பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-11-25
செய்தி வகைகள் : செய்திகள்
பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து விசாரித்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சுஜாதா அளகப்பெரும அவர்களினால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களிடம் நேற்று (நவ. 24) கையளிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தின் தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தின் பெண் பணியாளருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக 2025.01.07ஆம் திகதி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களினால் சபா மண்டபத்தில் உரையாற்றும்போது கருத்துத் தெரிவிக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டதுடன், குறித்த விசாரணை தொடர்பில் முறைப்பாடு செய்த நபர் திருப்தியடையாத காரணத்தினால் இது பற்றி வெளியக விசாரணையை நடத்துவதற்குப் பாராளுமன்ற பணியாளர் ஆலோசனைக் குழுவில் 2025.07.25ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சுஜாதா அளகப்பெரும அவர்களினால் மேற்படி விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் அழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இந்த இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் நேற்றையதினம் கௌரவ சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையின்படி, விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளிலிருந்து முறைப்பாடு செய்த பெண் பணியாளர் எவ்வித பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் ஆளாகவில்லை என்பது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அதே பிரிவில் வேறு எந்த பெண் பணியாளருக்கும் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லையென்றும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2025-11-25
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் ஒன்பதாவது நாளான இன்று (நவ. 25) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் வாக்கெடுப்பு இன்றி, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.
2025-11-24
2025 உலகளாவிய கருப்பொருள் - "அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும் எதிரான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்" சட்டங்களை உருவாக்குவதைத் தாண்டி, பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதற்கு சமூகப் பொறுப்பும் கவனமும் தேவை என கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய தெரிவிப்பு பாராளுமன்றத்திற்குள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாகவோ துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், நிலையியற் கட்டளைகளை திருத்துவதற்கான முன்மொழிவைக் கௌரவ சபாநாயகரிடம் சமர்ப்பிக்க பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவிப்பு பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான (GBV) 16 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் பல நிகழ்ச்சிகள் இன்று (நவ. 24) நடத்தப்பட்டன. அதற்கமைய, பால்நிலைசார் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதைக் குறிக்கும் இலச்சினைகள் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோருக்கு அணிவிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் செம்மஞ்சள் நிறம் அல்லது செம்மஞ்சள் நிறம் கலந்த ஆடைகளை இன்றைய தினம் அணிந்து வந்திருந்தனர். பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம், ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) அனுசரணையுடன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், பாராளுமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வரும் கௌரவ அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் கௌரவ அமைச்சர் (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ, மற்றும் எதிர்க்கட்சியின் கௌரவ முதற்கோலாசான் கயந்த கருணாதிலக ஆகியோருக்கும் அடையாள இலச்சினைகள் அணிவிக்கப்பட்டன. அத்துடன், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோருக்கும் ஒன்றியத்தினால் இலச்சினைகள் அணிவிக்கப்பட்டன. அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பால்நிலைசார் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆதரவை வெளிப்படுத்தும் இலச்சினைகள் அணிவிக்கப்பட்டன. 16 நாட்கள் வேலைத்திட்டம் என்பது பால்நிலைசார் வன்முறைக்கு (GBV) எதிராக வருடாந்தம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை நடத்தப்படும் ஒரு உலகளாவிய பிரச்சாரமாகும். இது பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தில் தொடங்கி மனித உரிமைகள் தினத்தன்று முடிவடைகிறது. உலகளவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கவும், அகற்றவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நடவடிக்கைகளை பலப்படுத்துவதும் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அவர்களின் 16 நாட்கள் வேலைத்திட்டத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கருப்பொருள், "அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும் எதிரான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்" என்பதை வலியுறுத்துகிறது. இதனுடன் இணைந்ததாக, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் ஒரு விசேட ஊடகச் சந்திப்பும் நடத்தப்பட்டது. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், இந்த ஆண்டுக்கான கருப்பொருளான, அனைத்துப் பெண்களுக்கும் மற்றும் சிறுமிகளுக்கும் எதிராக டிஜிட்டல் வெளியில் நிகழும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அனைவரும் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். அத்துடன், சட்டக் கொள்கைகளை உருவாக்குவதைத் தாண்டி, பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதற்குச் சமூகப் பொறுப்பும் கவனமும் தேவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இம்முறை பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது ஒரு சாதகமான நிலைமையாகும் என்றும், பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதைச் சமூகமயமாக்குவதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணையுமாறு அவர் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும் மகளிர் மற்றும் சிறுவர்அலுவல்கள் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்கள் குறிப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் 315 மில்லியன் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவித்தார். இலங்கையிலும் இது நிகழ்கிறது என்றும், குறிப்பாக டிஜிட்டல் வெளியில் அரசியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்களும் சிறுமிகளும் எதிர்கொள்ளும் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அதற்கமைய, உயர்சபையான பாராளுமன்றத்திலும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாகவோ துன்புறுத்தப்படுவதைத் தடுப்பதற்காக நிலையியற் கட்டளைகளைத் திருத்துவதற்கான ஒரு முன்மொழிவைக் கௌரவ சபாநாயகரிடம் சமர்ப்பிக்க பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கமைய, பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதற்கான முதலாவது முன்னுதாரணத்தை பாராளுமன்றம் என்றவையில் நாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். அரசியலில் எத்தகைய கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதற்காக அனைவரும் ஒன்றிணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார். அத்துடன், இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரதி-இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல குறிப்பிடுகையில், பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) மற்றும் ஐ.நா. பெண்கள் வேலைத்திட்டம் (UN women) நடத்திய அண்மைய ஆய்வில், பெண்கள், சிறுமிகள் உட்பட அனைத்து தனிநபர்களும் அடிக்கடி பல்வேறு வகையான இணையத் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதற்கமைய, போலிக் கணக்குகளை உருவாக்குவது 36.9% என்றும், ஆபாசமான தகவல்கள்/வீடியோக்களைப் பகிர்வது 36.9% என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் ஐந்து பெண்களில் ஒருவர் உடல்ரீதியாகவோ அல்லது வாய்மொழியாகவோ பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றும், இந்த நிலைமையை மாற்றி ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க கட்சி பேதமின்றி அனைவரும் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், இந்த வேலைத்திட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்திற்கு (UNFPA) அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
2025-11-24
2025-11-22
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - தாய்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை - தாய்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீளஸ்தாபிக்கும் கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (21) நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பைதூன் மஹாபன்னபோர்ன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி இந்த நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இளையதம்பி ஸ்ரீநாத் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர். 1955 ஆம் ஆண்டு இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் முறையான இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்தது முதலான நீண்டகால இருதரப்பு உறவை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர். பௌத்த பாரம்பரியத்தால் வளர்க்கப்பட்ட நாடுகள் என்ற வகையில், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான இரு நாடுகளின் அர்ப்பணிப்பு இங்கு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீளஸ்தாபிப்பது இரு நாடுகளும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், பரஸ்பர உறவுகளை மேலும் மேம்படுத்தவும் உதவும் என்று இரு தரப்பினரும் சுட்டிக்காட்டினர். இந்த சந்திப்பிற்கு முன்னதாக, தாய்லாந்து தூதுவருக்கும் கௌரவ சபாநாயகருக்கும் இடையில் ஒரு சுமுகமான சந்திப்பும் நடைபெற்றது. இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான தற்போதைய வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks