E   |   සි   |  

பாராளுமன்றத்தை ஆரஞ்சு ஆக்குதல் – பாலின அடிப்ப

“பாலின அடிப்படையிலான வன்முறை (GBV) என்பது பாலினக் கலைச்சொற்களில் கிட்டத்தட்ட அலுத்துப்போன சொல் ஒன்றாக மாறிவிட்டது. நாங்கள் அதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசினோம், அது உண்மையில் அதன் சாரத்தை இழந்துவிட்டது. ஆனால், அது வெறும் சொல் அல்ல. இது உலகிலும் இலங்கையிலும் முற்றிலும் கசப்பான உண்மையாகும்” என்றார் கோவிட்19 கட்டுப்பாடு, ஆரம்ப சுகாதாரம் மற்றும் தொற்றுநோய்களுக்கான இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே.

புள்ளிவிவரங்கள் ஒரு பாதி உண்மையை மட்டுமே தெரிவிக்க முடியும், ஆனால் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்பது பெறுமதியானது. இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (VAW) பற்றிய முதலாவது அர்ப்பணிக்கப்பட்ட தேசிய கணக்கெடுப்பான பெண்கள் மற்றும் நல்வாழ்வு கணக்கெடுப்பு 2019ஆனது, இலங்கைப் பெண்களில் நான்கில் ஒரு பெண் உடல்ரீதியாக அல்லது பாலியல் ரீதியான வன்முறைகளை அனுபவித்துள்ளதாக தெரிவிக்கின்றது. கிட்டத்தட்ட 40 சதவீத பெண்கள் உடல், பாலியல், மன ரீதியான மற்றும்/அல்லது பொருளாதார வன்முறை மற்றும்/அல்லது துணையினால்; கட்டுப்படுத்தப்படும் நடத்தைகளுக்கு ஆளாகியுள்ளனர். தோட்டத் துறையில் பெண்களுக்கு எதிரான வன்முறை நிலைமைகள் மிகவும் மோசமானவை என்பதை கணக்கெடுப்பானது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. உடல் மற்றும் பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் ஒரே சமயத்தில் இடம்பெற்றுள்ளதையும் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை திரும்பத் திரும்ப நடந்துள்ளதையும் அறிக்கை உறுதிப்படுத்துகின்றது. உதாரணமாக, உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தப்பட்ட பெண்களில் 65 சதவீதம் பேர், தாங்கள் இந்த வன்முறையை இரண்டு முதல் மூன்று முறை சந்தித்துள்ளதாகவும், மற்றும் 32 சதவீதம் பேர் ஐந்து முறைக்கு மேல் உடலுறவு கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். துணை அல்லாதவர்களை விட நெருக்கமான துணைகளே உடல் ரீதியான வன்முறையைத் தூண்டுவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

VAW இனால் பாதிக்கப்பட்ட பெண்களில் நீண்ட கால உடல் மற்றும் மனநல பாதிப்புகள் முக்கியமாக பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் பாலியல் மற்றும் உடல் ரீதியான வன்முறையால் தொடர்ந்தும் காயம் அடைந்துள்ளதாகவும், 20 சதவீதம் பேர் காயங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர். துணை ஒருவரினால் பாலியல் வன்முறைக்கு ஆளான பாதிக்கப்பட்டவர்களில் அரைவாசி பேர் அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறையின் தாக்கத்தை “அதிகளவு” என்று மதிப்பிட்டுள்ளனர். அதேவேளை மற்றொரு 30 சதவிகிதத்தினர் அதை “சிறிதளவு” என்று மதிப்பிட்டுள்ளனர்.

கோவிட் 19 ஆனது இலங்கையிலும் மற்றும் உலகெங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உடல் ரீதியான வன்முறைகளின் அளவை மட்டுமே மோசமாக்கியது, இது மீண்டும் மீண்டும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை பாராளுமன்றத்தினால் ஏற்படுத்தப்பட்ட பாலின ஒப்புறவு மற்றும் சமத்துவம் தொடர்பான விஷேட தெரிவுக்குழு ஒன்று GBV இனையும் ஆராய்ந்து, மற்றும் பாலின ஒப்புறவு மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பாராளுமன்றத்திற்கு வழங்குவதுடன், இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துகின்றது. கௌரவ பெர்னாண்டோபுள்ளே தலைமையிலான குழு சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்துடன் கைகோர்த்து பாலின ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை அவர்களின் பிரதிநிதித்துவ மற்றும் மேற்பார்வை ஆணைகளைப் பயன்படுத்திக் குறைப்பதற்காகப் பணிபுரிகின்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்களின் செயற்பாட்டியத்தை உலகானது குறிக்கும் நிலையில், இந்த ஆண்டும் மனித உரிமைகள் தினமாக ஐநா பொதுச் செயலாளரின் UNiTE பிரச்சாரம் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் உலகளாவியக் கருப்பொருள் “ஆரஞ்சு தி வேர்ல்ட் – பெண்களுக்கு எதிரான வன்முறையை இப்போதே ஒழிக்கவும்!” ஆகும்.

தெரிவுக்குழுவின் கூட்டு முயற்சியாக இன்று (நவம்பர் 25) பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரஞ்சு நிறத்தை அணிந்து பாராளுமன்றத்தை ஆரஞ்சு ஆக்குவதனால், இலங்கை பாராளுமன்றமானது உலகளாவிய இயக்கத்துடன் ஒருமைப்பாட்டுடன் நின்று உலகளாவிய கருப்பொருளுடன் ஒன்றிணைகின்றது.

முறைசாரா துறையில் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய வன்முறையின் வடிவங்களை வலியுறுத்தி, கௌரவ. டயானா கமகே, தெரிவுக்குழுவின் உறுப்பினர், 11 நவம்பர் 2021 அன்று பாராளுமன்றத்தில், “பெண்கள் அனுபவிக்க வேண்டிய பாகுபாடு காரணமாக, அவர்கள் பாதுகாப்பற்ற வேலைகளில் முடிவடைகின்றனர். பாகுபாடு காரணமாக அவர்கள் பல துன்புறுத்தல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இது பாலியல் துன்புறுத்தல், மனரீதியான துன்புறுத்தல் மற்றும் சில சந்தர்ப்பங்களில், உடல்ரீதியான துன்புறுத்தலாக இருக்கலாம். எனவே, அதை மாற்ற வேண்டும்” என்றார்.

தெரிவுக்குழுவின் உறுப்பினரும், பாலினம் மற்றும் உள்ளடக்கல் செயல்வீரருமான கௌரவ. எரான் விக்ரமரத்ன குறிப்பிடுகையில், “ஒரு சமூகமாக நாம் பெண்களையும் மற்றும் அனைத்து மனிதர்களையும் மரியாதையுடன் நடாத்த வேண்டிய தருணம் இது! GBV ஆனது உலகம் முழுவதும் உள்ளது. ஆனால் அதனைத் தவிர்க்க முடியாத நிகழ்வொன்றாக இயல்பாக்கக் கூடாது. மக்களிடம் மனப்பான்மை மாற்றம் எமக்கு வேண்டும். பலம் வாய்ந்தவர்களின் கோபத்துக்கும் விரக்திக்கும் ஆளாவதற்கு பெண்கள் இல்லை! பெண்கள் பாதிப்பிற்குள்ளாக்கப்படக்கூடியர்கள் இல்லை! இன்று பெரும்பாலான பெண்கள் குடும்ப நிதிக்கு பங்களிப்புச் செய்கின்றார்கள். அவ்வாறு இல்லையென்றாலும் பெண்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றார்கள். ஒரு நாடாக, ஒரு தேசமாக நாம் அறிக்கையிடப்படும் உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்கள் குறித்து வெட்கப்பட வேண்டும். எல்லா வடிவங்களிலும் GBV இனைத் தடுக்க நாம் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.”

மேலும், கௌரவ. ரோஹினி குமாரி கவிரத்ன, பாலின ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக இலங்கைப் பாராளுமன்றத்தில் வலுவான குரல் எழுப்பும் மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் துணைத் தலைவி கூறுகையில், “பெண்கள், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி இல்லத்தரசியாக இருந்தாலும் சரி, சமூகத்தில் உள்ள அனைவராலும் மதிக்கப்பட வேண்டும்! பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியமாகவும் மற்றும் தெரிவுக்குழுவாகவும் நாங்கள் இதற்காகவே பாடுபடுகின்றோம். பெண்களின் உரிமைகளை மீறும் மக்களின் வெட்கக்கேடான செயல்கள் மற்றும் பேச்சுக்களுக்கு எதிராக, குறிப்பாக பல்வேறு வடிவங்களிலான பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக நிற்பதற்கு எனது சக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஆதரவை நான் கேட்டுக்கொள்கின்றேன்.”

“இன்று இலங்கையின் பாராளுமன்றம் என்ற வகையில் நாம் செய்வது வெறும் அடையாள நடவடிக்கை அல்ல. மாறாக, இது GBV மற்றும் VAW என்பவற்றுக்கு எதிராக நிற்கும் பொறுப்பு ஒவ்வொரு தனிநபருக்கும் உள்ளது என்பதை உணர்த்தி சமூகத்தை விழிக்கச் செய்வதே ஆகும்” என்று கௌரவ. பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார். அத்துடன் இந்த சிறிய தீவான தேசத்திலும் மற்றும் அதற்கு அப்பாலும் GBV இனை அகற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks