பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக தெரிவுக்குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டிருப்பதாக கௌரவ சபாநாயகர் சபையில் அறிவிப்பு
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதால், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக அவர்கள் அக்குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளார் என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (நவ. 19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அத்துடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 116 இன் ஏற்பாடுகள் மற்றும் 2025 மார்ச் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பவற்றின் பிரகாரம் நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காகவும், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 இன் ஏற்பாடுகள் மற்றும் 2025 மார்ச் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பவற்றின் பிரகாரம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றுவதற்காகவும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா அவர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கௌரவ சபாநாயகர் அறிவித்தார்.
மேலும், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 இன் ஏற்பாடுகள் மற்றும் 2025 மார்ச் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பவற்றின் பிரகாரம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றுவதற்காக, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து அவர்கள், மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 இன் ஏற்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றுவதற்காக, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி ஆகியோர் தெரிவுக்குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.
2025-11-19
இலங்கை பாராளுமன்றத்தின் தூதுக்குழு 2025 ஒக்டோபர் 23 ஆம் திகதி ஜெனிவாவில் நடந்த 151வது சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் (IPU) மாநாட்டில் நடைபெற்ற பாலின சமத்துவம் குறித்த கூட்டத்தில் பங்கேற்றது. IPU இன் பாலின கூட்டாண்மைத் திட்டத்தின் (Gender Partnership Programme) கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில், பாராளுமன்றங்களுக்கிடையே பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதில் உள்ள அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் சவால்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் பெனின், பூட்டான், புர்கினா பாசோ, சாட், காம்பியா, நமீபியா, சியரா லியோன், இலங்கை, துருக்கி மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஒஷானி உமங்கா அவர்கள் இங்கு உரையாற்றியதுடன், 2024 இல் நாட்டில் ஏற்பட்ட வரலாற்று ரீதியான மாற்றத்தைத் தொடர்ந்து, பெண்களின் அரசியல் பங்கேற்பை அதிகரிப்பதில் இலங்கையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் வகையிலான ஊக்கமளிக்கும் உரையை அவர் நிகழ்த்தினார். இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட அரசியல் பின்னணியை வடிவமைப்பதில் பெண்கள் ஆற்றிய முக்கியப் பங்கை அவர் வலியுறுத்தியதுடன், ஒரு தேர்தலில் பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவத்தை சுமார் 5% இலிருந்து 10% ஆக குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்திய "பெண்கள் நாம் ஒன்றாக" என்ற நாடு தழுவிய இயக்கம் பற்றிய விடயங்களையும் பகிர்ந்து கொண்டார். "இலங்கையின் கதை ஒரு எளிய உண்மைக்குச் சான்றாகும்: பெண்கள் வலுவூட்டப்பட்டால், முழு நாடும் உயரும். எந்தக் கனவும் மிகப் பெரியதல்ல, எந்தப் பதவியும் எட்ட முடியாததல்ல என்ற ஒரு தெளிவான செய்தியை எங்கள் மகள்களுக்கும், உலகிற்கும் நாங்கள் அனுப்புகிறோம்." என்று பாராளுமன்ற உறுப்பினர் ஒஷானி உமங்கா அவர்கள் தனது உரையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இலங்கைத் தூதுக்குழுவில் கலந்துகொண்டதுடன், அவரது பங்கேற்பு இலங்கையின் மிக உயர்ந்த சட்டமியற்றும் நிறுவனத்துக்குள் பெண்களின் வளர்ந்து வரும் தலைமைத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. இலங்கைத் தூதுக்குழுவின் பங்களிப்பை IPU பாராட்டியதுடன், பாராளுமன்றங்களில் பாலின சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் அணுகல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியில் இலங்கையின் செயற்பாட்டு ரீதியான பங்கை அங்கீகரித்து, ஒரு உத்தியோகபூர்வ பாராட்டு கடிதம் மூலம் தனது நன்றியைத் தெரிவித்தது. இந்த உயர்மட்ட உரையாடலில் இலங்கையின் பங்கேற்பு, பாலின சமத்துவத்தை வலுப்படுத்துவதற்கும், சட்டமியற்றும் செயன்முறைகளில் பெண்களின் குரலை அதிகரிப்பதற்கும் நாட்டின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது. மிகவும் உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கான பொதுவான அர்ப்பணிப்புக்களை உறுதியான செயலாக மாற்றுவதற்கு IPU மற்றும் ஏனைய உறுப்பு நாடுகளுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பாராளுமன்றம் எதிர்பார்க்கிறது.
2025-11-18
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் மூன்றாவது நாளான இன்று (நவ. 18) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (103) 92 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. குழு நிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6.50 மணியளவில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த செலவுத்தலைப்புக்கு வாக்கெடுப்பைக் கோரினார். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத்தலைப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 101 வாக்குகளும், எதிராக 09 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன், இன்றையதினம் குழு நிலை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான செலவுத்தலைப்புக்கு (225) வாக்கெடுப்பை நடத்துமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்தார். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத் தலைப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 100 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
2025-11-15
சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள கியூபாவின் இலங்கைக்கான தூதுவர் கௌரவ அன்ட்ரேஸ் மார்செலோ கொன்ஸலெஸ் கரியிடோ (H.E. Andrés Marcelo González Garrido) இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைப் பிரியாவிடை நிமித்தம் நேற்று (நவ. 14) சந்தித்தார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இதன்போது கலந்துகொண்டார். இச்சந்திப்பின்போது, தூதுவர் கொன்ஸலெஸ் கரியிடோ அவர்கள் இலங்கையில் தனது நான்கரை வருட பதவிக் காலத்தில் அவருக்கும் அவரது தூதுக்குழுவினருக்கும் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவு மற்றும் அன்பான விருந்தோம்பலுக்காக கௌரவ சபாநாயகருக்குத் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். அத்துடன், இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். குறிப்பாக, அண்மையில் மீள ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை - கியூபா பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய தளமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தூதுவர் கொன்ஸலெஸ் கரியிடோ அவர்கள் தனது பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக கௌரவ சபாநாயகர் தனது வாழ்த்தைத் தெரிவித்ததுடன், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பு மற்றும் ஒத்துழைப்புப் பிணைப்புகளை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களையும் பாராட்டினார். இலங்கையையும் கியூபாவையும் இணைக்கும் நீண்டகால நட்பை அவர் நினைவு கூர்ந்ததுடன், இருதரப்பு ஒத்துழைப்பின் ஆழத்தையும் நேர்மையையும் பலப்படுத்தும் வகையில், தேவையான காலங்களில் கியூபா எப்பொழுதும் இலங்கையுடன் நின்றிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். இந்த நீண்ட இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவதில் இலங்கையின் அர்ப்பணிப்பை கௌரவ சபாநாயகர் மீண்டும் உறுதிப்படுத்தினார். அத்துடன், இலங்கையின் மருத்துவத் துறைக்கு கியூபா நீண்டகாலமாக வழங்கி வரும் ஆதரவிற்காகவும் அவர் தனது பாராட்டைத் தெரிவித்தார். தனது மருத்துவத் தொழில் அனுவபத்தை சுட்டிக்காட்டிய சபாநாயகர், இலங்கையில் பணியாற்றிய கியூபா மருத்துவர்களின் மனிதநேயம், அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மையைப் பாராட்டினார். இலங்கையில் கியூபாவின் முதலீடுகளை அதிகரிப்பதற்கான அழைப்பை கௌரவ சபாநாயகர் விடுத்ததுடன், விவசாயத் துறையில் விரிவாக்கப்பட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டினார்.
2025-11-14
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் இன்று (நவ. 14) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இன்று பி.ப 6.20 மணிக்குக்கு இடம்பெற்ற இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 160 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், 8 பேர் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தனர். 2026 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது 'வரவுசெலவுத்திட்ட உரை' நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் கடந்த 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 08ஆம் திகதி முதல் இன்று (14) வரை, 06 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவுசெலவுத்திட்டம்) இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கமைய குழு நிலை விவாதம் நாளை (15) முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை 17 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதற்கு அமைய 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 05 ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks