பார்க்க

E   |   සි   |  

இலங்கையில் இளம் பெண்களின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கு ஐக்கிய இராச்சியத்தின் ஆதரவைப் பெறுவது குறித்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கவனம் செலுத்தியது

இலங்கையில் இளம் பெண்களின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கான திட்டங்களுக்கு ஐக்கிய இராச்சியத்தின் ஆதரவைப் பெறுவது குறித்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றம் (Westminster Foundation for Democracy) மற்றும் சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிறுவனம் (Law & Society Trust) ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதுடன், இளம் பெண்களின் அரசியல் பங்கேற்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு சமூகப் பிரிவுகளிடையே ஒரு உரையாடலை ஏற்படுத்துவதன் அவசியம் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டம் 2025 செப்டம்பர் 12 ஆம் திகதி கெளரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவரும், கெளரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) பிரதிநிதிகள், பாலின உணர்திறன் கொண்ட சட்டங்களை உருவாக்குவதற்கும், பாலின அடிப்படையிலான வரவுசெலவுத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும், செயற்படுத்துவதற்கும் பெண் தொழிலாளர் படையின் பங்கேற்பை அதிகரிப்பதற்காக பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தங்கள் மன்றம் ஆதரவளிக்க முடியும் என்று சுட்டிக்காட்டினர்.

அத்துடன், இலங்கைப் பாராளுமன்றத்தை பாலின உணர்திறன் கொண்ட பாராளுமன்றமாக மாற்றுவதற்கு ஆய்வு மற்றும் கொள்கை ரீதியான ஆதரவுகளை வழங்குவதற்கு ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றம் (WFD) தனது இணக்கத்தை வெளியிட்டது.

அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கும் போது, சமூகத்தின் உயர் மட்டம் மாத்திரமல்லாமல் கீழ்மட்ட அளவிலான செயற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்வதும், கவனம் செலுத்துவதும், உண்மையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கீழ்மட்டப் பெண்களைத் திரட்டுவதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். தற்போது பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், பொதுவாகப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வாக ஆலோசனை போன்ற ஆதரவு வழிமுறைகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவமும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

மேற்கண்ட விடயங்கள் தொடர்பாக, சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிறுவனத்தினால் (Law & Society Trust) 2025 செப்டம்பர் 16 முதல் 19 வரை ஏற்பாடு செய்யப்படவுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் கெளரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர்களான (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஷ்கா திலகரத்ன, தீப்தி வாசலகே, ஓஷானி உமங்கா, அம்பிகா சாமிவேல் மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks