பார்க்க

E   |   සි   |  

அரசியல் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்படுவதுடன், அடிமட்ட அரசியல் செயற்பாடுகளில் பெண்களை வலுப்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு – பிரதமர்

அரசியல் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்படுவது மற்றும் அடிமட்ட அரசியல் செயற்பாடுகளில் பெண்களை வலுப்படுத்துவது தமது எதிர்பார்ப்பு என கௌரவ பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரினி அமரசூரிய தெரிவித்தார். நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்டுவரும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் செயல்முறையின் விளைவாகவே பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தமது கட்சியிலிருந்து இருபது பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், கட்சி சார்பற்ற முறையில் இதனை முன்கொண்டு செல்வதே பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசியலில், மாகாணசபைகள், உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கு சமவாய்ப்புக்கள் மற்றும் பங்களிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குவது குறித்த கருத்துக்களைப் பெறும் நோக்கில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் அண்மையில் (24) கூடியபோதே பிரதமர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.

அரசியலில் ஈடுபட்டுள்ள பெண்களை இணையம் மற்றும் சைபர் தளங்களில் இழிவுபடுத்தல், அவமானப் படுத்துதல் மற்றும் அவர்களை நிராகரிக்குமாறு கோருதல் போன்ற விடயங்களால் பெண்கள் தீவிர அரசியலில் ஈடுபடுவது சவால் மிக்கதாக உள்ளது என அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் சுட்டிக்காட்டினார். இதனால் தீவிர அரசியலில் பெண்கள் ஈடுபடுவதற்குத் தேவையான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுப்பது மற்றும் அதற்குப் பொருத்தமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அனைத்துத் தரப்பினதும் பொறுப்பாகும் என அவர் தெரிவித்தார்.

அடிமட்டத்தில் உள்ள பெண் அரசியல் ஆர்வலர்களை முறையாக அடையாளம் காணத் தவறியதால், அரசியல் அறிவு இல்லாதவர்கள் தேர்தல்களின் போது கட்சி வேட்புமனு பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள் என்ற விடயமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. கட்சி அரசியலில் ஈடுபடும் பெண்கள், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் சித்தாந்தத்தை அறிந்து, மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டுள்ள அடிமட்ட ஆர்வலர்களாக இருக்க வேண்டும் என ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார்.

மாகாண சபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்திற்கான ஒதுக்கீட்டை வழங்குதல், அரசியல் குறித்துப் பெண்களுக்கு விழிப்புணர்வூட்டுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், வீட்டுப் பொருளாதாரம் பெண்கள் அரசியலில் நுழைவதற்கு ஒரு தடையாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்ய பாடசாலை மட்டத்திலிருந்தே பாலின உணர்வுள்ள ஆய்வுகளின் தேவை, ஒவ்வொரு தேர்தலிலும் பெண்களுக்கு குறிப்பிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் போன்ற விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

வெளிநாடுகளுக்கு குடிபெயரும் போது பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கத் தனது அமைச்சு ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்வதைத் தடுக்க 2017 ஆம் ஆண்டு மிகுந்த முயற்சியுடன் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம், இரண்டு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்திற்கு செயற்படுத்தப்பட்டதாகவும், பின்னர் குழந்தைக்கான வயது எல்லை 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டதாகவும் தலைவர் கூறினார். தற்போது வெளிநாடுகளுக்கு குடிபெயரும் 1.2 மில்லியன் தொழிலாளர்களில், 800,000 பேர் முறைசாரா தொழில்துறையில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு சேவை ஒப்பந்தம், நிலையான சம்பளம், பாதுகாப்பு, காப்புறுதி அல்லது பிற வசதிகள் இல்லை என்றும், அந்தப் பிரச்சினைகளுக்குத் தேவையான தீர்வுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். மேலும் இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் 2026-2030 ஆம் ஆண்டுக்கான செயற்திட்டங்களுக்கான முன்மொழிவுகளை அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், செயலாளர்கள், அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள், தேர்தல் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks