E   |   සි   |  

2025-11-20

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பாராளுமன்ற குழுக்களின் பரிந்துஐரகள் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சை அழைத்தது

பாராளுமன்றத்தின் பொதுமனுக்கள் பற்றிய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் காலதாமதங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் பாராளுமன்ற குழுக்களின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகளை அழைத்திருந்தது.

கடந்த நவ. 13ஆம் திகதி இந்தக் குழு அதன் தலைவர் கௌரவ நீதி அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே அமைச்சின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதற்கமைய, குழுக்களினால் வழங்கப்படும் சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோன்று, சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குழுவில் எடுத்துக் கூறினர். இருப்பினும், சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் போது எழும் சிக்கல்கள் குறித்து மனுதாரரின் கருத்துகளையும் பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது, அதன்படி, மனுதாரர்களை வேறொரு திகதியில் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் முடிவுசெய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அஜித் பி.பெரேரா, ரவி கருணாநாயக்க மற்றும் ஒஷானி உமங்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-11-20

இலங்கையிலுள்ள அனைத்துக் காணிகளையும் துல்லியமாக அளந்து, விரைவாக வரைபடமாக்குவது தொடர்பில் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு

இலங்கையிலுள்ள அனைத்துக் காணிகளையும் துல்லியமாக அளந்து, விரைவாக வரைபடமாக்குவது தொடர்பில் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.  2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான அரசாங்க நிறுவனங்கள், திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் சபைகள் ஆகியவற்றின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தொடர்பில் பரிசீலிப்பதற்காக, சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் கடந்த நவ. 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த நில அளவைத் திணைக்களத்தின் அதிகாரிகள், தற்போதுள்ள கணிப்புகளின்படி இலங்கையில் 16.5 மில்லியன் நிலப் பிரிவுகள் (land plots) இருக்குமென்றும், அவற்றில் 2.5 மில்லியன் நிலப் பிரிவுகள் அளக்கப்பட்டு, வரைபடமாக்கப்பட்டுள்ளன என்றும் குழுவில் தெரிவித்தனர். அதற்கமைய, எஞ்சியுள்ள நிலப் பிரிவுகளை கூடிய விரைவில் அளந்து, வரைபடமாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர், இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் குழுவுக்கு அழைத்து, எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகளும் குழுவில் பரிசீலிக்கப்பட்டன. மேலும், காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் சட்டபூர்வமான ஒப்பந்தங்கள் இன்றி நிலங்களை குத்தகைக்கு விடுவதால் ஏற்பட்டுள்ள குத்தகைவரி நிலுவைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, எதிர்காலத்தில் முறையான குத்தகை ஒப்பந்தங்களுக்கு உட்பட்டு நிலங்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர் குத்தகைவரி நிலுவைகளை அறவிடுவதற்கான செயன்முறையைத் தயாரித்து, நிலுவைகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய ஓர் அறிக்கையை குழுவில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், சுசந்த குமார நவரத்ன, சுதத் பலகல்ல மற்றும் (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


2025-11-19

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தம்) மற்றும் பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தம்) மற்றும் பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களின் தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) கடந்த நவ. 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டது. சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம் ஊடாக 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டத்துக்கு 4 திருத்தங்கள் சேர்க்கப்படுவதாக குழுவில் கலந்துகொண்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதனையடுத்து, இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியதன் பின்னர் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.  அத்துடன், பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் ஊடாக 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டம் திருத்தப்படுவதுடன், அதன் மூலம் மொத்தச் சேகரிப்பு அறவீடு 15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கப்படும். அத்துடன், இலங்கை பிரஜைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த கசினோ நுழைவு அறவீடு, அமெரிக்க டொலர் 50 இலிருந்து 100 ஆக அதிகரிக்கப்படும். அதற்கமைய, இது தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட பின்னர் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் சர்வதேச தொலைத்தொடர்பு இயக்குனர் வரி செலுத்துவதற்கான செல்லுபடியாகும் கால எல்லை நீடிக்கப்படுகிறது. அத்துடன், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 52) 25 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 32 ஆம் பிரிவின் கீழ் மதுவரி உரிமக் கட்டணங்கள் தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த விதிகள் தொடர்பாக குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. எனினும், அதற்கு குழுவின் அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து தகுந்த பகுப்பாய்வு அறிக்கை ஒன்றை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும், அதன் பின்னர் இது எதிர்காலத்தில் பரிசீலனை செய்யப்படும் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாண்டோ மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-11-18

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து வழிவகைகள் பற்றிய குழு கவனம் செலுத்தியது

அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 12) பாராளுமன்றத்தில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் முறை தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர். அஸ்வெசும திட்டத்திற்குப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் குறித்து குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அந்த அளவுகோல்களின் அடிப்படையில் பொருத்தமான சலுகைகளை வழங்குவதற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து குழுவின் உறுப்பினர்கள் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இத்திட்டத்தில், 22 அளவுகோல்களின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதால், அந்த அளவுகோல்களை செயல்படுத்தும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது. அஸ்வெசும நன்மைகளைப் பெறுவதற்காக மாத்திரம் பயனாளிகளைப் பதிவுசெய்வதற்குத் தற்பொழுது அனுமதிக்கப்பட்டாலும், நாடு முழுவதிலுமுள்ள மக்கள் தமது தகவல்களைக் கட்டமைப்பொன்றில் (Social Registry) பதிவுசெய்வதே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், பதிவுசெய்த பின்னர் தங்களுக்கு என்ன தேவை என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதன் மூலம், தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று குழு சுட்டிக்காட்டியது. முதியோர் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கு அஸ்வெசும திட்டத்தை அவர்களின் வீடுகளுக்கே சென்று பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் குழு  விரிவாகக் கலந்துரையாடியது. தேசிய அடையாள அட்டை இல்லாததால் நலன்புரித் திட்டத்தின் உதவிகளைப் பெற முடியாத தகுதியுள்ள நபர்கள் தற்போது இருந்தாலும், தேசிய அடையாள அட்டை இல்லாததால் அந்தச் சலுகைகளைப் பெற முடியாத சில குழுக்கள் உள்ளன என்றும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அதன்படி, முடிந்தவரை அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதன் மூலம் நலன்புரித்திட்ட உதவிகளை வழங்குவதன் நோக்கத்தை அடைவதன் முக்கியத்துவத்தையும் குழு வலியுறுத்தியது. இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர் (கலாநிதி) அனில் ஜயந்த, கௌரவ பிரதியமைச்சர்களான  சதுரங்க அபேசிங்ஹ, (பேராசிரியர்) ருவன் ரணசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான  (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, கே.சுஜித் சஞ்சய பெரேரா, ரோஹன பண்டார, சத்துர கலபதி, திலின சமரகோன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-17

தேசிய உயர்கல்வி கொள்கை வரைபு தயாரிப்பின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி அலுவல்ககள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுவில் ஆராய்ப்பட்டது

தேசிய உயர்கல்வி கொள்கைக்கான வரைபு தயாரிப்பின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உயர்கல்விப் பிரிவு தொடர்பான உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 11) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. தயாரிக்கப்பட்டுவரும் உயர்கல்விக் கொள்கை வரைபு மற்றும் அதற்கான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி.த சில்வா அவர்கள் குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்தார். நவம்பர் மாத இறுதிக்குள் இந்த வரைபைத் தயாரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். மேலும், பல்கலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை மதிப்பாய்வு செய்தல், இயலாமையுடைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் வெளிப்புற பட்டப்படிப்பு திட்டங்களின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பாக முந்தைய குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாளக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks