட்டில் கல்வி பெறும் குழந்தைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் ஜனாதிபதி நிதியம் நிறுவப்பட்டது. தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்தை நெறிப்படுத்தும் நோக்கில் பிராந்திய மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. எனவே, தகுதியான பயனாளிகள் தற்போது நிதியத்தின் நன்மைகளைப் பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார். இதேவேளை, ஜனாதிபதி நிதியத்தை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவது குறித்த  விசேட ஒரு நாள் செயலமர்வு கடந்த 01ஆம் திகதி பதுளையில் நடைபெற்றது. இதில்  ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் விடயத்திற்குப் பொறுப்பான  அலுவலர்கள் பங்கேற்றனர். சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சுதத் பலகல்ல, சட்டத்தரணி சரத் குமார, பதுளை மேயர் பந்துல ஹபுகொட, ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்ன, பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேரத்ன, மொனராகலை மாவட்ட செயலாளர் ஏ.ஜி. நிஷாந்த, அரச அதிகாரிகள் மற்றும் புலமைப்பரிசில் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


2025-10-31

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புத் தொடர்பில் சபாநாயகரின் தலைமையில் கலந்துரையாடல்

எதிர்க்கட்சி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில், பொலிஸ்மா அதிபர் (சட்டத்தரணி) பிரியந்த வீரசூரிய அவர்களின் பங்கேற்புடன் இன்று (ஒக். 31) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.  இதில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், எதிர்க்கட்சியிலுள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கௌரவ சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். பாதுகாப்பு வழங்குமாறு ஏற்கனவே கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் அனைத்துக் கோரிக்கைகளுக்கும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருப்பதாக கௌரவ சபாநாயகர் இங்கு குறிப்பிட்டார். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்திருந்தாலும், அதற்கும் அப்பால் சென்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதற்கு அமைய சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன், இன்றையதினம் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் கௌரவ சபாநாயகர் பொலிஸ்மா அதிபருக்குத் தெரியப்படுத்தினார். இங்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ்மா அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் கோரிக்கை குறித்து கௌரவ சபாநாயகர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்குத் தெரியப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தமது அரசியல் செயற்பாடுகளை எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பான சூழலில் முன்னெடுத்துச் செல்வதற்கு சகல எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முதலில் பாதுகாப்பை வழங்குமாறும், அதன் பின்னர் அச்சுறுத்தல் குறித்த மதிப்பாய்வை மேற்கொண்டு அதன் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகளை எடுக்குமாறும் இன்றை கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இக்கூட்டத்தில் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன மற்றும் இலங்கை பொலிஸின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks