E   |   සි   |  

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராகப் பாரா

  • ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் உள்ளிட்ட பொதுமக்கள் பிரதிநிதிகள் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான உலகளாவிய செயல்முனைவுடன் (GBV) பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியுத்துடன் இணைந்தனர்.
  • இதன் அடையாளமாக பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” என்ற வாசகம் தாங்கிய கைப்பட்டி அணிவிக்கப்பட்டது

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான (GBV) உலகளாவிய செயல்முனைவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைமையில் பாராளுமன்றத்தில் இன்று (01) பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிகழ்ச்சித்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பெண் பணியாளர்கள் செம்மஞ்சள் நிற சேலை அணிந்திருந்தனர்.

இதன் ஒரு அங்கமாக “பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” என்ற வாசகம் தாங்கிய கைப்பட்டி பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே உள்ளிட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்களால் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு அணிவிக்கபட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீரவும் கலந்துகொண்டார். பெண்கள் தொடர்பான சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளை விரைவில் பூர்த்திசெய்து அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட பால்நிலை சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கப் பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கு வைப்பதற்காகத் தேசிய ஜனநாயக நிறுவனத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பாலின சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கம் தொடர்பான விடயங்கள் அடங்கிய பிரசுரங்களும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

“பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” என்ற வாசகம் அடங்கிய கைப்பட்டி பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச ஆகியோருக்கு அணிவிக்கப்பட்டதுடன், பாலின சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கம் தொடர்பான விடயங்கள் அடங்கிய பிரசுரங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், “2022 பிரச்சாரத்தின் உலகளாவிய தொனிப்பொருள், “ஒன்றிணையுங்கள்! பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயல்முனைவு” என்பதாகும். ஒற்றுமை இல்லாமல் GBVயை எதிர்த்துப் போராட முடியாது என்பதை வலியுறுத்துகின்றது, இதனால் அரசாங்கங்கள், அபிவிருத்திப் பங்காளர்கள், CSO க்கள், இளைஞர்கள், ஊடகங்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் GBVக்கு எதிராகப் போராட ஒன்றுபட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.

இந்த உலகளாவிய இயக்கத்துடன் ஒன்றிணைந்து நிற்பதற்கு, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் நவம்பர் 25 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பரிந்துரை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். GBV யை எதிர்த்துப் போராடுவது தொடர்பில் நவம்பர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இரண்டு குழுக் கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக ஊடகங்கள் மூலம் போராடுவது (VAW) என்ற தலைப்பில் ஊடகவியலாளர்களுடன் எதிர்வரும் 6ஆம் திகதி அறிவுப் பகிர்வு நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. இதில் ஊடகங்களில் அறிக்கையிடும்போது பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக நிற்றல் தொடர்பில் பாராளுமன்றத்தை அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் உள்ளடங்களாக, இலங்கையிலுள்ள ஏனைய ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்படவிருப்பதுடன், அவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலான இந்த நிகழ்ச்சித் தொடர்கள் பெண் பாராளுமன்ற உறுப்பனிர்களின் ஒன்றித்தின் ஊடாக பாராளுமன்ற செயலகம், தொடர்பாடல் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதற்கான ஒத்துழைப்பை தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) வழங்கியிருந்தது.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks