E   |   සි   |  

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் மறுசீரமைப்ப

நாட்டில் காணப்படும் தேர்தல் கட்டமைப்பின் கீழ் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக பாராளுமன்ற மற்றும் மாகாணசபை மட்டத்தில் பெண்களுக்கு 30% -70% பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் முன்மொழிவொன்றை தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் மறுசீரமைப்புக் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழுவில் எழுத்துமூலம் சமர்ப்பிப்பதற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் 25% பெண்களுக்கு வழங்கப்படுவதை மாற்றமின்றி தொடர்ந்தும் பேணுவது தொடர்பான முன்மொழிவும், சகல அரசியல் கட்சிகளும் தமது தேசியப் பட்டியலில் 50 % பெண்களுக்கு ஒதுக்குவதை தேர்தல் சட்டங்களில் உள்ளடக்குவது குறித்த முன்மொழிவையும் பாராளுமன்ற விசேட குழுவில் சமர்ப்பிக்க இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தலைமையில் கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அத்துடன், சகல ஆணைக்குழுக்கள் மற்றும் சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தல், பிரதான அரசியல் கட்சிகளின் கட்டமைப்பில் பெண்களுக்குத் தலைமைத்துவப் பதவிகள், குழுப் பதவிகள், நிர்வாகப் பதவிகள் மற்றும் குழு உறுப்பினர் பதவிகளுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவது தொடர்பான யோசனைகளை முன்வைப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது.

தேர்தல் வன்முறைகளைக் குறைப்பதற்குத் தேவையான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும், சகல பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை பகிரங்கப்படுத்துவது, பழைய விருப்பு வாக்குமுறையை மாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாயின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வேட்புமனுக்களை பெண்களுக்கு வழங்குவது போன்ற விடயங்களும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்து மேலும் கலந்துரையாடி அவற்றை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் மறுசீரமைப்புக் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழுவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியக் கூட்டத்தில் இதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி குமாரி விஜேரத்ன, கீதா குமாரசிங்ஹ, கலாநிதி ஹரினி அமரசூரிய, மஞ்சுளா திஸாநாயக மற்றும் முதிதா.டி.சொய்சா ஆகியோர் கலந்துகொண்டனர்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks