E   |   සි   |  

2025-11-22

செய்தி வகைகள் : செய்திகள் 

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் ஏழாவது நாளான இன்று (நவ. 22) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் வாக்கெடுப்பு இன்றி, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.



தொடர்புடைய செய்திகள்

2025-11-22

இலங்கை - தாய்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - தாய்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை - தாய்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீளஸ்தாபிக்கும் கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (21) நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பைதூன் மஹாபன்னபோர்ன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி இந்த நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இளையதம்பி ஸ்ரீநாத் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர். 1955 ஆம் ஆண்டு இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் முறையான இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்தது முதலான நீண்டகால இருதரப்பு உறவை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர். பௌத்த பாரம்பரியத்தால் வளர்க்கப்பட்ட நாடுகள் என்ற வகையில், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான இரு நாடுகளின் அர்ப்பணிப்பு இங்கு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீளஸ்தாபிப்பது இரு நாடுகளும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், பரஸ்பர உறவுகளை மேலும் மேம்படுத்தவும் உதவும் என்று இரு தரப்பினரும் சுட்டிக்காட்டினர். இந்த சந்திப்பிற்கு முன்னதாக, தாய்லாந்து தூதுவருக்கும் கௌரவ சபாநாயகருக்கும் இடையில் ஒரு சுமுகமான சந்திப்பும் நடைபெற்றது. இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான தற்போதைய வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.


2025-11-22

கூட்டுறவுத் துறையின் பிரச்சினைகள் குறித்து வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள் ஆளுநர்கள் உள்ளிட்ட கூட்டுறவு அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்

கூட்டுறவுத் துறையின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் ஆளுநர்கள், மாகாணக் கூட்டுறவு அமைச்சின் செயலாளர்கள், மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்கள் மற்றும் பதிவாளர்களுடன் ஒரு விசேட கூட்டமொன்று 19.11.2025 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள், அனைத்துப் பாவனையாளர் சேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய வகையில் ‘கோப் சிட்டி’ (Co-op City) நிலையங்களை அனைத்து நகரங்களிலும் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். கூட்டுறவு உற்பத்திப் பொருட்களை ஒருமித்த வணிகநாமத்தின் கீழ் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதுடன், பிராந்திய விற்பனை நிலையங்களை மினி கோப் சிட்டியாக (Mini Co-op City) மாற்றி கிராமிய மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கௌரவ அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் தற்போதைய நிலைமை, அவற்றில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்யக்கூடிய வழிமுறைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கூட்டுறவுச் சங்கங்களில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள், எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகளைத் தடுப்பதற்கு மாகாண கூட்டுறவுச் சங்கங்களின் கணக்காய்வுப் பிரிவுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார். இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள், கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் பதவி வகிக்கும் காலத்தை திருத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். அதற்கமைய, கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பதவி வகிக்கும் காலங்களுக்குச் சில எல்லைகளை விதிப்பதன் மூலம் இடம்பெறும் ஊழல்கள் மற்றும் மோசடிகளைத் தவிர்க்க முடியும் என்றும் அதிகாரிகள் மேலும் கருத்துத் தெரிவித்தனர். ஒருசில கூட்டுறவுச் சங்கங்களில் வைப்புக்கள் மற்றும் கடன்களுக்கு அதிக வட்டி அறவிடுதல், பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களை பதிவுக் குறிக்கோளிலிருந்து விலகி தனிப்பட்ட வர்த்தகங்களாக நடாத்திச் செல்லுதல், மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் காணிகள் மற்றும் சொத்துக்களை வேறு நபர்களால் கையகப்படுத்தல் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, கூட்டுறவுச் சங்கங்களில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்து, அவற்றின் மூலம் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பல விசேட திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கௌரவ அமைச்சர் தெரிவித்தார். இதன்போது முக்கிய நகரங்களில் ஸ்தாபிக்கப்பட எதிர்பார்க்கப்படும் கோப் சிட்டி (Co-op City) நிலையங்கள் மூலம் கூட்டுறவு உற்பத்திப் பொருட்களைச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதற்கும், கூட்டுறவுச் சங்கங்களுக்கான கடன் உதவிகளை வழங்குவதில் கூட்டுறவு அபிவிருத்தி நிதியம் மூலம் கூப் சிட்டியை மேம்படுத்துவதற்குத் தேவையான கடன் வசதிகளை வழங்குவதற்கும் எதிர்பார்ப்பதாக கௌரவ அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், அனைத்து மாகாண சபைகளுக்கும் பொதுவான கூட்டுறவுப் பிரகடனம் ஒன்றையும், அனைத்து மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுக்களுக்கும் பொதுவான சட்டக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-11-21

இலங்கை நியூசிலாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் வசந்த சமரசிங்க நியமனம்

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – நியூசிலாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை – நியூசிலாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீளஸ்தாபிக்கும் கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (20) நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் கௌரவ டேவிட் கிரேகரி பைன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க இந்தச் சங்கத்தின் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) கீதா ஹேரத் பொருளாளராகத் தெரிவுசெய்யப்பட்டார். இலங்கைக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை இரு தரப்பினரும் வலியுறுத்தியிருந்தனர். விளையாட்டு, சுற்றுலா, வர்த்தகம், தொழிலாளர் மற்றும் கல்வி உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. நியூசிலாந்து அரசாங்கம் இதுவரை இலங்கைக்கு அளித்து வரும் ஆதரவிற்காக கௌரவ சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார். சுற்றுலா, வர்த்தகம் மற்றும் விளையாட்டு, குறிப்பாக பெண்கள் கிரிக்கெட் மற்றும் ஆண்கள் ரக்பி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த எதிர்பார்பப்தாக இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் கிரேகரி பைன் தெரிவித்தார். பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை – நியூசிலாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை நிறுவுவது, இரு நாடுகளுக்கும் இடையே பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும், பரஸ்பரம் நன்மை பயக்கும் முயற்சிகளை முன்னெடுக்கும் என்றும் இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்தனர்.இந்த நிகழ்விற்கு முன்னர், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவுக்கும், நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றது. பாராளுமன்ற மட்டத்திலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது உட்பட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.


2025-11-20

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்கள மற்றும் தமிழ் மொழி பயிற்சிச் செயலமர்வு

மொழியின் மூலம் சரியான தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாமையாலேயே இனவாத, மதவாத ரீதியான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன – செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவிப்பு   கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழி தொடர்பான பயிற்சிச் செயலமர்வொன்று கடந்த நவ. 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இச்செயலமர்வு இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் சேவைகள் அலுவலகம் ஏற்பாடு செய்த இந்த செயலமர்வில், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர். செயலமர்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் குறிப்பிடுகையில், ஒரு மொழியில் சரியான முறையில் தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாத சந்தர்ப்பத்திலேயே இனவாதம், மதவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அனைத்து இனங்களையும் மதிக்கும் ஒரு சிறந்த இலங்கையர் என்ற சமூகத்தை உருவாக்குவதற்கு, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுடன் சிறந்த தொடர்புகளை ஏற்படுத்தி சமூகங்களை வழிநடத்துவதற்கு மொழிகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இங்கு கருத்துத் தெரிவித்த நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார, மொழி என்பது தொடர்பாடலை ஏற்படுத்தும் கருவி மாத்திரமன்றி அது குறித்த மொழியைப் பேசும் சமூகத்திற்குக் கொடுக்கும் கௌரவமாகும் என்றார். எந்தவொரு நபரும் அவர் பேசும் மொழியின் காரணமாக எந்த வகையிலும் வித்தியாசமாக நடத்தப்படக்கூடாது என்றும், நாட்டின் மிக உயர்ந்த நிறுவனம் இந்த வழியில் மூன்று மொழிகளில் பணியாற்றுவதனால் காண்பிக்கப்படும் முன்மாதிரி அரச கரும மொழிகளைக் கடைப்பிடிப்பதில் பொதுமக்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறது என்றார். இதற்கமைய, சிங்கள மொழி பாடநெறியைத் தொடர்வதற்கு 21 கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மொழிப் பாடநெறியைத் தொடர்வதற்கு 63 கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் விண்ணப்பித்துள்ளனர். இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, அரச கரும மொழிகள் ஆணையாளர் நாயகம் நந்தன ஹெட்டியாராச்சி மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் சேவைகள் அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) கே.பி. சந்தன மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks