பார்க்க

E   |   සි   |  

இலங்கையில் பாலின சமத்துவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் (UN Women) திட்டத்தால் நடத்தப்பட்ட ஆய்வின் முக்கிய முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்திற்கு சமர்ப்பிப்பு

இலங்கையில் பாலின சமத்துவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் (UN Women) திட்டத்தால் நடத்தப்பட்ட ஆய்வின் முக்கிய முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் கடந்த 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஒன்றியத்தின் கூட்டம் இடம்பெற்ற போதே இவை சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த ஆய்வு பெண்களின் பொருளாதார வலுவூட்டல், ஆட்சி மற்றும் தீர்மானம் எடுப்பதில் பெண்களின் தலைமைத்துவம், பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுத்தல் ஆகிய துறைகளில் அடிப்படைக் கவனம் செலுத்தி நடத்தப்பட்டது என்று இந்தத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழு கருத்துத் தெரிவித்தனர்.

அதற்கமைய, உலகளாவிய சூழ்நிலையில் இலங்கையின் பாலின சமத்துவத்தில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை அடையாளம் காண முடிந்ததாக அந்தப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். 2006 ஆம் ஆண்டில், இலங்கை 115 நாடுகளில் 18 வது இடத்தில் இருந்துள்ளது எனினும், 2025 ஆம் ஆண்டில், இலங்கை 148 நாடுகளில் 130 வது இடத்தில் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். எவ்வாறாயினும், பிராந்தியத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் சிலர் பெண்கள் என்றாலும், ஆண்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க சமத்துவமின்மை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், இந்த ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் முக்கியமானவை என்பதால், ஆய்வோடு சம்பந்தப்பட்ட இறுதி அறிக்கையை ஒன்றியத்திற்கு சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார். அத்துடன், எதிர்வரும் வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கும் போது, பெண்களை வலுவூட்டுவதற்காக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மேலதிகமாக, ஒவ்வொரு அமைச்சிலும் தமது விடயப்பரப்புக்குள் பெண்களை வலுவூட்டுவதற்காக நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு தான் முன்மொழிந்ததாகவும் ஒன்றியத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றம் (Westminster Foundation for Democracy) ஊடாக உள்ளூராட்சி மன்றங்கள் முதல் ஜனாதிபதி பதவி வரை நாட்டில் பெண்கள் கடந்து வந்த பாதையில் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் பதவிக்கு வந்த பின்னர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஒரு ஆய்வை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி, மாகாண சபை மற்றும் தேசிய மட்டங்களில் அரசியலில் பெண்களை வலுவூட்டுவதை இலக்காகக் கொண்டு தேர்தல் முறைமைக்கான சர்வதேச மன்றத்துடனும் (IFES) அன்றைய கூட்டத்தில் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. மன்றத்தின் பிரதிநிதிகள் தமது பணிகள் குறித்து விளக்கமளித்ததுடன், இலங்கையில் பெண்களை வலுவூட்டுவதற்காக மன்றத்தின் பங்களிப்பை வழங்க முடியும் என்று தெரிவித்தனர். அதற்கமைய, அந்த முன்மொழிவை ஒன்றியத்திற்கு சமர்ப்பிக்குமாறு ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில், பாராளுமன்றத்தின் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, ஒஷானி உமங்கா, கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே மற்றும் அம்பிகா சாமிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks