பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி, இலங்கை சர்வதேச இயலாமையுடையோர் தினத்தை நினைவுகூர்ந்தது. இந்த ஆண்டு நினைவேந்தலுக்கான உலகளாவிய கருப்பொருள், ‘உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உருமாற்றத் தீர்வுகள்’: அணுகக்கூடிய மற்றும் சமமான உலகத்தை அதிகப்படுத்துவதில் புதுமையின் பங்கு, இது நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலின் “யாரையும் கைவிட்டுவிடக்கூடாது” என்ற வாக்குறுதியுடனும் இணங்குகின்றது. எனவே, இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான ஒரு மூலோபாயத்தை உருவாக்குவது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இயலாமை உடையவர்கள் உலகின் மிகப்பெரிய ‘சிறுபான்மையினராக’ உள்ளனர் என்ற முடிவுக்கு வருவதற்கு புள்ளிவிபரங்கள் உதவுகின்றன. முக்கிய கருப்பொருளின் அடிப்படையில் மூன்று கருப்பொருள் தலைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன: வேலைவாய்ப்பில் இயலாமையை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான புதுமையாக்கம்(SDG8); சமத்துவமின்மையைக் குறைப்பதில் இயலாமை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான புதுமையாக்கம் (SDG10); மற்றும் இயலாமை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான புதுமையாக்கம், பொதுவாக விளையாட்டுத்துறை போன்ற பகுதிகளில்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட ஆய்வின்படி, 2012 ஆம் ஆண்டில் இலங்கையில் இயலாமையுடையோர் எண்ணிக்கை 1,617,924 ஆகக் காணப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பானது மேலும் இயலாமையுடைய நபர்களின் பாலின-பாகுபடுத்தப்பட்ட எண்ணிக்கையைப் பிரதிபலிக்கின்றது: 43 % ஆண்கள் மற்றும் 57 % பெண்கள் எனக் கணக்கிட்டுள்ளது. உண்மையில், பார்வை மற்றும் இயக்கம் ஆகிய இரண்டிலும் சிரமங்களைக் கொண்ட பெண்களின் விகிதம் ஆண்களை விட அதிகமாக இருந்தது. “இயலாமை உடையவர்களை உள்ளடக்கிய மேம்பாட்டிற்குத் தேவையான ஆதரவு மற்றும் வளங்கள் திரட்டலின் அளவு மற்றும் ஈர்ப்புத் தன்மையைக் கொள்கை வகுப்பாளர்கள் நன்கு புரிந்துகொள்ள, இயலாமையுடையவர்களின் தேசிய புள்ளிவிவரங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, வேலைவாய்ப்பு மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை போன்ற பகுதிகளில் அவசியமானதாகும்”, என பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் (WPC) தலைவி. டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். “இது சம்பந்தமாக, சிறந்த இலக்குவைக்கப்பட்ட தலையீடுகளுக்காக பிரிக்கப்பட்ட தரவை தொகுத்து பராமரிப்பது முக்கியம்” என அவர் மேலும் தெரிவித்தார்,
2017 ஆம் ஆண்டில், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், இயலாமை உடையவர்கள் உள்ள குடும்பங்களில் பண மற்றும் பல பரிமாண வறுமை மற்ற குடும்பங்களை விட அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. “எந்தவொரு சமூகத்தின் உண்மையான அளவீட்டையும் அதன் மிகவும் பாதிக்கப்படக்கூடிய உறுப்பினர்களை எவ்வாறு அது நடாத்துகின்றது என்பதிலிருந்து கண்டறிய முடியும் என்ற கூற்றை நான் வலுவாக ஏற்றுக்கொள்கிறேன். எனவே, கொள்கை வகுப்பாளர்களாகிய நாம் இலங்கையில் இயலாமை உடையவர்களை உள்ளடக்கிய அபிவிருத்திக்கு வழங்கிய முன்னுரிமையின் அடிப்படையில் நிலைப்பாட்டை மீள் மதிப்பீடு செய்ய வேண்டும். பொருளாதார நெருக்கடியானது இயலாமையுடையவர்களை உள்ளடக்கிய அபிவிருத்தி பற்றிய பிர்ச்சாரத்தை மறைத்து விடக்கூடாது, ஏனெனில் நெருக்கடியின் விளைவுகள் இயலாமையுடையவர்களை கடுமையாகப் பாதிக்கும், அவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர்”, என WPC இன் உறுப்பினராகிய கௌரவ. கலாநிதி ஹரினி அமரசூரிய கூறினார்.
இலங்கையின் 1978 அரசியலமைப்பின் 12(1) மற்றும் (2) ஆகிய உறுப்புரைகள் சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான பாதுகாப்பையும் பாகுபாட்டிலிருந்து சுதந்திரத்தையும் உறுதி செய்கின்றன. எவ்வாறாயினும், மக்கள் பாகுபாடு காட்டப்படாமல் இருப்பதை உத்தரவாதம் செய்யும் உறுப்புரை, இயலாமையுடையோர் அல்லது இயலாமையைக் கருவியாகப் பயன்படுத்தி ஒரு நபருக்கு எதிராக பாகுபாடு காட்ட முடியாத அடிப்படையாக வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. இது 2016 ஆம் ஆண்டு இயலாமையுடையோர் உரிமைகள் தொடர்பான ஐ.நா மாநாட்டை (UNCRPD) அங்கீகரித்ததன் பின்னணியில் உள்ளது. ஏனைய கடமைகளுக்கு மத்தியில், UNCRPD இன் 33வது பிரிவானது, UNCRPD செயற்படுத்தப்படுவதைப் பாதுகாத்தல் மற்றும் கண்காணித்தல் பணியைப் பொறுப்பேற்கும் சுயாதீன அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கு உறுப்பு நாடுகளை ஊக்குவிக்கும் பணியைக் கோருகின்றது.
ஜூன் 28, 2021 அன்று, WPC ஆனது ஏனைய பங்குதாரர்களுடன் இணைந்து ‘இயலாமையுடையோர் உரிமைகள் குறித்த கொள்கை உரையாடலை’ நடாத்தியது. “இந்த மன்றத்தில், ஒன்றியத்தின் உறுப்பினர்களும் தேர்வுக் குழுவினரும் சமூகத்தின் பிரதிநிதிகளிடமிருந்து நேரடியாகக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றனர். இயலாமை உடையவர்களை உள்ளடக்கிய அபிவிருத்தியை முன்னிறுத்தி வரையப்பட்ட ‘இயலாமையுடையோர் உரிமைகள் சட்டமூலத்தை’ விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதில் ஒன்றியத்தின் உறுப்பினர்களாகிய நாங்கள் உறுதியாக உள்ளோம்” என WPC இன் துணைத் தலைவர் கௌரவ. ரோஹினி குமாரி விஜேரத்ன-கவிரத்ன தெரிவித்தார்.
“இயலாமையுடையோர் பெறும் வாய்ப்புக்களை, குறிப்பாக வேலை வாய்ப்புக்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ஏனெனில் இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகப் போராடும் போது, தொழில்நுட்பங்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் படிவார்ப்பு மிக்க நம்பிக்கைகள் காரணமாக முறையான பணிகளுக்கு தங்கள் உழைப்பைப் பங்களித்து, அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் உறுப்பினர்களை இலங்கை வெறுமனே கைவிட முடியாது. நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்”, என கௌரவ டயானா கமகே, சுற்றுலாத் துறை இராஜாங்க அமைச்சர் கூறினார்.
“இயலாமை உடையவர்களுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், இயலாமையுடையவர்களும் பாகுபாடு இன்றி வாழவும், சாதரண மனிதர்களாக நிறைவான வாழ்க்கையை நடாத்தும் திறனைப் பெறுவதற்கும் ஒட்டுமொத்தமாக அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நாட்டை நோக்கி நாம் பாடுபட வேண்டும்” என WPC உறுப்பினராகிய கௌரவ. மஞ்சுளா திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும் உள்ளடக்கிய தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதற்கு WPC இற்கு இது ஒரு வாய்ப்பாக அமைகின்றது. மேலும் பொருளாதார, சமூக அல்லது அரசியல் சவால்கள் இருந்தபோதிலும், இயலாமையுடையவர்களை உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அரசியல் விருப்பத்தைப் பெறுவதற்கும் மற்றும் வளங்களைத் திரட்டுவதற்குமான அதன் முயற்சிகளைத் தொடர்வதற்கு உறுதிபூண்டுள்ளது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks